ஆம் தோழர்களே… இறுதி யுத்தம் தொடங்கி விட்டது. ப்ளாசி யுத்தம், இரண்டாம் உலக யுத்தம் போல பிரசித்தி பெற்ற யுத்தமாக இது வரலாற்றில் இடம் பிடிக்கப் போவதில்லை. ஏனென்றால் இது ஒரு கேவலமான யுத்தம்.
சுயமரியாதை உள்ளவனுக்கும், சூடு சொரணை அற்றவனுக்கும் நடக்கும் யுத்தத்தை கேவலமான யுத்தம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வீர்கள் ?
ஆம் தோழர்களே… இது சவுக்குக்கும், ஜாபர் சேட் என்று அழைக்கப் படும் ஒட்டக் கூத்தருக்கும் நடக்கும் இறுதி யுத்தம்.
யுத்தம் என்றால் யுத்த தர்மத்தை கடைபிடிக்க வேண்டும். ஓரளவுக்கு எதிரிகள் சம பலத்தில் இருக்க வேண்டும். இந்த யுத்தம் தொடங்கிய நாள் முதலாகவே சமபலத்தில் இல்லாமல் இருந்தாலும், மூன்றாண்டுகளாக நடந்து வரும் யுத்தம், இன்று இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது.
ஒட்டக் கூத்தரிடம், அரசு, அதிகாரம், ஸ்பெக்ட்ரம் பணம், ஏவலாட்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் என அத்தனை பேரும் இருக்கிறார்கள்.
சவுக்கிடம், நல்ல நண்பர்களையும், சவுக்கு வாசகர்களையும் தவிர வேறு எதுவுமே கிடையாது.
சவுக்கின் மீது, தொடரப்பட்ட தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கும், துறை நடவடிக்கைகளும், மதுரவாயலில் ஒருவரை கெட்ட வார்த்தையில் திட்டி, செங்கலால் அடித்ததாக தொடரப்பட்ட வழக்கு உட்பட அனைத்து நெருக்கடிகளையும் கடந்த மூன்றாண்டுகளாக வெற்றிகரமாக சமாளித்து வர முடிந்தது.
சென்னை உயர்நீதிமன்றம் துறை நடவடிக்கை எடுக்க தடை விதித்திருந்த போதும், 15 நாட்களுக்கு முன்பாக சவுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையிலிருந்து ‘டிஸ்மிஸ்’ செய்யப் பட்ட உத்தரவு, சவுக்கின் கதவில் ஒட்டப் பட்டது. நீதிமன்றத் தடையை மீறி டிஸ்மிஸ் செய்யப் பட்டதை எதிர்த்து தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், உயர்நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறைக்கு நோட்டீஸ் அனுப்பி இரண்டு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட போதும், டிஸ்மிஸ் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.
தொலைபேசி ஒட்டுக் கேட்பு வழக்கில், ஆரம்ப நாள் முதலாகவே, ஒட்டக் கூத்தரின் தூண்டுதலில், சட்டத்தின் அத்தனை நடைமுறைகளும் காற்றில் பறக்க விடப் பட்டு, விரைவாக முடிக்க அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டன.
முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு, முதல் விசாரணைக்குப் பிறகு, இரண்டாவது அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்டது. ஒரு முறை ஒரு அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப் பட்ட வழக்கு, மீண்டும் மாற்றப் படாது என்ற விதியை மீறி, இந்த வழக்கு, இருப்பதிலேயே மிக மிக மோசமான, தண்டனை அளிப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டிருக்கும், ஒரு பெண் நீதிபதி இருக்கும், ஐந்தாவது விரைவு நீதிபதியிடம் மாற்றப் பட்டது. அந்தப் பெண் நீதிபதி, வழக்கு தொடங்கிய முதல் நாளில் இருந்தே வழக்கை விரைவாக முடித்து தண்டனை அளிப்பதாக கங்கணம் கட்டிக் கொண்டு வேலை பார்த்தார்.
ஒரு முறை, வழக்கறிஞர் வரும் வரை நீதிமன்றத்தில் காத்திருக்க வேண்டிய சூழலில், பார்வையாளர் அமரும் இருக்கையில் அமர்ந்து ஓரமாக புத்தகம் படித்துக் கொண்டிருந்த போது, ஏக வசனத்தில், “ஏன் கால் மேல கால் போட்டுக்கிட்டுதான் உக்காருவீங்களோ ? “ என்று திடீரென்று கத்தினார் அந்த நீதிபதி.
