இந்தியாவுக்கே மிகப் பெரும் அச்சுறுத்தல் என்று சொல்லப் படும் மாவோயிஸ்டுகளுக்கு, இந்தியாவில் தற்போதுள்ள ஜனநாயக அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. இந்த ஜனநாகயகத்தை அவர்கள் போலி ஜனநாயகம் என்று அழைக்கிறார்கள்.
இந்த நீதிமன்றங்கள், பாராளுமன்றம், சட்டமன்றம் எதையும் அவர்கள் பத்து பைசாவிற்கு மதிப்பதில்லை. எண்பதுகளில் நக்சலைட்டுகளின் கொள்கை, நீதிமன்றத்தில் வழக்குகளை கூட நடத்தக் கூடாது என்பது. ஆனால், பின்னாளில் ஏற்பட்ட சித்தாந்த ரீதியான மாறுதல்களால், நீதிமன்றங்களை மாவோயிஸ்டுகள் மற்றும் மக்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு பயன்படுத்தலாம் என்ற நிலைபாடு எடுக்கப் பட்டது.
அதன்படியே, காவல்துறையின் அராஜகங்களையும், போலி மோதல் படுகொலைகளையும், கண்டிப்பதற்கும், மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துவதற்கும் பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால் மாவோயிஸ்டுகள் நீதிமன்றங்கள் மற்றும் மற்ற அமைப்புகளின் மீதான தங்கள் பார்வையில் தெளிவாகவே இருக்கிறார்கள். எப்போதாவது ஒரு முறை, ஒரு வி.ஆர்.கிருஷ்ணய்யர், ஒரு பகவதி, ஒரு ராஜேந்திர சச்சார், ஒரு ஏ.பி.ஷா போல விதிவிலக்கான மனிதர்கள் நீதிபதிகளாக இருக்கும் போது மட்டும் தான் நியாயம் கிடைக்கும் என்ற அவர்களின் பார்வை சரியானதே.
பிரபுவே, மை லார்ட், லார்ட்ஷிப் என்று நாம் அழைக்கும், இந்த நீதிபதிகள், வானத்திலிருந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களும் மனிதர்கள் தான். மனிதர்களில் அனைவருக்கும் இருக்கும் பலவீனங்கள் அனைத்தும் அவர்களுக்கும் உண்டு.
மிக மிக மோசமான பழக்கவழக்கங்கள் கொண்ட, முன்னாள் இந்நாள் நீதிபதிகளை சவுக்குக்கு தெரியும். அவர்களின் பழக்கவழக்கங்கள் சாதாரண மனிதராக இருந்தால், வெளி உலகக்கு தெரியும். ஆனால், இவர்கள் நீதிபதிகளாக இருப்பதால், வெளிச்சத்திற்கு வராமல், பல்வேறு விவகாரங்கள் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன.
நீதிபதிகளின் ஊழல்கள் பற்றி, ஊடகங்களுக்குத் தெரிந்தாலும், பெரிய அளவில், மனசாட்சி உள்ள வழக்கறிஞர்கள் அதை வெளிச்சம் போட்டுக் காட்டும் வரை, எந்த ஊடகமும் அந்த செய்தியை பிரசுரிக்க முன்வருவதில்லை. ஏனெனில், ‘நீதிமன்ற அவமதிப்பு‘ என்ற பூதத்தை வைத்து, இந்த நீதிபதிகள், தங்களின் அழுக்குகளை மறைப்பதற்கு கேடயமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளில் சிலரின் நடவடிக்கைகளை கேட்டால் ஆச்சர்யப் படுவீர்கள்.
