ஊழல் என்ற புற்றுநோய் நம் சமுதாயத்தின் முக்கிய உறுப்புக்களை தின்று விட்டது. ஏற்கனவே அது போதுமான சேதத்தை ஏற்படுத்தி விட்டது. பொது ஊழியர்கள் ஊழல் பேர்வழிகளாக இருந்தால், சமுதாயத்தின் கட்டுமானமே ஆட்டம் கண்டு, அரசின் கொள்கைகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். ஆகையால், ஒரு ஊழல் செய்யும் ‘பொது ஊழியர்’ சமுதாயத்துக்கு ஆபத்து.
The cancer of corruption has eaten into the vitals of Indian society. It has already done immense damage to our society. If the public servants are corrupt, the whole structure of society would be upset and the policies of government would be adversely affected. Thus, a corrupt public servant is a menace to society.
இது முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராமை தண்டிக்கையில், நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. 1991-ம் ஆண்டு தாராளமய பொருளாதாரக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு, தொலைத்தொடர்புத் துறை தனியார் மயமாக்கியதன் முதல் ஊழல் வித்து சுக்ராம். நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, சுக்ராம் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதே, சி.பி.ஐ. சுக்ராமின் வீட்டில் சோதனை நடத்தியது. அந்த சோதனையில் சி.பி.ஐ. 3.6 கோடியை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து நடந்த பல்வேறு வழக்குகளில், 2011-ம் ஆண்டு, சுக்ராம் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தொலைத்தொடர்புத் துறை ஊழல்களுக்கெல்லாம் ஊற்றுக்கண்ணாகவும், தொடக்கப்புள்ளியாகவும் சுக்ராம் இருந்தார் என்றால் அது மிகையாகாது.
ஹிமாச்சல் ப்யூச்சரிஸ்ட்டிக்ஸ் கம்யூனிக்கேஷன் லிமிட்டெட் என்ற நிறுவனம் 1987-ம் ஆண்டு, மஹேந்தர் நகாடா, தீபக் மல்ஹோத்ரா மற்றும் விஜய் மல்லூ ஆகியோரால் தொடங்கப்பட்டது. இணைப்பு
தொடக்ககாலத்தில், தொலைத்தொடர்பு மின்னணு சாதனங்களை தயாரித்துக் கொண்டிருந்தது. இந்த நிறுவனம். சுக்ராம் தொலைத்தொடர்பு அமைச்சரானதும், இந்த நிறுவனத்துக்கு அடித்தது சுக்கிர திசை.
முதன் முதலாக தனியார் நிறுவனங்களை தொலைத்தொடர்பு துறையில் அனுமதித்தது நரசிம்மராவ் அரசு. திடீரென்று யாருக்குமே தெரியாத ஒரு நிறுவனத்துக்கு எதற்காக அத்தனை லைசென்ஸ்களை வழங்க வேண்டும் என்பது யாருக்குமே புரியவில்லை. அந்தக் காலம், செல்பேசி என்ற ஒன்று புதிதாக இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட காலம். அப்போது நடந்த ஏலத்தில், எங்கிருந்தோ வந்தான் என்பது போல எச்.எப்.சி.எல். நிறுவனம் திடீரென்று பல வட்டங்களுக்கு செல்பேசி சேவை நடத்த ஏலம் எடுத்தது. புதிதாக முளைத்த ஒரு நிறுவனத்துக்கு எங்கிருந்து 85 ஆயிரம் கோடி கட்ட சக்தி உள்ளது என்பது அனைவருக்கும் புரியாத புதிராக இருந்தது. சமீபத்தில் நடந்த 2ஜி ஊழலைப் போலவே அப்போது நடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிதான் அது. அதாவது, ஏலத்தில் அனைத்து வட்டங்களையும் எடுத்து விடுவது, அதன் பின்னர் வேறு ஒரு பெரிய நிறுவனத்துக்கு கொள்ளை லாபத்தில் பங்குகளை விற்பது. ஆனால் அந்தத் திட்டம் அப்போது கைகூடவில்லை. எச்எப்சிஎல் நிறுவனத்தால் 85 ஆயிரம் கோடியைத் திரட்ட இயலவில்லை.
