நேற்று சவுக்கு தளத்திற்கு வருகை தந்த வாசகர்கள், புதிதாக ஒரு கவுண்ட்டவுனை பார்த்து ஆச்சர்யப் பட்டிருப்பீர்கள். இதில் ஆச்சர்யப் பட ஒன்றுமே இல்லை. நடக்கப் போவதை முன்கூட்டியே கணிப்பது சவுக்கு அல்லவா ?
உஸ்மான் ஆஷிஷ் பல்வா. மதுரை சாந்திக் கடை அல்வா அல்ல தோழரே… பல்வா.. பல்வா… இவர் செவ்வாய் அன்று இரவு, மும்பை பாந்த்ராவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப் பட்டார். கைது செய்யப் படுவதற்கு முன், இரண்டு நாட்களாக சிபிஐ அதிகாரிகளால், தீவிரமாக விசாரிக்கப் பட்டிருக்கிறார்.
ஸ்பெக்ட்ரம் என்னும் பூதம் விஸ்ரூபம் எடுத்து பல பேரின் தூக்கத்தை ஏற்கனவே கெடுத்திருந்தாலும், தற்போது வெளிவந்துள்ள பூதம் ஆணி வேரையே ஆட்டி வைத்திருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் லஞ்சமாக பெறப்பட்ட தொகை பல்வேறு இடங்களில் முதலீடு செய்யப் பட்டிருப்பது, சிபிஐ விசாரணையில் ஆரயாயப் பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக புறப்பட்டிருக்கும் பூதம் கருணாநிதியை புலம்ப வைத்திருக்கிறது.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக கருணாநிதி வெளியிட்ட கேள்வி பதில் அறிக்கையில், “ஸ்பெக்ட்ரம் பிரச்சனையில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்று விட்டதாக பத்திரிகைகள் தானே பூதாகாரமாக ஆக்குகின்றன’ என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், ‘ உண்மைதான். ஒரு சில பத்திரிகைகளும், ஒரு சில எதிர்க்கட்சிக்காரர்களும்தான் பூதாகாரமாக இந்தப் பிரச்சனையை ஆக்கி, ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாயை ஏதோ ஒரு தனிப்பட்ட நபர் அப்படியே அவருடைய வீட்டிற்கு தூக்கிக் கொண்டுபோய் விட்டதைப் போலவும், அந்தத் தொகையை ஒருசிலர் பங்கிட்டு கொண்டதை போலவும் அதற்காக நாடாளுமன்றத்தையே நடத்தவிட மாட்டோம் என்றும் பேசினார்கள், எழுதினார்கள் என்றும், இழப்புக்கு அந்தத் துறை அமைச்சராக இருந்த ராஜா மட்டுமே காரணம் என்று ஒரு சிலர் தங்களுக்குள்ள உள்நோக்கம் காரணமாக குற்றஞ்சாட்டிய போதிலும்- நேற்றைய “எக்கனாமிக் டைம்ஸ்” வெளியிட்ட செய்தியில், “மத்திய அரசில் தொழில் நுணுக்கம் நன்கறிந்த உயர் அதிகாரிகளின் பற்றாக்குறையால் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இழப்பிற்கு அமைச்சரை குறை கூறுவதில் அர்த்தம் இல்லை” என்று எழுதியிருக்கின்றது.” என்று தெரிவித்திருந்தார்.
எந்த எக்கனாமிக் டைம்ஸ் நாளேட்டில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி கருணாநிதி, 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு ஆதரவு தேடினாரோ, அதே எக்கனாமிக் டைம்ஸ் கருணாநிதிக்கு, தேர்தல் நேரத்தில் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.
வெள்ளியன்று வெளியான எக்கனாமிக் டைம்ஸ் நாளேடு, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில், கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு அம்மாளுக்கு தொடர்பு இருக்கிறதோ என்ற குண்டைத் தூக்கிப் போட்டது அரசியல் வட்டாரத்தில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
ராசாவின் கைது கொடுத்த சூடு தணிவதற்குள் அடுத்த விவகாரம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிஐடி காலனி தாய்க்கும், பேய்க்கும், மன்னிக்கவும், சேய்க்கும் இருக்கும் நெருக்கமான தொடர்புகள், நீரா ராடியா உடனான உரையாடல்கள் மூலமாகவும், அண்ணா சாலை வோல்டாஸ் கட்டிடம் தொடர்பான ஆதாரங்கள் ஊடகங்களில் வெளியானதன் மூலமாகவும், தெரிய வந்தது.
இப்போது கருணாநிதி டிவி தொடங்கிய போது, 2ஜி விவகாரத்தில் பெரும் பங்கு வகித்துள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து 214 கோடி ரூபாய் தயாளு அம்மாள் பெற்றுள்ள விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
2007 மே மாதத்தில் இந்தியாவையே உலுக்கிய 3 தினகரன் ஊழியர்கள் கொலை விவகாரத்தை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்திருக்க முடியாது. அந்தக் கொலை கலைஞரின் குடும்பத்தை இரண்டாக உடைத்தது. மாறன் சகோதரர்கள் அந்தக் கொலையைப் பற்றி சன்டிவியிலும், தினகரன் நாளேட்டிளலும் செய்தி வெளியிட்ட விதமும், அவர்கள் மீது கருணாநிதியை கடும் கோபம் கொள்ளச் செய்தது. சுத்தமாக மாறன் சகோதரர்கள் புறக்கணிக்கப் பட்டனர்.