ஒரு அரசு அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு வர வேண்டும் என்று விதி உண்டு. அந்த விதியை மீறி தாமதமாக வந்தால், அந்த ஊழியரின் விடுப்பிலிருந்து கழிக்கப் படும்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, தினமும் காலை நல்ல நேரம் எப்போது துவங்குகிறதோ, அது பத்து மணியாக இருந்தாலும் சரி, பன்னிரண்டு மணியாக இருந்தாலும் சரி, அப்போதுதான் நீதிமன்றத்தில் அமர்வார். 12 மணிக்கு நீதிமன்றத்தில் வந்து அமர்ந்து, உணவு இடைவேளை கூட விடாமல், தொடர்ந்து வழக்குகளை நடத்துவார். சர்க்கரை, அல்சர் போன்ற வியாதிகளால் பாதிக்கப் பட்டுள்ள வழக்கறிஞர்கள் கூட, மதிய நேரத்தில் இல்லாமல் போனால், வழக்கு தள்ளுபடி செய்ய வேண்டுமே, க்ளையன்டுகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக பல்லைக் கடித்துக் கொண்டு நீதிமன்றத்திலேயே காத்துக் கிடக்கும் அவலம், அனுதினமும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
ஒரு அரசு ஊழியருக்கு பதவி உயர்வு சரி வர வழங்கவில்லை என்று அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால், பல்வேறு கேள்விகளை எழுப்பும் உயர் நீதிமன்றம், தன்னுடைய ஊழியர்களை எப்படி நடத்துகிறது என்று பார்த்தீர்களேயானால், கண்ணீர் வரும். இதைப் பற்றிய தனிக் கட்டுரை வரப்போகிறது என்பதால், இதற்கு மேல் இந்த விஷயத்தில் உட்புக விரும்பவில்லை.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி, அரசு இயந்திரம், பாராளுமன்றம் மற்றும் நீதித்துறை மூன்று பிரிவுகளாக செயல்படுகிறது. இந்த அமைப்புகளில் ஒன்றின் அதிகாரத்தில் ஒன்று தலையிடாதபடி, கவனமாக அரசியல் அமைப்புச் சட்டம் அமைக்கப் பட்டிருந்தாலும், யதார்த்தத்தில் அனைத்தையும் கட்டுப் படுத்துவது அரசியல்வாதிகளே..
அந்த அரசியல்வாதிகளைக் கட்டுபடுத்துபவர்கள் ரத்தன் டாடா அம்பானி சகோதரர்கள் போன்ற தொழிலதிபர்கள். நுட்பமாக பார்த்தால், இந்தியாவின் அனைத்து முடிவுகளையும் எடுப்பவர்கள், இந்த தொழில் அதிபர்களே….
இந்தப் பின்னணியில் தான் இன்றைய நீதிமன்றங்களை பார்க்க வேண்டியிருக்கிறது.
ஜனநாயவாதிகளும், இந்த தேசத்தை பெரிதும் நேசிக்கும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்னும் இந்த நீதிமன்றங்களை நம்பித்தான் வழக்குகளை தொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த அடிப்படையிலேதான், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப் பட்டன. ஆனால், இந்த வழக்குகளைத் தொடர்ந்ததில் கிடைத்த அனுபவம் என்னவென்றால், இந்த நீதிமன்றங்கள் மக்களுக்கானது அல்ல என்பதே.
பல்வேறு வழக்குகளை உதாரணமாக சொல்ல முடியும். அண்ணா பல்கலைகழகத்தில் கவர்மென்ட் கோட்டா என்ற ஒன்றை வைத்து கொண்டு, முதலமைச்சர் கடிதத்தை பெற்று, படிக்காத தறுதலை பிள்ளைகளுக்கு இடம் பெறுவதை ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் ஒரு வழக்கமாகவே வைத்துக் கொண்டிருந்தனர். இவ்வாறு தங்கள் பிள்ளைகளுக்கு இடம் பெற்ற அதிகாரிகள் இருவர். ஒருவர், ராதாகிருஷ்ணன் என்ற பிச்சை நாயுடு. மற்றொருவர் நரேந்திர பால் சிங் என்ற கூடுதல் டிஜிபி. இருவரும், லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றுகின்றனர். அப்போது, செல்வி.ஜெயலலிதா மற்றும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதான வழக்குகளில் சிலவற்றை இந்த இரு அதிகாரிகளும் ஊத்தி மூடுகின்றனர். வழக்குகளை ஊத்தி மூடி விட்டு, தங்கள் மக்குப் பிள்ளைகளுக்கு ஜெயலலிதா கையால் அண்ணா பல்கலை கழகத்தில் சீட் பெறுகின்றனர். இது லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் படி குற்றம். இதற்கு, பேராசிரியர் கல்யாணி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடுக்கிறார். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அவர் தொடர்ந்த பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது. பல்வேறு ஆதாரங்களையும், பேராசிரியர் கல்யாணி கொடுத்த புகாரை விசாரிக்காதே என்று, லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநருக்கு முன்னாள் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி உத்தரவிட்ட ஒலி நாடாவோடும் வாதிடப் பட்டது.
இந்த வழக்கு தள்ளுபடி செய்யப் பட்டது.
