தமிழகத்தில் அரசு மருத்துவ மனையைச் சேர்ந்த ஸ்ட்ரேச்சர் தள்ளுபவர்கள் அனைவரும் போராட்ட அறிவிப்பைச் செய்திருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்க ளும் போராட்டத்தில் குதிக்க இருப்பதாக சவுக்குக்கு பிரத்யேக தகவல்கள் வந்துள்ளன.
இந்தப் போராட்டத்துக்கான காரணம், தமிழக முதல்வரின் வண்டியைத் தள்ளிச் செல்லுபவர்களில் ஒருவரான பாண்டியன் என்ற டிஎஸ்பிக்கு, சிறப்புப் பணிக்கான பதக்கம் வழங்கப் பட்டுள்ளதை அடுத்தே இந்த போராட்ட அறிவிப்பு என்று தெரிகிறது.
சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், கருணாநிதியை வண்டியில் வைத்து தள்ளிச் செல்வதற்காக பாண்டியன் என்ற டிஎஸ்பிக்கு முதல்வர் பதக்கம் வழங்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
ஏற்கனவே, வண்டியை தள்ளிச் செல்வதற்காக, பாண்டியனுக்கு முகப்பேரில் 2 கோடி மதிப்புள்ள நிலத்தை வழங்கியுள்ள நிலையில், மீண்டும் ஒரு சலுகையை இது போல வழங்கியிருப்பது, தமிழக அரசின் மருத்துவப் பணியாளர்களை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது.
மருத்துவ மனைகளில் வண்டியை தள்ளுபவர்களில் ஒருவர் சவுக்கிடம் பேசும் போது, “சார், அவரு 2 வருஷமாத்தான் வண்டி தள்ளுறாரு. நான் 20 வருஷமா வண்டி தள்ளிக்கிட்டு இருக்கிறேன். எனக்கு மெடல் குடுக்காம 2 வருஷம் வண்டி தள்ளுறவருக்கு குடுக்கறது என்னா சார் ஞாயம் ? “ என்று கேட்கிறார்.
பொது மருத்துவமனையின் வெளியே, வண்டியில் வாழைப்பழம் விற்று வரும் முனியாண்டியும் இதே கருத்தை பிரதிபலித்தார்.
ராயப்பேட்டை மருத்துவமனையின் சவக்கிடங்கில் பணியாற்றும், லோகநாதன் சவுக்கிடம் பேசும் போது, சார் பாண்டியனாவது உயிரோட இருக்கற ஆளத் தான் சார் வண்டியில வச்சு தள்றாரு. நான் என் பெரண்ட்சு எல்லாம், பொணத்தையே வண்டியில வச்சு 10 வருஷமா தள்ளிகிட்டு இருக்கோம் சார். எங்களுக்கு மெடல் குடுக்கா அவருக்கு மட்டும் குடுக்கறது அநியாயம் சார் என்றார்.
பாண்டியனைப் போலவே வண்டி தள்ளும், விநோதகன், மற்றும் கணேசனும், பாண்டியனுக்கு மட்டும் மெடல் வழங்கியதில் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரிமுனையில் வண்டி தள்ளுவோர் சங்கமும், வண்டியில் குல்பி ஐஸ் விற்போர் சங்கமும், வண்டியயில் காய்கறி விற்போர் சங்கமும், வண்டியயில் பழைய பேப்பர் எடுப்போர் சங்கமும், பாண்டியனுக்கு எதிராக போராட்டத்தில் குதிக்க இருப்பதாக சவுக்குக்கு தகவல்கள் வந்துள்ளன.
அனைத்து போராட்டங்களையும் திறம்பட சமாளிக்கும் கருணாநிதி, பாண்டியனுக்கு எதிரான இந்தப் போராட்டத்தை எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.