மாற்றத்தைத் தவிர மாறாதது ஜெயலலிதா கட்டுரைகளின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை படிக்காதவர்கள் படித்து விடுங்கள்.
அரசு ஊழியர்கள் மட்டுமில்லாமல், சமூகத்தில் அத்தனை தரப்பினரையும் பகைத்துக் கொண்டார் ஜெயலலிதா. மத்திய அரசில் பிஜேபி மற்றும் திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த தீர்மானமாக இருந்தார்.
ஏப்ரல் 2002ல், புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அந்த சந்திப்பில், இந்தியாவிலிருந்து பல்வேறு பத்திரிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பு நடந்த மறுநாள் செய்தியாளர்களை சந்தித்த ஜெயலலிதா, இந்தியப் பத்திரிக்கையாளர்களை நினைத்து வெட்கப்படுகிறேன். ஒரு தடை செய்யப்பட்ட அமைப்பின் தலைவரை சந்தித்து பேட்டியெடுக்கின்றனர் என்று சம்பந்தமே இல்லாமல் புலிகள் அமைப்பின் மீது தன் வெறுப்பை வெளிப்படுத்தினார் ஈழத்தாய்.
திமுக மற்றும் பிஜேபியின் உறவு மிக மிக நெருக்கமாக இருந்தது. திமுக தலைவர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டதை அடுத்து, மாநில அரசை டிஸ்மிஸ் செய்யும் அளவுக்கு நெருக்கடியை உருவாக்க திமுகவால் முடிந்தது. அப்போது மத்தியில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த சோனியா காந்தி மறுத்த காரணத்தாலேயே, ஜெயலலிதா அரசு அன்று தப்பித்தது. ஆனாலும், கருணாநிதி கைது மற்றும் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மீது நடந்த தாக்குதலுக்கு காரணமான அதிகாரிகள், முத்துக்கருப்பன், ஜார்ஜ், மற்றும் கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரை மத்திய அரசுப் பணிக்கு அழைத்து உத்தரவிடப்பட்டது. இந்த மூன்று அதிகாரிகளும், மத்திய தீர்ப்பாயத்தில் இந்த உத்தரவுக்கு தடையாணை பெற்று தப்பித்தனர்.
இந்த உறவை எப்படியாவது முறியடிக்க வேண்டும் என்று தீவிர முனைப்பில் இருந்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் ஆதரவில் வாஜ்பாய் அரசாங்கம் டெல்லியில் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதா டெல்லி சென்றால், டெல்லியே பரபரப்பாகும். எந்த நேரத்தில் என்ன குண்டை வீசுவாரோ என்று பரபரப்பாக இருக்கும். ஜெயலலிதாவின் பத்திரிக்கையாளர் சந்திப்பு என்றால், கூட்டம் அரங்கு நிறையும்.
திமுக ஆதரவில் வாஜ்பாய் ஆட்சி அமைத்ததும், ஜெயலலிதாவுக்கு டெல்லியில் அவர் எதிர்ப்பார்த்த வரவேற்பு இல்லை. இந்த சூழலில் செப்டம்பர் முதல் வாரத்தில் டெல்லியில் பத்திரிக்கையாளர்களை ஜெயலலிதா சந்திப்பார் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த சந்திப்பு காவிரி விவகாரம் தொடர்பாக என்று வெளியிடப்பட்டது. காவிரி விவகாரம் என்றதும், பத்திரிக்கையாளர்களுக்கு எவ்விதமான ஆர்வமும் ஏற்படவில்லை.
திடீரென்று பத்திரிக்கையாளர்கள் மத்தியில், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியைப் பற்றி ஜெயலலிதா பேசப்போகிறார் என்று செய்தி கசிய விடப்படுகிறது. பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. டெல்லி மவுரியா ஷெரட்டன் ஹோட்டல் முழுக்க பரபரப்பு. பத்திரிக்கையாளர்கள் தங்கள் குறிப்பேடுகளையும் பேனாக்களையும் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஒளிப்பதிவாளர்கள் கேமராக்களை சரியான கோணத்தில் வைத்து காத்திருந்தனர். புகைப்படக்கலைஞர்கள் தயாரானார்கள்.