தமிழில் திரைப்படத்திற்கு பெயர் வைத்தால், முழுமையான வரி விலக்கு என்று தமிழக அரசு உத்தரவு போட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு என்ற ஆதாரங்களை திரட்டி, இது போல தமிழில் பெயர் வைத்தால் அதனால் மொழி வளர்ந்து விடாது, மாறாக அரசுக்கு வரி இழப்புதான் ஏற்படுகிறது என்று ஒரு பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப் பட்டது.
முதலமைச்சருக்கு வண்டி தள்ளிக் கொண்டு போன ஒரே காரணத்திற்காக ‘ட்ராலி பாய்ஸ்‘ மூன்று பேருக்கும், தலா இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனைகளை கர்ண பிரபு கருணாநிதி வழங்கினார். இந்த மூன்று பேரும் சாதாரண இன்ஸ்பெக்டர்கள். இந்த இன்ஸ்பெக்டர்களின் மாத வருமானம், சராசரியாக 20,000 ஆயிரம் என்று வைத்துக் கொள்வோம். அரசு நிர்ணயித்த விலையான 1.25 கோடியை இந்த ட்ராலி பாய்ஸ் எப்படி ஒரே நாளில் அரசுக்கு கட்டினார்கள் ? இவர்கள் லஞ்சம் பெற்று வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளார்கள் என்று, ஒருவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார் கொடுக்கிறார்.
அந்தப் புகாரின் மீது உண்மை விளம்பி ராமானுஜம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காக தொடுக்கப் படுகிறது. இந்தப் புகாரை விசாரித்தது ஜாபர் சேட் தலைமையிலான உளவுத் துறை. உளவுத் துறை விசாரித்து சமர்ப்பித்த இந்த அறிக்கையை சரியானது என்று ஏற்றுக் கொண்டு இந்த வழக்கையும் தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
நீலாங்கரை இரட்டைக் கொலை வழக்கில் குற்றவாளி என்று சந்தேகிக்கப் பட்ட நபர் காவல்துறையின் கட்டுப் பாட்டில் அடித்துக் கொல்லப் படுகிறார். இதற்காக தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், இரண்டு பொது நல வழக்குகள் தாக்கல் செய்யப் படுகின்றன. ஆர்டிஓ விசாரணை நடைபெறுகிறது என்று அரசு தெரிவித்த கருத்தை ஏற்று, வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
இது போல, நீதிமன்றத்தை சரி செய்து விடலாம், அரசு வழக்கறிஞர் சொல்லுவதற்கெல்லாம், நீதிபதிகள் ஆமாம் சாமி போடுவார்கள் என்ற இறுமாப்பு தானே, காக்கி உடை அணிந்த கொலைகாரர்களை மேலும் பல்வேறு கொலைகளிலும், மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட வைக்கிறது ? அந்த சண்முக சுந்தரத்தை காவல் நிலையத்தில் வைத்து அடித்துக் கொன்ற அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை ? அந்த சண்முகசுந்தரத்தின் மனைவிக்கு என்ன நீதியை வழங்கியது இந்த நீதிமன்றம் ?
இதை விட வேடிக்கையான ஒரு வழக்கு இருக்கிறது. உச்ச நீதிமன்றம் டி.கே.பாசு என்ற வழக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்குகிறது. அத்தீர்ப்பில் தான், காவல்துறையினர் ஒருவரை கைது செய்யும் போது, என்னென்ன நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று வரையறை செய்யப் படுகின்றது. சம்பந்தப் பட்டவரின் உறவினர் அல்லது நண்பருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும், கைது செய்ய வருபவர்கள் தெளிவாக தங்களை அடையாளப் படுத்த வேண்டும், மருத்தவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று 12 கட்டளைகளை உச்ச நீதிமன்றம் வகுக்கிறது. வகுத்து விட்டு, இந்த 12 கட்டளைகளும், இந்தியாவில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும், அனைவரும் பார்க்கும் வகையில் பலகையில் வைக்க வேண்டும். அவ்வாறு வைக்கத் தவறினால், அது நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதப் படும். இதற்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டியதில்லை. அந்தந்த மாநில உயர்நீதிமன்றத்திலேயே வழக்கு தொடரலாம் என்று அந்தத்தீர்ப்பில் உத்தரவிடப் பட்டிருந்தது.
இதற்காகவும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.
