தமிழகத்தில் இருக்கும் செய்தி சேனல்கள் போதாது என்று, வரும் அக்டோபர் 30 முதல் நியூஸ் 7 என்று ஒரு செய்தித் தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. இன்று இந்தியாவில் உள்ள ஊடகங்களின் நிலைமை என்னவென்பது உங்கள் அனைவருக்குமே தெரியும். ஊடகம் நடத்துவது என்பது ஒரு லாபம் ஈட்டக்கூடிய தொழில் மட்டுமல்ல… ஆட்சியாளர்களையும், அதிகாரவர்க்கத்தில் இருப்பவர்களையும், மிரட்டி தங்கள் நலன்களை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், தங்களின் முதலீடுகளை அதிகரிப்பதும் இதன் நோக்கமாக மாறியுள்ளது.
ஆனால், இயற்கை எப்போதும் எல்லா அழிவுகளையும் சமாளித்து சமன்படுத்திக் கொள்ளும் பேரற்றால் கொண்டது. அந்த விதிப்படி இந்த வியாபாரமயமான ஊடகங்களை சமாளித்து அவற்றின் முகத்திரையை சமூக வலைத்தளங்களும், இணையதளமும், உதவி வருகின்றன. ஆனால், என்னதான் சமூக வலைத்தளங்கள், இந்த ஊடக வியாபாரத்தை எதிர்கொண்டு வந்தாலும், பண முதலைகளும், அரசியல் கட்சிகளும், கல்விக் கொள்ளையர்களும், ஊழல் பெருச்சாளிகளும் ஊடக நிறுவனங்களை தொடங்குவதில் எந்தத் தயக்கமும் காட்டாமல் தொடங்கிக் கொண்டே இருக்கின்றனர். சி.என்.என்., ஐ.பி.என். தொலைக்காட்சியை முகேஷ் அம்பானி சமீபத்தில் வளைத்துப்போட்டது இந்த வகைதான்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி நடத்தும் நாளிதழ்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள். தமிழகத்தில் மிகப்பெரிய கல்விக் கொள்ளையன் பச்சமுத்து நடத்தும் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி மற்றும் இதழ்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான்.
இந்த வரிசையில் தமிழகத்தின் கனிமக் கொள்ளையன் வைகுண்டராஜனும் இணைந்துள்ளார். இந்த வைகுண்டராஜனிடம் அடி பணியாத அரசியல் கட்சிகளோ, ஊடகங்களோ அறவே கிடையாது. இந்த வைகுண்டராஜன், அவர் சகோதரர் ஜெகதீசன், ஆகியோர் ஊடகங்களையும், அரசியல் கட்சிகளையும், அரசு அதிகாரிகளையும் வளைப்பதில் சமர்த்தர்கள். இருந்தபோதும், 2011ல் அதிமுக ஆட்சி வந்தது முதலாகவே, வைகுண்டராஜனின் கனிமக்கொள்ளைகள் பற்றிய செய்திகள் பரவலாக ஊடகங்களில் பரவிய வண்ணம் இருந்ததால், இதை எதிர்கொள்ள இவர்கள் அணிந்துள்ள தற்காப்புக் கவசமே ‘நியூஸ் 7’ செய்தி சேனல்.
உலகின் அதி நவீன தொழில்நுட்பங்களோடு தொடங்கப்படுவதாக படோடோபபமான அறிவிப்புகளோடு ‘நியூஸ் 7’ செய்திச் சேனலின் விளம்பரங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த செய்திச் சேனலின் ஆசிரியர் குழுமத்தில், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைவராகவும், டெக்கான் க்ரானிக்கிள் எடிட்டர் பகவான் சிங், தலித் கவிஞராக தன்னை வெளியுலகுக்கு அடையாளப்படுத்திக் கொண்டு ஊடக வெளிச்சத்தில் மிதந்து கொண்டிருக்கும் மீனா கந்தசாமி இந்த செய்திச் சேனலின் ஆசிரியர் குழுமத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழின் எடிட்டராக இருந்துகொண்டே, பகவான் சிங், ‘நியூஸ் 7’ செய்தி சேனலின் எடிட்டோரியல் குழுவிலும் எப்படி உறுப்பினராக இருக்கிறார் என்பது நமக்கெல்லாம் வியப்பளிக்கும் செய்தியாக இருக்கும். ஆனால், அது ஒரு சுவையான செய்தியும்கூட.