சன் டிவியின் ஊடக பலம் அறவே விட்டுப் போன நிலையில், ஆதரவாக இல்லையென்றாலும், கருணாநிதிக்கும், திமுகவுக்கும் எதிரான செய்திகள் சன் டிவியில் பெருமளவில் வரத் தொடங்கின. குறிப்பாக, 2ஜி விவகாரம் லேசாக கசியத் தொடங்கிய போதே, அந்த ஊழலை வெளிக் கொண்டு வருவதில், சன் டிவி வகித்த பங்கு குறிப்பிடத் தகுந்தது.
ஜெயா டிவியை விட, திமுக வின் மீதான தாக்குதலை சன் டிவி பெருமளவில் நடத்தியதால், அவர்களுக்கு போட்டியாக ஊடக பலம் வேண்டுமென்பதை உணர்ந்த, கருணாநிதி கலைஞர் டிவியை தொடங்கினார்.
டிவி நிகழ்ச்சி உள்ளாக்கத்தை வடிவமைப்பதிலும், நிகழ்ச்சிகளுக்கு பெயரிடுவதிலும் கருணாநிதி தனிப்பட்ட முறையில் ஆர்வத்தை செலுத்தி, நிறைய நேரத்தை செலவிட்டார் என்று தகவல்கள் வெளிவந்தன. 2007 அக்டோபர் 15 அன்று தனது ஒளிபரப்பை கலைஞர் டிவி தொடங்கியது. அன்று விநாயகர் சதுர்த்தி என்பது குறிப்பிடத் தகுந்தது. விநாயகர் சதுர்த்தி தினம் அன்று தொடங்கும் காரியங்கள் பெரிய வெற்றி பெரும் என்ற நம்பிக்கை பரவலாக இருந்தது போலவே கலைஞர் டிவியும் பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தத் தான் செய்தது. கலைஞர் டிவி தொடங்கிய நாளன்றே, ‘மொழி’ மற்றும் ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படங்களை ஒளிபரப்பி, சன் டிவிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது கருணாநிதி டிவி. அதில் வரும் ‘மானாட மயிலாட’ போன்ற நிகழ்ச்சிகளை கருணாநிதியே ரசித்துப் பார்க்கிறார் என்ற செய்திகள் அந்த டிவிக்கான முக்கியத்துவத்தை மேலும் அதிகப் படுத்தின. மானாட மயிலாட பார்த்திருக்கிறீர்கள் தானே ? “ரம்பா மேம்.. நீங்க எத்தனை மார்க் சொல்லுங்க…. நமீதா மேம்…. நீங்க எத்தனை மார்க் சொல்லுங்க…. குஷ்பூ மேம், குந்தாணி மேம் என்று, அதில் வரும் கூத்துகள் சொல்லி மாளாது… இந்த நிகழ்ச்சியை கருணாநிதியே வடிவமைத்தாராம் …..
அந்த கலைஞர் டிவியின் பிறப்பில் தான் இன்று சிக்கல். ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்குவதற்கு, 2 முதல் 3 கோடி ரூபாய்கள் முதலீடு தேவைப்படும். தமிழகத்தில் தொடங்கப் பட்ட, இரண்டாவது தமிழ் சேனல், 24 மணி நேர செய்திச் சேனல் தொடங்குவதற்கு தேவைப் பட்ட முதலீடு வெறும் 1 கோடி ரூபாய்.
கலைஞர் டிவி தொடங்குவதற்கு 2ஜி ஏலத்தில் கொள்ளை லாபம் சம்பாதித்த ஸ்வான் டெலிகாம் நிறுவனம் 214 கோடி ரூபாயை வழங்கியுள்ளது என்பது தான் இந்த விவகாரத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.
கலைஞர் டிவியின் பங்குகள் மூன்றாக பிரிக்கப் பட்டுள்ளன. 60 சதவிகித பங்குகளை வைத்துள்ளார் கருணாநிதியின் இரண்டாவது மனைவி தயாளு. 20 சதவிகித பங்குகளை வைத்துள்ளார் கனிமொழி. மீதம் உள்ள 20 சதவிகித பங்குகளை வைத்துள்ளவர் கலைஞர் டிவியின் தலைமை நிர்வாகி, சரத் ரெட்டி. இவர் சன் டிவியில் நெடு நாள் பணியாற்றி, சன் டிவியின் வெற்றியில் பெரும் பங்கு வகித்தவர்.
கலைஞர் டிவியின் தொடக்கமே ஸ்பெக்ட்ரம் பணத்தில் தான் என்கிற செய்தி வெளியாகியுள்ளது, ஆளும் வட்டாரத்தை ஆட்டம் காண வைத்துள்ளது.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் முதலீடுகளையும், அது செயல்பட்ட விதத்தையும் பார்த்தால், ஒரு பெரிய தவறை மறைக்க பல்வேறு ‘திருகல்’ வேலைகளை செய்திருப்பது தெரிய வருகிறது. ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் அசல் பெயர், ‘ஸ்வான் கேப்பிடல்’. பிறகு இது ஸ்வான் டெலிகாம் என பெயர் மாற்றம் செய்யப் படுகிறது. இந்த ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் பங்குதாரர்கள், டைகர் ட்ரஸ்டீஸ் என்ற நிறுவனம். டைகர் ட்ரஸ்டீசுக்கு 90 சத பங்குகள், மீதம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் வைத்திருக்கிறது.