“அந்தோனியோ மொய்னோ என்கிற சோனியா காந்தி மற்றும் அவரது இத்தாலிய சொந்தங்கள் மற்றும் நண்பர்களிடமிருந்து, இந்தியாவை நான் காப்பாற்றுவேன். அந்தோனியோ மொய்னோ பிரதமராவதை எதிர்த்து நான் இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் பிரச்சாரம் செய்வேன். சோனியா பிரதமரானால், இந்தியாவுக்கு அதை விட சோகமான நாள் இருக்க முடியாது.” என்றார்.
அந்த சமயத்தில் எந்த தேர்தலும் கிடையாது. எதற்காக இப்படி ஜெயலலிதா பேசுகிறார் என்று யாருக்குமே புரியவில்லை.
சென்னை வந்த பிறகு, மீண்டும் சோனியா மீது தாக்குதல் தொடுத்தார். சோனியாவை தொடர்ந்து அந்தோனியோ மொய்னோ என்றே அழைத்தார் ஜெயலலிதா.
ஆனால் அதற்கான விலையை ஜெயலலிதா பின்னாளில் அளித்தார். ஜெயலலிதாவின் இந்த சாடலை சோனியா மறக்கவேயில்லை. தனது உதவியாளர் அகமது படேலின் மூலமாக, பெங்களுரு சொத்துக் குவிப்பு வழக்கை உன்னிப்பாக கவனித்து வந்தார் என்றும், சிறப்பு நீதிபதியாக மைக்கேல் டி குன்ஹா நியமிக்கப்பட்டதில், சோனியா காந்தியின் பங்கு உள்ளது என்றும் டெல்லி வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
தலித்துகளின் மீதான வன்கொடுமைகள் இந்த காலகட்டத்தில்தான் அதிகமாக நடைபெற்றன. தலித் மக்களுக்கென ஒதுக்கப்பட்ட பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார் மங்கலம் ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு தேர்தலே நடத்தமுடியாமல் போனது இந்த காலகட்டத்தில்தான். ஜெயலலிதா நினைத்திருந்தால், ஒரே நாளில் தேர்தலை நடத்தியிருக்க முடியும். ஆனால், ஆதிக்க சாதியினரின் மனம் கோணுமே என்ற ஒரே காரணத்துக்காக, இந்த விவகாரத்தை கண்டுகொள்ளவேயில்லை ஜெயலலிதா. கண்டதேவி தேர்த் திருவிழாவில், தலித் மக்கள் தேர் வடம் பிடிக்க அனுமதி மறுத்த காரணத்தால், தேர்த்திருவிழாவே ரத்து செய்யப்பட்டது. திண்ணியத்தில் தலித் இளைஞர் ஒருவர் மலம் தின்ன வைக்கப்பட்டதும் இந்த காலகட்டத்தில்தான்.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால், தமிழகமெங்கும் கடுமையான வறட்சி நிலவியது. வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் 28 மாவட்டங்கள் வறட்சி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. வறட்சி காரணமாக, விவசாயக்கூலிகள், வயல்களில் இருந்த எலிகளை பிடித்து உண்ணத் தொடங்கினர். இது குறித்து சட்டப்பேரவையில் விவாதம் எழுந்தபோது, அந்த விவசாயிகள் பசிக்காக எலிக்கறி உண்ணவில்லை, மாறாக ருசிக்காக எலிக்கறி உண்ணுகிறார்கள் என்றார் ஜெயலலிதா.
மத்திய அரசின் சென்வாட் வரிவிதிப்பு மற்றும் சிட்டா நூல் விலையேற்றத்தின் காரணமாக நெசவுத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. இலவச வேட்டி சேலை திட்டமும் நிறுத்தப்பட்டதால், நெய்து முடித்த வேட்டி சேலைகள் கொள்முதல் செய்யாமல் தேங்கிக் கிடந்தன. கோடிக்கணக்கான பணம் முடங்கியது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புதூரில் 8 நெசவாளிகள் பட்டினியால் இறந்து போனார்கள்.