இந்த பகவான் சிங் ஒரு காலத்தில் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் ஆதர்சமாக இருந்தவர். சவுக்கிடம் பேசிய ஒரு மூத்த பத்திரிகையாளர் சொன்ன விஷயம் என்ன தெரியுமா? “தி வீக் என்ற பத்திரிக்கை ஒரு காலத்தில் ஒரு ரூபாய் ஐம்பது பைசாவுக்கு விற்று வந்தது. அப்போது என்னிடம் அவ்வளவாக வருமானம் கிடையாது. அந்த பத்திரிக்கையை நான் வாங்கியதே பகவான் சிங் எழுதும் கட்டுரைகளுக்காக மட்டுமே. அப்படி எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் பகவான் சிங், ஆதர்ச நாயகனாகத் திகழ்ந்தார். அவரால்தான் நான் பத்திரிகைத் துறைக்கே வந்தேன்” என்றார். அந்த அளவுக்கு, பல பத்திரிகையாளர்களால் கதாநாயகனாக கருதப்பட்டவர்தான் இந்த பகவான் சிங்.
இலங்கைக்கு கள்ளத்தோணியில் சென்று, உண்மை நிலையை கள ஆய்வு செய்து வந்து எழுதியவர் என்பதால் இப்படிப்பட்ட ஒரு ஆதர்சம் பகவான் சிங் மீது தோன்றியிருக்கிறது. இப்படி பலருக்கு ஆதர்சமாக இருந்தவர், பின்னாளில் ஒரு மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் அதிபராக மாறிப்போனது காலத்தின் கோலமே. தனக்குக் கீழ் பணியாற்றும் நிருபர்களில் தனக்கு ஜால்ரா போடாதவர்களை அவமானப்படுத்தி வெளியேற்றுவதில், பகவான் சிங் கைதேர்ந்தவர் என்பது இவர் வைக்கப்படும் பரவலான குற்றச்சாட்டு.
டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழ் குழுமம், கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தபோது, அதிலிருந்து மீள்வதற்காக, டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழை ‘நமது எம்.ஜி.ஆர்.’ நாளிதழின் ஆங்கில வடிவமாக மாற்றியதில், பகவான் சிங்குக்கு பெரும் பங்கு உண்டு. ஒரே ஒரு செய்திக் கட்டுரையின் இணைப்பைத் தருகிறேன். ‘நமது எம்.ஜி.ஆர்-.ன் ஆங்கில வடிவம்தான் டெக்கான் கிரானிக்கிள் என்பதில் எவ்வித மிகைப்படுத்தலும் இல்லை என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். இணைப்பு
தனக்கு ஜால்ரா அடிக்காத நிருபர்களை எப்படி இழிவுபடுத்தி வெளியே அனுப்புவாரோ, அதே போல, தனக்கு ஜால்ரா அடிக்கும் நிருபர்களை கைதூக்கி ஏற்றிவிடுவதிலும் பகவான் சிங் கில்லாடி. தலைமைச் செயலகத்தில் டெக்கான் க்ரானிக்கிள் நிருபராக உள்ள திருநாவுக்கரசு என்பவருக்கு, ஆங்கில நாளிதழில் வேலை பார்க்கும் அளவுக்கான ஆங்கில அறிவு குறைவு. ஆனால், இவர் தீவிரமான பகவான் சிங் விசுவாசி. இவரைப் பயன்படுத்தி, தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள், அமைச்சர்கள் என்று அனைவரிடமும் தன் சொந்த வேலைகளை முடித்துக் கொள்வார் பகவான் சிங்.
எந்த ஊடக நிறுவனமும், தனது ஆசிரியரை, மற்றொரு ஊடக நிறுவனத்தின் ஆசிரியர் குழுமத்தில் பணியாற்ற அனுமதிக்காது. ஆனால், டெக்கான் க்ரானிக்கிள் நாளேட்டின் நிர்வாகம் பகவான் சிங்கை நியூஸ் 7 ஆசிரியர் குழுமத்தில் பணியாற்ற அனுமதித்துள்ளது ஏன் என்பது புரியவில்லை.