“கால் மேல் கால் போட்டுக் கொண்டு உட்காரக் கூடாது என்று எந்தச் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது“ என்று பதில் கேள்வி கேட்டதற்கு கடும் கோபம் அடைந்த அந்த பெண் நீதிபதி, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டினார். அதற்குப் பிறகு எதுவும் பேசாமல் மீண்டும், கால் மேல் கால் போடாமல் சாதாரணமாக அமர்ந்து மீண்டும் புத்தகத்தில் ஆழ்ந்ததும், சிறிது நேரம் கழித்து, “மிஸ்டர். போயி வெளில வெயிட் பண்ணுங்க. உங்க வக்கீல் வந்ததும் உள்ள வாங்க“ என்றார். “இது உங்கள் சொந்த நீதிமன்றம் அல்ல. பொது நீதிமன்றம். என்னை வெளியில் போகச் சொல்ல உங்களுக்கு அதிகாரம் கிடையாது“ என்று பதிலளித்ததும், கடும் கோபம் அடைந்த நீதிபதி, “என்ன திமிராகப் பேசுகிறாய்“ என்று உரத்த குரலில் கத்தி விட்டு, உடனடியாக நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்ததாக நோட்டீஸ் வழங்கி விட்டு, ஒரு நாள் கூட அவகாசம் கொடுக்காமலேயே, மறு நாள், 200 ரூபாய் அபராதம் விதித்தார். இதுதான் அந்த பெண் நீதிபதியின் நீதிபரிபாலனம் செய்யும் லட்சணம்.
அப்படிப்பட்ட நீதிபதியை தேர்ந்தெடுத்து, இந்த வழக்கை மாற்றிய மாண்புமிகு நீதியரசர் யார் தெரியுமா ? விரைவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஒரு முதன்மை அமர்வு நீதிபதி. பின்னர் ஒரு வழக்கறிஞர் அவரை சந்தித்து, எதற்காக இந்த நீதிமன்றத்துக்கு மாற்றினீர்கள் என்று கேட்டதற்கு, அவ்வாறு மாற்றியது தனக்கு தெரியவே தெரியாது என்று சாதித்தார்.
தற்போது வழக்கை நடத்தி வரும் இந்தப் பெண் நீதிபதியிடம், ஆவணங்களின் அசலை பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டதற்கு, அந்த மனுவை தள்ளுபடி செய்து, உயர்நீதிமன்றம் செல்லப் போகிறோம் என்பதால், ஆணையின் நகலை கூட வழங்கவேயில்லை. இதனால், வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி மனுத் தாக்கல் செய்யும், வாய்ப்பு பறி போனது.
தற்போது வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருவதால், தினம் தினம் சாட்சிகள் விசாரணை நடத்தப் பட்டு, அடுத்த வாரத்திற்குள் மொத்த விசாரணையையும் முடித்து விட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த வழக்கை நடத்துவதற்காக என்.ஆர்.இளங்கோ என்ற மூத்த வழக்கறிஞரை அரசுத் தரப்பில் நியமித்துள்ளார்கள். என்.ஆர்.இளங்கோவோடு சவுக்குக்கு ஏற்கனவே அறிமுகம் உண்டு என்பதும், அவர் நியாயமான மனிதர் என்பதும் ஒரு புறம் இருந்தாலும், இந்த வழக்கை அவர் ஏற்றுக் கொள்வதற்கு முன்பாக, 20 நாட்களுக்கு முன், ஒட்டக் கூத்தரை சந்தித்து ஒரு நீண்ட விவாதத்தை நடத்தியிருக்கிறார் என்பது நெருடலை ஏற்படுத்தத் தான் செய்கிறது. நீண்ட நாள் அரசு வழக்கறிஞராக இருந்த ராஜா.இளங்கோ அவர்களுக்கு ஒரு வழக்கில் புகார் அளித்தவர் எவ்வளவு முக்கியம் என்பது நன்கு தெரியும். மேலும், இந்த வழக்கில், தனது புகாரை ஆவணமாகக் கூட சேர்க்கக் கூடாது என்று புகாரிலேயே குறிப்பிட்டுள்ள தலைமைச் செயலாளர் மாலதியை விசாரித்த பிறகே, மற்ற சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்பதும் இளங்கோவுக்கு நன்கு தெரிந்தாலும், விசாரணை தொடங்கி மூன்று நாட்கள் வரை மாலதி எப்போது வருவார், எப்படி வருவார் என்பது யாருக்கும் தெரியாது, ஆனால், வரவேண்டிய நேரத்தில் கரெக்டாக வருவார் என்று ரஜினிகாந்த் போல பேசி வருகிறார். இது எதற்காக என்றால், மாலதி வரமாட்டார் என்று இப்போதே மனுத் தாக்கல் செய்து விட்டால், அதை எதிர்த்து உயர்நீதிமன்றம் சென்று வழக்கு விசாரணைக்கு தடை பெற்று விட வாய்ப்பு இருக்கிறது என்பதற்காகவே…. சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்த பிறகு, இறுதியாக மாலதி வர மாட்டார் என மனு தாக்கல் செய்தால், அந்த நேரத்தில், உயர்நீதிமன்றம், விசாரணையில் தலையிட்டு, வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வாய்ப்பு இல்லை என்ற காரணத்தினாலேயே இந்த தந்திரம்.