உரிய தொகையை செலுத்தத் தவறிய காரணத்தால், எச்எப்சிஎல் செலுத்தியிருந்த வைப்புத் தொகையான 100 கோடியை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், எச்.எப்.சிஎல் நிறுவனத்துக்கு சாதகமாக, விதிகளை மாற்றி அமைத்தார் சுக்ராம். இந்த குளறுபடிகளின் காரணமாக, தொலைத்தொடர்புத் துறையில் தனியாரின் முதலீடு பல ஆண்டுகளுக்கு தள்ளிப் போனது.
இதுதான் எச்எப்சிஎல் வளர்ந்த வரலாறு. அதன் தொடக்கமே ஊழல்தான். சுக்ராமுக்கும், மகேந்தர் நகாடாவுக்குமான தொடர்பு என்னவென்றால், இருவருமே இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.
இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ். இந்தியா தொழில்நுட்பத்தில், குறிப்பாக மின்னணுவியல் மற்றும், தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி வகிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தொடங்கப்பட்ட ஒரு பொதுத்துறை நிறுவனம். 1960ம் ஆண்டில் இது தொடங்கப்பட்டது. நூறு சதவிகித மத்திய அரசு முதலீட்டில், தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் போதுமான அளவு லாபம் ஈட்டக்கூடிய ஒரு பொதுத்துறை நிறுவனமாகத்தான் இயங்கி வந்தது. ‘மினி ரத்னா’ நிறுவனமாகவும் அங்கீகரிக்கப்பட்டது இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ்.
1973-ம் ஆண்டில், தமிழ்நாடு அரசு, இந்த நிறுவனத்துக்கு, 11.021 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிலம், தொழில் பயன்பாட்டுக்காக என்ற கட்டுப்பாட்டோடு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2009ல் இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ் நிறுவனம், நஷ்டத்தை அடைகிறது. வாஜ்பாய் காலத்தில், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் படலம் அமோகமாக நடந்தது.
பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வதற்கென தனியாக ஒரு அமைச்சகமே செயல்பட்டது. அந்த அடிப்படையில் இந்துஸ்தான் டெலிப்ரின்டர்ஸ் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருந்த 74 சதகிகித பங்குகளை தனியாருக்கு விற்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அந்தப் பங்குகளை வாங்க முன்வந்த ஒரே ஒரு நிறுவனம் எச்எப்சிஎல். இந்த விற்பனையில் கிண்டியில் உள்ள நிலம், குறைத்து மதிப்பிடப்பட்டு விற்கப்பட்டதாக சிஏஜி அறிக்கை குறை கூறியது. இந்த பங்கு விற்பனை நடந்த அன்று, கிண்டியில் இந்துஸ்தான் டெலிப்ரின்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமாக இருந்த 11.021 ஏக்கர் நிலத்திற்கு ஒரு ஏக்கரின் விலையாக அடையாறு சார் பதிவாளர் அலுவலக ஆவணங்களின்படியான விலை 6.68 லட்சம். ஆனால், மதிப்பீட்டாளர் ஒரு ஏக்கரின் விலையை 3 லட்சம் என்று மதிப்பிட்டு, எச்எப்சிஎல் நிறுவனத்துக்கு தாரை வார்க்கப்பட்டது. சிஏஜி அறிக்கையின் இணைப்பு
இந்த பங்கு விற்பனையில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகவும், சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், விற்கப்பட்ட பங்குகளை மீண்டும் அரசு கையகப்படுத்த வேண்டும் என்றும், இந்துஸ்தான் டெலிப்ரிண்டர்ஸ் நிறுவன ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அந்த வழக்கு போதிய முகாந்திரம் இல்லை என்று கூறி தள்ளுபடி செய்யப்பட்டது. இணைப்பு
இதற்கிடையே பாரத ஸ்டேட் வங்கி, இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை சர்ஃபேசி சட்டத்தின்படி, கையகப்படுத்துகிறது. பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர்த்து, மேலும் சில வங்கிகளுக்கு இந்துஸ்தான் நிறுவனம் கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. மொத்தமாக இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸின் கடன் 284 கோடி.