பிரதான எதிர்க்கட்சியான திமுக, நெசவாளர்களுக்காக கஞ்சித்தொட்டி திறக்கும் போராட்டம் நடத்தியது. 27 ஆகஸ்ட் 2002 அன்று, மதுரையில் கஞ்சித் தொட்டி போராட்டம் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. மாமூல் வாங்குவதை மட்டுமே தன் முழு நேரத் தொழிலாகக் கொண்ட எம்விஎன்.சூர்ய பிரசாத் அப்போது மதுரை மாநகர காவல்துறை ஆணையராக இருந்தார். மதுரையில் திமுகவினர் நடத்திய கஞ்சித் தொட்டி போராட்டத்துக்கு 100 அடி தொலைவில், அதிமுகவினர் முட்டை பிரியாணி வழங்கும் போராட்டம் நடத்த அனுமதி வழங்கினார் சூர்யபிரசாத். எதிர்ப்பார்த்தது போலவே, திமுகவினரின் போராட்டத்தை சீர்குலைக்க முயன்ற அதிமுகவினர், கற்களை எடுத்து வீசினர். இதற்காகவே காத்திருந்த சூர்யபிரசாத், அவரே நேராக களத்தில் இறங்கி, திமுகவினரை சராமாரியாக தாக்கினார். மதுரை திமுக நிர்வாகிகள் மதுரை சலீம், தர்மலிங்கம், ஒச்சு பாபு, ராமமூர்த்தி உள்ளிட்டோர் கடுமையாக தாக்கப்பட்டனர். தா.கிருஷ்ணன் மீதும் தடியடி நடந்தது. இது குறித்து, தேசிய மனிதஉரிமை ஆணையத்தில் திமுக பேராசிரியர் அன்பழகன் அளித்த புகார், வழக்கம் போலவே கிடப்பில் போடப்பட்டது.
யாரோ ஒரு ஜோசியக்காரன் சொன்னான் என்று, மெரினா கடற்கரை நடைமேடையில் இருந்த கண்ணகி சிலை, இரவோடு இரவாக அகற்றப்பட்டது. அதற்கான காரணம், ஒரு லாரி அந்த நடைபாதையில் ஏறி, கண்ணகி சிலையை இடித்து கீழே தள்ளி விட்டு விட்டது என்று காரணம் கூறியது காவல்துறை.
கடற்கரையில் நட்சத்திர உணவு விடுதிகளைக் கட்டலாம் என்று ஒரு முட்டாள் அதிகாரி அளித்த யோசனையை ஏற்று, கடற்கரையில் இருந்த மீனவர் குப்பங்கள் அனைத்தையும் அகற்ற முனைந்தார் ஜெயலலிதா. ஆனால், பல்வேறு போராட்டங்கள் காரணமாக இது நிறைவேறாமல் போனது.
விடுதலைப்போராட்ட காலத்திலிருந்து, சென்னையில் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் இடம், கடற்கரையில் அமைந்திருந்த சீரணி அரங்கம். அந்த சீரணி அரங்கத்தை கடற்கரையின் அழகு கெடுகிறது என்று இடித்துத் தள்ளினார் ஜெயலலிதா. பாலகங்காதரத் திலகர் ஒரு காலத்தில் உரையாற்றிய இடம் அது.
1914ம் ஆண்டு வெள்ளையர்களால் தொடங்கப்பட்ட மகளிர் கல்லூரி தான் ராணி மேரிக்கல்லூரி. இந்தக் கல்லூரியின் கட்டிடம் புராதானச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியை இடித்து விட்டு, அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டப்போகிறேன் என்று சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டார் ஜெயலலிதா. இந்த அறிவிப்புக்கு அவர் சொன்ன காரணம், புனித ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை என்பதே. இதே ஜெயலலிதாதான், கருணாநிதி கட்டிய புதிய தலைமைச் செயலகத்தை புறந்தள்ளி விட்டு, மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டையிலேயே குடியேறினார்.
ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, அந்தக் கல்லூரி மாணவிகள், தொடர்ந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு அக்கல்லூரியின் பிரின்சிபல் பத்மினி என்பவரை மிரட்டி விடுப்பில் செல்ல வைத்து, பி.டி.ராஜலட்சுமி என்பவரை பிரின்சிபலாக நியமித்தது ஜெயலலிதா அரசு.
இந்தப் போராட்டங்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு அளித்தனர். அந்த அடிப்படையில், முக.ஸ்டாலினும், அந்த மாணவிகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக சென்று மாணவிகளை சந்தித்தார். அன்று இரவே ஸ்டாலினை அவர் வீட்டுக்கு சென்று இரவு 11.30 மணிக்கு கைது செய்தது காவல்துறை. ஸ்டாலினோடு சேர்ந்து, பொன்முடி, எ.வ.வேலு, பரணி குமார், ஜெ.அன்பழகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்து புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்ட ஸ்டாலினை வைக்க இடமில்லை என்று புழல் சிறையிலிருந்து, கடலூர் சிறைக்கு எடுத்துச் சென்றனர்.
மத்திய அரசில் சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு, கடற்கரை அருகே உள்ள கட்டிடங்களில் மாறுதல் செய்யவோ, புதிதாக கட்டவோ, மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று புதிய சட்டத்திருத்தத்தை வெளியிட்டார். இதன் நடுவே, ஒரு ஞாயிறு மாலை, ராணி மேரிக் கல்லூரியை இடிப்பதற்கெதிராக தொடங்கப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன், கல்லூரியை இடிப்பதற்கு தடை விதித்தார். அத்தோடு ராணி மேரிக் கல்லூரியை இடித்து தலைமைச் செயலகம் கட்டும் ஜெயலலிதாவின் கனவு, புஸ்வானமாகிப் போனது.
நான் தான் இந்துத்துவா கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் நபர் என்று பிஜேபிக்கு பறைசாற்றுவதற்காக, மதமாற்றத் தடை சட்டம் கொண்டு வந்தார். இது, கிறித்துவ மற்றும் இஸ்லாமிய மக்களை பெரும் கொதிப்படையச் செய்தது. காலம் காலமாக கோயில்களில் விழாக் காலங்களிலும் வேண்டுதல்களுக்காகவும் செய்யப்படும் ஆடு கோழிகளை பலியிடும் வழக்கத்துக்கு தடை கொண்டு வந்தார். விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்தார். மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸை ரத்து செய்தார். கோவில்களில் செருப்பு மற்றும் வாகன காப்புக்கு கட்டிடம், மாணவர்களுக்கு சத்துணவோடு கூடிய முட்டை ரத்து. ஏழைகளுக்கு இலவச வேட்டி சேலை ரத்து என்று துக்ளக்கின் மொத்த உருவமாக திகழ்ந்தார் ஜெயலலிலதா.
தற்போது நடக்கும் அதிமுக ஆட்சியில், பத்திரிக்கைகள் மீது சராமாரியாக எப்படி அவதூறு வழக்குகளைப் போட்டு குவிக்கிறாரோ, அதே போலத்தான் 2001 காலகட்டத்திலும். ஒரு பக்கம் அவதூறு வழக்குகளும், மற்றொரு பக்கம், சட்டப்பேரவையில் உரிமை மீறல் என்று கைது நடவடிக்கைகளும் தொடர்ந்தன. இந்து நாளேட்டின் மீது ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகள் சரித்திர பிரசித்தி பெற்றவை.
இந்து நாளேட்டின் பத்திரிக்கையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தன் அடிமையான அப்போதைய சட்டப்பேரவை சபாநாயகர் காளிமுத்துவை விட்டு, கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க வைத்தார்.