ஸ்வான் டெலிகாம் தனது 45 சதவிகித பங்குகளை அரபு நாட்டைச் சேர்ந்த எடிசாலாட் நிறுவனத்திற்கு விற்பனை செய்கிறது. இறுதியாக ஸ்வான் டெலிகாம் நிறுவனம், ‘டிபி எடிசலாட்‘ என்ற புதிய உருவை எடுக்கிறது.
இந்த விவகாரங்கள் எல்லாவற்றிலும் ‘டி.பி.ரியாலிட்டி‘ பெரும் பங்கு வகித்திருக்கிறது. இதனால் இந்த டிபி ரியாலிட்டி நிறுவனம், சிபிஐன் விசாரணையில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த டிபி ரியாலிட்டி நிறுவனம் தான், இப்போது கலைஞர் டிவிக்கு 214 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிய வருகிறது. இந்த 214 கோடி ரூபாயையும், நேரடியாக வழங்கப் படவில்லை. இத் தொகை வழங்கப் பட்ட விதமே, ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெறப்பட்ட ஆதாயத்துக்கான பங்கை வழங்கியுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
டிபி ரியாலிட்டீஸ் நிறுவனத்தின், சொந்த நிறுவனமான டைனமிக்ஸ் ரியாலிட்டீஸ் நிறுவனம், டிபி.ரியாலிட்டீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி ஆசிஃப் பல்வா என்பவருக்குச் சொந்தமான குஸேகான் ரியாலிட்டீஸ் என்ற நிறுவனத்துக்கு, 209 கோடி ரூபாயை கடனாக வழங்குகிறது. இந்த குஸேகான் ரியாலிட்டீஸ் 49 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் சினியுக் மீடியா நிறுவனத்துக்கு, குஸேகான் ரியாலிட்டீஸ் 206 கோடியை கடனாக வழங்குகிறது.
சினியுக் மீடியா தான், தயாளு அம்மாள் 60 சதவிகித பங்குகளை வைத்திருக்கும் கலைஞர் டிவிக்கு 214 கோடியை கடனாக வழங்குகிறது. இந்த பணப் பரிவர்த்தனைகள் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றன. சினியுக் மீடியா எதற்காக கலைஞர் டிவிக்கு, அதுவும் புதிதாக தொடங்கப் பட்ட ஒரு டிவிக்கு இவ்வளவு பெரிய தொகையை வழங்க வேண்டும் ? அதுவும், 214 கோடி ரூபாய் இத்தனை கைகள் மாறி எதற்காக வழங்க வேண்டும் ? இந்தக் கடனை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் தயாளு அம்மாள் கையொப்பம் இட்டுள்ளாரா ? இந்தக் கடன் பெற்ற விபரங்கள் வருமான வரித் துறைக்கு தெரியப் படுத்தப் பட்டுள்ளதா ? வேறு எந்த நிறுவனங்கள், எந்த நபர்கள் கலைஞர் டிவிக்கு இது போல பணம் வழங்கியுள்ளார்கள் ? இந்த தொகையை பெற்றுத் தருவதில், நீரா ராடியாவின் பங்கு என்ன ? பதிவு செய்யப் பட்ட நீரா ராடியாவின் உரையாடல்களில் கலைஞர் டிவிக்கு 214 கோடி வழங்கப் பட்டது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியது யார் ?, என்பது போன்ற விபரங்களை சிபிஐ விசாரித்து வருவதாக, சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஊழல் விவகாரத்தில் ஈடுபட்ட நிறுவனங்களான டாடா, யூனிடெக், அஸாரே ப்ராப்பர்ட்டீஸ், ஹட்சன் ப்ராப்பர்ட்டீஸ், நஹான் ப்ராப்பர்ட்டீஸ், அடானீஸ் ப்ராப்பர்ட்டீஸ், அஸ்கா ப்ராஜெக்ட்ஸ், வோல்கா ப்ராப்பர்ட்டீஸ், ஷிப்பிங் ஸ்டாப் டாட் காம் போன்ற மற்ற நிறுவனங்களை விட, ஸ்வான் டெலிகாமின் ஊழல் முக்கியத்துவம் பெறுகிறது ஏனென்றால், யூனிடெக், வீடியோகான் போன்ற நிறுவனங்கள் லைசென்ஸ் பெற்றவுடன் செல்போன் சேவையை தொடங்கி விட்டன. ஆனால், ஸ்வான் டெலிகாம் இது வரை தொடங்கவேயில்லை என்பது, இந்த நிறுவனம் செல்போன் சேவையை தொடங்கும் உத்தேசமேயில்லை என்பதை சிபிஐ அதிகாரிகளுக்கு தெரிய வந்திருக்கிறது.
இந்த அடிப்படையில், ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலம் 2ஜி லைசென்ஸ் பெற்று பல ஆயிரம் கோடிகளை சம்பாதிக்கலாம் என்ற சதித் திட்டத்தின் அடிப்படையிலேயே டிபி ரியாலிட்டீஸ் நிறுவனம் செயல்பட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் நம்புகிறார்கள்.
