அந்த புதன் கிழமை காலை அனைவருக்கும் இயல்பாகத்தான் விடிந்தது. அவரவர், காலை எழுந்ததும், அன்றைய செய்தித் தாளை படித்துக் கொண்டே, காபியை குடித்துக் கொண்டே, மனைவியை திட்டிக் கொண்டே, அவசர அவசரமாகவும் இயந்திர கதியிலும் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
ஆனால், சென்னையில் ஒரு சில வீடுகளில் மட்டும் இயல்பு நிலை மாறி புயல் வீசியது. அந்த புயல், சிபிஐ என்ற புயல். அதிகாலையிலேயே பல்வேறு குழுக்களாகப் பிரிந்த சிபிஐ டீம், ‘நம்பளையெல்லாம் ரெய்டு பண்றதுக்கு ஒரு பய பொறந்து வரணும்’ என்று இறுமாப்போடு இருந்த குருமாராஜ், போலிப் பாதிரி வீடுகளை சிபிஐ டீம் சோதனையிட்டது. டெல்லியில் ராசாவின் வீட்டை சோதனையிட்டது மட்டுமல்லாமல், பெரம்பலூரில் உள்ள ராசாவின் வீடு, அண்ணன் வீடு, மற்றும் நெருங்கிய உறவினர்கள் வீடுகள் அனைத்தும் சோதனையிடப்பட்டன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை, வட இந்திய ஊடகங்கள் பார்பபனத் திமிரோடு, ஒரு தலித்தை குறி வைத்துத் தாக்குகின்றன என்று இறுமாப்போடு பேசித் திரிந்த திமுகவினர், தலைகளை தொங்கப் போட்டுக் கொண்டு சென்றனர்.
ரெய்டு திருவிழா முடிந்ததும், அடுத்து என்ன நடக்கும் என்று அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருந்த போது, இந்த ஊழலில் சிக்கியிருந்த முக்கிய நபர் மட்டும் நிம்மதி இன்றி அலைந்து கொண்டிருந்தார். ஒரு புல் ஸ்காட்ச் விஸ்கி 12,000 விலை. அந்த புல் பாட்டிலை ஒரே நபர் முழு மூச்சாக குடித்துக் காலி செய்தார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் வறுத்துக் கொடுத்த காலிபிளவர் பக்கோடாவும், சுவையான அசைவ உணவும் அவருக்கு பிடிக்கவில்லை. அறையை விட்டு வெளியே வந்தால் பத்திரிக்கையாளர்கள் எந்த நேரமும், கழுகு போல காத்திருந்தனர்.
சிபிஐ எந்த நேரமும் அழைக்கலாம் என்ற பயத்தில், எப்படி எதிர்கொள்வது என்று தவித்துக் கொண்டிருந்த போது, ஊழல் தடுப்புத் துறையில் நீண்ட நாள் அனுபவம் மிகுந்த, ஓய்வுக்குப் பிறகு ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை மேற்பார்வை செய்வதற்கென்றே நியமிக்கப் பட்டுள்ள நல்லமா நாயுடுவும், தன்னை மிகப் பெரிய அறிவாளி என்று நினைத்துக் கொள்ளும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஐஜியும் ஆலோசனை சொல்கிறார்கள். ‘சிபிஐ எது கேட்டாலும் தெரியாது என்று கூறுங்கள். சிபிஐ ஆல், எதுவும் செய்ய முடியாது என்று அறிவுரை கூறுகிறார்கள்‘.
நல்லமா நாயுடு
துக்கையாண்டி
பித்துப் பிடித்தார்ப் போல, ராசா புலம்பிக் கொண்டிருக்கையில், சிபிஐ டெல்லியில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்புகிறது.
ராசாவை இது போல சிபிஐ வதைத்து எடுப்பதையும், காங்கிரஸ் கட்சி திட்டமிட்டே திமுகவை நெருக்கடியில் உள்ளாக்க வேண்டுமென்று செயல்படுவதையும் உணர்ந்த கருணாநிதி, காங்கிரஸ் கட்சியை தன் பங்குக்கு அவமானப் படுத்த வேண்டும் என்று முயல்கிறார்.
பிரதமர் வந்தால், மாநிலத்தின் முதலமைச்சர் சென்று வரவேற்க வேண்டும் என்ற மரபை பின்பற்றாமல், விமான நிலையம் செல்வதைத் தவிர்க்கிறார்.
