என்னடா இது தலைப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதே என்று பார்க்காதீர்கள்.. இந்தத் தலைப்பு சவுக்கு வைத்தது அல்ல. அமைச்சராக இருக்கும் அக்கா பூங்கோதை அஞ்சா நெஞ்சன் அழகிரியைப் பார்த்துச் சொன்னது. யார் கட்த்ரோட் பொலிடீஷியன்? அதில் தான் கடும் போட்டி நடக்கிறது.
ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை எனும் அளவுக்கு போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த விளையாட்டுகளில் நாம் சளைத்தவர்களா என்றால், நாமும் சளைத்தவர்கள் கிடையாது. ஒருவரை ஒருவர் கவிழ்த்து, அதன் மூலம் எப்படி முன்னேறலாம் என்பதில் நாம் அனைவருமே போட்டி போடுகிறோம் தான். நாம் வேலை பார்க்கும் அலுவலகத்தில், சமயம் கிடைத்தால், நமக்கு பிடிக்காத நபரை உயர் அதிகாரிகளிடம் போட்டுக் கொடுப்பதில்லையா ?
அது ஒரு வகை அரசியல். ஆனால் நம்மைப் போன்றவர்கள் செய்யும் இந்த அரசியல், நம்மோடும், நமது அலுவலகத்தோடும் முடிந்து விடும்.
ஆனால் நிஜ அரசியல்வாதிகள் விளையாடும் விளையாட்டுக்கள் அனைத்தும், நமது வாழ்வை பாதிப்பதாலும், பார்த்து ரசிக்க சுவையாக இருப்பதாலும், நாம் அதைப்பற்றி பேசியும், எழுதியும் வருகிறோம்.
கருணாநிதியின் புது தில்லி விசிட்டின் போது நடந்த விவகாரங்கள், அதிரடித் திருப்பங்கள் மிகுந்த ஒரு புதினத்தை விட விறுவிறுப்பாக இருந்தன.
கருணாநிதி தன்னை எப்போதும் மிகப் பெரிய அரசியல் சாணக்கியனாக கருதிக் கொள்பவர். அதில் ஓரளவுக்கு உண்மையும் உண்டு. ஒரு சிறிய கருத்துக் கணிப்புக்காக ஆட்களை அனுப்பி, தினகரன் ஊழியர்களை எரித்துக் கொல்லும் அளவுக்கு, ‘நிதானம்’ படைத்த தனது மகன் அழகிரியை சமாளித்து பெட்டிப் பாம்பாக அடக்கியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பல்வேறு பிளவுகளையும், பல்வேறு சோதனைகளையும் சந்தித்த திமுகவுக்கு, ஸ்பெக்ட்ரம் விவகாரம் போன்ற ஒரு பெரிய சோதனை வந்ததேயில்லை. காற்றில் அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியிருக்கும் அலைக்கற்றையைப் போலவே, இந்த அலைக்கற்றையும், கருணாநிதியை அலையாய் அலைய வைக்கிறது. எம்.ஜி.ஆர், வைகோ பிரிவுகளை விட, ஸ்பெக்ட்ரம் விவகாரம் திமுகவை கடுமையாக பாதித்திருக்கிறது.
இந்தப் பின்னணியிலேயே, திமுக காங்கிரஸ் கூட்டணி இந்தத் தேர்தலை சந்திக்க இருக்கிறது.
இந்த விவகாரங்களுக்குள் செல்லும் முன், யுபிஏ 1 அரசாங்கத்தில் கருணாநிதியின் நிலை என்ன என்பதை சற்று திரும்பிப் பாருங்கள்.
2004 தேர்தலில் திமுக பெற்ற 16 எம்பிக்கள் கருணாநிதியை சர்வ அதிகாரம் படைத்த நபராக யுபிஏ 1 அரசாங்கத்தில் உருவாக்கின. அந்த 16 எம்பிக்கள், மத்திய அரசின் சுவாசமாகவே அமைந்ததால், சோனியா கருணாநிதியை மிகுந்த மரியாதையோடு நடத்தினார். 2004ல் கருணாநிதி டெல்லிக்கு சென்ற போது, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த கருணாநிதியை, சோனியா நேரில் சென்று சந்தித்து தனது ஆதரவை கோரினார்.