சட்ட விரோதமாக தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பதைத் தவிர, ஒட்டக் கூத்தருக்கும் இந்த வழக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், ஒரு வழக்கின் விசாரணை எவ்வாறு நடக்கப் போகிறது என்பதையே ஒட்டக் கூத்தர் தீர்மானிக்கிறார் என்றால் ‘ஒட்டக் கூத்தரின்றி ஓர் அணுவும் அசையாது’ என்ற நிலைதான் இன்றும் தொடர்கிறது.
இவ்வாறு தொடர்வது எந்த சூழலில் என்றால், ஒட்டக் கூத்தர் மீது பல்வேறு புகார்கள் அனுப்பப் பட்ட நிலையில், நீதிமன்றத்தில் எந்த நேரம் வேண்டுமானாலும், ஒட்டக் கூத்தர் மீது புகார் தொடரப்படும் நிலையில், டாக்டர்.சுப்ரமணியன் சுவாமி, ஒட்டக் கூத்தர் மீது நடவடிக்கை எடுக்கப் கோரி, கவர்னரிடம் மனு அனுப்பியிருக்கக் கூடிய சூழலில், தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் ஒட்டக் கூத்தரை மாற்ற வேண்டும் என்ற சூழலில் இவ்வாறு நடைபெறுகிறதென்றால், இதை ஒட்டக் கூத்தரின் தன்னம்பிக்கை என்று எடுத்துக் கொள்ள இயலாது. எப்படியாவது, காற்றைப் போல எங்கெங்கும் நிறைந்திருக்கும் ‘ஸ்பெக்ட்ரம் பணத்தை’ வைத்து, எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற இறுமாப்பே இது.
இந்த வழக்கில் மொத்தம் மூன்று குற்றச் சாட்டுகள். இரண்டு குற்றச் சாட்டுகளுக்கு அதிகபட்ச தண்டனை இரண்டாண்டுகள். மற்ற ஒரு குற்றச் சாட்டுக்கு அதிகபட்ச தண்டனை பத்து ஆண்டுகள். இரண்டு ஆண்டுகள் தண்டனை விதிக்கப் பட்டால், வழக்கில் தீர்ப்பு முடிந்ததும் சிறை செல்லத் தேவையில்லை. ஆனால், பத்தாண்டுகள் தண்டனை வழங்கப் பட்டால், உடனடியாக சிறை செல்ல வேண்டும். உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து பிணையில் வெளி வருவதற்கு குறைந்தது 6 மாதமாவது ஆகும். தேர்தல் நேரத்தில், சவுக்கை முடக்க வேண்டும், உடனடியாக உள்ளே அனுப்ப வேண்டும் என்ற திட்டத்திலேயே, ஒட்டக் கூத்தர் கூட்டுச் சதியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தக் கூட்டுச் சதியின் பங்குதாரர்களாகவும், ஒட்டக் கூத்தரின் ஏவலாளாகவும் ஏரளாமானோர் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த வழக்கின் புலன் விசாரணையின் போது, சாட்சிகளின் வாக்குமூலத்தி பதிவு செய்த பாலு என்ற டிஎஸ்பியை போன்ற முட்டாளைப் பார்க்கவே முடியாது. அந்த அளவுக்கு வழக்கில் குளறுபடிகள். வழக்கமாக காவல்துறையில், குற்றத்தை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையென்றால், “கொலை செய்வதற்கு முதல் நாள், எதிரி என்னிடம் வந்து அவனை கொல்லாமல் விட மாட்டேன். அவனை கொன்றால் தான் என் ஆத்திரம் தீரும்” என்று நான்கு ஐந்து பேரிடம் சொன்னது போல வாக்குமூலங்களை தயாரித்து வழக்கில் தாக்கல் செய்வார்கள். இது போல பொய்யாகச் சேர்த்த வாக்குமூலங்களை நீதிமன்ற விசாரணையின் போது, அந்த சாட்சிகள், அந்த வாக்குமூலங்களை தவறாமல் அப்படியே சொல்ல வேண்டும் என்று மிரட்டுவார்கள். இந்த முட்டாள் பயலும், அதே போல இந்த வழக்கிலும், பல்வேறு வாக்குமூலங்களை தயார் செய்துள்ளான். ஆனால், அவ்வாறு பாலு தயார் செய்த வாக்குமூலங்கள் சவுக்கின் நண்பர்கள் சொன்னதாக தயாரிக்கப் பட்டுள்ளது.
