தங்களின் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும் கடவுள் நம்மை விடுவிப்பார், காப்பாற்றுவார் என்றே கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் நம்புகின்றனர். கடவுளின் மீது முழு நம்பிக்கையை வைக்கின்றனர். கடவுள் நம்மை உய்விப்பார் என்று பிடிவாதமாக நம்பிக்கை கொள்கிறார்கள். அந்த நம்பிக்கை பொய்த்து, அந்தக் கடவுள் மரிக்கையில்!!!
தமிழக காவல்துறையின் வரலாற்றில், ஸ்ரீபாலைப் போல நேர்மையான அதிகாரி இருந்ததும் கிடையாது, அவரைப் போல மோசமான அதிகாரியாக யாரும் செயல்பட்டதும் கிடையாது. அப்படியொரு சிறப்பும் இழிவும் அவருக்கு. ஸ்ரீபாலின் அறிவும் திறமையும் அசாத்தியமானது. அவர் சென்னை மாநகர காவல்துறை ஆணையாளராக இருந்தபோது, நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால், கண்ணை மூடிக்கொண்டு, போக்குவரத்தை, இந்த தெருவிலிருந்து மாற்றி, அந்தத் தெருவுக்குள் அனுப்புங்கள். அந்தத் தெரு இந்த இடத்தில் இணையும் என்று மைக்கில் அறிவுரை வழங்குவார். அப்படியொரு விசாலமான அறிவு. அவர் சென்னை மாநகர ஆணையாளராக இருந்தபோது, சென்னை திருவல்லிக்கேணியில் ஒரு கோவில் யானைக்கு மதம் பிடித்து விட்டது. யாருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. உடனடியாக அடித்துப் பிடித்துக் கொண்டு, ஸ்ரீபாலிடம் தகவல் தெரிவித்ததும், ஸ்ரீபால் சற்றும் அலட்டிக் கொள்ளாமல் அறிவுரை வழங்கினார்.
அண்ணா சமாதி வாயிலில், ஒருவன் கரும்பு ஜுஸ் விற்றுக் கொண்டிருப்பான். அவனிடம் உள்ள கரும்பை வாங்கி அந்த யானை முன்னால் போடுங்கள். கரும்பைப் பார்த்ததும் யானை சிறிது சாந்தமடையும். அதற்குள் நான் கால்நடை மருத்துவர் குழுவை அனுப்பி வைக்கிறேன் என்று உத்தரவிடுகிறார். அண்ணா சமாதி நுழைவாயிலில் சென்று பார்த்தால், அந்த கரும்பு ஜுஸ் விற்பவரை காணவில்லை. என்னவென்று விசாரித்தால், போக்குவரத்து காவல்துறையினர் மாமூல் கேட்டு அந்த நபரை விரட்டி விட்டுள்ளனர்.
இந்தத்தகவல் ஸ்ரீபாலிடம் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீபால் உடனே, அந்த நபர் எங்கும் சென்று விட மாட்டார். காவல்துறையினர் விரட்டினால், இது போன்றவர்கள் எதிரே உள்ள சந்துகளில் ஒளிந்து கொண்டிருப்பார்கள். சென்று பாருங்கள் என்று கூறுகிறார். அவர் சொன்னது போலவே அந்த நபர் கடற்கரைக்கு எதிரே உள்ள ஒரு சந்தில் ஒளிந்து கொண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். காவல்துறையினர் சென்றதும், அவர் பயந்துகொண்டு ஓடுகிறார். அவர்கள் விரட்டிப் பிடித்து, பயப்படாதே கரும்பைக் கொடு என்று யானை முன்னால் கரும்பைப் போட்டதும், யானை சிறிது சாந்தமடைகிறது. சிறிது நேரத்தில் கால்நடை மருத்துவர்கள் குழு வந்து, மயக்க ஊசி போட்டு, அந்த யானையை கட்டுப்படுத்தினர்.
இப்படிப்பட்ட திறமையான அதிகாரிதான் ஸ்ரீபால். ஆனால், அவரின் பணிக்காலத்தின் இறுதி நாட்களில் இவரைப் போன்ற ஊழல் அதிகாரியே கிடையாது என்ற அளவுக்கு, மோசமான ஊழல் அதிகாரியாக மாறிப்போனார்.