கருணாநிதி தான் கெஞ்சினால் மிஞ்சுபவர் ஆயிற்றே…. மூன்று கேபினெட் மந்திரி பதவிகள், மூன்று இணை அமைச்சர்கள், அதுவும் இலாக்காக்கள், நாங்கள் கேட்பதைத் தான் தரவேண்டும் என்று கூறுகிறார்.
அதற்கும் காங்கிரஸ் ஒத்துக் கொள்கிறது. பிறகு, காங்கிரஸ் கட்சிக்கு மற்ற கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால், இலாக்காக்களை மாற்றி அமைக்க வேண்டிய நெருக்கடி வந்ததும், கருணாநிதி வெகுண்டெழுந்து, அரசியல் மரபை மீறி, எழுத்துப் பூர்வமாக கொடுக்கப் பட்ட, இலாக்கா குறித்த உத்தரவாதங்களை பத்திரிக்கையாளரகளை அழைத்து வெளியிடுகிறார். வேறு வழியின்றி, காங்கிரஸ் கட்சி பணிந்து, கேட்ட இலாக்காக்களை அளிக்கிறது.
இப்படித் தான், கப்பல் போக்குவரத்து, வனம், சுற்றுச் சூழல், தொலைத் தொடர்பு போன்ற பசையான இலாக்காக்களை பெறுகிறது திமுக…
இன்று.. ?
இரண்டாவது யுபிஏ அரசாங்கம் உருவாகும் போது, நிலைமை தலைகீழாகிறது.
காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தேர்தலை விட, இம்முறை அதிக வாக்குகள் கிடைத்ததால், அக்கட்சிக்கு வழக்கமாக இருக்கும் அகம்பாவம் மீண்டும் தலை தூக்குகிறது.
இந்த முறை, தள்ளு வண்டியில் டெல்லி சென்ற கருணாநிதியை காக்க வைத்து அலைகழிக்கிறார் சோனியா…. கருணாநிதியும், தேர்தல் பிரச்சாரத்தின் போதெல்லாம், சொக்கத் தங்கம் சோனியா, தியாகத் திருவிளக்கு, கார்பரேஷன் தெருவிளக்கு என்றெல்லாம் பாராட்டு மழைகளை பொழிந்தாலும், மத்திய உளவுத் துறை மூலமாக, கருணாநிதி சோனியாவை கோபாலபுரத்திலும், சிஐடி காலனியிலும், என்னென்னவெல்லாம் சொல்லி கெட்ட வார்த்தையில் திட்டுகிறார் என்பதை நன்கு அறிந்த சோனியா, இந்த பாராட்டுகளை வஞ்சப் புகழ்ச்சியாகவே எடுத்துக் கொண்டார்.
கருணாநிதி தொலைபேசியைத் தான் ஒட்டுக் கேட்பார். சோனியா, கோபாலபுரத்தையே ஒட்டுக் கேட்கும் வசதி படைத்தவர் அல்லவா ?
தேர்தல் முடிந்தவுடன், தன் சுயரூபத்தை காட்டுகிறார் சோனியா…. தள்ளாத வயதில், தள்ளு வண்டியில் போன கருணாநிதியை, சந்தித்து விட்டு அமைச்சரவை பற்றி எதுவாக இருந்தாலும், பிரணாப்பிடம் பேசிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். பிரணாப், நீங்க கேக்கறதெல்லாம் குடுக்க முடியாது, நாங்க குடுக்கறத வாங்கிக்குங்க என்ற கூறுகிறார்.
காங்கிரஸ் கட்சியை எதிருக்கு எதிர் நின்று தேர்தல் களத்தில் சந்தித்த கட்சிகளெல்லாம், போட்டி போட்டுக் கொண்டு, ஆட்சிக்கு வெளியில் இருந்து ஆதரவு தர விரும்பியது காங்கிரசின் ஆணவத்திற்கு எண்ணை ஊற்றியது.
நடக்க முடியாவிட்டாலும், குட்டிக் கரணம் போட்டுப் பார்த்தார் கருணாநிதி. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தனது எதிர்ப்பை வெளிப்படையாக காட்டினார். அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். ஒன்றும் நடக்கவில்லை.