விமான நிலையம் செல்வதை தவிர்த்ததோடு மட்டுமல்ல. அன்று மாலை நடந்த வைரமுத்துவின் நூல் வெளியீட்டு விழாவில், ‘இன்று பிரதமரை வரவேற்கச் செல்லும் கடமை இருந்தாலும் கூட, அதை தவிர்த்து விட்டு, இந்த விழாவிற்கு நான் வந்திருக்கும் காரணம், தமிழின் மீதும், வைரமுத்துவின் மீதும் நான் வைத்திருக்கும் அபிமானம் தான் காரணம்‘ என்று விளக்கம் வேறு சொன்னதால். ஏற்கனவே எரிச்சலில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு, காயத்தில் உப்பைத் தடவியது போல இருந்தது.
ஆனால் இது எதுவுமே ராசாவை காப்பாற்ற வில்லை. முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்கென்று, டெல்லி செல்கிறார் கருணாநிதி. மன்மோகன் சிங்கையும், சோனியாவையும் கருணாநிதி சந்தித்துக் கொண்டிருந்த போது, கருணாநிதியின் மனதுக்கு நெருக்கமான ஆண்டிமுத்து ராசாவை, சிபிஐ விசாரணை என்ற பெயரால் துளைத்துக் கொண்டிருந்தது. மற்ற நாட்கள் விசாரணை நடந்த போது, ராசாவை மரியாதையாக நடத்திய சிபிஐ அதிகாரிகள், ராசா எதற்கெடுத்தாலும் சட்டம் பேசுவதை பொறுத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால், ராசா இடத்தை கொடுத்தால் மடத்தைப் பிடிப்பவராயிற்றே… ? மீண்டும் சட்டம் பேசுகிறார். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அதிகாரிகள், ‘மிஸ்டர்.நீங்கள் கேபினெட் அமைச்சர் அல்ல…. ஒழுங்காக நடந்து சொள்ளுங்கள்.. ‘ என்று மிரட்டுகிறார்கள். அப்போதுதான் ராசாவுக்கு, ஏதோ நடக்கப் போகிறது என்று புரிகிறது.
கடைசியாக கருணாநிதியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ‘தலைவரே… என்னை ஜெயிலுக்குப் போகாமல் காப்பாற்றுங்கள் தலைவரே… என்று கெஞ்சுகிறார்‘ கருணாநிதி பதிலுக்கு, ‘நான் பாத்துக்கறேன்யா‘ என்று பதிலுரைக்கிறார். இவ்வாறு பதிலளித்தாலும், கருணாநிதிக்கு, முதல்நாளே ராசா கைது செய்யப் படப் போகிறார் என்பது தெரிவிக்கப் படுகிறது. ஆனால் இந்த விபரத்தை ராசாவிடம் கருணாநிதி தெரிவிக்கவில்லை.
மறுநாள் காலையில் சிபிஐ விசாரணைக்கு ராசா செல்லும் போதே, அவருக்கு இன்று ஏதோ நடக்கப் போகிறது என்பது தெரிகிறது. தனது நண்பர்களிடம் ‘நான் இன்று திரும்பி வரப்போவதில்லை‘ என்று கூறி விட்டு செல்லுகிறார்.
11.30 மணிக்கெல்லாம் ராசா கைது என்ற செய்தி மெலிதாகக் கசிகிறது. 12.30 மணிக்கு ஹெட்லைன்ஸ் டுடே செய்தி ஊடகம், ராசா கைது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது.
ராசாவின் கைது, திமுக வட்டாரங்களை உலுக்கிப் போடுகிறது. அரசியல் சாணக்கியர் கருணாநிதியை மீறி எதுவுமே நடக்காது என்று நம்பிக் கொண்டிருந்த கருணாநிதி காங்கிரசின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் உருவாகிறது.
அதற்கேற்றார் போல, காங்கிரஸ் கட்சியோடு பேச்சு வார்த்தை நடத்திய கருணாநிதியும் மிரண்டு தான் போயிருந்தார். ராசாவின் கைது முதல் அதிர்ச்சி என்றால், கூட்டணி பேச்சுவார்த்தையை காங்கிரஸ் நடத்திய விதம் அடுத்த அதிர்ச்சி. பேச்சுவார்த்தைக்காக டெல்லி சென்ற கருணாநிதியிடம் மன்மோகன் சிங் முதல் நாள் பேசிய போதுதான், ராசா கைது என்ற விஷயத்தை தெரிவிக்கிறார். இப்போது, கருணாநிதி மன்மோகனை வரவேற்கப் போவதை விட, தமிழ் மொழியும், வைரமுத்துவும் தான் முக்கியம் என்பதை நினைவில் வைத்திருந்தாரா என்பது தெரியவில்லை.