இது குறித்து பகவான் சிங்கிடம் நாம் பேசியபோது, “என் உயிரைப் பணயம் வைத்து இலங்கை சென்று தமிழர்களின் வாழ்வு குறித்து கட்டுரை எழுதியவன் நான். ஊடகத்துறைக்காக என் வாழ்நாள் முழுவதும் உழைத்திருக்கிறேன். பெரும்பாலான ஊடக நிறுவனங்கள், வணிகமயமாகிவிட்ட நிலையில், செய்திகளை நடுநிலையோடு வெளியிட கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
‘நியூஸ் 7’ செய்திச் சேனலை இளம் பத்திரிக்கையாளர்களுக்கான வாய்ப்பாகவே நான் பார்க்கிறேன். எனக்கு பல லட்சம் ஊதியமாக தரப்படுகிறது என்பது உண்மையல்ல. ஆசிரியர் குழுவின் கூட்டங்களுக்கு தரப்படும் “சிட்டிங் ஃபீஸ்” மட்டுமே தரப்படுகிறது.” என்று பகவான் சிங் கூறினார். அவர் ஜெயலலிதாவின் ஆதரவாளர் என்ற கருத்தை வலுவாக மறுத்தார்.
ஆனால் பகவான் சிங் குறித்த கருத்துக்களுக்கு மாறாகத்தான் இருக்கிறது அவர் லண்டனில் ஆற்றிய உரை.
Mr. Bhagwan Singh, Consultant Editor with the Deccan Chronicle, warned against journalists succumbing to particularist interests of their publishers or owners of their institutions. There are many who succumb to the easy life of peddling untruth, often inspired by selfish interests to yield short-term gains through dishonest means, he said.
He spoke of the risks he took whilst reporting on the Tamil liberation struggle, including taking the perilous boat journey between Rameshwaram and Jaffna in the 1980s. Saying this was essential in reporting the truth from warzones, he contrasted this approach he and some of his colleagues took with those of other foreign journalists who reported instead from Colombo, using hand-out photographs and accounts gathered by local, state approved stringers.
Mr. Singh said that the Indian media is not doing enough to focus public attention on the human tragedy continuing for decades and across generations in Sri Lanka. “They seem stuck covering the ridiculous antics of local politicians, the glamorous nothings of the movie stars and such other trivia unrelated to society’s enlightenment and betterment of the people.”
“And if you look carefully between the lines in those political resolutions, you will find the fine print of personal agendas of the various political parties and their leaders piloting them,” he said.
இப்படிப் பேசிய பகவான் சிங், ஈழத்தின் இறுதிக் கட்ட போரின்போது, இலங்கைத் துணைத் தூதரகத்தோடு மிகுந்த நெருக்கம் பாராட்டினார் என்பது மற்றொரு வேதனையான உண்மை.
இன்று பகவான் சிங்குக்கு, கொட்டிவாக்கம் பத்திரிக்கையாளர் குடியிருப்பில், இரண்டு க்ரவுண்டில் ஒரு தனி வீடு, நீலாங்கரை கஸூரா தோட்டத்தில் ஒரு தனி வீடு, சோழிங்கநல்லூரை அடுத்த படூரில் ஒரு பண்ணை வீடு. இது தவிர, திண்டிவனம் அருகே, 2010ம் ஆண்டில் 100 ஏக்கரை வளைத்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல். இந்த நிலத்தை வளைத்ததில் இவரோடு பங்குதாரராக இருந்தவர் டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தியாளர் ஜெயராஜ் சிவன். இவர்களுக்கு உதவி செய்த அதிகாரிகள், ஜாங்கிட் ஐ.பி.எஸ்., மற்றும் அலாவுதீன் ஐ.ஏ.எஸ்., என்றும் கூறப்படுகிறது.