இப்படி கடன் ஏராளமாக பெருகி, வட்டியும் கூடிக்கொண்டே போகவும், மத்திய அரசின் தொலைத்தொடர்புத்துறை, இந்துஸ்தான் டெலி பிரிண்டர்ஸ்க்கு சொந்தமான 11.021 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது. அப்படி விற்பனை செய்கையில், சில நிபந்தனைகளை விதித்து, அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டே, விற்பனை செய்ய வேண்டும் என்று சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது.
11 ஏக்கர் நிலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும், வாங்கும் நிறுவனம் அல்லது நபர் 20 கோடியை வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும், வெளிப்படையான திறந்த முறை ஏலத்தில் விற்பனை நடைபெற வேண்டும், அந்நிறுவனத்தின் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும், ஆட்குறைப்பு செய்தல் கூடாது, அந்த விற்பனையின் மூலமாக கிடைக்கும் வருவாயை இந்துஸ்தான் டெலிப்ரிண்டர்ஸ் நிறுவனத்தை மீட்டெடுக்க பயன்படுத்த வேண்டும் என்பதெல்லாம் நிபந்தனைகள்.
இதற்கிடையே, தமிழ்நாடு அரசின் சிட்கோ நிறுவனம் இந்த ஏலத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது. ஏனென்றால், தமிழ்நாடு அரசு இந்த நிலத்தை இந்துஸ்தான் டெலிப்ரின்டர்ஸ் நிறுவனத்துக்கு தொழில் முனைவதற்காக அளித்திருந்தது. அதன் அனுமதி இல்லாமல் இந்த நிலம் விற்கப்படுகிறது என்று வழக்கு தொடுக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. தமிழக அரசு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வில் மேல் முறையீடு செய்கிறது.
தமிழக அரசு உச்சநீதிமன்றம் செல்கிறது. உச்சநீதிமன்றத்திலும் இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இப்படி தாமதத்துக்கு மேல் தாமதமாக ஆகிக் கொண்டு இருந்ததால், பெங்களுரைச் சேர்ந்த ஆர்எம்இஸட் நிறுவனம், இந்த நிலத்தை வாங்குவதிலிருந்து விலகிக்கொள்கிறது.
இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ் நிறுவனம் பணம் அளிக்க வேண்டிய வங்கிகளான பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி ஆகியன ஒன்று சேர்ந்து ஒரு குழுமத்தை உருவாக்குகின்றன. இந்த குழுமத்தின் நோக்கம், அந்த வங்கிகளுக்கு வர வேண்டிய கடனை எப்படி வசூல் செய்வது என்பதே. இந்த குழுமத்தின் கூட்டம், பாரத ஸ்டேட் வங்கியின் துணைப் பொதுமேலாளர் லியோன் தெராட்டில் என்பவர் தலைமையில் 7 மார்ச் 2013 அன்று நடைபெறுகிறது. அந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பாரத ஸ்டேட் வங்கியோடு இணைந்து அந்த நிலத்தில் வீடு கட்டி விற்பனை செய்ய அளித்த திட்டத்தை பாரத ஸ்டேட் வங்கி நிராகரித்ததாக தெரிவிக்கிறார் தெராட்டில். அதே லியோன் தெராட்டில், ஏலம் விடுவதற்கு பதிலாக, தனியாக விற்பனை செய்யலாம் என்றும் தெரிவிக்கிறார். பாரத ஸ்டேட் வங்கியின் மற்றொரு தலைமை மேலாளர் ராமதாஸ், நான்கு பேர் ஏற்கனவே வாங்குவதற்கு தயாராக உள்ளதாகவும், மேலும் இரண்டு பேர் வருவார்கள் என்றும் கூறுகிறார்.