7 நவம்பர் 2003 அன்று மாலை 6.30 மணிக்கு 20க்கும் மேற்பட்ட ஆயுதப்படை காவலர்கள் இந்து அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அலுவலகத்திலிருந்து யாரும் வெளியேற முடியாத வண்ணம், வாயிலை மறித்து நின்றனர். என்.ரவியின் அறைக்குள் நுழைந்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்த என்.ராம், உடனடியாக வந்து, கைதுக்கான வாரண்ட் எங்கே என்று கேட்டார். வாரண்ட் இல்லை என்று கூறினர் காவல்துறையினர்.
அதே நேரத்தில் கேபிஎஸ் தேவராஜ் என்ற ஆய்வாளர் தலைமையில் ஒரு போலீஸ் டீம், தலைமை ஆசிரியர் போயஸ் தோட்டத்தில் இருந்த ஜெயந்த்தின் வீட்டுக்குள் நுழைந்து, ஜெயந்த் எங்கே என்று கேட்டது. ஜெயந்த் வீட்டில் இல்லை என்று அவர் மனைவி ஷோபா சொன்னபோதும் அதை நம்பாமல், உள்ளே நுழைந்து சோதனையிட்டனர். சோதனை வாரண்ட் எங்கே என்று கேட்டபோது, அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், வீட்டின் பாத்ரூம் வரை சோதனையிட்டனர். சிறிது நேரம் கழித்து, ஒரு உதவி ஆணையர் வாரண்டோடு வந்தார்.
மாலினி பார்த்தசாரதியின் வீட்டுக்குள் நுழைந்த காவல்துறையினர், வீட்டின் மூலை முடுக்கெல்லாம் தேடினர். இதே போல, பதிப்பாளர் ரங்கராஜன் மற்றும் என்.ரவி வீட்டிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன.
இரவு எட்டரை மணிக்கு, திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஆர்.சின்னராஜ் மற்றும் உதவி ஆணையர் ஆர்.சண்முகம் தலைமையில் மகளிர் காவலர்களோடு நுழைந்த பெரிய காவல்படை, இந்து அலுவலகத்தில் நுழைந்து சோதனையிட்டது. மீண்டும் ராம் கைது வாரண்ட் எங்கே என்று கேட்டபோது, மாலினி பார்த்தசாரதிக்கான ஒரு வாரண்ட் மட்டும் ஒரு காகிதத்தில் எழுதப்பட்ட பெயர்களைத் தவிர, வேறு எதுவும் சின்னராஜிடம் இல்லை.
பிறகு இந்து அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளை பின்னால் இருந்து இயக்கியது முழுக்க முழுக்க சென்னை மாநகர ஆணையர் விஜயக்குமார்.
பெங்களுரில் இந்துவின் 125வது ஆண்டு விழா, ஐடிசி வின்ட்ஸர் ஷெரட்டனில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. பெங்களுரு சென்ற தமிழகக் காவல்துறையினர், என்.ராம் சென்ற காரை வழிமறித்து, காரின் சாவியை பிடுங்கிக் கொண்டனர். பிறகு அவர்கள் தேடும் நபர்கள் இல்லை என்றதும், விட்டுச் சென்றனர்.
இப்படி விரட்டி விரட்டி இந்து நாளேட்டின் பத்திரிக்கையாளர்களை ஜெயலலிதா கைது செய்ய முனைந்ததன் காரணம், இந்து நாளேட்டில் ஏப்ரல் 2003ல் வந்த செய்திக் கட்டுரைகள் மற்றும் ஒரு தலையங்கம். சட்டப்பேரவையை ஜெயலலிதா நடத்தும் விதம் குறித்தே ஏப்ரல் 12, 13 மற்றும் 23 ஆகிய நாட்களில் இந்துவில் வந்த செய்திக் கட்டுரைகள் மற்றும் தலையங்கம் குறித்த இணைப்பு செய்தி 1 செய்தி 2 செய்தி 3
இந்து நாளேட்டின் நிர்வாகிகள் அல்லாமல் இதில் வசமாக சிக்கிய மற்றொருவர் முரசொலி நாளேட்டின் ஆசிரியர் செல்வம். செல்வம் செய்த ஒரே குற்றம் என்ன தெரியுமா ? இந்து நாளேட்டின் தலையங்கத்தை மறுபதிப்பு செய்தது.