இந்த டிபி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவி தொடங்க 214 கோடி ரூபாயை தயாளு அம்மாள் பெற்றிருப்பதை 2ஜி விசாரணையிலேயே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த விவகாரமாக பார்க்கப் படுகிறது. இந்த ஊழல் வெளியானதும், டிபி ரியாலிட்டீஸ் நிறுவனத்தின் தரப்பில் சொல்லப் படும், இது வெறும் கடன் என்ற வாதத்தை சிபிஐ அதிகாரிகள் ஏற்கத் தயாராக இல்லை.
ஐந்து நாட்களாக சிபிஐ அதிகாரிகளின் விசாரணையின் பிடியில் உள்ள ராசா, எந்த உண்மையையும் தெரிவிக்க மறுத்து வரும் நிலையில், ஆஷிஷ் பல்வாவையும், ராசாவையும் நேருக்கு நேராக வைத்து, விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் உத்தேசித்துள்ளதாக தெரிகிறது. அனைத்து ஆதாரங்களையும் காண்பித்தும் ராசா குற்றச் சாட்டுகளை மறுத்து வருவதால், ராசா முன்பாகவே, ஆஷிஷ் பல்வாவை ராசாவிடமிருந்த பெற்ற பலன்கள் என்ன என்பதை சொல்ல வைத்து ராசாவை மடக்கலாம் என்று சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த விசாரணை முடிவடைந்ததும், அடுத்து, கலைஞர் டிவிக்கு கொடுத்த கடன் பற்றி விசாரணை விரிவடையும் என்றும் தெரிகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்த, மதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் “முறைகேடுகளை முறையாகச் செய்வதில் கருணாநிதி சகலகலா வல்லவர். நாட்டு மக்களின் வரிப்பணத்தில் மக்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி வழங்கி விட்டு, கேபிள் டிவிக்கு மாதம் 150 ரூபாய் என்று கட்டணம் வசூலித்து அதை தனதாக்கிக் கொள்ளுகிற இந்த தகிடுதத்தம், கலைஞரால் மட்டும் முடியும். எங்கே அள்ளலாம், எங்கே தோண்டலாம் என்று எப்போதும் சிந்திக்கிற ஒரு நல்ல ரக ஒட்டுண்ணி கருணாநிதி. இந்த முறைகேடும் குடும்பத்தை கொழிக்க வைப்பதற்காக திட்டமிட்டு நடத்தப் பட்ட ஊழல் தான். கருணாநிதி தொலைக்காட்சிக் கென்று அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிற கருணாநிதி எத்தனையோ தொலைக்காட்சிகள் முறையாக இயங்குவதற்கு வாய்ப்பில்லாமல் வாடிக் கிடப்பதை அறிவாரா ? எல்லாம் தனக்கு தனக்கென்று எண்ணி எல்லாவற்றையும் தன் குடும்பத்திற்கு மடைமாற்றம் செய்வதற்கு ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிற ஹோஸ்னி முபாரக் கோல கருணாநிதி செயல்படுகிறார். எகிப்தில் உருவாகியுள்ள மக்கள் எதிர்ப்பைப் போலவே, தமிழகத்திலும் மக்கள் திரண்டு கருணாநிதியின் முடிவற்ற ஊழலை முடிவுக்கு கொண்டு வரும் நாள் விரைவில் வரும்.” என்றார்.
சிபிஐ தயாளு அம்மாளை விசாரிக்கும் என்று கருதுகிறீர்களா என்று கேட்டதற்கு, “உச்ச நீதிமன்றம் கன்னத்தில் அறைந்ததால் மட்டுமே, சிபிஐ இப்போது விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் 214 கோடி ரூபாய் பங்கு பெற்றிருக்கும் தயாளு அம்மாளை சிபிஐ விசாரிப்பது சந்தேகமே… உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொது நல வழக்கில், கருணாநிதி டிவி விவகாரத்தை கவனத்தில் கொண்டு சென்றால் மட்டுமே, நெருக்கடி ஏற்பட்டு, சிபிஐ விசாரிக்கும்” என்று கூறினார் நாஞ்சில் சம்பத்.
நெடு நாட்களாக பங்கு வர்த்தகத்தில் இருக்கும் ஒருவர் சவுக்கிடம் பேசும் போது ‘கருப்புப் பணத்தை வெள்ளையாக்க இது போல பல்வேறு நிறுவனங்கள் மூலம் முதலீடு செய்வது வழக்கமே‘ என்றார். ‘லஞ்சமாக பெறப்பட்ட கோடிக்கணக்கான பணத்தை, பெரிய நிறுவனங்களிடம் வழங்கி, அந்த நிறுவனத்திடம் இருந்து கடனாக பெறுவது போல, அந்தப்பணத்தை வெள்ளையாக்குவது, பிசினெஸ் உலகில் சகஜம் என்றவர், இது போல பெறப்படும் கடன்கள் ஒரு போதும் திருப்பித் தரப்படுவதில்லை. சம்பந்தப் பட்ட அனைவருக்குமே, இது லாபம் பயக்கும் விவகாரம் என்பதால், இந்த விவகாரம் வெளியில் வரவே வராது‘ என்றும் கூறினார்.
நேற்று இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர், பிரசாந்த் பூஷண் தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இரண்டாவது நிகழ்வு ஆ.ராசாவுக்கும், ஷாகித் உஸ்மான் பல்வாவுக்குமான சிபிஐ காவலை நீட்டிக்க சிபிஐ கோர்ட் விசாரணை.