ஸ்ரீபால் காலத்திலெல்லாம் காவல்துறை இந்த அளவுக்கு சீரழிந்தது கிடையாது. பத்து அதிகாரிகளில், ஐந்து அதிகாரிகள் நல்ல அதிகாரி என்று உறுதியாக சொல்லலாம். இன்று போல, ஜல்லடை போட்டுத் தேட வேண்டியதில்லை. 1991 முதல் 1996 வரை லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர்களாக இருந்த சி.எல்.ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.கே.ராகவன் போன்றோர், தங்களைப் பார்க்க வரும் நண்பர்களுக்கு வாங்கித் தரும் காப்பி டீ செலவுகளைக் கூட, தங்கள் சொந்த பணத்திலிருந்து தரும் அளவுக்கு நேர்மையாக இருந்தனர். இது நாளடைவில் சீரழிந்து, நம்பிக்கை இழக்கும் அளவுக்கு மோசமான நிலையை எட்டினாலும், ராமானுஜம் போன்ற அதிகாரிகளின் இருப்பு நம்பிக்கையூட்டிக் கொண்டு இருந்தது.
ராமானுஜம் ஒரு பிறவி உளவுத்துறை அதிகாரி. ஒரு உளவுத்துறை அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ராமானுஜம் ஒரு நல்ல உதாரணம். உளவுத்துறைக்கு என்று, இந்தியா முழுக்க கோடிக்கணக்கில் காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நிதியை எந்த தணிக்கையாளரும் தணிக்கை செய்ய முடியாது. எந்த மக்கள் பிரதிநிதியும் கேள்வி கேட்க முடியாது. என்ன செலவு செய்யப்படுகிறது என்ற விபரங்கள் வெளியே தெரிந்தால், ரகசியம் வெளியே போய் விடும் என்பதற்கான ஏற்பாடே இது. ஆனால் ஊழல் அதிகாரிகள், இந்தப் பணத்தை எப்படியெல்லாம் கையாடல் செய்ய முடியுமோ, அப்படியெல்லாம் கையாடல் செய்வார்கள்.
ஆனால் ராமானுஜம் இதிலிருந்து மாறுபட்டவர். தனக்குக் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் நல்ல தகவல்களை எடுத்து வந்தால், ரகசிய நிதியை அள்ளி அள்ளி தருவார். எத்தனை பணம் வேண்டுமோ அதை வாங்கிக்கொள்ளுங்கள். எனக்கு முதல் தரமான, நல்ல தகவல்கள் வேண்டும் என்பார். இந்த ரகசிய நிதியிலிருந்து ஒரே ஒரு ரூபாயைக் கூட இவர் தனக்காக செலவு செய்தார் என்று ஒருவரும் குற்றம் சாட்ட முடியாது. அப்படிப்பட்ட நேர்மையான மனிதர் ராமானுஜம்.
ஆனால், தங்கள் பணிக்காலத்தின் தொடக்க காலத்தை நேர்மையாக தொடங்கி, இறுதி நாட்கள் வரை, நேர்மையாக இருப்பவர்கள் மிகவும் அரிதானவர்கள். ராமானுஜம் தனது பணிக்காலத்தில் செய்த மிகப்பெரிய தவறு, 2006ம் ஆண்டு தேர்தலில் வைகோவை அதிமுக கூட்டணிக்கு அழைத்து வந்தது. 2006 தேர்தல் கூட்டணிகள் அமைந்து கொண்டிருந்த சமயத்தில், வைகோ நிச்சயமாக திமுக கூட்டணியில்தான் இருப்பார் என்று அனைவரும் நினைத்தனர். ஏனென்றால், ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகத்தான், புலிகளை ஆதரித்து பேசிய காரணத்துக்காக, வைகோ 19 மாதங்கள் சிறையில் இருந்தார்.
இந்த ஒரே காரணத்துக்காக வைகோ, திமுக அணியில்தான் இணைவார் என்று அனைவரும் நம்பினார்கள். வைகோவும் அப்படித்தான் பேசிக் கொண்டிருந்தார். கூட்டணி இறுதி செய்யப்படுவதற்கு ஒன்றிரண்டு நாட்கள் முன்பாகக் கூட, “என் தாயை சந்தித்தேன். திமுக அணியிலேயே இரு என்று கூறினார்” என்று விகடனுக்கு பேட்டியளித்தார். ஆனால், இறுதி நேரத்தில் ஜெயலலிதாவோடு கூட்டணி சேர்ந்தார்.