‘நியூஸ் 7’ ஆசிரியர் குழுவின் தலைவராக இருப்பவர் ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.வெங்கட்ராமன். இவர் நீண்டகாலமாக கனிம வளங்கள் தொடர்பான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் கவனித்து வந்தவர். இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம், ‘ஒரு நீதிபதிக்கு செய்தி நிறுவனத்தை நடத்தும் அளவுக்கு செய்தி தொடர்பான அறிவு உள்ளதா?’ என்ற கேள்வி தான் அது. ஆனால், அது அதிகப்பிரசங்கித்தனமான கேள்வி வாசகர்களே. நீதியரசர் அறியாத விவகாரங்கள் ஏதேனும் உண்டா ?
2007-ம் ஆண்டு, திமுக அரசு, வைகுண்டராஜன் மீது அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பயன்படும் தோரியத்தை கடத்துவதாக வழக்குப் பதிவு செய்தது. வைகுண்டராஜனின் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டு, தோரியம் கடத்துவதற்கான ஆதாரங்களை பறிமுதல் செய்தனர் காவல்துறையினர். அந்த சோதனையை நடத்தியது, பின்னாளில், தமிழக காவல்துறையின் மிக மோசமான ஊழல் அதிகாரியாக உருவெடுத்த காவல்துறை அதிகாரி ஸ்ரீதர் ஐ.பி.எஸ். அதையடுத்து, வைகுண்டராஜன், அவர் சகோதரர்கள் ஜெகதீசன், மற்றும் சுந்தரேசன் ஆகியோர் மீது, அணு சக்தி சட்டத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் மூவருக்கும் முன்ஜாமீன் வழங்கியவர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜசூர்யா. அதே நேரத்தில், தோரியத்தை கடத்திய வைகுண்டராஜனோ, தான் கடத்திய மணலில் தோரியம் இருப்பதே தனக்குத் தெரியாது என்று உயர்நீதிமன்றத்தில் வாதாடினார்.
அதன் இணைப்பு
இந்தச் சோதனைகளை அடுத்து பத்திரிகையாளர்களிடம் பேசிய வைகுண்டராஜன், 23 ஆகஸ்ட் 2007 அன்று, “நான் திமுகவுக்கு எதிரி அல்ல” என்று பேட்டியளித்தார். இதற்குப் பிறகு, வைகுண்டராஜன் சகோதரர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் என்ன ஆனது என்பதே மர்மமானது. யாருக்கும் தெரியாது. பணம் கிடைக்கும் இடத்தில் பணிந்து செல்வது கருணாநிதிக்கு புதிதா என்ன? ஆட்சியதிகாரம் கையில் இருந்தபோதே, கருணாநிதி வைகுண்டராஜனை ஒழித்துக் கட்டியிருந்தால், இன்று இப்படிப்பட்ட பெரும் முதலையாக வைகுண்டராஜன் வளர்ந்திருப்பாரா? என்பதை, கருணாநிதி தன்னைத்தானே கேட்டுக்கொள்ள வேண்டும். அன்று அவருக்கு இடைத்தரகராக செயல்பட்ட உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட், சொல்லியதைக் கேட்டுக் கொண்டு, வைகுண்டராஜனை கருணாநிதி காப்பாற்றியதன் விளைவை என்றும் விரைவில் அனுபவிக்கத்தான் போகிறார்.