தமிழகத்தின் எந்தக் காவல்நிலையத்திலாவது இது போன்ற அறிவிப்பு பலகைகளை நீங்கள் பார்த்தது உண்டா ? எங்கேயும் இருக்காது. இதில் என்ன கோரிக்கை கேட்கப் பட்டது என்றால், ஒரே ஒரு கோரிக்கை தான். “உச்ச நீதிமன்ற கட்டளைப் படி டி.கே.பாசுவின் வழக்கில் கூறிய கட்டளைகளை அனைத்து காவல்நிலையங்களிலும், உடனடியாக வைக்க உத்தரவிட வேண்டும்.” ஒரு சரியான நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும் தெரியுமா ?
உடனடியாக அரசுக்கு, அனைத்து காவல்நிலையங்களிலும், இந்த அறிவிப்பு பலகைகளை வைத்து விட்டு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டிருக்க வேண்டும்.
டிசம்பர் 2009ல் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியது. என்ன தீர்ப்பு என்றால், அரசு விரைவாக காவல்நிலையங்களில் இந்த அறிவிப்பு பலகைகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான்.
தீர்ப்பு வழங்கப் பட்டு ஒரு ஆண்டுக்கு மேல் ஆகி விட்டதா ? காவல்நிலையங்களில் அறிவிப்பு பலகைகள் வைக்கப் பட்டுள்ளதா என்பதை நீங்களே கூறுங்கள்.
இதுதான் நீதிமன்றங்களின் லட்சணம். நியாயப் படி, உச்சநீதிமன்றத்தில் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று, நீதிமன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஒருவன் வழக்கு தொடுக்கிறானே… அப்போதாவது இதில் உத்தரவு போடலாம் என்றால்……. வெட்கம் வெட்கம்.
இது போல பல்வேறு வழக்குகளை உதாரணத்திற்கு சொல்லிக் கொண்டே போகலாம். அதற்காக பொது நலன் என்ற பெயரில் தொடரப்படும் அனைத்து வழக்குகளிலும் உத்தரவிட வேண்டுமென்று சொல்லவில்லை. ஒரு வழக்கில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பது நீதிமன்றத்தின் கடமையா இல்லையா ?
எந்தவித உள்நோக்கமும் இல்லாமல், ஒருவர் ஒரு ஊழலை வெளிக் கொணர வேண்டும் என்பதற்காகவோ, ஒரு மனித உரிமை மீறலை வெளிச்சம் போட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக ஒருவர் தொடுக்கும் வழக்கை, சொத்தைக் காரணங்களுக்காக ஒரு நீதிமன்றம் தள்ளுபடி செய்தால், பிறகு நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை இருக்கும் ?
டாக்டர்.பினாயக் சென் வழக்கையே எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டு காவலர்கள் பேசியதையும், மொட்டைக் கடுதாசியையும் ஆதாரமாக வைத்து கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை ஒரு நீதிமன்றம் வழங்குகிறது. மற்ற பல்வேறு நீதிமன்றங்கள், லஞ்ச ஒழிப்புத் துறை விசாரித்து குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த பல்வேறு வழக்குகளில் திமுக அமைச்சர்களை விடுவிப்பு செய்கிறது.
இந்த நீதிபதிகளின் தவறுகளை சுட்டிக் காட்ட, ஒரு அமைப்போ, மேற்பார்வை செய்ய வெளிப்படையான கட்டமைப்பு வசதிகளோ இல்லாத நிலையில் இந்த நீதிபதிகள் தங்களை கடவுள்களாக கருதிக் கொண்டு, என்ன செய்தாலும், இஷ்டத்துக்கு நியாயத்துக்கு புறம்பாக தீர்ப்பளித்தாலும், நம்மை யாரும் எந்தக் கேள்வியும் கேட்க முடியாது என்ற எண்ணத்திலேயே பல நீதிபதிகள் செயல்பட்டு வருகிறார்கள்.
சமீபத்தில் நடந்த வழக்கும், அதன் தீர்ப்புமே இந்தக் கட்டுரை எழுதப்படுவதற்கான பிரதான காரணம்.