அப்போது வைகோ மனம் மாறியதற்கு, ஒரே காரணம் ராமானுஜமே. அப்போது ஐஜியாக இருந்த ராமானுஜத்தை, டிஜிபியாக இருந்த அலெக்சாண்டர் நேரில் அனுப்பி வைகோ மனதை மாற்றியதாக கூறுகின்றன உளவுத்துறை வட்டாரங்கள். ராமானுஜம் பேசியதில் மனம் கனிந்த வைகோ, அன்புச் சகோதரியோடு கரம் கோர்த்தார். கணிசமான தொகையும் கை மாறியது.
ராமானுஜம் அன்று செய்த துரோகத்தை கருணாநிதி கடைசி வரை மறக்கவேயில்லை. 2006ல், முழுப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சியைப் பிடித்த கருணாநிதிக்கு, வைகோ திமுக கூட்டணியில் இருந்திருந்தால் குறைந்தது 26 இடங்களில் திமுக கூடுதலாக வெற்றி பெற்றிருக்கும் என்பதும், மைனாரிட்டி திமுக அரசு என்ற அவப்பெயர் இருந்திருக்காது என்பதும் அவருக்கு நன்று தெரியும்.
மிக மிக திறமையான அதிகாரியாக இருந்தும், தன்னுடைய 2006ம் ஆண்டு ஆட்சிக்காலத்தில், ராமானுஜத்தை உளவுப்பிரிவு அருகே கூட கருணாநிதி நியமிக்காததன் காரணம் அதுதான்.
கருணாநிதிக்கு பிடிக்காத அதிகாரி இயல்பாக ஜெயலலிதாவுக்கு பிடித்துத்தானே ஆக வேண்டும் ? அப்படி பிடித்துப் போனதும்தான், இந்தியாவில் எங்குமே இல்லாத வகையில், உளவுப்பிரிவுக்கும் சட்டம் ஒழுங்குக்கும் சேர்த்து, ராமானுஜத்தை நியமித்தார் ஜெயலலிதா. சட்டம் ஒழுங்கு பிரிவில் நடக்கும் தவறுகளையும், அது டிஜிபியாகவே இருந்தாலும், அறிக்கை அனுப்ப வேண்டியதே உளவுப்பிரிவின் வேலை. ஒரே நபர் இரண்டு பிரிவுகளுக்கும் தலைவராக இருந்தால், அது எப்படி சரியாக இருக்கும் ? ஆனால், தமிழகத்தில் வேறு ஐபிஎஸ் அதிகாரிகளே இல்லாதது போல, ராமானுஜத்தை இரண்டு பிரிவுகளுக்கும் தலைவராக நியமித்தார் ஜெயலலிதா.
அதாவது ராமானுஜம் உளவுப்பிரிவின் தலைவராம். கூடுதலாக சட்டம் ஒழுங்கு பிரிவை கவனிப்பாராம். இந்த ஏற்பாடு, ராமானுஜம் ஓய்வு பெற வேண்டிய நவம்பர் 2012 மாதம் வரை நீடித்தது. நவம்பர் மாதத்தில் ராமானுஜத்தை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமித்தார் ஜெயலலிதா. அது வரை டிஜிபியாக ஒருவரையும் நியமிக்காமல் இருந்ததன் காரணம், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, ராமானுஜத்தை விட மூத்தவர்கள் வேறு யாரும் டிஜிபியாக நியமிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதற்காக மட்டுமே.
உச்சநீதிமன்றத்தின் பிரகாஷ் சிங் என்ற வழக்கில் வழங்கிய தீர்ப்பின்படி ஒரு மாநிலத்தின் டிஜிபியாக நியமிக்கப்படி சில விதிமுறைகளை வகுத்தது உச்சநீதிமன்றம். அதன்படி, ஒரு மாநிலத்தில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் ஐந்து பேர் கொண்ட பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு அந்த மாநில அரசு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பப்படும் பட்டியலில் இருந்து மூன்று பேர்களை யுபிஎஸ்சி தேர்ந்தெடுத்து அனுப்பும். அந்த மூவரிலிருந்து ஒருவரை, மாநில அரசு டிஜிபியாக நியமிக்கலாம். அவ்வாறு நியமிக்கப்படும் நபரின் வயது எத்தனையாக இருந்தாலும், அவர் குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு பணியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். நவம்பர் 2012 வரை, அந்த ஐந்து பேர் கொண்ட பட்டியலில் ராமானுஜத்தின் பெயரையே சேர்க்க முடியாத அளவுக்கு, அவரை விட பணியில் மூத்த அதிகாரிகள் இருந்தனர்.