ஒவ்வொன்றாகப் பார்ப்போம். முதலில் உச்ச நீதிமன்றம். இவ்விசாரணை ஏ.கே.கங்குலி மற்றும் ஜி.எஸ்.சிங்வி அடங்கிய டிவிஷன் பென்ச் முன்பாக நடந்த போது, சிங்வி சிபிஐ வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை பார்த்து, “இந்த வழக்குக்கு நிகரான எந்த வழக்கும் கிடையாது. அதனால், அரசு இந்த வழக்குக்காக ஒரு பிரத்யேக நீதிமன்றம் அமைக்கும் என்ற உத்தரவாதத்தை தருமா ? நாங்கள் இந்த வழக்குக்கு அதிகாரிகள் அதிகபட்ச முக்கியத்துவத்தை வழங்க வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.
நாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று கருதும் நிறைய பேர் இருக்கிறார்கள். சட்டம் அவர்களை பிடிக்க வேண்டும். அது விரைவாகவும் நடக்க வேண்டும. உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள் என்ற காரணத்துக்காக அவர்களுக்கு வேறு விதமான அணுகு முறை இருக்கக் கூடாது.
இது வரை நடைபெற்றுள்ள இந்த விசாரணை நான்கு பேர், இதில் குற்றவாளிகள் என்று பூர்வாங்கமான முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் இதனால் பயன்பெற்றவர்களைப் பற்றிய விபரங்கள் எங்கே ? ஒரு பெரிய சதித்திட்டத்தின் பங்குதாரர்கள் அவர்கள். எங்களுக்கு அந்த விபரங்கள் தெரிய வேண்டும். நீங்கள் இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டு பதில் தாருங்கள். சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும். இந்நீதிமன்றம் அளிக்கும் உத்தரவில் அரசு குறுக்கிடக் கூடாது. இப்போது கைது செய்யப் பட்டுள்ள இந்த நான்கு பேரைத் தாண்டி மற்றவர்கள் பெயர்களையும் கண்டுபிடித்துத் தெரிவியுங்கள்.” என்று கூறினார்.
உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்தை, சிபிஐ இது வரை நடந்த விசாரணையின் விபரங்களை சீலிடப் பட்ட உறையில் வைத்து அளித்துள்ளது என்பதை வைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பாக இறுதியாக சொன்ன கருத்துக்கள். “இதனால் பயன்பெற்றவர்களைப் பற்றிய விபரங்கள் எங்கே ? ஒரு பெரிய சதித்திட்டத்தின் பங்குதாரர்கள் அவர்கள். எங்களுக்கு அந்த விபரங்கள் தெரிய வேண்டும். நீங்கள் இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகளிடம் கேட்டு பதில் தாருங்கள். சிபிஐ சுதந்திரமாக செயல்பட வேண்டும்.”
கலைஞர் டிவியை தொடங்கியது யார், 214 கோடி ரூபாயை ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திடமிருந்து பெற்றது யார், எதற்காக 214 கோடி ரூபாய் கொடுக்கப் பட்டது என்ற விபரங்கள் அடங்கிய சிபிஐன் அறிக்கையை படித்த பிறகே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நேற்று இரவு 11.30 மணிக்கு ‘திடீரென்று‘ கலைஞர் டிவியின் இயக்குநர்களில் ஒருவரான சரத் குமார் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில், “2007-08-ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்துக்கும், 2009-ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனம் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு 2009-ம் ஆண்டு சினியுக் என்ற நிறுவனம் பங்குகள் பரிவர்த்தனைக்காக முன்பணம் கொடுத்திருந்தது. ஆனால், இரு நிறுவனங்களுக்கும் பங்குகள் மதிப்பீட்டில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் 2009-ம் ஆகஸ்டு வரை பெறப்பட்ட ரூ.200 கோடியை கடனாக பாவித்து மொத்த பணமும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பி தரப்பட்டது. அந்தக் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது.
இந்தப் பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது. இந்த மொத்த பரிவர்த்தனையும் சட்டத்துக்கு உட்பட்டு உரிய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த நிகழ்வு ஒரு திறந்த புத்தகமே.”
இதன் அறிக்கையின் பின்னணி சுவையானது. சிபிஐ அளித்த அறிக்கையில் என்ன இருந்தது என்று நேற்று இரவு 9 மணி வாக்கில், கருணாநிதியிடம் தெரிவிக்கப் படுகிறது. உடனே, இதைக் கேட்ட கருணாநிதி “என்னய்யா இது ? அநியாயமாய் இருக்கிறது ? ஒருவர் கடன் வாங்கி விட்டு திருப்பித் தந்து விட்டார். அதில் என்ன தப்பு இருக்கிறது ? “ என்று கேட்டுள்ளார். உடனே, கூட இருந்த ஜால்ரா கம்பேனிகள், “ஆமாம் தலைவரே… அதில் என்ன தப்பு இருக்கிறது ? “ என்று கோரஸ் பாடியுள்ளார்கள்.
