நீதிமன்றத்திலே சாட்சிகளை விசாரிக்கும் முன்பு, “சத்தியமாச் சொல்றேன்னு சொல்லுங்க“ என்று கூறுவார்கள். இது என்னவென்றால், சத்தியமாக உண்மையை அவர் சொல்வார்கள். இது போல சத்தியமாக கருணாநிதியால் சொல்லப் பட்ட உண்மைகள் சிலவற்றைப் பார்ப்போமா ?
1969 “முதலமைச்சர் முதலமைச்சர் என்று என்னைப் பற்றி கூறி பலர் வாழ்த்தினார்கள். ஆனால் நானோ, “முதல்“ இழந்த அமைச்சனாக என்னை உருவாக்கி விட்ட முதலினை இழந்த அமைச்சனாக உங்கள் முன் நிற்கிறேன்.
முதலமைச்சராக இருக்கிறோம் என்ற நினைப்பே எனக்கில்லை. நாலரைக் கோடித் தமிழ் மக்களும் காலால் இடும் கட்டளையைத் தலையால் ஏற்று முடிக்க காத்திருக்கும் தொண்டருக்குத் தொண்டன் நான் என்ற நினைப்பில் தான் இருக்கிறேன். (அய்யோ… இப்பவே கண்ணைக் கட்டுதே).
1967ல் பிடிஐ நிறுவனத்தின் கேள்வி.
தமிழக மக்களுக்கு தங்களின் பிறந்த நாள் பரிசாக எதை அளிக்கிறீர்கள் ?
”என்னையே தமிழ் மக்களுக்காத்தான் அளித்திருக்கிறேன்.”
1970 பிறந்த நாள் பொதுக்கூட்டம்.
“தமிழர்களே தமிழர்களே… நீங்கள் என்னைக் கடலில் தூக்கி வீசினாலும் அதில் கட்டுமரமாகத்தான் மிதப்பேன். அதில் ஏறி நீங்கள சவாரி செய்யலாம்.
தமிழகர்களே தமிழர்களே.. என்னை நீங்கள் நெருப்பில் தூக்கிப் போட்டாலும், அதிலே நான் விறகாகத்தான் பிழுவேன். அடுப்பெரித்து நீங்கள் சமைத்துச் சாப்பிடலாம்.
தமிழர்களே தமிழர்களே… நீங்கள் என்னைப் பாறையில் மொதினாலும் சிதறு தேங்காயாகத்தான் உடைவேன் நீங்கள் என்னை பொறுக்கி எடுத்துத் தின்று மகிழலாம்.”
1970 திமுக மாநாடு
“அண்ணாவிற்குப் பிறகு இந்தப் பெரிய பொறுப்பினை என்னுடைய தோள்களிலே சுமத்தி வைத்திருக்கின்ற கழகத்தின் தங்கங்களே… உங்களையெல்லாம் நம்பித்தான் நான் இங்கே அமர்ந்திருக்கின்றேன். நீங்கள் ஒவ்வொருவரும் எனக்கு அண்ணனாகத் தெரிகிறீர்கள். அண்ணன் ஒருவன் இருந்து எனக்கு வழங்க வேண்டிய ஆறுதலை எனக்கு தர வேண்டிய அறிவுரையை நான்கு கோடி தமிழ்ப் பெருங்குடி மக்களாகிய நீங்கள் எனக்குத் தந்து கொண்டிருக்கிறீர்கள்.“
1971 முதலமைச்சராக பதவி ஏற்றவுடன்
“தமிழகத்தை பொறுத்த வரை கழக அரசினைத் தங்களுக்கு பாதுகாப்பான மெய்க்காப்பாளனாகவும், தங்களுக்கு பணியாற்றும் ஊழியனாகவும், தமிழ்ப்பெருங்குடி மக்கள் நம்பிக் கொண்டிருப்பதை உணர்ந்து அதற்கேற்றவாறு உழைப்பதற்கு நாங்கள் சூளுரை மேற்கொண்டிருக்கிறோம். ஏழை எளிய மக்கள் வாழ்வு ஒளி பெற, சாதி பேதமற்ற சமூக நீதி நிலைத்திட, சமதர்மம் நடைமுறைக்கு வந்திட, தனிமனிதனின் வாழ்வுக்கான அடிப்படை சொத்துரிமைகளைச் சீர்குலைக்காமல் இந்த அரசு சீரிய பணியாற்றும்.”
1973ம் ஆண்டு கட்டபொம்மன் விழா
“பதவிகள் பெரிதல்ல, ஆற்றுகின்ற பணி, மான உணர்ச்சியோடு போராடுகின்ற வீரம் அவைதான் என்றைக்கும் போற்றப் படக் கூடியவைகளாகும். “
1976 முரசொலி கடிதம்.
“அமைப்பு ரீதியான கழகம்
ஆடை அணிந்துள்ள உடலைப் போல
அதில் ஆவி நிகர்த்தது கொள்கை
பதவி என்பது அணிகலன்
அணிகலன் இன்றி வாழ முடியும்
கொள்கை இல்லையேல் ஆவி இல்லை
ஆடையில்லையேல் மானம் போகும்“
1960 முதல் இது போன்ற பகட்டுப் பேச்சால், இன்று இந்த தேசம் இழந்திருக்கும் தொகை ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் போடி. வாடகை வீட்டில் குடியிருந்த கருணாநிதியின் துணைவி மற்றும் அவரது மகளின் சொத்துக்கள் 1000 கோடியை தாண்டும் என்கிறார்கள்.
இன்னுமா இந்த பகட்டுப் பேச்சை நம்பிக் கொண்டிருக்கப் போகிறோம் ? தேர்தல் தேதி அறிவிக்கப் பட்டு விட்டது. முள்ளி வாய்க்காலை மறந்து விடாதீர்கள்.