வேறு வழியின்றி, மூட்டையைக் கட்டிக் கொண்டு, திரும்பினார். 2009 யுபிஏ அரசாங்கம் தொடங்கியதிலிருந்தே, கருணாநிதிக்கு சனி திசை தொடங்கியது.
அழகிரிக்கு இங்கிலீஷ் தெரியவில்லை, பாராளுமன்றத்திற்கு செல்வதில்லை என்பதில் தொடங்கி, To put it in English DMK became the laughing stock. காங்கிரஸ் கட்சி, திமுகவை வேண்டாத விருந்தாளியாவே கருதத் தொடங்கியது.
அமைச்சரவை உருவாக்கத்தின் போது, இந்திய ஜனநாயகத்தைக் காத்த மாதரசி நீரா ராடியா, எப்படி அமைச்சர் பதவிகளை உருவாக்கினார் என்பதும், திமுக எப்படி தொலைத் தொடர்புத் துறையை மிரட்டி, கெஞ்சிப் பெற்றது என்பதும் உங்களுக்குத் தெரியும்.
மீண்டும், போன அரசாங்கத்தில் சம்பாதித்தது போல, பெரிய தொகைகளை சம்பாதித்து, தமிழகத்தில் மிச்சம் மீதி உள்ள பகுதிகளை வளைத்து போடலாம் என்று கருணாநிதி குடும்பத்தினர் போட்ட திட்டம், இரண்டாவது முறை நிறைவேறவில்லை.
கிராமங்களில், வண்டி மாடுகளுக்கு லாடம் அடிக்கையில், மாட்டின் நான்கு கால்களையும் கட்டிப் போட்டு, வாயையும் இறுக்கிக் கட்டி வைத்து விட்டு லாடம் அடிப்பது போல, திமுக அமைச்சர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப் பட்டனர். முக்கிய முடிவுகள் எதுவாக இருந்தாலும், ‘எம்பவர்ட் க்ரூப் ஆப் மினிஸ்டர்ஸ்’ என்ற குழுவே முடிவு செய்யும் என்று அறிவிக்கப் பட்டு அது முழுமையாக அமல்படுத்தப் பட்டது. அழகிரி, ரசாயனம் மற்றும் உரத்துறையில் ஒரு பின்னு பின்னலாம் என்று போட்ட திட்டம், புஸ்வாணமாகிப் போனது. இதனால் கோபித்துக் கொண்ட அவர், டெல்லிக்குச் செல்வதை தவிர்த்தார்.
இப்படி நெருக்கடிக்கு உள்ளான திமுகவினர், சரி வாய்ப்பு கிடைக்கும் போது, பெரிய தொகையாக அடிக்கலாம் என்று சமயம் பார்த்து காத்திருந்தனர். ஆனால், அந்த சமயம் வரவேயில்லை. ஆனால், அதற்கு பதிலாக சோதனை மேல் சோதனை என்று, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முதல் சோதனை, நடந்தது அக்டோபர் 2009ல்.
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். கேபினட் அமைச்சர், தொலைத் தொடர்புத் துறையை பிடிவாதமாக கேட்டுப் பெற்றவர். அவர் அலுவலகத்தில், சிபிஐ சோதனை…. அக்டோபர் 2009ல் சிபிஐ தனது முதல் சோதனைகளை நடத்தியது. ட்ராய் அலுவலகம், தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் சன்ச்சார் பவன் ஆகிய இடங்களில் நடத்திய சோதனைகளில், பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.
தனது அமைச்சச்கத்தில் நடந்த சோதனையை கண்ட ஆண்டிமுத்து ராசா கோபமடைந்து, திமுக தலைவரிடம் சொல்லியிருக்க வேண்டும். ராஜினாமா செய்திருக்க வேண்டும். அனால், இது திருடனுக்கு கொட்டப் பட்ட தேளல்லவா ?
அமைதியாக இருந்தார்கள் ஆண்டிமுத்து ராசாவும், முத்துவேல் கருணாநிதியும். என்ன இது போல ராசாவில் அமைச்சகத்தில் சோதனை நடந்திருக்கிறதே என்ற கேள்விக்கு, எப்ஐஆரில் யாருடைய பெயரும் இல்லையே என்று எதிர் கேள்வி கேட்டார்கள்.
