பல்வேறு தடைகளுக்கு பிறகு, சிறிது காலம், முழுமையான இணையதளமாக இயங்க முடியாமல் ப்ளாக் வடிவத்தில் இயங்கி வந்தோம். ஆனாலும், நமது பணி தொய்வடையவில்லை. ப்ளாக் வடிவத்திலேயே பல்வேறு முக்கியமான ஊழல்களை அம்பலப்படுத்தினோம். தற்சமயம், பல மறைமுகமான அன்பு உள்ளங்களின் உதவியோடு மீண்டு எழுந்துள்ளோம். புதிய தளம். www.savukkunews.com இன்று முதல் இயங்குகிறது.
எத்தனை போராட்டங்கள்….. ? எத்தனை தடைகள்….. ? எத்தனை புதிய தளங்கள் திறந்தோம் என்பதை நினைத்துப் பார்க்கக் கூட அலுப்பாக இருக்கிறது. அப்படி என்ன தவறு செய்து விட்டோம் ? ஊழல்களையும், ஊழல் நீதிபதிகளையும், ஊழல் அதிகாரிகளையும், ஊழல் அரசியல்வாதிகளையும் == சளைக்காமல் அம்பலப்படுத்தினோம். இன்றைய வெகுஜன ஊடகங்கள் தங்கள் கடமைகளைச் செய்யத் தவறியதால் மட்டுமல்ல, அந்த ஊடகங்கள், இந்த அதிகார வர்க்கத்தோடு கைகோர்த்துக் கொண்டு விலைபோன காரணத்தாலேயே சவுக்கின் தேவை எழுந்தது.
கடந்த வாரம், விக்கி ரெபல்ஸ் என்ற ஆவணப்படத்தை பார்க்க நேர்ந்தது. விக்கிலீக்ஸை உருவாக்கிய ஜுலியன் அசாஞ் மற்றும் விக்கிலீக்ஸின் கதை அது. ஜுலியன் அசாஞ் ஒரு சாதாரண ஹேக்கராக தன் வாழ்வைத் தொடங்கி, உலகெங்கும் உள்ள சமூக ஆர்வலர்களின் ஆதர்சமாக எப்படி மாறினார் என்பதும், உலகெங்கும் உள்ள அதிகார வர்க்கம், விக்கிலீக்ஸை முடக்க என்னென்ன சதிச்செயல்கள் செய்தன என்பதும் குறித்த ஆவணப்படம் அது.
https://www.youtube.com/watch?v=z9xrO2Ch4Co
நாம், ஜுலியன் அசாஞ் போல யுகபுரட்சியை நிகழ்த்திவிடவில்லை. அரசாங்கங்களின் ஆணி வேரை அசைத்து விடவில்லை. ஆனாலும், நாம் அதிகாரவர்க்கத்தால் கவனிக்கப்பட்டோம். அதிகார வர்க்கத்தின் கண்களில் தூசு போல உறுத்தத் தொடங்கினோம். கண்ணில் விழுந்த தூசியை துடைத்து எறிவது போல நம்மையும் துடைத்து எறிய முனைந்தனர்.
எத்தனை தடைகளை ஏற்படுத்த முடியுமோ அத்தனை தடைகளை ஏற்படுத்தினர். ஜுலியன் அசாஞ் மீது இரு பெண்களை வைத்து எப்படி பொய் வழக்கு பதிவு செய்தார்களோ, அது போல, ஒரு பெண்ணிடம் 50 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டியதாகவும், மிரட்டி அவதூறாக கட்டுரை எழுதியதாகவும் நம் மீது வழக்கு பதிவு செய்தனர். அசாஞ் மீது அந்த வழக்குகளைப் பதிவு செய்ய, அமெரிக்க ரகசியங்களை அவர் வெளியிட்டது காரணமென்றால், நம் மீது இந்த வழக்குகளை பதிவு செய்ய 2ஜி டேப்புகளை நாம் வெளியிட்டது மட்டுமே காரணம். விக்கிலீக்ஸை ஒழித்து விட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு உலக நாடுகளின் அதிகார வர்க்கம் பணியாற்றுவதற்கான காரணம், அவர் மேலும் பல்வேறு மனித உரிமை மீறல்களையும், ஊழல்களையும் அம்பலப்படுத்துவார், அம்பலப்படுத்தப் போகிறார் என்பது காரணம் என்றால், நம்மை ஒழிப்பதற்கும் அது மட்டுமே காரணம். அவர் இரண்டு ஆண்டுகளாக, ஈக்வடார் தூதரகத்தில் வீட்டுச் சிறையில் இருக்கிறார் என்றால், நாம் 2ஜி டேப்புகள் வெளிவந்த நாள் முதலாக தலைமறைவு வாழ்க்கையில் இருக்கிறோம்.