வந்ததே கோபம் கருணாநிதிக்கு…. உடனடியாக காங்கிரசை விமர்சித்து ஒரு கடிதம் எழுதலாம் என்று உத்தேசிக்கிறார். உடனே, ஜாபரும், உடன் இருந்த, ஒரு சில ஜால்ராக்களும், “வேண்டாம். காங்கிரஸ் கட்சியை இப்போது பகைத்துக் கொண்டால், பட்டா பட்டி அண்டர்வேரோடு தெருவில் விட்டு விடுவார்கள்“ என்று கூறியதை ஏற்றுக் கொண்ட கருணாநிதி, உடனே கலைஞர் டிவி மூலமாக அறிக்கை விடுங்கள் என்கிறார். இந்த அறிக்கை தான், நேற்று இரவு, கலைஞர் டிவி இயக்குநர், சரத்குமார் வெளியிட்டது.
ஜென்டில் மேன் படம் பார்த்திருப்பீர்கள். அதில் கவுண்டமணி செந்திலிடம் தான் எஸ்எஸ்எல்சி பெயில் என்று கூறுவார். அதற்கு செந்தில், அண்ணே, நான் எட்டாங்கிளாஸ் பெயில்னே என்பார். அந்த பாணியில் சரத்குமாரை கேள்வி கேட்டால் ?
“டேய் பேரிக்கா தலையா பணத்தை எப்படா திருப்பிக் குடுத்த ?” உடனே சரத் இல்லண்ணே பணத்த திருப்பிக் குடுத்துட்டேண்னே என்பார். உடனே சிபிஐ, டேய் பச்சலை புடுங்கி, அதத்தாண்டா கேக்குறோம், எப்படா திருப்பிக் குடுத்த என்று கேட்பார்கள் . அப்படித் தான் சரத்திடம் சிபிஐ அதிகாரிகள் கேள்வி கேட்கப் போகிறார்கள்.
இவர்களின் விளக்கப் படியே பார்த்தால், 2009ல், சினியுக் என்டெய்ர்ன்மென்ட் நிறுவனம், கலைஞர் டிவியின் ஷேர்களை வாங்க முன் வருகிறதாம், அதற்காக பணம் கொடுக்கிறார்களாம், ஆனால் விலை படியவில்லையாம்… அதனால் அந்த தொகையை கடனாக மாற்றி விடுகிறார்களாம்…
நண்பர் வைத்திருக்கும் ஒரு எல்சிடி டிவியை நீங்கள் வாங்கலாம் என்று உத்தேசிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.. முதலில் என்ன செய்வீர்கள் ? நண்பரிடம், எவ்வளவு விலை என்று கேட்பீர்கள். பிறகு, விலை ஒத்து வந்தால், முழுத்தொகையும் இருந்தால் தருவீர்கள். அல்லது அட்வான்ஸ் தருவீர்கள். இதுதானே உலக வழக்கம். முழுத் தொகையையும் கொடுத்து விட்டீர்கள் என்று கூட வைத்துக் கொள்வோம். பிறகு நண்பர் விலையை ஏற்றி விடுகிறார். ஒன்றரை லட்ச ரூபாய் சொல்கிறார். நீங்கள் என்ன சொல்வீர்கள் ? பணத்தை திருப்பிக் கொடுங்கள் என்றுதானே கூறுவீர்கள் ? பரவாயில்லை பாஸ். அந்தப் பணத்தை கடனாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவீர்களா ? சவுக்கக்கு தெரிந்து ‘அவ்வளவு நல்லவர்’ இந்த கார்ப்பரேட் உலகில் ஒருவர் கூட இல்லை.
எல்சிடி டிவி கூட, ஒரு லட்ச ரூபாய் ஆகும். ஆனால் இது 214 கோடி அய்யா… 214 கோடி.
ஷேர் விலை என்னவென்றே தெரியாமல் உலகத்தில் எந்த நிறுவனம் அய்யா 214 கோடியை தூக்கிக் கொடுக்கும் ? அப்படியே கொடுத்தாலும் விலை படியவில்லை என்றால் பணத்தை திருப்பிக் கேட்பதுதானே முறை ?
மற்றொன்று, இந்த சினியுக் என்டெய்ர்ன்மென்ட் என்ன உலக வங்கியா ? ஐஎம்எஃப்பா ? ஆசிய வளர்ச்சி வங்கியா ? அது கூட வேண்டாம். தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியா ? எதற்காக இந்தியாவில் உள்ள அத்தனை வங்கிகளையும் விட்டு விட்டு, இவர்களிடம் கடன் வாங்க வேண்டும் ?
சரி அதையும் விடுங்கள். 214 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்வோம். பணம் வந்து சேர்ந்தது. பேரம் படியவில்லை. கடனாக மாற்றப் படுகிறது. அவர்கள் கூற்றுப் படியே பார்த்தாலும், பணம் ஆகஸ்ட் 2009 வந்துள்ளது. 214 கோடி ரூபாய்க்கு 32 கோடி வட்டியாக தந்திருக்கிறீர்கள் என்றால் பணத்தை எப்போது திருப்பிக் கொடுத்தீர்கள் ? ஆகஸ்ட் 2009ல் இருந்து ஜனவரி மாதம் வரை 14 மாதங்கள் ஆகிறது. 14 மாதங்களுக்கு குறைவாக 32 கோடி ரூபாயை வட்டியாக கொடுக்க இது என்ன மார்வாடிக் கடையா ? 14 மாதங்கள் கழித்துக் கொடுத்திருக்கிறீர்கள் என்றால், பணத்தை ஜனவரி 2011 அல்லது பிப்ரவரி 2011ல் தானே கொடுத்திருக்க வேண்டும். அப்படியென்றால் சிபிஐ சோதனைகளும், கைதுகளும் தொடங்கய பிறகு தானே திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும்….
