ஸ்பெக்ட்ரம் குறித்து கருணாநிதி, எழுச்சி மிகு உரை… திமுகவின் பொதுக்குழுத் தீர்மானங்களை வீளக்கி நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாநிதி, ஆ.ராசா, ஏழைகள் செல்போனில் பேச வழிவகை செய்த ஒரே காரணத்திற்காக இன்று சிறையில் இருக்கிறார் என்று பேசியிருக்கிறார்.
ஏழைகள் செல்போனில் பேச காரணமாயிருந்த ராசாவுக்கே சிறை என்றால், ராசாவையே மந்திரியாக்கி அழகு பார்த்தவருக்கு என்ன தர வேண்டும் ?
தகத்தகாய கதிரவன் சிறையில். தகதகக்கும் தங்கக் கிரீடம் தலைவன் தலையில்
நேற்றைய கூட்டத்தில் கருணாநிதி பேசியதில் முக்கியப் பகுதிகள் இதோ…
தம்பி ராஜா இந்தத் துறையின் அமைச்சராகப் பொறுப்பேற்று செய்திருக்கிற குற்றம் என்னவென்று பார்த்தால் – ஏழையெளிய மக்களுக்கு இந்தத் தொலைபேசியை – இதுவரையில் பணக்காரர்கள் மாத்திரம், சீமான் வீட்டுப் பிள்ளைகள் – சீமாட்டிகள் மாத்திரம் பயன்படுத்திய இந்தத் தொலைபேசியை – நடவு நட்டுக் கொண்டிருக்கின்ற நாகம்மாளும், தயிர் விற்றுக் கொண்டிருக்கின்ற தையல் நாயகியும் – போகும்போதே ஒரு கையிலே கலயம், தலையிலே சும்மாடு – அந்தச் சும்மாட்டின் மேலே தயிர் பானை, பால் பானை – காதிலே இந்தத் தொலைபேசி – அதிலே “”””மோர் வாங்கலியோ, மோர்”” என்ற கூச்சலுக்குப் பதிலாக, “”””ஹலோ, ஹலோ”” என்று இங்கிருந்து தொலைபேசி வழியாக இன்னொரு பகுதியிலே உள்ள அம்மையாரையோ, சொந்தக்காரர்களையோ, நண்பர்களையோ அழைத்துப் பேசுகிற அளவிற்கு – மிக மிகக் குறைந்த விலையில், குறைந்த கட்டணத்தில் பேசுவதற்கான ஒரு நிலையை – கோடானு கோடி மக்கள் அந்த வாய்ப்பைப் பெறுகின்ற அளவிற்கு ஒரு நிலைமையை ஏற்படுத்திய பெருமை – டில்லியிலே கைதாகியிருக்கின்ற நம்முடைய தம்பி ராஜாவுக்கு உண்டு. நான் இங்கிருந்தவாறே, இந்த மக்களின் சார்பாக டில்லிச் சிறைச்சாலையிலே இருக்கின்ற தம்பி ராஜாவைப் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் – வாழ்த்தக் கடமைப்பட்டிருக்கிறேன். அந்த ஏழை மக்கள், எளிய மக்கள் – அவரவர்கள் பயன்படுத்துகின்ற இந்தத் தொலைபேசி இவ்வளவு அதிகமாக இலட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் அவர்களுக்கெல்லாம் கிடைத்திருக்கிறது என்றால், இந்தச் சாதனை புரிந்தவர் தம்பி ராஜா.
ஆனால், என்னைப் பொறுத்தவரையில் நான் சொல்கிறேன். நான் இல்லாத காலத்திலேகூட, இன்னும் ஒரு நூறாண்டுக் காலத்திற்குப் பிறகு – “”””கருணாநிதி என்று ஒருவன் இருந்தான்”” என்று வரலாறு சொன்னாலும், சொல்லாவிட்டாலும் – “”””அவன் எழுப்பிய மாளிகைகள் – அவன் உருவாக்கிய கோபுரங்கள் – அவன் சித்தரித்த சின்னங்கள்”” – இவைகள் எல்லாம் இருந்து என் பெயரைச் சொல்லும். (பலத்த கைதட்டல்) ஆனால், என் பெயரைச் சொல்ல வேண்டும் என்பதற்காக இவைகள் அல்ல. என் பெயர் பரவ வேண்டும் என்பதற்காக அல்ல. என் பெயர் நிலைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. நான் ஆற்றிய காரியங்கள் தமிழனுக்காக, தமிழ் மக்களுக்காக, தமிழ்ச் சாதி மக்களுக்காக, தமிழ்ச் சமுதாயத்திற்காக, நான் ஆற்றிய பணிகள் இவைகள் வரலாற்றில் இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் நிலைக்கத்தான் போகிறது. அதை யாரும் மறுத்து விட முடியாது. யாரும் அழித்து விட முடியாது.
அந்த ஆட்சியில் ஒருவனாக நான் இருக்கிறேன் என்றால் என் தலைமை யிலே இருக்கின்ற இந்த ஆட்சியை வீழ்த்த ஒழிக்க அகற்ற புறம் கூறி இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட என்னென்ன தில்லுமுல்லுகள் உண்டோ, திருகு தாளங்கள் உண்டோ அவ்வளவையும் செய்து பார்க்க ஒரு கூட்டம் தயாராகியிருக்கின்றது. ஏனென்றால் அவர்கள் கையை விட்டு அதிகாரம் போய், ஆட்சி போய்; “”””ஏ சூத்திரா, எட்டி நில்! ஏ பஞ்சமா! பக்கத்திலே வராதே என்றெல்லாம் ஆணையிட்ட அந்தக் காலம் போய் பல ஆண்டுகள் ஆகிறது. அதை மீண்டும் பெறுவதற்காக ஒரு கூட்டம் இன்றைக்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றது. அந்த முயற்சிக்கு அவர்களுக்குக் கிடைத்துள்ள சாதனமாக இருப்பது செய்திப் பத்திரிகைகள் – தொலைக்காட்சிகள் – இவைகள்தான் அவர்களுக்குப் பக்கபலமாக இருக்கின்றன. பொய்ப் பிரச்சாரத்தைச் செய்தே, இந்த ஆட்சியை வீழ்த்தி விட்டு, நாம் வந்து அமர்ந்து விடலாம் என்று கருதுகிறார்கள் என்றால், அது முடியுமா, நடக்குமா என்பதுதான் கேள்வி. ஆனால், அந்த முயற்சி இப்போது நடக்கிறதே – அதை நாம் இப்போது அனுமதித்துக் கொண்டிருக்கிறோமே – இதனுடைய விளைவுகளையும் நாம் அனுபவித்துத்தானே ஆக வேண்டும் என்ற அந்த நிலையை தயவு செய்து எண்ணிப் பார்க்க வேண்டும். அப்படி எண்ணிப் பார்ப்பதன் அடையாளமாகத்தான் அந்தக் கருத்துக்களை உள்ளடக்கித்தான் காலையிலே நடைபெற்ற பொதுக் குழுவிலே – 21 தீர்மானங்களை நாம் நிறைவேற்றியிருக்கிறோம்.