பாரத ஸ்டேட் வங்கியின் சட்ட மேலாளர் அண்ணாதுரை, இந்த தனிப்பட்ட விற்பனை எப்படி நடக்கும் என்பதை விளக்குகிறார். அதாவது வாங்கும் பார்ட்டி, தங்கள் விலையை குறிப்பிட்டு ஒரு கடிதம் அளிக்கும், அந்த விலையை வங்கி ஏற்றுக் கொண்டால் அடுத்து விற்பனை என்று விளக்குகிறார்.
இந்துஸ்தான் டெலி பிரின்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக அந்த கூட்டத்தில் பங்கெடுத்த குப்தா என்பவர், தொழிலாளர்களுக்கு தர வேண்டிய நிலுவைத்தொகை ஏராளமாக இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். ஆனால், அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகளும், அதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி விடுகின்றனர். இந்துஸ்தான் டெலிப்ரின்டர்ஸின் மற்றொரு பிரதிநிதியான கவுஷல் என்பவர், கொல்கத்தாவைச் சேர்ந்த கெவன்டர் டெய்ரி என்ற நிறுவனம், இந்நிலத்தை வாங்கத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவர்கள் ஆறு மாதம் அவகாசம் கேட்பதாகவும் தெரிவிக்கிறார். உடனே லியோன் தெராட்டில் முடியவே முடியாது. அவ்வளவு நாள் காத்திருக்க முடியாது. இந்த விற்பனை முடிந்து மூன்று மாதத்துக்குள் பணம் கைக்கு வர வேண்டும் என்று கூறுகிறார். 15 மார்ச் 2013 மதியம் 2 மணிக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலிக்கப்பட்டு, அன்றே யாருக்கு விற்பனை செய்வது என்று முடிவெடுக்கப்படும். 250 கோடிக்கு மேல் வரும் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதென்றும் அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகிறது. இதற்குப் பெயர் இந்திய தண்டனைச் சட்டத்தின் படி கூட்டுச் சதி 120B. எப்படி கூட்டுச் சதி என்பதை விரிவாகப் பார்ப்போம்.
15 மார்ச் 2013 அன்று அதே கூட்டுச் சதியாளர்கள் மீண்டும் கூடுகிறார்கள். அன்று லியோன் தெராட்டில் ஒரே ஒரு விண்ணப்பம் மட்டுமே வந்திருப்பதாகவும், வேறு யாருமே கிண்டி நிலத்தை வாங்க முன்வரவில்லை என்றும் தெரிவிக்கிறார். இதற்கு முந்தைய கூட்டத்தில் நான்கு பேர் இந்த இடத்தை வாங்கத் தயாராக இருப்பதாகவும், மேலும் இரண்டு பேர் வர உள்ளதாகவும் தெரிவித்த ராமதாஸ் என்ற பாரத ஸ்டேட் வங்கியின் தலைமை மேலாளரை எங்கே மீதம் உள்ள ஐந்து பார்ட்டிகள் என்று கேட்டு, வாய் மீதே குத்தியிருக்க வேண்டும். ஆனால் அனைவரும் கூட்டுச் சதியாளர்கள் அல்லவா? அவர்கள் எதற்கு கவலைப்படப் போகிறார்கள்.
2009-ம் ஆண்டிலேயே மின் ஏல முறையில் இந்த நிலத்தை 298 கோடிக்கு வாங்க ஆர்.எம்.இஸட். என்ற நிறுவனம் முன் வந்ததல்லவா? 2013-ல் இந்த நிலத்தின் விலை குறைந்து விடுமா என்ன? ஆனால் என்ன விலைக்கு வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த ஒரே ஒரு பார்ட்டி முன்வந்தது தெரியுமா? 272 கோடிக்கு வாங்கிக்கொள்ள முன்வந்தது. அது சென்னை நகரின் முக்கியமான பகுதியான கிண்டியில் 11 ஏக்கர் நிலம் இப்படி அடிமாட்டு விலைக்கா போகும்? ஆனால் 272 கோடி ரூபாய்க்கு, விஜிஎன் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்பனை செய்வது என்று தெராட்டில் தலைமையிலான இந்த சதிக்கூட்டம் முடிவு செய்கிறது.