வழக்கு புலன் விசாரணை நடந்து கொண்டிருந்த போது, கைது செய்து விடுவேன், பொய் வழக்கு போட்டு விடுவேன் என்று மிரட்டியதால், அப்போது அவன் சொன்னதற்கெல்லாம் தலையாட்டியவர்கள், இப்போதும் அதே போல சொல்வார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ?
ஆனால் இங்கேதான் ஒட்டக் கூத்தரின் தந்திரம் இருக்கிறது. அந்த முட்டாள் பாலு, இப்போது சிபி.சிஐடியிலிருந்து மாறுதலாகி சென்று விட்டார். தற்போது இந்த வழக்கு விசாரணையை சிபி.சிஐடியின் சார்பில் நடத்துபவர் நேரடியாக க்ரூப் 1 தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப் பட்ட அரவிந் என்ற டிஎஸ்பி. அரசுப் பணியில் சேர்ந்த புதிதில் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு நேர்மையாக இருப்பது, சகஜம். இது போல, இந்த நபரும், நேர்மையாக இருக்கிறார் என்றுதான் சவுக்கு இவரைப் பற்றி விசாரித்த போது தெரிந்தது.
ஆனால், இந்த அரவிந்தும், ஒட்டக் கூத்தரின் கைக்கூலியாகி, சாட்சிகளை மிரட்டுகிறார் என்ற தகவல் வந்துள்ளது. நீதிமன்றத்துக்கு சாட்சி சொல்ல வந்தவர்கள், தாங்கள் அளித்ததாக, பதிவு செய்துள்ள வாக்குமூலங்களைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள். ‘நாங்கள் இது போல சொல்லவேயில்லையே… சொல்லாததை எழுதியிருக்கிறார்களே…..’ என்று கேட்டதற்கு, இதில் உள்ளவற்றை மாற்றிச் சொன்னீர்கள் என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்த டிஎஸ்பி மிரட்டுகிறார் என்று தெரிகிறது.
ஒரு சில சாட்சிகள், நான் வாக்குமூலத்தில் கொடுக்காததை கொடுத்ததாக பதிவு செய்திருக்கிறார்கள், இது போல நான் கூறவேயில்லை, அதனால் அப்படி நீதிமன்றத்தில் சொல்ல இயலாது என்று கூறினால், அதற்கு இந்த அரவிந்த், மாற்றிச் சொன்னால், பின்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று மிரட்டுகிறார் என்று கூறுகிறார்கள்.
அரவிந்த் சார்… என்ன ‘பின்’ விளைவுகள் ? ஹேர் பின்னா ? சேப்டி பின்னா ?
பின் விளைவுகள் என்பது, வெற்று மிரட்டலாக இருந்தாலும், ஒரு வேளை சவுக்கின் நண்பர்களுக்கு சிபி.சிஐடி போலீசாரால் ஏதாவது நெருக்கடி நேருமேயானால், நீங்கள் சொல்லும் ‘பின் விளைவுகள்’ உங்களுக்கும் கடுமையாக இருக்கும் அரவிந்த் சார். இன்னும் பல ஆண்டுகள் பணியில் இருக்கப் போகிறீர்கள்… குறைந்தது ஐஜி வரை பதவி உயர்வு வர வாய்ப்பு உள்ளது…. தனது நண்பர்களுக்கு நெருக்கடி என்றால், சவுக்கு அதை எளிதாக எடுத்துக் கொள்ளாது என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறது.
அரசுப் பணியின் தொடக்கத்தில் இருக்கிறீர்கள்…. கொஞ்சமாவது நியாயமாக நடந்து கொள்ளுங்கள்.