சட்டப்பேரவை உரிமைக்குழு, இந்து கட்டுரைகள் மற்றும் தலையங்கத்தை முதலமைச்சரின் நற்பெயருக்கு (அப்படி ஒன்னு இருக்கா என்ன ?) களங்கம் ஏற்படுத்தும் வகையில், உள்நோக்கத்தோடு செய்திகள் பிரசுரிக்கப்பட்டதாக முடிவெடுத்தது. இந்து ஆசிரியர் ரவி, சட்டப்பேரவை செயலாளராக இருந்த ராஜராமனுக்கு ஒரு விளக்கக் கடிதம் எழுதி அனுப்பினார்.
செய்திக் கட்டுரைகள் மற்றும் தலையங்கம் குறித்து விரிவாக எழுதியபிறகு, இது குறித்து உரிமைக் குழுவின் முன்பு நேரடியாக ஆஜராகி விளக்கம் அளிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால், சபாநாயகர் காளிமுத்துவோ, இந்துவின் செய்திக் கட்டுரைகள் மற்றும் தலையங்கம், சுதந்திரமான சட்டப்பேரவையின் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கும் வகையில் இருந்ததாக தெரிவித்தார்.
நவம்பர் 7 அன்று, சபாநாயகர் காளிமுத்து, மாலை 5.20 மணிக்கு, ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பதாகவும், எந்த உறுப்பினரும் அவையை விட்டு வெளியேறக் கூடாது என்றும் உத்தரவிட்டார். அவைக்காவலர்களை விட்டு, அவையின் கதவுகளை மூட உத்தரவிட்டார்.
அப்போதைய நிதி அமைச்சர் சி.பொன்னைய்யன் எழுந்து, சட்டப்பேரவையின் உரிமைக்குழு, இந்து நாளேடு மற்றும் முரசொலி நாளேடுகளின் மீதான உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தோடு திமுக சட்டமன்ற உறுப்பினர் பரிதி இளம்வழுதியின் மீதான புகாரும் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்தார். அதிமுக உறுப்பினர் குமாரதாஸூக்கு பரிதி கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு.
இந்து பத்திரிக்கையாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு 15 நாட்கள் சிறைத் தண்டனையும், முரசொலி செல்வத்துக்கு 15 நாட்கள் சிறைத்தண்டனையும், பரிதி இளம்வழுதிக்கு 30 நாட்கள் சிறைத்தண்டனையும் விதித்து, ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பரிதி உடனடியாக கைது செய்யப்பட்டார். அதே பரிதி இளம்வழுதி இன்று ஜெயலலிதாவின் துதிபாடிக் கொண்டிருப்பது, காலத்தின் கோலமே.
இந்தத் தீர்மானங்கள் விவாதத்தில் இருந்தபோது, பேசிய ஜெயலலிதா, மிகவும் பெருந்தன்மையாக, பத்திரிக்கையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம், அவர்களை மன்னித்து விடலாம் என்று கூறினார். ஆனால், இறுதியாக இந்து தலையங்கம் வந்தபோது, அவர்களை கைது செய்தே தீர வேண்டும் என்று உத்தரவிட்டதும் அவர்தான். வழக்கம் போல அவதூறு வழக்கு தொடர்ந்தால், பத்திரிக்கையாளர்களை கைது செய்ய முடியாது என்பதற்காகவே, இந்த முறை, சட்டப்பேரவை நடவடிக்கையில் இறங்கினார் ஜெயலலிதா.
காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், மதிமுக, பிஜேபி என்று பாரபட்சமில்லாமல் ஜெயலலிதாவின் நடவடிக்கைகளை கண்டித்தனர். காங்கிரஸ் தலைவர் சிதம்பரம் மற்றும், பிஜேபி தலைவர் இல.கணேசன் ஆகியோர், இது ஜனநாயகத்தில் ஒரு கருப்பு நாள் என்றனர்.
இறுதியாக உச்சநீதிமன்றம் இந்த கைது நடவடிக்கைகளுக்கு தடை விதித்த பிறகே அடங்கினார் ஜெயலலிதா.