நவம்பர் 2012 வாக்கில், மற்றவர்கள் ஓய்வு பெற்றதும், ராமானுஜம் ஓய்வு பெற வேண்டிய மாதத்தில் அவரை டிஜிபி ஆக்கியதன் மூலம், அவருக்கு மேலும் 2 ஆண்டுகள் பணி நீட்டிப்பு பெற்றுத் தந்தார் ஜெயலலிதா. அப்படி இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கியதால், அவருக்கு பின்னால் இருந்த மற்ற இரண்டு அதிகாரிகள் டிஜிபி ஆகும் வாய்ப்பே இல்லாமல் ஓய்வு பெற்றனர்.
இப்படி ஒரு தந்திரமான பணி நீட்டிப்பை ராமானுஜம் ஏற்றுக் கொண்டதை அவரோடு பணியாற்றிய பல அதிகாரிகள் வரவேற்கவில்லை. அவரின் ஆதரவாளர்கள் கூட ஒப்புக் கொண்ட விஷயம், அவர் இந்த பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது என்பதுவே. ராமானுஜத்தின் ஆதரவாளர்கள் பலர் கூறுவதென்னவென்றால், அவருக்கு இந்த பணி நீட்டிப்பில் விருப்பமேயில்லை. ஜெயலலிதா கட்டாயப்படுத்தியதாலேயே ஏற்றுக் கொண்டார் என்பதே. ஜெயலலிதா என்ன ராமானுஜத்தை பணி நீட்டிப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த அறையை விட்டு வெளியே போக முடியாது என்று மிரட்டினாரா? அல்லது கட்டிப்போட்டு மிரட்டினாரா? நேர்மையில் உறுதி கொண்ட ஒரு நபர் இந்த பணி நீட்டிப்பை வேண்டாமென்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும் ? ஆனால் ராமானுஜம் சொல்லவில்லை. பணி நீட்டிப்பை ஏற்றுக் கொண்டதோடு, பிடிக்காத அதிகாரிகளை பழிவாங்குவது உள்ளிட்ட மற்ற அதிகாரிகள் செய்யும் எல்லா அரசியலையும் செய்தார்.
ராமானுஜம் சட்டம் ஒழுங்கு டிஜிபியான சில நாட்களிலேயே, அஷோக் குமார், உளவுத்துறையின் டிஜிபி ஆக்கப்பட்டார். டிஜிபியை விட பெரிய பதவி வேறு எதுவும் கிடையாது. உளவுத்துறைக்கு அஷோக் குமார் டிஜிபியாக நியமிக்கப்பட்ட பின்னால், உளவு அறிக்கைகளை அவர்தான் முதல்வருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், சட்டம் ஒழுங்கு டிஜிபியான பின்னாலும் கூட, ராமானுஜமே தொடர்ந்து உளவு அறிக்கைகளை அனுப்பி வந்தார். சரி. குறைந்தது நவம்பர் 2014-ல் ராமானுஜத்தின் பதவிக்காலம் முடிந்த பிறகாவது அவருடைய தொல்லை ஒழியும் என்றே பல அதிகாரிகள் நம்பி வந்தனர்.
ஆனால், அஷோக் குமார் டிஜிபியாக நியமிக்கப்பட்ட கையோடு, வந்த அடுத்த உத்தரவு, ராமானுஜம் சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களில் அரசின் ஆலோசகராக இருப்பார் என்பதே. தமிழகத்தில் அரசு என்ற ஒரு அமைப்பு இருக்கிறதா என்ன ? ஜெயலலிதா தமிழக முதல்வர் என்ற உருவத்திலிருந்து கைதி எண் 7402 என்ற உருவத்துக்கு மாறிய சமயத்திலிருந்து தமிழகத்தில் ஏது அரசாங்கம் ? தமிழக தலைமைச் செயலகத்தில் அமர்ந்து கோப்புகளை கையாண்டு, மக்கள் பணியாற்ற வேண்டிய அமைச்சர்கள், தீவிர மலச்சிக்கலில் உள்ளவர்கள் போல முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு அம்மாவின் தண்டனை செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, மக்கள் முதல்வர் வழங்கிய 3 லட்ச ரூபாய் நிவாரண நிதியை நேரடியாக வழங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அரசாங்கத்துக்கு எதற்காக இத்தனை ஆலோசகர்கள். கிராமப்புரங்களில் “அறுக்கமாட்டாதவன் இடுப்புல அம்பத்தெட்டு அருவாள்” என்று ஒரு பழமொழி உண்டு. அந்த பழமொழி தமிழக அரசுக்கு சரியாகப் பொருந்தும்.