வைகுண்டராஜனின் தந்திரம் என்னவென்றால், ஒரு இடத்தில் தாது மணல் அள்ள அனுமதி பெற்றுக் கொண்டு, அந்த ஊரையே வளைத்து தாதுமணல் அள்ளுவதுதான். 2002-ம் ஆண்டில், தாது மணல் அள்ள, டாடா நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்தது ஜெயா அரசு. ஆண்டுக்கு 2 லட்சம் டன் இல்மனைட் தாதுவைப் பிரித்து 50 ஆயிரம் டன் தாதுவை டைட்டானியம் டை ஆக்சைடு தயாரிக்கப் பயன்படுத்திவிட்டு, மீதி 1.5 லட்சம் டன் தாதுவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய டாடா தீர்மானித்தது. ஆனால், டாடா ஆலை தமிழகம் வந்தால், தன்னுடைய நலன்கள் பாதிக்கப்படும் என்பதை நன்கு உணர்ந்த வைகுண்டராஜன், அந்த திட்டத்தை நிறைவேறவிடாமல் தடுத்தார். மீண்டும் திமுக ஆட்சி வந்ததும், ஏற்கனவே 2ஜி உள்ளிட்ட விவகாரங்களில் டாடா நிறுவனத்தோடு இருந்த நெருக்கம் காரணமாக, 10,500 ஏக்கர் நிலத்தை அரசே கையப்படுத்தி, டாடா நிறவனம் டைட்டானியம் ஆலை அமைக்க வழங்குவது என்று கருணாநிதி அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது. தி.மு.க. அரசில் தனக்கு அ.தி.மு.க.வோடு இருந்த அளவிற்கு நெருக்கம் இல்லை என்பதை உணர்ந்த வைகுண்டராஜன், ஆலை அமையப்போகும் பகுதி மக்களை போராட்டத்தில் இறக்கிவிட்டார். மக்களுக்கு இந்த உண்மை புரியாமல் அவர்கள், தங்கள் நலன் சார்ந்த விஷயங்களை முன் வைத்து தீவிரமாகப் போராட்டத்தை கொண்டு சென்றனர். வேறு வழியின்றி, டாட்டாவின் டைட்டானியம் ஆலைத் திட்டத்தை கைவிட்டார் கருணாநிதி. டாட்டா அளிக்க இருந்த அந்த பெருந்தொகையை, வைகுண்டராஜனே அளிக்கையில், கருணாநிதிக்கு என்ன கசக்கவா போகிறது? அந்த வகையில், இந்தியாவின் பலம் பொருந்திய ஒரு தொழில் நிறுவனத்தையே, தமிழகத்தில் கால் பதிக்கவிடாமல் விரட்டி அடித்தவர்தான் வைகுண்டராஜன். இத்தனை பலம் வாய்ந்த, தமிழகத்தின் இரண்டு பிரதான எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. இரண்டையுமே, தன் பாக்கெட்டில் வைத்திருக்கும் வைகுண்டராஜனுக்கு சனி நெல்லை மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் வடிவில் வந்தது.
2013 ஆகஸ்ட்-7 அன்று அதிகாலை முதல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் தலைமையில் வருவாய்த்துறை அதிகாரிகள், வைகுண்டராஜனின் வி.வி. மினரல்ஸ் மற்றும் பீச் மினரல்ஸ் ஆகிய நிறுவனங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனைகளை வைகுண்டராஜன் மட்டுமல்ல… ஜெயலலிதாவும் கூட எதிர்பார்க்கவில்லை. அதன் விளைவு அன்று இரவே ஆஷிஷ் குமார் தூத்துக்குடியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டார்.
ஆஷிஷ் குமார் மாற்றப்பட்ட ஒரு சில தினங்களில், தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர், மாற்றப்பட்ட மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமாரை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் காரணம் என்னவென்றால், தன் மகனின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ஆஷிஷ் குமார், விலை உயர்ந்த பரிசுப் பொருட்களை வாங்கி, அதன் மூலமாக ஊழலில் ஈடுபட்டாராம். இந்த ஆர்ப்பாட்டத்தில் இவர்கள் வெளியிட்ட துண்டறிக்கையின் அடிப்படையில், ஆஷிஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்து, தற்போது சி.பி.எம். மாநிலக் குழுவில் இருக்கும் கனகராஜ் என்பவர், ஆஷிஷ் குமாரைப் போல, இந்தியாவில் ஊழல் அதிகாரிகளே கிடையாது என்று நீட்டி முழக்கி தீக்கதிரில் ஒரு கட்டுரை வேறு எழுதினார்.