போட்டா என்ற கொடுங்கோல் சட்டத்தை மத்தியில் இருந்த பிஜேபி அரசாங்கம் தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக என்று அறிவித்து பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. இது அரசியல் எதிரிகளை பழிவாங்க உதவும் என்று கூறின. ஆனால், பாராளுமன்றத்தில் இதை ஆதரித்துப் பேசிய பிஜேபி தலைவர்களில் ஒருவரான அருண் ஜேட்லி, இத்தகைய சட்டம், தீவிரவாதத்தை ஒடுக்குவதற்கு மிக மிக அவசியம் என்று பேசினார்.
ஆனால், இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு சில மாதங்களில், தமிழகம் முழுக்க, போட்டா சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது என்று உத்தரவு பிறப்பித்த ஜெயலலிதா, விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினார் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை கைது செய்தார். அப்போது, பிஜேபி கூட்டணியில் இருந்தார் வைகோ. வைகோ, கைது செய்யப்பட்டது பிஜேபி தலைவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில், இச்சட்டத்தை கடுமையாக எதிர்த்த காங்கிரஸ் கட்சியோ, வைகோவின் கைது, சரியான நடவடிக்கை என்று கூறியது.
நக்கீரன் ஆசிரியர் கோபால், சுபவீரபாண்டியன், பழ.நெடுமாறன் என்று போட்டா சட்டத்தின் கீழ் பல்வேறு கைது நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஜெயலலிதா. இந்தக் கைதுகள், சென்னை உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் எதிர்த்து வாதாடப்பட்டபோது, விடாப்பிடியாக அந்த வழக்குகளை நடத்தி நியாயப்படுத்தினார் ஜெயலலிதா. சம்பந்தமே இல்லாமல், புலிகளை ஆதரிக்கிறேன் என்று ஒரு கூட்டத்தில் பேசியதற்காக, தன்னைக் கைது செய்து 19 மாதங்கள் சிறையில் வைத்தாரே என்ற கோபம் துளியும் இல்லாமல், எந்த விதமான கூச்ச நாச்சமும் இல்லாமல், 2006 தேர்தலில், அதிமுகவோடு கூட்டணி சேர்ந்தார் வைகோ.
2004ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், தமிழக மக்கள் ஜெயலலிதாவுக்கு மரண அடி அளித்தனர். 40 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட ஜெயலலிதாவால் வெற்றி பெற முடியவில்லை. அதன்பின், தனது மக்கள் விரோத நடவடிக்கைகள் ஒன்றொன்றாக திரும்பப் பெற்றார் ஜெயலலிதா.
2006ம் ஆண்டுத் தேர்தலில், திமுக தலைவர் கருணாநிதி, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து ஒரு மெகா கூட்டணியை அமைத்து தேர்தலை சந்தித்தார். இறுதி நேரத்தில் இக்கூட்டணியில் சேர்வதாக இருந்த வைகோ, அப்போதைய உளவுத்துறைத் தலைவர் அலெக்சாண்டர் செய்த ஏற்பாட்டால், கூட்டணி மாறி, ஜெயலலிதாவின் காலடியில் தஞ்சம் புகுந்தார்.
திமுக அமைத்த பலமான கூட்டணியையும் மீறி, பலமான அதிருப்திகளையும் மீறி, 66 இடங்களை 2006 சட்டமன்றத் தேர்தலில் வென்றார் ஜெயலலிதா. இன்று ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய அகந்தைக்கு காரணம், 2006 தேர்தலைப் போன்று தொடர்ந்து கிடைத்து வரும் வெற்றிகள்தான். 2011 சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவை கடுமையாக எதிர்ப்பவர்கள் கூட, அதிமுக கூட்டணி வரவேண்டும் என்று விரும்பி வெளிப்படையாகவே குரல் கொடுத்தனர். அதற்கான ஒரே காரணம், எக்காரணத்தைக் கொண்டும், கருணாநிதி மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாதே என்ற அச்சம் மட்டுமே.