கிட்டத்தட்ட முதியோர் இல்லம் என்று வர்ணிக்கும் வகையில், தமிழக அரசு மாறிப்போய் உள்ளது. முதல்வரின் செயலாளர் வெங்கட்ரமணனுக்கு ஐந்தாண்டுகள் பணி நீட்டிப்பு. அவருக்கு அந்த ஐந்தாண்டுகள் எதற்காகவென்றால், அவர் ஜெயலலிதாவின் கணக்குப்பிள்ளை வேலையை செய்து வருகிறார் என்பதற்காகவே. எத்தனையோ அதிகாரிகள் இருக்கையில், வெங்கட்ரமணன் என்ற பெட்ரோமாக்ஸ் லைட்டுதான் வேண்டும் என்று ஜெயலலிதா விடிவாதம் பிடிப்பதற்கு காரணம் இல்லாமல் போய் விடுமா என்ன ? இதற்கு முன்பு இருந்த தலைமைச் செயலாளர் தேபேந்திரநாத் சாரங்கி பணி ஓய்வு பெற்றதும் அவரும் ஆலோசகர் என்ற பதவியில் நியமிக்கப்பட்டார். தேபேந்திரநாத் சாரங்கி, சில திருகல் வேலைகளில் ஈடுபட்டதும், அவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டார். அவரை அடுத்து தலைமைச் செயலாளரான ஷீலா பாலகிருஷ்ணன் ஓய்வு பெற்றதும், அவரும் ஆலோசகராக நியமிக்கப்பட்டு, இன்றுவரை, தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். தலைமைச் செயலகத்தில் உள்ள அத்தனை அதிகாரிகளையும், மிரட்டி தனது ஆளுகையின் கீழ் வைத்திருக்கிறார் பன்டிட் குயின் என்ற ஷீலா பாலகிருஷ்ணன்.
சட்டப்பேரவையின் செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீனுக்கு ஐந்தாண்டுகள் பணி நீட்டிப்பு. இப்படிப் பட்ட பணி நீட்டிப்புகள் எதற்காகவென்பது, லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியாக இருந்து ஓய்வு பெற்ற, ஏ.எம்.எஸ். குணசீலனுக்கு எதற்காக பணி நீட்டிப்பு என்று ஆராய்ந்தாலே புரிந்து விடும். குணசீலனுக்கு கடந்த மூன்றாண்டுகளாக ஒரே வேலை, ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை கவனிப்பது மட்டுமே. வழக்கு விசாரணையை தாமதப்படுத்துவதற்கு லஞ்ச ஒழிப்புத் துறை எப்படியெல்லாம் முனைந்தது என்பது, பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பணிகளை பணி நீட்டிப்பு பெற்ற அதிகாரிகள் செய்ய வேண்டுமென்பதற்காகத்தான், இத்தகைய பணி நீட்டிப்புகள் வழங்கப்படுகின்றன.
அரசு இயந்திரம் எப்படிப்பட்டது தெரியுமா ? அதுவும் பிரிட்டிஷார் உருவாக்கிய பாதையில் பயணிக்கும் நமது அரசு இயந்திரம் எப்படி இயங்குகிறது தெரியுமா ? சுனாமி வந்து அனைத்து கோப்புகளும் அழிந்து போனாலும், அந்த அலுவலகம் மறுநாள் முதல் இயங்கும். அத்தகைய சிஸ்டம் இது. இது தனி நபர்களை நம்பி இயங்கும் சிஸ்டம் அல்ல. எந்தத் தனி நபரையும் நம்பி இந்த சிஸ்டம் இயங்குவது அல்ல.