30 மார்ச் 2013 அன்று பாரத ஸ்டேட் வங்கி, விஜிஎன் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்கு 10.162 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய சம்மதம் என்று கடிதம் எழுதுகிறது. என்னடா ….. இவ்வளவு நேரமாக 11 ஏக்கராக இருந்த நிலம் திடீரென்று 10.162 ஏக்கராக குறைந்து விட்டதே என்று கேள்வி எழலாம். கூவம் நதி ஒரு 38 சென்ட் நிலத்தை அரித்து விடுகிறது. குடிசைகளின் ஆக்ரமிப்பில் ஒரு 20 சென்ட் போய் விடுகிறது. மற்றொரு தொழில் நிறுவனத்துக்கு சிட்கோ 19 சென்ட் ஒதுக்கி விடுகிறது. அரசு கையகப்படுத்தியது 0.09 சென்ட் என்று இந்த நிலம் 10.162 ஏக்கராக சுருங்கி விடுகிறது.
சரி. அந்த கிண்டி நிலத்தை 272 கோடி ரூபாய்க்கு விற்பது என்று முடிவெடுத்திருக்கிறார்களே… உண்மையில் அந்த இடத்தின் சந்தை விலைதான் என்ன ? இதற்கும் அவர்களே விடை சொல்கிறார்கள். 272 கோடி ரூபாய்க்கு நிலம் விற்பனை செய்யப்பட்டாலும், பத்திரப் பதிவுத் துறைக்கு இவர்கள் எவ்வளவு ரூபாய்க்கு முத்திரைக் கட்டணம் செலுத்தினார்கள் தெரியுமா? 387 கோடி. ஏனென்றால், அந்த சார்பதிவாளர் அலுவலகத்தின் ஆவணங்களின்படி அதன் அசல் மதிப்பு 387 கோடி ரூபாய்.
மார்ச் 2013 அன்று உள்ளபடி வங்கிகளுக்கு வர வேண்டிய கடன் தொகையே 284 கோடி. அப்படி இருக்கையில் அதை விட குறைவாக 272 கோடி ரூபாய்க்கு எதற்காக விற்பனை செய்யப்பட்டது என்பது அந்த சதிக்கூட்டத்துக்குத்தான் தெரியும். 284 கோடி ரூபாய் வர வேண்டிய கடன் இருக்கையில், வெறும் 272 கோடி ரூபாய்க்கே அனைத்து வங்கிகளும், கடன் முடிந்து விட்டது என்று கடிதம் அளித்தன.
இந்த நிலத்தை விற்பனை செய்வதற்கு தடையில்லா சான்று வழங்கிய தமிழக அரசு, அத்தடையில்லா சான்றிலேயே குறிப்பிட்டிருந்த முக்கிய நிபந்தனை, இந்துஸ்தான் டெலிப்ரின்டர்ஸ் நிறுவனம், இந்நிலத்தை விற்பனை செய்த பிறகு, அந்த விற்பனை தொகையில் 10 சதவிகிதத்தை தமிழக அரசுக்கு செலுத்த வேண்டும். சந்தை விலையான 387 கோடிக்கு விற்றிருந்தால், தமிழக அரசுக்கு 38 கோடியை செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் மொத்த கடன் தொகையான 284 கோடியை விட குறைவான தொகைக்கு விற்றால் தமிழக அரசுக்கு எங்கிருந்து 10 சதவிகிதம் கொடுப்பது? பட்டை நாமம்தான்.
இதில் மற்றொரு மோசடி என்ன தெரியுமா? நீதிமன்றத்தில் அளித்த உறுதி மொழியை மீறியது.