தமிழ்ச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் அம்பலப்படுத்தத் தவறிய ஊழல்களை நாம் அம்பலப்படுத்தியிருக்கிறோம் என்பதை நாம் மிக மிக பெருமையோடு சொல்லிக் கொள்ளலாம். அந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே, நம்மை ஒழித்துக் கட்ட இந்த அதிகார வர்க்கம் தீவிர முனைப்பில் இருக்கிறது. இந்த அதிகார வர்க்கத்தில், திமுக, அதிமுக என்ற பாரபட்சம் துளியும் கிடையாது. சவுக்கு ஆரம்பகாலம் முதல் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு இது நன்கு புரியும். அதிமுகவை எதிர்த்து எழுதினால், திமுகவினர் ஆதரிப்பார்கள். திமுகவை எதிர்த்து எழுதினால், அதிமுகவினர் ஆதரிப்பார்கள். இருவரையும் எதிர்த்து எழுதினால், பாட்டாளி மக்கள் கட்சியினர் மகிழ்வார்கள். பாமக தலைவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸின் அயோக்கியத்தனங்களை எழுதினால், கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டுவார்கள். வன்னியர்களின் எதிரி என்று சித்தரிப்பார்கள். மொத்த பரம்பரையையும் ஆராய்வார்கள்.
இந்ததிராவிடக் கட்சிகளை விமர்சித்து எழுதினால் பிஜேபியினர் அகமகிழ்வார்கள். பிஜேபியை எதிர்த்து எழுதினால் இஸ்லாமியர்கள் ஆதரிப்பார்கள். இஸ்லாமியர்களை எதிர்த்து எழுதினால் இந்துத்துவா அடிப்படைவாதிகள் அனைவரும் ஆதரிப்பார்கள்.
இவர்கள் யாரைப்பற்றியும் எழுதினாலும், எழுதாவிட்டாலும், இடதுசாரிகள் எதிர்ப்பார்கள். ஏனென்றால் உலகத்தில் இவர்கள் மட்டுமே அறிவுஜீவிகள். இவர்கள் மட்டுமே நேர்மையாளர்கள். ஆனால், மனசாட்சியை விற்று விட்டு மார்க்சியம் பேசுபவர்கள், இந்திய இடதுசாரிகள்தான். தங்கள் கட்சிக்குள்ளாகவே புரையோடிப் போயிருக்கும் ஊழல்களை மறைத்து விட்டு ஊர் நியாயம் பேசுவார்கள்.
ஆனால், நமக்கு இவர்கள் அனைவரும் ஒன்றே. தங்களுடைய நலன்கள், தங்களுடைய முன்முடிவுகள் (Prejudices) இதன் அடிப்படையிலேயே இத்தரப்பினர் அனைத்து விவகாரங்களையும் அணுகுவார்கள். ஆனால், நமக்கு முன்முடிவுகளோ, தனிப்பட்ட நலன்களோ எதுவும் கிடையாது.
நமது ஒரே குறிக்கோள், பரந்துபட்ட இச்சமூகத்தின் நலன் மட்டுமே. இச்சமூகத்தை சீரழிவுக்குள்ளாக்கும் வகையில் ஊழல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் அத்தனை பேரும் நமது எதிரிகள். அவர்களுள் நாம் பாரபட்சம் பார்ப்பது கிடையாது.