இச்சம்பவங்கள் நடந்து மூன்று மாத காலம் கடந்த பின்னால், சி.பி.எம். சார்பில் வைகுண்டராஜனை எதிர்த்து, ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டம் முடிந்த பிறகு, வைகுண்டராஜன், சிபிஎம் நிர்வாகிகளை அழைத்தார். என்னிடம் 10 லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு, எனக்கு எதிராக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள் என்று கேட்டார். கேட்டதும் சிபிஎம் நிர்வாகிகள், நீங்கள் கொடுத்த 10 லட்சத்துக்கு ஆஷிஷ் குமாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டோம். கணக்கு சரியாகி விட்டது என்கின்றனர். அதற்கு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், தற்போது எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறீர்களே என்றார். அது மக்களுக்காக நடத்துகிறோம் என்றனர். உடனே வைகுண்டராஜன், இந்த கதையெல்லாம் வேற யாருக்கிட்டயாவது சொல்லுங்க. தயா தேவதாஸிடம் 25 லட்சம் பெற்றுக் கொண்டு எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துகிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். எந்த இடத்தில் பணம் வாங்கினீர்கள் என்பது கூட தெரியும் என்று கூறி விட்டு, அவர் கொடுத்த 10 லட்சம் பணத்தை திருப்பி வாங்கி விட்டுத்தான் சிபிஎம் நிர்வாகிகளை விட்டார் என்றால் எப்படிப்பட்ட விடாக்கண்டன் இந்த நபர் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இதே போல பத்திரிக்கையாளர்களை வளைப்பதிலும், வைகுண்டராஜன் கில்லாடி. தன்னைப்பற்றி எந்த செய்தியும் தவறாக வராமல் பார்த்துக் கொள்வார். இதையும் மீறி வந்து விட்டால், அதை எப்படி சமாளிப்பது என்பதும் வைகுண்டராஜனுக்கு நன்கு தெரியும்.
தமிழ் இந்து நாளேட்டில், வணக்கம் வைகுண்டராஜன் என்ற தலைப்பில் நண்பர் சமஸ் வைகுண்டராஜனுக்கு எதிராக ஒரு கட்டுரை எழுதியிருந்தார்.
இதையடுத்து, தமிழ் இந்து நாளேட்டின் ஆசிரியர் அசோகனுக்கு வைகுண்டராஜனிடமிருந்து அழைப்பு. அசோகனும் வாலைக் குழைத்துக் கொண்டு வைகுண்டராஜனை சென்று சந்திக்கிறார். வைகுண்டராஜன் தனது வீர தீர பராக்கிரமங்களை நளினமாக அசோகனுக்கு தெரிவிக்கிறார். அந்த உரையாடல் வேண்டுமானால் நளினமாக இருந்திருக்கலாம். ஆனால், உண்மையில் அது அசோகனுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த பத்திரிகை உலகத்திற்கும் விடப்பட்ட பகிரங்க மிரட்டல். அந்த உரையாடலின் தொடர்ச்சியாக, தன் இடுப்பில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்து மேசை மீது வைத்து, அந்த துப்பாக்கி அவரிடம் வந்த வரலாற்றை சிரித்துக் கொண்டே அசோகனிடம் விவரிக்கிறார்.
வெகுண்டெழுந்திருக்க வேண்டிய அசோகனோ, இரண்டு நாட்களுக்குள்ளாகவே, கால் பக்கத்துக்கு வைகுண்டராஜன் சார்பில் ஒரு பெரிய மறுப்பு செய்தியை வெளியிடுகிறார். மறுப்பு
அதன் பிறகு, இன்று வரை, தமிழ் இந்து நாளேட்டில் வைகுண்டராஜனுக்கு எதிரான எந்த செய்தியும் வெளிவரவில்லை. நண்பர் சமஸ் கடற்கரையோரங்களில், சுடுமணலில் அலைந்து திரிந்து எழுதிய ‘நீர் நிலம் வானம்’ தொடரின் பின்னால் நடந்த அரசியல் நண்பர் சமஸ்க்கு தெரியுமோ தெரியாதோ?