முதல் நாள் சோனியாவின் அப்பாயின்ட்மென்ட் கிடைக்கவில்லை. மறுநாள் மதியம் ஒரு மணிக்கு சோனியாவின் அப்பாயின்ட்மென்ட் என்று தகவல் அளிக்கப் படுகிறது. மதியம் சோனியாவை சந்திக்கலாம் என்று காத்திருந்த கருணாநிதிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. ஒரு மணிக்கான சோனியாவின் அப்பாயின்ட்மென்ட், ரத்து செய்யப் படுகிறது. சோனியாவுக்கு உடல் நிலை சரியில்லை என்ற ஒரு ‘சொத்தை‘ காரணம் தெரிவிக்கப் படுகிறது.
யுபிஏ.1 அரசாங்கத்தில், நினைத்ததையெல்லாம் சாதித்த கருணாநிதிக்கு இது ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைகிறது.
மாலை 7 மணிக்கு சோனியாவின் அப்பாயின்ட்மென்ட் வழங்கப் படுகிறது. வழக்கமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்கியவுடன் எத்தனை சீட்டுகள் வழங்க இயலும் என்பதைப் பேசியே பழக்கப் பட்ட கருணாநிதி, முதன் முறையாக அதிர்ச்சிக்கு ஆளாகிறார். சோனியாவோடு இருந்த ராகுல் காந்தி, 82 தொகுதிகளின் பட்டியலை எடுத்து படிக்கத் தொடங்குகிறார். இந்த தொகுதிகளெல்லாம் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டும் என்று, கருணாநிதிக்கு தகவல் சொல்லுவது போலச் சொல்லுகிறார். கருணாநிதி அதிர்ச்சியில் உறைகிறார். இது மட்டுமல்லாமல், கூட்டணி மந்திரி சபை என்ற நிபந்தனையும் விதிக்கப் படுகிறது. தனியாகக் கொள்ளையடித்தே பழக்கப் பட்ட கருணாநிதிக்கு, இன்னொருவருக்கு கொள்ளையில் பங்கு கொடுக்க வேண்டும் என்பதே, மிகுந்த அயற்சியை தருகிறது.
டெல்லி வந்திறங்கியவுடன், கருணாநிதி பாட்டாளி மக்கள் கட்சி திமுக கூட்டணியில் தான் இருக்கிறது என்று அறிவித்தார். கருணாநிதியின் இந்த அறிவிப்புக்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று, அதிமுகவோடு தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சி பேச்சுவார்த்தையில் உள்ளது என்பதை அறிந்த கருணாநிதிக்கு, ராமதாஸுக்கு ஒரு செக் வைக்க வேண்டும். இன்னொரு காரணம், காங்கிரஸ் கட்சியிடம், பாருங்கள், நான் பாமகவுக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும், ஆகையால் நீங்கள் கம்மியாக வாங்கிக் கொள்ளுங்கள் என்பது மற்றொரு காரணம்.
ஆனால் கருணாநிதியின் இந்தத் தந்திரம், மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது.
முதலில் பாமக உடனான கூட்டணி பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே, ராமதாஸ் பத்திரிக்கையாளர்களை சந்தித்து, ‘கூட்டணி பற்றி பாமக எந்த முடிவும் எடுக்கவில்லை’ என்று அறிவிக்கிறார். ராமதாஸின் இந்த அறிவிப்பு, கருணாநிதியை சினம் கொள்ளச் செய்ததோடல்லாமல், காங்கிரஸ் கட்சியோடு பேச்சுவார்த்தை நடத்தும் நேரத்தில் மிகுந்த பலவீனப் படுத்துகிறது.
பலவீனமான நிலையில் சோனியாவை சந்தித்த கருணாநிதி அதிகம் பேச முடியாமல், 82 இடங்கள் கேட்ட காங்கிரஸ் கட்சிக்கு, கட்சியோடு கலந்தாலோசித்து விட்டு முடிவெடுக்கிறோம் என்று கூறி விட்டு திரும்புகிறார்.
திரும்பிய மறுநாள் தான் ஆ.ராசா கைது. இதன் நடுவே, கூட்டணி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று திமிரோடு அறிவித்த மருத்துவர் ராமதாஸ், அந்தர் பல்டி அடிக்கிறார். திமுக கூட்டணியில் தான் நீடிக்கிறோம் என்றும், பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து கொண்டிருக்கிறது என்றும் அறிவித்து விட்டு, உடனடியாக திமுகவுக்கு தூது விடுகிறார்.
அரசியலில் ஒரு நாள் என்பது மிகுந்த நீண்ட காலம் என்பார்கள். அதற்கேற்றார் போலத்தான் நிகழ்வுகள் அரங்கேறின.