பி.பி.நெய்ல்வால் என்று ஒரு ஐபிஎஸ் அதிகாரி இருந்தார். 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் செய்த முதல் வேலை, அவரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமித்தது. 1996 முதல் 2001 வரை திமுக ஆட்சியிலிருந்த காலத்தில், பல்வேறு ஊழல் வழக்குகள் ஜெயலலிதா மீதும், அவரது அமைச்சரவை சகாக்கள் மீதும் தொடரப்பட்டன.
2001ல் ஜெயலலிதா முதல்வரானவுடன், அதிகார மையம் நடுநடுங்கிப் போனது. பதறியடித்துக் கொண்டு, ஜெயலலிதாவை எப்படி குளிரவைப்பது என்று போட்டி போட்டார்கள்.
புதிய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக பொறுப்பேற்ற பி.பி.நெய்ல்வால், பதவியேற்ற முதல் நாளே அத்தனை வழக்குகளையும் ஆய்வு செய்தார். ஆய்வு செய்து விட்டு, கோப்பில் அவர் எழுதியது என்ன தெரியுமா ? “மேல் நடவடிக்கையை தொடரவும்”. லஞ்ச ஒழிப்புத் துறையின் கோப்புகள் இன்றும் இதற்கு சாட்சியாக உள்ளன. ஜெயலலிதா என்ன அவர் கழுத்தையா சீவி விட்டார் ?
மிஸ்டர் அரவிந்த்…. அதிகாரி என்றால் நெய்ல்வால் போல இருக்க வேண்டும்.
மீதமுள்ள சாட்சிகளின் விசாரணை வெள்ளி அல்லது திங்கட்கிழமை முடிந்து விடும். அதன் பிறகு குறுக்கு விசாரணை தொடங்கும். தலைமைச் செயலாளர் மாலதி சாட்சியம் அளிக்காமல், குறுக்கு விசாரணையை தொடங்குவதில் என்று முடிவெடுக்கப் பட்டுள்ளது.
மார்ச் மாதம், தேர்தல் அறிவிக்கை வெளிவருவதற்குள் சவுக்கு புழல் தண்டனைச் சிறையில் அடைக்கப் படுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது.
ஆனால், நம்பிக்கை அளிக்கும் விஷயங்கள் இல்லையா என்ன ? இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தொடங்கியவுடன், சவுக்குக்கு நேரிலும், தொலைபேசியிலும் ஆதரவு அளித்த பத்திரிக்கையாள நண்பர்களுக்கு சவுக்கு என்றென்றும் கடமைப் பட்டிருக்கிறது.
வெறும் ஆதரவு இல்லை. எவ்வளவு பணம் வேண்டும் சொல்லுங்கள். நாங்கள் வசூல் செய்து தருகிறோம் என்று அவர்கள் கொடுக்கும் ஆதரவு நெஞ்சை நெகிழச் செய்வதாக இருக்கிறது.
வழக்கு விசாரணை தொடங்கியவுடன், எப்போதும் சவுக்குக்கு துணை நிற்கும், வழக்கறிஞர்கள் புகழேந்தி மற்றும் ராதாகிருஷ்ணன் உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுத்தாலும், இந்த முறை புதிய வடிவில் ஒரு இன்ப அதிர்ச்சி. தமிழகத்தில் பிரபலமான கிரிமினல் வழக்கறிஞர் ஒருவர், தானாக முன்வந்து, சவுக்கின் வழக்கை ஏற்று நடத்தி வருகிறார். மிகவும் திறம்பட வழக்கை அவரும், அவரது இளம் வழக்கறிஞர்களும் நடத்தி வருகிறார்கள். இது வரை சவுக்கிடம் இருந்து கட்டணமாக ஒரு ரூபாய் கூட கேட்கவில்லை. ஆனால், இந்த வழக்கு நியாயமாக கிடைப்பதற்கு, உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம் என்று கூறியுள்ளார். வழக்கறிஞர், புகழேந்தி, ராதாகிருஷ்ணன் மற்றும் அந்த நண்பரின் ஆதரவும், உழைப்பும், சவுக்கை அவ்வளவு எளிதில், சிறைக்கு அனுப்ப முடியாது என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
நாங்களும் ஒன்னும் ஏப்ப சோப்பை இல்லை என்பது ஒட்டக் கூத்தருக்கு நன்கு தெரியும். அதனால் தான், பல்வேறு தகிடுதத்தங்களை செய்து வருகிறார்.