மதுரை மாவட்டம், காரியாப்பட்டி கிராமத்திலிருந்து ஒரு இளைஞன் 1992-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்வில் தேர்ச்சி பெறுகிறான். மேற்கு வங்க மாநிலத்தில் அவனுக்கு பணி ஒதுக்கப்படுகிறது. அந்த இளைஞனின் பெயர் சுப்பையா. என்னதான் மேற்கு வங்கத்தில் பணியாற்றினாலும், தாய் மண்ணாம் தமிழகத்தில் பணியாற்றுவது போல வருமா ? அதனால் மத்திய அரசின் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சகத்தில் அயல்பணிக்கு செல்கிறார் சுப்பையா. தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தின் தலைவராக நியமிக்கப்படுகிறார். தூத்துக்குடி துறைமுகம் அண்ணாச்சியின் துறைமுகம் அல்லவா? அதனால், தூத்துக்குடி துறைமுகத் தலைவராக சுப்பையா பொறுப்பேற்ற உடனேயே அவர் அண்ணாச்சியின் கவனிப்பின் கீழ் வந்துவிடுகிறார். சாமர்த்தியமாக லஞ்சம் வாங்குவது ஒரு கலை. அது பலருக்கும் கைவரப் பெறுவதில்லை. ஆனால், பலருக்கும் கைவராத ஒரு கலையை நாம் கற்றுத் தேறுவோம் என்று சுப்பையா களத்தில் இறங்குகிறார். சுப்பையாவின் அண்ணன் பெயர் ஜெயராமன். இவர் சின்டிகேட் வங்கியில் பணியாற்றி வருகிறார். ஜெயராமனின் மனைவி பெயர் கங்கா. சுப்பையாவின் மனைவி பெயர் ராதிகா. சுப்பையா மற்றும் ஜெயராமன் சகோதரர்களின் தாயார் பெயர் ஜானகி. நேரடியாக நாம் லஞ்சம் வாங்கினால்தானே மாட்டிக் கொள்வோம். நூதனமாக அண்ணன் பெயரிலும், அம்மா பெயரிலும் வங்கிக் கணக்கு திறந்து, அதில் லஞ்சப் பணத்தை வரவு வைத்தால் எப்படி கண்டு பிடிப்பார்கள்….. என்று ஐ.சி.ஐ.சி.ஐ. காஞ்சிபுரம் கிளையில், 60660150881 என்ற வங்கிக் கணக்கை திறக்கிறார் சுப்பையா.
சுப்பையாவின் தாயார் ஜானகியின் பெயரில் மதுரை, காரியாப்பட்டியில், ஒரு நிலம் இருக்கிறது. இந்த நிலத்தை நம்ம அண்ணாச்சி வைகுண்டராஜனுக்கும், அவர் அண்ணன் ஜெகதீசனுக்கும் விற்பது என்று, 25.11.2008 அன்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. காரியாப்பட்டி ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாத வானம் பார்த்த பூமி. கரட்டுக்காடு. அந்தக் கரட்டுக்கு அண்ணாச்சியும் அவர் சகோதரரும் கொடுத்த விலை 7.5 கோடி.
அண்ணாச்சியின் அண்ணன் ஜெகதீசனின் தூத்துக்குடி கிளை ஃபெடரல் வங்கி கணக்கு 11910100058848 ல் இருந்து, 3.75 கோடியும், வைகுண்டராஜன் அண்ணாச்சியின் அதே வங்கிக் கிளை 11910100062162 ல் இருந்து 3.75 கோடியும் சுப்பையாவின் உறவினர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த விபரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் தோண்டி எடுத்துள்ளனர்.
கடந்த 2014 அக்டோபர் 17-ம் தேதி அன்று, சுப்பையாவின் சகோதரரான வங்கி அதிகாரி ஜெயராமனை சி.பி.ஐ. காவல் கண்காணிப்பாளர் பத்மகுமார் என்பவர் கைது செய்தார்.
எத்தனையோ வழக்குகளில் தப்பித்த வைகுண்டராஜன் இந்த வழக்கிலிருந்து தப்பிப்பது அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால், இந்த வழக்கில் அண்ணாச்சியும் அவர் சகோதரரும் அக்கவுண்ட்ஸ்க்குள் சிக்கி இருக்கிறார்களே. இப்படி சுப்பையா போன்ற எத்தனையோ அதிகாரிகளுக்கு மாதம் ஊதியம் கொடுப்பதுபோல், லஞ்சம் கொடுத்து, ஒரு தனி அரசாங்கத்தையே நடத்தி வருகிறார் வைகுண்டராஜன்.
இப்படி நடத்தப்படும் அண்ணாச்சியின் அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சார வாகனம் வேண்டாமா?
அதுதான் ‘நியூஸ்-7’
Vaikudarajan’ s Garnet mining was exposed first in The Hindu in 1996 for which that reporter was threatened. Others followed.