அது செல்லாது பாஸு… செல்லாது…. பிரச்சினை ஆரம்பித்தவுடன் திருப்பிக் கொடுத்தால்.. எப்படி செல்லும்… ? இது போங்கு ஆட்டம் இல்லையா… ? இப்படியெல்லாம் சவுக்கு சொல்லவில்லை. சிபிஐ அதிகாரிகள் சொல்கிறார்கள்.
அதனால் இவர்கள் எத்தனை விளக்கங்கள் அளித்தாலும், கோபாலபுரத்துக்கும், சிஐடி காலனிக்கும் சம்மன் உறுதி. உறுதி. உறுதி. அதற்காகத் தானே சவுக்கு புது கவுண்ட் டவுன் போட்டிருக்கிறது.
இரண்டாவது நிகழ்வு, பாட்டியாலா ஹவுஸ் சிபிஐ கோர்ட்டில் நடைபெற்றது. அது ராசாவுக்கான சிபிஐ கஸ்டடியை நீட்டிப்பு செய்வது தொடர்பானது.
ராசா கைது செய்யப் பட்ட போது, சிபிஐ நீதிமன்றம் ராசாவுக்கு ஐந்து நாட்கள் சிபிஐ கஸ்டடி கொடுத்தது. மீண்டும் இரண்டாவது முறை சிபிஐ நான்கு நாட்கள் கேட்ட போது, இரண்டு நாட்கள் மட்டுமே கொடுத்தது. மீண்டும் கஸ்டடி கேட்ட போது முதல் முறை சிபிஐ கேட்டதை கொடுக்க மறுத்த நீதிமன்றம், இப்போது நான்கு நாட்கள் மூன்றாவது முறை முழுமையாக கொடுத்திருப்பதை உற்றுக் கவனிக்க வேண்டும்.
சவுக்கு ஏற்கனவே, ‘சிபிஐ என்ன கேட்டாலும் சொல்லாதே.. அடித்துக் கேட்பார்கள். அப்போதும் சொல்லாதே…’ என்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரி துக்கையாண்டியும் நல்லமா நாயுடுவும் சொன்னார்கள் என்பதை உங்களுக்குத் தெரிவித்திருந்தது.
ஆண்டிமுத்து ராசாவின் கஸ்டடி நீட்டிப்புக்கு சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவை, சவுக்கு வாசகர்களுக்கான சவுக்கு பிரத்யேகமாக அளிப்பதில் பெருமை கொள்கிறது.
அந்த மனுவில் என்ன கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.
“4.…. சினியுக் பிலிம்ஸ் என்ற நிறுவனம் கலைஞர் டிவிக்கு, 2009ல் 215 கோடி ரூபாயை வழங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. கலைஞர் டிவி திரு.சரத் குமார் மற்றும் ராசாவுக்கு நெருக்கமானவர்களுக்குச் சொந்தமானது. இந்தத் தொகை சினியுக் பிலிம்ஸால் ஷாகித் பல்வா குடும்பத்தினர் இயக்குநர்களாக இருக்கும் டிபி குழும நிறுவனங்கள் மூலமாக சினியுக் பிலிம்ஸூக்கு வழங்கப் பட்டிருக்கிறது.
5. சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த பொழுது, ஆண்டிமுத்து ராசாவிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப் பட்டன. சந்தேகப் படும் பல நபர்களையும், சாட்சிகளையும் நேருக்கு நேராக வைத்து இந்த கிரிமினல் சதித்திட்டம் தொடர்பாகவும், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பாகவும், டெலிகாம் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டுது தொடர்பாகவும், பல்வேறு கேள்விகள் கேட்டாலும், ராசாவிடம் இருந்து எந்த புதிய உண்மைகளும் வரவில்லை. தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட்டதற்காக அந்நிறுவனங்கள் செய்த கைமாறு தொடர்பான கேள்விகளுக்கு மழுப்பலாக பதில் சொல்லுகிறார். என்ன கைமாறு செய்யப் பட்டது, சதித்திட்டத்தில் ராசாவின் பங்கு என்ன, தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து வந்த பணம் எங்கெங்கெல்லாம் சென்றது, என்னென்ன நடவடிக்கைகள் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சாதகமாக எடுக்ககப் பட்டன என்பது போன்ற கேள்விகளுக்கு ஆண்டிமுத்து ராசா பதில் சொல்ல மறுக்கிறார்.
7. இந்த வழக்கின் புலனாய்வை உச்சநிதமன்றம் மேற்பார்வை செய்து வருகிறது. மேலும் முக்கியமான பல ஆவணங்களை கைப்பற்றவும், முக்கிய சாட்சிகளை கண்டறியவும் வேண்டி உள்ளதால், வழக்கின் புலனாய்வு ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. மேலும் ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் பெறுவதற்காக சில தொலைத் தொடர்பு நிறுவனங்களால், மத்திய தொலைத் தொடர்புத் துறைக்கு சமர்ப்பிக்கப் பட்ட ஆவணங்களை கண்டுபிடிக்க வேண்டி உள்ளது. இச்சதித்திட்டத்தில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க, அந்த ஆவணங்கள் மிக மிக முக்கியமானவை ஆகும். தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அலுவலகத்தின் பார்வையாளர் பதிவேடும், இது வரை கிடைக்கவில்லை. அதையும் கண்டு பிடிக்க வேண்டும.