பாமக சார்பாக தூது வந்தவரிடம், கருணாநிதி 28 தொகுதிகளுக்கான பட்டியலை தயார் செய்து கொடுக்கிறார். அடுத்த நாள் கலர் டிவி கொள்முதல் செய்வதற்கான அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் பாமக சார்பாக கலந்து கொண்ட, கோ.க.மணி, 28 தொகுதிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சம்மதத்தை தெரிவித்ததோடு கூடுதலாக 2013ல் ஏற்படும் ராஜ்ய சபா காலியிடத்திற்கு, சின்ன அய்யா அன்புமணிக்கு ஒரு இடம் வேண்டும் என்று தெரிவிக்கிறார். கருணாநிதியும் தனது சம்மதத்தை கோ.க.மணியிடம் தெரிவிக்கிறார்.
நீ ஏன் இப்படி கோவணத்துடன் ஆண்டி ஆனாய்…..
இந்நிலையில், 82 இடங்களை கேட்ட காங்கிரஸ் கட்சி, இறங்கி வந்து 50 அல்லது 60 இடங்களுக்கு ஒத்து வரும் என்று எதிர்ப்பார்க்கிறார் கருணாநிதி. ஆனால், காங்கிரஸ் கட்சி சற்றும் குறைவது போல் தெரியவில்லை. பிடிவாதமாக 80 என்ற எண்ணிக்கையிலேயே தெளிவாக இருக்கிறது.
இப்போது கருணாநிதியின் மனது தேர்தலுக்குப் பின் என்ன என்பது பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறது.
மொத்தம் உள்ள தொகுதிகள் 234. காங்கிரஸ் கேட்பது 80. காங்கிரஸ் பிடிக்கும் பிடிவாதத்தைப் பார்த்தால், இறங்கி வருவது போல தெரியவில்லை.
234ல் 80ஐ கழித்தால் மீதம் 154. இந்த 154ல், எப்படியும் 14வது, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட விசுவாசமான அடிமைகளுக்குப் பிரித்துத தர வேண்டும். மீதம் 140. இந்த 140ல் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 28 கொடுத்தால் மீதம் உள்ளது 112 மட்டுமே. இந்த 112லும், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் ஜெயிக்க வாய்ப்பே இல்லை.
90 இடங்களில் ஜெயித்தால் கூட, இப்போது இருக்கும் நிலையை விட, இன்னும் மோசமாகப் போய் விடும். மீண்டும் ’மைனாரிட்டி ’ அரசு என்ற நிலை. அதனால், பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியை விட்டு வெளியேற்றினால், 140ல் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
மேலும், பாட்டாளி மக்கள் கட்சி, ஒரு வேளை அதிமுக வோடு கூட்டணி சேர்ந்தால், தேமுதிக அதிமுக கூட்டணியில் இருக்க வாய்ப்பில்லை. விஜயகாந்துக்கு ஒரு கணிசமான தொகையை கொடுத்தால், தனித்து போட்டியிடுவார். விஜயகாந்த் தனித்துப் போட்டியிட்டு பெறும் வாக்குகள் அனைத்தும், திமுகவுக்கு எதிரான வாக்குகளாகவே இருக்கும்.
மும்முனைப் போட்டியானால், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் போட்டி சரி சமமாக இருக்கும். அப்போது, நம்மிடம் இருக்கும் பணத்தை வைத்து எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்பது கருணாநிதியின் கணக்கு. ஆனால் கருணாநிதி போடும் இந்தக் கணக்கு வெற்றி பெறப் போவது இல்லை.
இதை வலுப்படுத்தும் விதமாகத்தான், திமுக பொதுக்குழுவில் பேசுகையில், ’எதிரிகளை மன்னிக்கலாம். துரோகிகளை மன்னிக்கக் கூடாது. கடைசி நேரத்தில் ராமதாஸ் அதிமுக கூட்டணிக்குச் சென்றதால்தான், பாராளுமன்றத் தேர்தலில் 40க்கு 40 பெற முடியவில்லை’ என்ற அன்னை சோனியா பாமகவைப் பற்றிப் பேசினார் என்று கருணாநிதி கூறியது இந்தப் பின்னணியிலேயே… ராமதாஸ் சோனியாவிடம் சென்று இப்படிப் பேசினீர்களா என்று கேட்கவா முடியும் ?
பாட்டாளி மக்கள் கட்சியை வெளியேற்றினாலும், அக்கட்சிக்கு, அதிமுக கூட்டணியில் இடம் இருக்காது. பாட்டாளி மக்களின் வாங்கு வங்கியான, வன்னிய சமுதாய மக்களே இன்று ராதாஸுக்கு ஆதரவு தருவதில்லை என்பதை ஜெயலலிதா அறிய மாட்டாரா என்ன ?