போலிப் பாதிரி, ஜெகத் கஸ்பர் அலுவலகத்தில், 2ஜி ஊழலில் தொடர்பிருக்கிறது என்று சந்தேகப் பட்டு சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
இதையடுத்து, சென்னை சங்கமம் என்ற விழா நடைபெறும் என்று வழக்கம் போல, அறிவிப்பை கஸ்பரின் தமிழ் மையம் வெளியிடுகிறது. இந்தியாவையே உலுக்கிய ஒரு மெகா ஊழலில் தொடர்புடைய ஒரு நபர், மக்கள் வரிப்பணத்தில் நடக்கும் ஒரு விழாவை, சிபிஐ ஆல் சந்தேகப் பட்டு சோதனைக்குள்ளான ஒரு நபர் நடத்துவதும், அதற்கு அரசு ஆதரவு தருவதும் எந்த வகையில் சரியான நடவடிக்கையாக இருக்கும் ?
இதை எதிர்த்து, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப் படுகிறது. அந்த வழக்கில் ஒரே ஒரு கோரிக்கை.
ஜெகத் கஸ்பரின் தமிழ் மையம் அரசு நடத்தும் விழாவோடு சம்பந்தப் படக் கூடாது என்பது மட்டும் தான்.
ஜெகத் கஸ்பரோடு தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கு என்ன சொத்துத் தகராறா ? ஊழலில் சம்பந்தப் பட்டவர்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கக் கூடாது என்ற ஒரே காரணம் தானே ?
இந்த மனு சென்னை சங்கமம் தொடங்குவதற்கு முன்னதாகவே விசாரணைக்கு வந்தது. இந்த மனுவிற்கு பதில் மனு, தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
அந்த மனுவில், “சென்னை சங்கமத்தை நடத்துவதே, தமிழக அரசு தான். தமிழ் மையத்தின் பணி, சென்னை சங்கமத்திற்கு, தேவையான கலைஞர்களை வழங்குவது மட்டும் தான். தமிழ் மையத்தோடு எவ்வித பணப்பரிமாற்றமும் கிடையாது. கலைஞர்களுக்கு வழங்கப் பட வேண்டிய தொகையை கூட, அரசே நேரடியாக வழங்கும். இது தொடர்பான விளம்பரங்களைக் கூட அரசே செய்யும். தமிழ் மையத்திற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்று பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
இந்த பதில் மனுவை அப்படியே தங்களது தீர்ப்பில் பதிவு செய்த, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிபகள் முகம்மது இக்பால் மற்றும், சிவஞானம் இது தொடர்பாக ஒரு தீர்ப்பை வழங்கினார்கள். அந்தத் தீர்ப்பில், அரசின் உறுதி மொழி அப்படியே பதிவு செய்யப் பட்டு, அரசு இவ்வாறு தெரிவித்திருப்பதாலும், விளம்பரங்களை அரசே தரும் என்பதாலும், தமிழ் மையத்திற்கு கலைஞர்களை வழங்குவது மட்டுமே பொறுப்பு என்று தெரிவித்திருப்பதாலும், தமிழ் மையம் தொடர்ந்து சென்னை சங்கமத்தை நடத்தலாம் என்று ஒரு தீர்ப்பை வழங்கியது.
இந்தத் தீர்ப்பை தொடர்ந்து சென்னை சங்கமம் நடைபெற்றது. சென்னை சங்கமம் தொடர்பான விளம்பரங்கள் சென்னை நகரம் முழுவதும் செய்யப் பட்டன. இந்த விளம்பரங்களில், தமிழ் மையத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது என்றும், அரசு லோகோ இடம் பெற்றுள்ளது என்றும் சவுக்குக்கும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்துக்கும் பல்வேறு அழைப்புகள்.
சவுக்கும், மற்ற தோழர்களும், இந்த விளம்பரங்களில் பெரும்பாலானவற்றை புகைப்படம் எடுத்தும், இது தொடர்பான ஆதாரங்களையும் சேகரித்து வந்தனர்.
விழா தொடங்கிய சில நாட்களில், தமிழ் மையத்திற்கும், அரசுக்கும் ஒரு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அந்த நோட்டீஸில், நீதிமன்றத் தீர்ப்பை மீறி, சென்னை சங்கமம் தொடர்பான அனைத்து விளம்பரங்களிலும், பேருந்துகளிலும், தமிழ் மையத்தின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது நீதிமன்றத் தீர்ப்பை மீறிய செயலாகும் என்றும், அதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்தை செய்திருக்கிறீர்கள் என்று அனுப்பப் பட்டது.