ஜுலியன் அசாஞ்சை உலக நாடுகள் அனைத்தும் சேர்ந்து அழித்து ஒழிக்க நினைத்தபோது, உலகெங்கிலும் அவருக்கு சமூக ஆர்வலர்களிடம் இருந்து எப்படி பேராதரவு பெருகியதோ, அது போலவே நமக்கும் பேராதரவு பெருகியுள்ளது. இன்று நமக்கு உலகில் நண்பர்கள் இல்லாத இடமே இல்லை என்று உறுதியாக சொல்லும் அளவுக்கு நாம் வளர்ந்திருக்கிறோம். இத்தனை அச்சுறுத்தல்களையும் மீறி, இத்தனை நெருக்கடிகளையும் மீறி, நமக்கு உதவிகள் உலகெங்கிலும் இருந்து கொட்டுகிறது. சமீபத்தில் வெளியூர் சென்றிருந்தபோது, ஒரு நண்பர் அவர் வீட்டில் தங்க வைத்து, அவர் வீட்டில் மூன்று வேளை உணவிட்டு, அவர் நண்பர்களை அறிமுகப்படுத்தி, அவர்களோடு தங்கவைத்து, இணைய இணைப்பு வழங்கி, மீண்டும் ஊர் திரும்ப டிக்கெட் வாங்கிக் கொடுத்து, செலவுக்கு பணமும் கொடுத்து அனுப்பினார். அவரை அது வரை பார்த்தது கூட கிடையாது. முகநூல் வழியான நட்பு மட்டுமே. அந்த அன்பில் நெகிழ்ந்து போக நேர்ந்தது. காவல்துறையால் தேடப்படுகிறோம் என்று அறிந்ததும், காவல்துறை அல்ல, கடவுளே கண்டுபிடிக்க முடியாத இடம் இருக்கிறது. இங்கே வந்து எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்குங்கள் என்று அத்தனை அழைப்புகள்.
இத்தகைய நெகிழ்ச்சியான அன்பு, நமக்கு தமிழகத்தில் அல்ல இந்தியாவில் மட்டுமல்ல…… உலகெங்கிலும் காத்திருக்கிறது என்பது நன்றாகத் தெரியும்.
இந்த அன்பை 66.5 கோடி செலவழித்தோ, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி செலவழித்தோ பெற முடியாது.
ஜுலியன் அசாஞ்சிடம் ஒரு ஆவணத்தைக் கொடுத்தால், விலை போகாமல் அவர் அதை தன் உயிரையும் பணயம் வைத்து, வெளியிடுவார் என்ற நம்பிக்கையை எப்படி பெற்றிருக்கிறாரோ, அந்த நம்பிக்கையை நாமும் பெற்றிருக்கிறோம். இந்த அன்பு ஒரு நாளில் விளைந்ததல்ல. சளைக்காத நமது உழைப்பாலும், நேர்மையாலும் விளைந்தது. இந்த அன்புக்கு நாம் காட்டும் நன்றி, நமது பாதையிலிருந்து வழுவாமல், தொடர்ந்து பயணிப்பது மட்டுமே. நிச்சயம் பயணிப்போம் என்ற நம்பிக்கை உறுதியாக உள்ளது. நாம் இழக்க 66.5 கோடி இருக்கிறதா ? அல்லது ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி இருக்கிறதா ? அடிமைச் சங்கிலிகளைத் தவிர நம்மிடம் இழப்பதற்கு எதுவுமே இல்லை.
அதிகார வர்க்கத்துக்கு சிம்ம சொப்பனமாக நாம் நம் பயணத்தை தொடருவோம். சவுக்கு தளத்துக்காக 27 நாட்கள் சிறையில் இருந்த தோழர் முருகைய்யன் மற்றும் 45 நாட்கள் சிறையில் இருந்த போத்தி காளிமுத்து மற்றும், தங்கள் பெயர்களை என்றுமே வெளியிட விரும்பாத ஆயிரக்கணக்கான அன்பு நண்பர்கள் மற்றும், என்னை வாஞ்சையோடு வழிநடத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கும், என் பேரன்புக்குரிய பத்திரிக்கையாளத் தோழர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்.
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்…….
all the good things with you and if you are honest,god also with you