இதற்குப் பிறகு சிறிது சிறிதாக காங்கிரஸ் திமுக உறவில் பற்பல உரசல்கள் ஏற்படத் தொடங்கின. தான் கூட்டணியில் இருக்கும் ஒரு கூட்டணிக் கட்சியின் ஒரு தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன், தாறுமாறாக திமுகவை விமர்சித்து வருவதையும், காங்கிரஸ் போட்ட பிச்சையில் தான் திமுக ஆட்சி நடக்கிறது என்பதையும் பல்வேறு இடங்களில் பேசி வந்தார். ஆனால், திமுக தலைமையோ, இது எதுவுமே காதில் விழாதது போல நடந்து கொண்டது. இருந்தாலும் எரிச்சல் இருக்கும் இல்லையா…. ? அந்த எரிச்சலை வெளிப்படுத்துவார்கள். உடனே, கருணாநிதியின் கூஜா, தங்கபாலு, தலைமையின் அனுமதி இல்லாமல், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பத்திரிக்கையாளர்களை சந்திக்கக் கூடாது என்று சத்தியமூர்த்தி பவனில் பேட்டியளிப்பார்.
சரி, இளங்கோவனை அடக்கி வைப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தால், அன்று மாலையே, இளங்கோவன் முன்பை விட காட்டமாக பேட்டியளிப்பார்.
ஒரு கட்டத்தில் காங்கிரஸின் தொல்லை எல்லை மீறிப் போனதை உணர்ந்த கருணாநிதி, திமுகவின் ‘தலித் பிரிவு’ தலைவரான தொல்.திருமாவளவனை விட்டு காங்கிரசை தாக்கி அறிக்கை விடச் சொன்னார். திருமாவும் கொடுத்த காசை விட அதிகமாக கூவத் தொடங்கினார். இது காங்கிரஸ் விடுதலைச்சிறுத்தைகள் மோதலாக உருவாகத் தொடங்க, இறுதியாக திருமாவளவன், சோனியாவின் பொற்பாதங்களில் சரணாகதி அடைந்தார். கருணாநிதியின் இந்தத் தந்திரங்களையெல்லாம் நன்கு அறிந்த காங்கிரஸ் நெருக்கடியை அதிகரிக்கத் தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியை திருப்திப் படுத்தினால் தான் சாபவிமோசனம் என்ற நிலைக்கு தள்ளப் பட்ட கருணாநிதி, தனது காங்கிரஸ் விசுவாசத்தை சீமான் போன்றோரை கைது செய்ததன் மூலம் காண்பித்துக் கொண்டார்.
ஆனாலும் காங்கிரஸ் கட்சியின் இறுமாப்பும் திமிரும், சோனியா காந்தி கடந்த அக்டோபர் மாதம், திருச்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போது தெளிவாகத் தெரிந்தது. திருச்சி பொதுக்கூட்டத்திற்காக சென்னை வந்த சோனியா, கருணாநிதியை சந்திக்க விரும்பாமல், நேரடியாக திருச்சி செல்ல உத்தேசித்த போது, சோனியா பார்க்காமல் போனால், தனக்கு அவமானமாகப் போய் விடும் என்று உத்தேசித்த கருணாநிதி, விமானநிலையத்திலேயே அவசர அவசரமாக சோனியாவை சந்தித்து, காங்கிரஸ் திமுக உறவு திருப்தி கரமாக இருப்பதாக காண்பித்துக் கொண்டார்.
அதற்குப் பிறகு திருச்சியில் பேசிய, சோனியா, கருணாநிதியைப் பற்றி ஒரு வார்த்தை பேசாதது மட்டுமல்ல, மத்திய அரசு தரும் நிதியால் தான் மாநில அரசுகள் திட்டங்களை நிறைவேற்ற முடிந்தது என்று பேசினார். சோனியாவும் சரி, கருணாநிதியும் சரி, தங்கள் சொந்தப் பணத்தை செலவு செய்வதில்லை. மக்களின் வரிப்பணத்தில், மக்களுக்கே திட்டங்களை உருவாக்கி அளிக்கிறார்கள் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள்.