அடுத்து தமிழ் மையத்திற்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அந்த நோட்டீஸில், சென்னை நீதிமன்றம் தனது தீர்ப்பில் உங்களை கலைஞர்களை வழங்குவது மட்டும் தான் சென்னை சங்கமம் தொடர்பான உங்களது பணி என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் படி, நீங்கள் 2000 நிறுவனங்கள் மற்றும் நபர்களிடமிருந்து சென்னை சங்கமத்திற்காக நன்கொடை கேட்டிருக்கிறீர்கள் என்று அறிகிறோம். இது நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானதாகும். அவ்வாறு ஏதாவது வசூல் செய்திருந்தால், உடனடியாக அத்தொகையை திருப்பி அளியுங்கள். இனி மேற்கொண்டு வசூல் செய்யாதீர்கள் என்று.
அதற்கு போலிப் பாதிரி, பதில் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் என்ன கூறியிருந்தார் தெரியுமா ?
வசூல் செய்யாதீர்கள் என்று சொல்ல உங்களுக்கு உரிமை இல்லை. நாங்கள் வசூல் செய்வோம். சென்னை சங்கமம் நடத்துவதற்கு அரசு கொடுத்த தொகை போதுமானதாக இல்லை. அதனால் வசூல் செய்கிறோம் என்று.
இந்த இடத்தில் அரசு நீதிமன்றத்திற்கு அளித்த உறுதி மொழியை மீண்டும் படியுங்கள்.
இந்த பதில் நோட்டீசையும், சென்னை சங்கமத்தில் எடுத்த புகைப்படங்களையும் வைத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு சார்பாக பதில் மனு தாக்கல் செய்த, சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண் இயக்குநருக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அனுப்பி கடந்த செவ்வாயன்று இவ்வழக்கை இரண்டாவது விசாரணைக்கு ஒத்தி வைத்தது.
அன்று வாதத்தின் போது, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக ஆஜரான ராதாகிருஷ்ணன், இந்த வழக்கு சாதாரண வழக்கல்ல. நீதிமன்றத்தின் மேன்மையை கேள்விக் குள்ளாக்கியுள்ள ஒரு வழக்கு. ஒரு நீதிமன்றத்தின் உத்தரவை அரசு எப்படி மதிக்காமல் நடந்திருக்கிறது என்பது தொடர்பான வழக்கு என்று தனது வாதத்தை தொடங்கினார்.
அப்போது குறுக்கிட்ட, தலைமை நீதிபதி இக்பால், நீதிமன்றத்தின் மாண்பை காப்பதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், நீங்கள் உங்கள் வாதத்தை மட்டும் கூறுங்கள் என்று கூறினார். உடனே, ராதாகிருஷ்ணன், நீதிமன்றத்தின் மாண்பை காப்பது, நீதிமன்றத்துக்கு மட்டுமான பொறுப்பு அல்ல. அது மக்களின் கடமை. அதனால், எனக்கும் கூடுதல் பொறுப்பு இருக்கிறது, என்று கூறினார். தமிழக அரசு சென்னை சங்கமம் தனது விழா என்கிறது. ஆனால், தமிழ் மையம் தனது இணைய தளத்தில் சென்னை சங்கமம் தங்களது விழா என்று காப்புரிமை உள்ளது என்று தகவல் வெளியிட்டிருக்கிறது. இப்படி முரண்பாடான நிலைகளை எடுத்து, நீதிமன்றத்தை வேண்டுமென்றே ஏமாற்றுகிறார்கள் என்றார்.
முதல் முறை பொது நல வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தாக்கல் செய்த பதில் மனுவையும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு தாக்கல் செய்த பதில் மனுவையும் ஒப்பிட்டுக் கூறிய ராதாகிருஷ்ணன், எப்படி முன்னுக்குப் பின் முரணான பதில் மனுவை அரசு தாக்கல் செய்திருக்கிறது என்பதை கூறினார். முதலில் தமிழ் மையத்திற்கு, சென்னை சங்கமத்திற்கான கலைஞர்களை வழங்குவது மட்டுமே பொறுப்பு என்று கூறிய அரசு, அவ்விழாவிற்கான அழைப்பிதழில் தமிழ் மையம் நடத்தும் சென்னை சங்கமம் என்று குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை சுட்டிக் காட்டினார்.
விளம்பரங்களில் எவ்வாறு, அரசு லோகோ பயன்படுத்தப் பட்டுள்ளது என்றும், நீதிமன்றத்தின் தீர்ப்பு எப்படி அரசால் திட்டமிட்டு காற்றில் பறக்க விடப் பட்டுள்ளது என்றும் கூறினார்.