1996ம் ஆண்டு சட்டமன்றப் பிரச்சாரக் கூட்டத்தில் இறுதிக் கூட்டமாக சென்னையில் உரையாற்றினார் திமுக தலைவர் கருணாநிதி. அந்தக் கூட்டத்தில், கருணாநிதி பேசுகையில் மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், இந்திய வரைபடத்தில் தமிழ்நாடு இருந்த இடம் ஓட்டையாக இருக்கும் என்றார். அதே நிலைமை 2011 திமுக ஆட்சியின் இறுதியில் ஏற்பட்டது. அந்த ஒரே காரணத்துக்காகத்தான் மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்று பலர் விரும்பினார்கள்.
ஆனால், ஜெயலலிதா இன்று மட்டும் அல்ல…. என்றுமே மாறமாட்டார் என்பதையே அவரது 2011 ஆட்சியும் உணர்த்துகிறது. மீண்டும் மீண்டும் ஜெயலலிதாவை தேர்ந்தெடுக்கும் இந்த மக்களே உண்மையான குற்றவாளிகள் என்கிறார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர்.
1991 ஆட்சி காலத்திலும், 2001 ஆட்சிகாலத்திலும், தமிழகம் பெருமைப் படக்கூடிய ஒரு விஷயம், ஊடகங்களில் ஆகச்சிறந்த பணி. ஜெயலலிதாவின் கண்ணில் விரலை விட்டு ஆட்டின ஊடகங்கள். ஜெயலலிதா அரசின் செயல்படாத தன்மையையும், மக்கள் விரோத கொள்கைகளையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தின. ஆனால், தற்போது ஜெயலலிதாவின் 2011 ஆட்சிகாலத்தில், இதே ஊடகங்கள், விளம்பரத்துக்காக வாலை ஆட்டிக் கொண்டு, குழைகின்றன. கூழைக் கும்பிடு போடுகின்றன.
ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த கூத்துக்களுக்கு ஜெயலலிதா மட்டுமே காரணம் அல்ல. ஜெயலலிதா குனி என்றால், அவர் காலடியில் தவழ்ந்த, தவழ்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகள்தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம்.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்பால் தங்களின் விசுவாசத்தைக் காட்ட வேண்டிய அகில இந்தியப் பணி அதிகாரிகள் (All India Service Officers), ஆட்சியாளர்களின் காலடியில் தங்கள் சுயமரியாதையையும், தன்மானத்தையும் அடகு வைத்திருப்பதே இந்த இழி நிலைக்கான முக்கிய காரணம். 1991 முதல், இன்று வரை பார்த்தோமேயானால், இந்த நிலை மேலும் மேலும் சீரழிந்து கொண்டேதான் வருகிறது. ஜெயலலிதா தனக்கு மன்னார்குடி மாஃபியாவைப் பிடிக்காதென்றால், அவர்கள் அனைவர் மீதும் நில அபகரிப்பு வழக்குகளை தாக்கல் செய்கிறார்கள். நீதிபதி மருமகன் மீது கஞ்சா வழக்கை போடச் சொன்னால், உடனடியாக போடுகிறார்கள். பிடிக்காதவனை என்கவுன்டர் செய்யச் சொன்னால் உடனடியாக செய்கிறார்கள். அரசு நிலத்தை, என் பெயருக்கு மாற்று என்றால், துரிதமாக செய்து முடிக்கிறார்கள்.
இப்படிப்பட்ட அதிகாரிகள்தான், இந்த சமூகத்தின் சாபக்கேடு. இப்படிப்பட்ட அதிகாரிகள் இருக்கும்வரை, ஜெயலலிதாக்கள் மீண்டும் மீண்டும் தங்கள் எதேச்சதிகாரத்தையும், கொடுங்கோல் ஆட்சியையும் அரங்கேற்றிக் கொண்டுதான் இருப்பார்கள்.
மதனோட வந்தார்கள் வென்றார்கள் புத்தகத்தை படிக்கிற feeling வருது உங்க கட்டுரையை படிக்கும் போதெல்லாம்