8. இவ்வழக்கின் முக்கியத்துவத்துவத்தை கருத்தில் கொண்டு, ஸ்பெக்ட்ரம் பணம் எங்கெங்கு சென்றது என்பது குறித்தும், பல உண்மைகளை கண்டு பிடிக்க வேண்டி உள்ளது. ஆண்டிமுத்து ராசாவை தொடர்ந்து ஷாகீத் பல்வாவுடனும், மற்ற குற்றவாளிகளுடனும், சாட்சிகளுடனும் நேருக்கு நேராக விசாரித்தால் தான் இவ்வழக்கில் உண்மைகள் வெளிவரும்.
9. குற்றவாளி ஆ.ராசா 12 வருடத்துக்கும் மேலாக அமைச்சராக இருந்தவர். ஷாகீத் பல்வாவும் மிகுந்த செல்வாக்கு படைத்தவர். ஆகையால் இவர்கள் பிணையில் வெளி வந்தால், சாட்சிகளை கலைப்பதோடு மட்டுமல்லாமல், ஆவணங்களை அழிக்கும் செயலிலும் ஈடுபட்டு மிக முக்கியமான இவ்வழக்கின் புலனாய்வை சிதைக்கும் செயலில் ஈடுபடுவார்கள் என்பதால், இவர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.”
மெட்றாஸ் பாஷையில், சொன்னால், ராசாவை….. “டபாய்ஞ்சுகினே…. கீறான் சார். “ என்கிறது சிபிஐ அறிக்கை.
எத்தனை நாட்கள் ராசா தாக்குப் பிடிக்கிறார் என்று பார்ப்போம். ராசா அறியாத ஒரு விஷயம், கருணாநிதி தான் தப்பிக்க வேண்டுமென்றால், தயாளு அம்மாளைக் கூட காட்டிக் கொடுக்க தயங்க மாட்டார் என்பதுதான்.
கருணாநிதியின் தன்மை பற்றித் தெரிந்து கொள்ள ஒரே ஒரு சம்பவத்தை உதாரணமாக சொன்னால் போதுமானது. கருணாநிதியின் நிழல் போல, எப்போதும் அவர் பின்னாலேயே, ஒரு சுருக்கெழுத்து நோட்டோடு சண்முகநாதன் என்று ஒருவர் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக, கருணாநிதியோடு இருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னால், கருணாநிதி குளித்தலை பொதுக்கூட்டத்தில் என்ன பேசினார் என்ப மனப்பாடமாக சொல்லக் கூடிய திறம் படைத்தவர்.
பொதுக் கூட்டங்களில் நீங்கள் பார்க்கும் கருணாநிதி வேறு. தனிப்பட்ட முறையில் கருணாநிதி வேறு. கருணாநிதி வாயைத் திறந்து கெட்ட வார்த்தை பேசத் தொடங்கினால், காது கூசும். காதில் ரத்தம் வடியாது.. சீழ் வடியும். அப்படிப் பேசுவார். பல நாள் கருணாநிதியின் இவ்வாறான ஏச்சுக்களை வாங்கி, மரத்துப் போன சண்முகநாதன், ஒரு நாள் இனியும், தாங்க முடியாது என்று முடிவெடுத்து, கிளம்பிச் செல்கிறார். மறுநாள் வேலைக்கு வரவில்லை. ஒரு நாள் ஆகிறது. இரண்டு நாள் ஆகிறது. அப்போதும் வரவில்லை.
அப்போது கருணாநிதி ஆற்காடு வீராச்சாமியை அழைத்துச் சொன்னது என்ன தெரியுமா ? “யோவ்… ஆற்காடு.. அவன் வர்றானா இல்லையான்னு கேளு… வரலன்னா ஆபீஸ்லேர்ந்து பைல திருடிட்டு போயிட்டான்னு, கமிஷனர்கிட்ட கம்ப்ளெய்ன்ட் குடுத்து அரெஸ்ட் பண்ணிடுவேன்னு சொல்லு. “ என்கிறார்.
சண்முகநாதன் அலறி அடித்துக் கொண்டு திரும்பவும் வேலைக்கு வருகிறார்.
இதுதான் கருணாநிதி ராசா.. உங்களுக்கு தேவையானால், சிபிஐ கஸ்டடியிலேயே சவுக்கை படிக்க வைப்பதற்கு, சவுக்கால் ஏற்பாடு செய்ய முடியும். இதைப் படித்து விட்டாவது, நீங்கள் அப்ரூவர் ஆகுங்கள். உங்களை இப்படி பணம் வாங்கச் சொல்லி தூண்டியது யார் என்ற உண்மையை உலகுக்கும் சிபிஐக்கும் உரக்கச் சொல்லுங்கள். தமிழினத் துரோகியை கூண்டில் ஏற்றுங்கள். முதலில் மனிதனாக மாறுங்கள்.
வரலாற்றில் துரோகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியவராக நீங்கள் பதிவு செய்யப் படுவீர்கள்…. துரோகியாக அல்ல… !