அவருக்குத் தெரிந்த முதல் தகிடுதத்தம் ஒட்டுக் கேட்பது. சவுக்கோடு பேசும் அத்தனை பேரின் தொலைபேசிகளையும் ஒட்டுக் கேட்பு வளையத்தில் கொண்டு வந்துள்ளார். மூத்த காவல்துறை அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள், நீதிமன்றப் பணியாளர்கள், வழக்கறிஞர்கள், என்று ஒருவரும் பாக்கியில்லை. இன்றைய நிலவரப்படி, 220 தொலைபேசிகள் தினமும் ஒட்டுக் கேட்கப் படுவதாக, உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தகவலைச் சொன்ன அந்த நண்பரிடம், ‘சரி எப்படி நீங்கள் இத்தனை தொலைபேசி உரையாடல்களையும் ஒட்டுக் கேட்டு, அதில் முக்கியமான உரையாடல் எது என்று அலச முடிகிறது, அதற்கு ஆட்கள் ஏது, நேரம் ஏது’ என்று கேட்ட போது, அவர் சொன்ன தகவல் அதிர்ச்சி அளிக்க வைத்தது. புதிதாக வந்துள்ள சாப்ட்வேரில், முக்கிய வார்த்தைகளை போட்டு வைத்து விட்டால், உதாரணத்துக்கு, “ஜாபர் சேட், ஹவுசிங் போர்ட், டெலிபோன் டேப்பிங், ராசாத்தி அம்மாள், கனிமொழி, குருமாராஜ், கஸ்பர், வோல்டாஸ்”, அந்த சாப்ட்வேர், அந்த உரையாடல்களை மட்டும் தனியே பிரித்து எடுத்து விடுமாம். சவுக்கின் உரையாடல்களை ஒட்டக் கூத்தரும், ஆண்டெனா தலையர் ஜாபர் சேட்டுமே, நேரடியாக கேட்கிறார்கள் என்று கூறினார் அவர். இந்தத் தகவல் அறிந்ததிலிருந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தொலைபேசியில், ஜாபர் சேட்டை சவுக்கு காது கூசும் அளவுக்கு கெட்ட வார்த்தையில் திட்டத் தொடங்கி விட்டது. இதையும் கேட்கட்டுமே…..
காது பெருசாகம ஒட்டுக் கேக்குறது எப்டின்னு யாராவது ஒட்டக் கூத்தருக்கு சொல்லுங்களேன்….
2009 தொடக்கத்தில் சவுக்கை சந்தித்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர், “தம்பி. நெறய்ய கஷ்டப்பட்டுட்ட…. இனிமேல வேணாம். எனக்கு அழகிரியை நல்லா தெரியும்… நீ ஒன்னும் கால்ல விழ வேணாம்பா… நான் கால்ல விழறேன்…. எல்லா பிரச்சியையையும் முடிச்சுக்குவோம்பா” என்று சொன்னார். அப்போது சவுக்கு அவரிடம் சொன்னது….. “அய்யா இதற்காகவா நான் இத்தனை நாள் போராடிக் கொண்டிருக்கிறேன் ? போராடித் தோற்றாலும் தோற்பேன்… சரணடைய மாட்டேன்” என்பதுதான். அதையேதான் சவுக்கு இப்போதும் சொல்கிறது. இறுதி மூச்சு உள்ள வரை போராடுவோம்.
கொடுங் கூற்றுக்கிரையெனப் பின் மாயும்…..
பல வேடிக்கை மனிதரைப் போல்
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ……
இந்த வழக்கு நெருக்கடியால் உடனடியாக ஏற்பட்டுள்ள சிரமம், சவுக்கு எழுத முடியாதது. வழக்கு வேலைகள் தொடர்பாக தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளதால், இரவு நீண்ட வேரம் வழக்கறிஞருடன் ஆலோசனையும், பகலில் வழக்குக்காக நீதிமன்றமும் செல்ல வேண்டி உள்ளதால், ஏராளமான விஷயங்கள் இருந்தும், சவுக்கு உடனடியாக எழுத முடியவில்லை. வழக்கு முடியும் வரை நேரம் துளியும் கிடைக்காது தோழர்களே…. வழக்கு தொடங்கும் முன்பாகவே, தினமும் 5 மணி நேரம் தான் உறக்கம். இப்போது, வழக்கு வேலைகள் காரணமாக, மிகுந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால், சவுக்குக்கு அன்போடு, சிறிது நாட்கள் ஓய்வு கொடுக்கலாம் தானே…. ?
சவுக்கு வாசகர்கள் புரிந்து கொள்வீர்கள் தானே…. ?