விரைவில், திமுகவின் நீதித் துறைப் பிரிவில் சேர இருக்கும் கூடுதல் அட்வக்கேட் ஜெனரல், வில்சன் இந்த வழக்கில் ஆஜரானார். கிறித்துமஸ் தினத்தன்று, கருணாநிதியை சந்தித்து கூழைக் கும்பிடு போட்டவர் இல்லையா ? கருணாநிதியின் மகள் சம்பந்தப் பட்ட வழக்கல்லவா ? துடித்து விட மாட்டாரா ? இதே வில்சன் தான், கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகள் நீதிமன்றத்தால் தடை செய்யப் பட்ட போது, அரசு சார்பில் ஆஜரானவர். திறம்பட வாதாடி, கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைக்கு நீதிமன்றம் தடை விதிக்க உதவி செய்தவர்.
இந்த வில்சன் தான் இவ்வழக்கில் அரசு சார்பாக ஆஜரானார். ஆஜராகி, அரசு அளித்த விளம்பரங்களில், தமிழ்மையத்தின் பெயர் இடம் பெறவில்லை என்றும், மனுதாரர் தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்றும் கூறினார். நாங்க தவறா புரிஞ்சுக்கிட்டோமாம்…..
இதையடுத்து இவ்வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்த சென்னை உயர்நீதிமன்றம், நேற்று இவ்வழக்கில் தீர்ப்பளித்தது. நீதிமன்ற அவமதிப்புக் குற்றச் சாட்டை அரசோ, தமிழ் மையமோ புரியவில்லை என்பதால் வழக்கை தள்ளுபடி செய்கிறோம் என்று தீர்ப்பளிக்கப் பட்டது.
தமிழகத்தில் உள்ள கருணாநிதி தலைமையிலான கொள்ளைக் கூட்டத்தின் மகளிர் பிரிவு தலைவர் கனிமொழி நடத்தும் இந்த கூத்தை பாதுகாப்பதற்காக நடைபெற்ற இந்த நாடகத்தில் அனைவருமே திறம்பட நடித்தார்கள்.
ஜெகத் கஸ்பர் என்ற நபர் யார் ? ஒரு போலிப் பாதிரி. விடுதலைப் புலிகளின் பெயரைச் சொல்லி உலகத்தமிழரை ஏமாற்றியவன். ஈழப் போர் உச்சக் கட்டத்தில் இருந்த போது, தமிழகத்தில் அதன் வீச்சு எழாமல் இருப்பதற்காக, இந்திய வெளிநாட்டு உளவு நிறுவனமான ‘ரா’ விடம் பணம் பெற்றுக் கொண்டு, அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தவன். இன்றும் ரா வின் ஏஜென்டாக தமிழ்நாட்டில் செயல்பட்டு வருபவன். கருணாநிதி குடும்பத்தின் பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் ஹவாலா ஏஜென்ட். சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த் துறை மாணவர்களின் உழைப்பை உறிஞ்சி அதன் மூலம் பணம் பார்க்கும் ஒட்டுண்ணி. ஒட்டு மொத்தத்தில், ஒரு சமூக விரோதி.
இப்படிப் பட்ட சமூக விரோதியின் சட்டவிரோதமான காரியங்களுக்கு, ஒரு நீதிமன்றம் துணை போகிறதென்றால், அதற்கான அவமானம் வழக்கு தொடர்ந்த எங்களுக்கல்ல… நீதிமன்றங்களுக்கே…. நீதிபதிகள், மிகத் திறமையாக இந்த வழக்குகளை தள்ளுபடி செய்து விடலாம். ஆனால், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களிடம் இந்த நீதிபதிகள் தங்களின் இழந்த மாண்பை என்றுமே மீட்டெடுக்க முடியாது.
வி.ஆர்.கிருஷ்ணய்யர் என்ற ஒரு நீதிபதி, ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டால், இந்தியாவே அதைப் படிக்கிறது. அவர் என்ன உலகப் புகழ் பெற்ற எழுத்தாளரா ? இல்லை. இந்தியாவே அவர் அறிக்கையை படிப்பதற்கு ஒரே காரணம்….. அவரது நேர்மை… மக்களின் மீதான அவரது காதல். இறுதி வரை நேர்மை வழுவாமல் இருந்தது.
ஆனால் இன்றைய நீதிமன்றங்கள்….. ??????? !!!!!!! இவை போலி நீதிமன்றங்களா என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.