மேலும், விஜயகாந்துடனான கூட்டணிப் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் இருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவிகித வாக்குளைப் பெற்ற தேமுதிகவுக்கு முன்னுரிமை கொடுக்கப் படுமா, இருக்கும் வாக்கு வங்கியையும் கோட்டை விட்ட பாட்டாளி மக்கள் கட்சிக்கு முன்னுரிமை வழங்கப் படுமா ?
இந்தக் காட்சி இந்த அளவில் இருக்கையில், மருத்துவர் ராமதாஸ் ’நடுத்தெரு நாராயணா’ என்ற நிலையில் இருக்கிறார்.
ஒவ்வொரு தேர்தலுக்கும், கூட்டணி மாறி மாறி, ஓரளவு வெற்றியும் பெரும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இருப்பை, இரு திராவிட கட்சிகளுமே, எரிச்சலாகத் தான் பார்க்கின்றன.
மேலும், கணிசமான எம்எல்ஏக்களை பெற்று விட்ட இறுமாப்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு இல்லாமல், எந்த கூட்டணியும் ஆட்சி அமைக்க முடியாது என்று அவ்வப்போது கருத்து தெரிவித்த மருத்துவர் ராமதாசின் கொட்டத்தையும் அடக்க வேண்டும் என்பதில் இரு கட்சிகளும் மும்முரமாக உள்ளன.
ஒரு ஊரில் இரண்டு பெரிய ரவுடிகள். அந்த இரண்டு ரவுடிகளும், நேருக்கு நேராக பல ஆண்டுகளாக மோதி வருகிறார்கள். நடுவில் திடீரென்று போலீஸ் தொந்தரவு. போலீசிடமிருந்து தப்பிக்க, ஒரு ரவுடி, சின்ன ரவுடி ஒருவரின் உதவியை நாடுகிறார். அவர் உதவியால், எதிரியான பெரிய ரவுடியை வெற்றி கொள்கிறார். சிறிது நாள் கழித்து, அந்த சின்ன ரவுடி, எதிரி முகாமுக்குச் செல்கிறார். சென்று, ஏற்கனவே வெற்றி பெற்ற அந்த பெரிய ரவுடியை தோற்கடிக்கிறார்.
இப்படி சின்ன ரவுடி கட்சி மாறி மாறி, இரு ரவுடிகளையும், வெற்றி பெறச் செய்தும், தோல்வியடையச் செய்தும் வந்தவுடன், அந்த சின்ன ரவுடி ’சரி.. நம்பளாலத் தான் இந்த பெரிய ரவுடிகள் இரண்டு பேரும் காலம் தள்றாங்க’ என்று முடிவெடுத்து, ஊர் முழுக்க இந்த விஷயத்தை சொல்லி வருகிறார்.
பெரிய ரவுடிகள் இரண்டு பேரும் நேருக்கு நேர் எதிரிகள் என்றாலும், நேற்று முளைத்த ஒரு சின்ன ரவுடி, எப்படி இரண்டு பேரையும் மிரட்டி வருகிறானே என்ற கோபம் இருவருக்குமே இருக்கும் தானே ? அந்த சின்ன ரவுடியைப் போலத்தான் பாட்டாளி மக்கள் கட்சியை, இரண்டு திராவிட கட்சிகளுமே பார்க்கின்றன.
ஒரு வேளை இப்போது இருக்கும் முடிவுப் படி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு திமுக கூட்டணியில் இடம் அளிக்கப் படாவிட்டால், இந்த தேர்தல், பாட்டாளி மக்கள் கட்சியின் முடிவுரையை எழுதும்.
இரண்டு திராவிட கட்சிகளுக்குமே இந்தத் தேர்தல் முக்கியமான தேர்தல். ஒரு வேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அதிமுக என்ற கட்சியே இல்லை என்னும் அளவுக்கு, கருணாநிதி வேலை செய்வார்.
அதிமுகவை பொறுத்தவரை, கட்சியை காப்பாற்றுவதற்கும், அடுத்த தேர்தலை சந்திப்பதற்கும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டிய ஒரு நிலை.
இப்படி அவரவர் நலன்களை மட்டும் பார்த்துக் கொண்டு, எப்படி ஒருவரை ஒருவர் அழிப்பது என்று நடக்கும் போட்டியில், முள்வேளி முகாமுக்குள் இருக்கும் ஈழத் தமிழர்களை மறந்து போன இவர்கள் கட்த்ரோட் பொலிட்டீஷியன்ஸ் தானே சார்……