கனிமொழிக்கு கைதா, சம்மனா என்று சவுக்கு தளத்தில் ஒரு கவுன்ட்டவுன் போடப்பட்டது. இந்த கவுன்ட்டவுன், கடந்த வெள்ளியின்று முடிவடைந்தது. ஆனால், கவுன்ட்டவுன் முடியும் வரை, கைதும் நடக்கவில்லை, சம்மனும் வழங்கப் படவில்லை.
கோபமடைந்த சில வாசகர்கள், உனக்கு எதுக்கு இந்த வெட்டி வேலை என்று கேட்டு பின்னூட்டம் இட்டிருந்தார்கள். ஒரு வாசகர், இந்த கவுன்ட்டவுனுக்கு ஆன கதிதான் உங்களுக்கும் என்று எழுதியிருந்தார்.
கவுன்ட்டவுன் போடப்பட்டது, கடந்த வெள்ளியன்று முடியும் வகையில் ஏழு நாட்கள் அவகாசம் கொடுத்துப் போடப்பட்டது. இந்த கவுன்ட்டவுன், உறுதியான தகவல்களின் அடிப்படையில் போடப்பட்டது. சிபிஐ விசாரணையின் போக்கை சவுக்கு உன்னிப்பாக கவனித்து வருகிறதென்பதை, வாசகர்கள் நீங்கள் நன்கு அறிவீர்கள். அதை ஒட்டி வந்த தகவலை அடுத்தே, கவுன்ட்டவுன் போடப் பட்டது.
வெள்ளியன்று கனிமொழிக்கு சிபிஐ சம்மன் அளித்து இருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் வினாடிக்கு வினாடி அரசியல் சூழ்நிலைகள் மாறி வருகின்றன. சிபிஐ ன் விசாரணையை பயன்படுத்தி காங்கிரஸ் கட்சி கணிசமான லாபத்தை அடையலாம் என்று திட்டமிட்டே காய் நகர்த்துவதாக தகவல்கள் வந்துள்ளன. கனிமொழிக்கு, சம்மன் அனுப்புவதை, கடைசி அஸ்திரமாக பயன்படுத்தலாம் என்று காங்கிரஸ் உத்தேசித்துள்ளதாகவும் தகவல் தெரிகிறது. கேட்ட எண்ணிக்கையில் சீட் கிடைக்கவில்லை என்றால், உடனடியாக சம்மன் அனுப்பதென்றும், கேட்டபடி சீட் கிடைத்து விட்டால், தாமதப் படுத்துவது என்றும் காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இத்தனை நாள் பொறுத்துப் பொறுத்து, காங்கிரஸ் கட்சியின் அட்டகாசங்களை அமைதியாக சகித்துக் கொண்டிருந்த கருணாநிதி, மூலைக்குத் தள்ளப் பட்ட பூனையைப் போன்று, எதிர்ப்பு நிலைபாடு எடுத்திருப்பதாகவும், கனிமொழிக்கு சம்மன் வந்தால், காங்கிரஸ் – திமுக கூட்டணிக்கு முடிவு என்றும் முடிவெடுத்திருப்பதாக தகவல் தெரிகின்றது. இந்நிலையில், வெள்ளியன்று அதிகாலை நடக்கவிருந்த சோதனைகள் அன்று நடைபெறவில்லை.
வெள்ளியன்று இரவு 12 மணிக்கு மர்மமான முறையில், பத்திரிக்கையாளர்கள் ஒருவருக்கும் தகவல் தெரிவிக்கப் படாமல், அறிவாலயத்தின் செக்யூரிட்டி முதற்கொண்டு, யாரும், வெளி நபர்களோடு தொடர்பு கொள்ளக் கூடாது என்று அறிவுறுத்தியபடி இந்தச் சோதனை நடைபெற்றுள்ளதே, இறுதி நேர காட்சி மாற்றங்களினால் தான்.
வெள்ளிக் கிழமை காலை சோதனை நடைபெறப் போகிறது என்ற தகவல், சவுக்குக்கே தெரிந்திருக்கிறது என்றால், சவுக்கின் தொலைபேசியை 24 மணி நேரமும் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும், ஒட்டக் கூத்தருக்குத் தெரியாதா ?
இந்தியாவே அதிர்ந்து நிற்கும் ஒரு இமாலய ஊழலை நடத்தி முடித்து விட்டு, அது தொடர்பாக விசாரிக்கும் புலனாய்வு நிறுவனத்தை எத்தனை மணிக்கு சோதனைக்கு வரலாம், எப்படி வரலாம் என்று உத்தரவிடும் நிலையில் தான் இன்னும் திமுக இருக்கிறது.
ஆனால், சிபிஐ உச்ச நீதிமன்றத்துக்கு பதில் சொல்லக் கடமைப் பட்டிருப்பதால், இன்று இந்த சம்மன்கள் தள்ளிப் போகலாம். ஆனால், என்றுமே தள்ளிப் போகாது….
சவுக்கின் கவுன்ட்டவுன் எந்த அளவுக்கு உறுதியானது என்பதற்குச் சான்றாக, கவுன்ட்டவுன் முடிந்த அன்று வெளியான நாளிதழ்களை சவுக்கு தனது வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறது.
டெக்கான் க்ரானிக்கிள்
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
தி இந்து
தி மின்ட்