ஒரு மனிதன் தன்னுடைய முழுத் திறமையோடு 58 வயது வரை செயல்பட முடியும். அதற்குப் பிறகு, முழுத்திறமையோடு செயல்பட முடியாது என்பது மட்டுமல்ல. அவருக்கு ஓய்வு என்பதும் வேண்டும். மேலும் இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் வாய்ப்பு தர வேண்டும் என்பதற்காகவே ஓய்வு என்று ஒரு வயதை நிர்ணயித்துள்ளார்கள். மத்திய அரசுப் பணியாளர்கள் மற்றும் அகில இந்தியப் பணி அதிகாரிகளின் வயது 60ஆக நீட்டிக்கப்பட்டது. இதற்குப் பிறகு இத்தகைய அதிகாரிகள் பணியில் நீடிப்பது என்பது பொதுமக்களின் வரிப்பண விரயமே தவிர வேறு அல்ல.
ஓய்வு பெற்றவர்களுக்கு பணி வழங்க தமிழக அரசு முதியோர் இல்லம் அல்ல. அரசு இயந்திரம். அப்படியே தமிழக அரசு, ஷீலா பிரியா, ஷீலா பாலகிருஷ்ணன், அலாவுதீன், வெங்கட்ரமணன் போன்றோருக்கு வேலை வழங்க வேண்டும் என்று நினைத்தால், தற்போது ஜெயா டிவியில், தினந்தோறும் பேசுகிறார்களே… “புரட்சித் தலைவி அம்மா திரும்பவும் முதல்வரா வரணும். அம்மா ஆட்சிதான் பொற்கால ஆட்சி. அம்மா முதல்வரா இருக்கறதாலதான் மழை பெய்யுது” என்று பேசச் சொல்லி, அதற்கு தேவையான ஊதியத்தை வழங்குங்கள். மக்கள் வரிப்பணத்தை இவர்களுக்கு லட்சக்கணக்கில் அளித்து வீணாக்காதீர்கள்.
அன்பார்ந்த ராமானுஜம் அவர்களே…. உங்களின் வீழ்ச்சி, மிகுந்த மன வேதனை அளிக்கிறது. உங்களைப் பற்றிய பெருமையான செய்திகளை கேள்விப் பட்டிருக்கிறேன். ஒன்றல்ல இரண்டல்ல பல செய்திகள். உங்களின் திறமைகள், என்னை வியக்க வைத்திருக்கின்றன. ஆனால், இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டதன் மூலம், தமிழகத்தின் மிக மிக மோசமான ஊழல் அதிகாரிகளின் பட்டியலில் நீங்களும் இடம் பிடித்து விட்டீர்கள். உங்களின் வீழ்ச்சி ‘மரணித்த கடவுளை’ன் நினைவு படுத்துகிறது. நீங்கள் ஓய்வு பெற்ற பிறகு, சவுக்கு தளத்தில், ராமானுஜத்தைப் போன்ற காவல்துறை அதிகாரியை தமிழகம் பார்த்தது கிடையாது என்று சிறப்பான ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று திட்டமிட்டு, அதற்காக பல்வேறு அதிகாரிகளோடு தொடர்பில் இருக்க நேர்ந்தது.
ஆனால், நீங்கள் ஆலோசகர் பதவியை ஏற்றுக் கொண்டபின், வேறு வழியே இன்றி, இந்தக் கட்டுரை வெளியிடப்படுகிறது. நீங்கள் எந்த சூழலில் இந்தப் பதவியை ஏற்றுக் கொண்டீர்கள் என்பது தெரியும். ஜெயலலிதா உங்களை எப்படி வற்புறுத்தினார் என்பதும் தெரியும். ஜெயலலிதா, ஒரு பெண், அரசியல் கட்சித் தலைவர், என்பதையெல்லாம் தாண்டி, அவர் ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்பதை மறந்து விடாதீர்கள் ராமானுஜம் அவர்களே.
ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார்.
தமக்குரிய கடமைகளைக் கண்ணியத்துடன் ஆற்றுகின்ற சான்றோர் எல்லாக் கடல்களும் தடம் புரண்டு மாறுகின்ற ஊழிக்காலம் ஏற்பட்டாலும்கூடத், தம்நிலை மாறாத கடலாகத் திகழ்வார்கள்.
நீங்கள் இந்த குறளாக வாழ்வீர்கள் என்று நம்பினோம். ஆனால் என்ன செய்வது…. ? கடவுள் மரணித்து விட்டதே !!!
aama da Shankar nee 1than world la eh uthaman unaku thaan ellaam therium … unnoda vaazhkaila nee poi peshula unmaya naattuku iruntha nu sollitu appram aduthavangala kora solli eluthu