இதற்குப் பிறகுதான் கச்சேரி சூடு பிடிக்கிறது.
நவம்பர் முதல் வாரத்தில், காங்கிரஸ் கட்சியின் அதிரடி ப்ளானுக்கு திமுக இரையாகியது. மத்தியக் கணக்காயரின் 2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பான அறிக்கை நவம்பர் இரண்டாவது வாரத்தில் வெளியானது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படவில்லை. அதற்கு பதிலாக, திமுகவின் கையை முறுக்குவதற்காக, காங்கிரஸ் அனைத்து ஊடகங்களுக்கும் ஒரே நாளில் ‘லீக்’ செய்கிறது. 2ஜி ஏலத்தில் மொத்த இழப்பீடு 1,76,379 கோடி என்ற தொகை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது. இந்த அறிக்கை வெளியாகி ஏற்படுத்திய அதிர்ச்சிகள், திமுகவை நிலைகுலையச் செய்கிறது. நாடு முழுவதும் பெரும் விவாதங்கள் கிளம்புகின்றன.
இந்த அறிக்கையை ஊடகங்கள் மூலமாக வெளியிடச் செய்ததே, காங்கிரஸ் கட்சியின் மிகச் சிறந்த தந்திரம். இந்த அதிர்சியில் இருந்து கருணாநிதியும், திமுகவும் மீள்வதற்குள் அடுத்த அதிர்ச்சி… நீரா ராடியாவின் உரையாடல்கள் ‘ஓபன்‘ வார இதழிலும், ‘அவுட்லுக்‘ வார இதழிலும் வெளியாகின்றன. ஆண்டிமுத்து ராசா எப்படி தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்கு பகீரதப் பிரயத்தனங்களைச் செய்தார் என்பதும், கனிமொழி எப்படி அமைச்சரவையில் ராசாவை இடம் பெறச் செய்ய முயற்சி செய்தார் என்பதும் விவாத அரங்குக்கு வருகிறது.
இந்த நிலையில், ஆ.ராசாவும், அவரது இப்போதைய தொழில் கூட்டாளியும், நாளைய ஜெயில் கூட்டாளியுமான காமராஜ் மற்ற சிலரோடு சேர்ந்து, ராசாவை காப்பாற்ற கடும் முயற்சிகள் எடுக்கிறார்கள். ‘ஊடகப் பேரவை‘ என்ற இறந்த அமைப்புக்கு உயிரூட்டி ஸ்பெக்ட்ரத்தில் ஊழலே நடைபெறவில்லை என்று கூட்டம் நடத்தி கூவினர்.
ஆனால், ராசாவை பதவி விலகச் செய்ய, கோரிக்கைகள் வலுவடைந்து வந்தது.
இதற்குப் பிறகு, இனி காலம் தள்ள முடியாது என்பதை உணர்ந்த திமுக, வேறு வழியின்றி, ஆண்டிமுத்து ராசாவை பதவி விலகச் செய்கிறது.
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல, ராசாவை காப்பாற்ற, திமுகவினர், தமிழகமெங்கும், ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெறவில்லை என்று பல்வேறு கூட்டங்களை நடத்துகிறார்கள். இந்தக் கூட்டங்களில், ஒரு கூட்டத்தில் பேசுவதற்கு 75,000 பெற்றுக் கொண்டு, ‘லொடுக்குப் பாண்டி‘ என்கிற சுப.வீரபாண்டி ராசா தலித் என்பதால் குறி வைக்கிறார்கள் என்று பேசினார்.
கருணாநிதி ராசாவை தகத்தகாய கதிரவன் என்று பாராட்டினார். குஞ்சாமணி என்கிற வீரமணி ‘மாண்புமிகு‘ போனால் என்ன, ‘மானமிகு‘ இருக்கிறது என்று ஓலமிட்டார்.
அடுத்து என்ன என்று தேசமே ஆவலாக இருந்த போதுதான், சிபிஐ சோதனைகள் நடைபெற்றன.
தொடர்ச்சி அடுத்த பாகத்தில்.