24 ஜுலை 2013 அன்று, இந்துஸ்தான் டெலிப்ரின்டர்ஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றதில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது. அந்த வழக்கில், கிண்டி நிலம், வெளிப்படையான ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்பட வேண்டும், வணிகவரித்துறைக்கு சேர வேண்டிய வரி பாக்கி போக, தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய தொகைகள் அனைத்தும் கிடைக்கும் வகையில் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்படுகிறது.
அப்போது பாரத ஸ்டேட் வங்கி சார்பில் என்ன உறுதிமொழி அளிக்கப்பட்டது தெரியுமா ?
4. The learned counsel appearing on behalf of the respondent State Bank of India had submitted that the property in question would be sold by way of a public auction, based on the recommendations made by a special committee, constituted for the said purpose and therefore, the members of the 7th respondent union need not have any apprehension that the said property would be sold for a lesser value, in order to defeat the rights of the employees concerned. He had further submitted that sufficient funds would be available, after the sale of the property in question, to take care of the interests of the members of the 7th respondent union.
இந்துஸ்தான் டெலிப்ரின்டர்ஸூக்கு சொந்தமான கிண்டி நிலம், ஒரு குழு அமைத்து, வெளிப்படையான ஏலம் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும். தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்படும். நிலம் விற்பனை செய்யப்பட்ட பிறகு, தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைகளை வழங்கப் போதுமான தொகை இருக்கும் வகையில் விற்பனை செய்யப்படும் என்பதே அந்த உறுதி மொழி. இந்த உறுதிமொழியின் அடிப்படையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் அந்த வழக்கை முடித்து வைத்தது. நீதிமன்றம் தனது உத்தரவில் கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறது.
5. In view of the submissions made by the learned counsels appearing on behalf of the parties concerned, this Court does not find it appropriate to make any further observations or orders, with a view to protect and safe guard the interests of the members of the 7th respondent union.
பாரத ஸ்டேட் வங்கி அளித்த உறுதிமொழியின் அடிப்படையில், தொழிலாளர்களின் நலனை பாதுகாப்பதற்காக, இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க வேண்டிய தேவை இல்லை என்று அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்த ஒரே காரணத்துக்காக பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளின் மீது நீதிமன்ற அவமதிப்பு (Criminal Contempt) போட முடியும். ஆனால் இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கிடையாது. இது பொதுச் சொத்தை கொள்ளையடித்த வழக்கு. இது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சிபிஐ விசாரிக்க வேண்டிய வழக்கு.
சரி. இந்த விபரங்கள் சிபிஐக்கு தெரியுமா? தெரியும். இந்த வழக்கு தொடர்பான அத்தனை விபரங்களும், ஒரு புகாராக சிபிஐக்கு அனுப்பப்பட்டு விட்டன. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. ஏன் ? ஏன் ? ஏன் ?
இந்த இடத்தில்தான் மகேந்தர் நகாடா வருகிறார். மகேந்தர் நகாடா 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டியவர். 22 பிப்ரவரி 2011 அன்று மகேந்தர் நகாடாவை 2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரித்தது. இணைப்பு . ஆ.ராசாவின் கருணையான மனது காரணமாக, வரிசையில் ஆறாவது இடத்தில் இருந்த நகாடாவின் டேட்டாகாம் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு ஆந்திரா, டெல்லி, அஸ்ஸாம், குஜராத், பீகார், கேரளா, மத்திய பிரதேசம், ஒரிஸ்ஸா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கொல்கத்தா, ஒரிஸ்ஸா உள்ளிட்ட 21 லைசென்ஸ்களை வாரி வழங்கினார் ஆ.ராசா. லைசென்ஸ் பெற விண்ணப்பித்தபோது தங்களின் மொத்த முதலீடு 150 கோடி என்று விண்ணப்பத்தில் டேட்டாகாம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், உண்மையில் இவர்களின் முதலீடு வெறும் ஒரு லட்சம் என்பது சிஏஜி அறிக்கையில் வெளியானது. லைசென்ஸ்கள் கிடைத்ததும், தனது பங்குகளை வீடியோகான் நிறுவனத்துக்கு விற்பனை செய்தார் நகாடா. நகாடா மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், நகாடாவை விசாரணை செய்தததோடு ஓய்ந்து விட்டது சிபிஐ.
2ஜி லைசென்ஸ்கள் வழங்கப்பட்ட அன்று, லைசென்ஸ்கள் வழங்கப்பட்ட தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்துக்கு நேரில் சென்று தகராறு செய்தவர்தான் நகாடா. நகாடாவின் நிறுவனமான டேட்டா காமின் விண்ணப்பம் முழுமையாக இல்லை என்று நிராகரித்தது தொலைத்தொடர்புத் துறை. கையில் லைசென்ஸ் அனுமதி கடிதமோ, (Letter of Intent) வேறு ஆவணங்களோ எதுவுமே இல்லாமல் தொலைத்தாடர்புத் துறை அலுவலகத்தில் நுழைந்தார் நகாடா. வரிசையில் விண்ணப்பத்தோடு நின்று கொண்டிருந்த மற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளை முந்திக் கொண்டு செல்ல முயன்றார். அப்போது மற்ற நிறுவனங்களின் பிரிதிநிதிகள் தடுக்கவும், அவர்களோடு கைகலப்பில் ஈடுபட்டார் நகாடா. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் நகாடா. ஆனாலும், இவரது நிறுவனத்துக்கு 21 லைசென்ஸ்களை வழங்கினார் ஆண்டிமுத்து ராசா.
நகாடா மீது இன்றும் பல்வேறு குற்றச்சாடுகள் உள்ளன. இணைப்பு 1
இணைப்பு 2
இணைப்பு 3
இணைப்பு 4
இணைப்பு 5
இணைப்பு 6
மொத்தத்தில், நகாட்டா ஒரு சமூக விரோதி. ஆனால் இன்றும் சுதந்திரமான மனிதராக நடமாடிக்கொண்டிருக்கிறார் நகாடா.
சரி. இவற்றுக்கும் தற்போது நகாடா மீதான புகாரை சிபிஐ விசாரணை செய்யாமல் அமைதி காப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்கள். அப்படித்தானே ? இருக்கிறது. சமீபத்தில் சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை அவரது இல்லத்தில் சந்தித்த நபர்கள் குறித்த விபரங்கள் வெளியானது தெரியுமா? ரஞ்சித் சின்ஹாவை அதிக முறைகள் (71 முறை) சந்தித்தது இந்த மகேந்தர் நகாடாதான். இணைப்பு
ஒரு குற்றவாளியோடு சி.பி.ஐ. இயக்குநருக்கு 71 தடவை என்ன வேலை? அவரை அலுவலகத்தில் சந்திக்காமல், வீட்டில் சந்தித்த மர்மம் என்ன? என்பது போன்ற விவரங்களை உச்சநீதிமன்றம்தான் ஆராய வேண்டும்.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து, சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை அவரது செல்பேசியில் தொடர்பு கொண்டோம். அவர் எடுக்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, உங்கள் கருத்தை அறிய வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பினோம். ஆனால் பதில் இல்லை. நாம் என்ன என்டிடிவி அல்லது டைம்ஸ் நவ் சேனலா? நம்முடைய ஊடகம் சாதாரண இணையதளம். நம்மிடம் அவர் எதற்கு பேச வேண்டும் ?
நம்மிடம் பேசாவிட்டால் பரவாயில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி கேட்பார்கள். அவர்களிடம் பேசட்டும். ரஞ்சித் சின்ஹாவின் வீட்டு பார்வையாளர்கள் குறித்த பதிவேடு வெளியானபோது, எப்படி எப்படியெல்லாம் மாற்றி மாற்றிப் பேசினார் ரஞ்சித் சின்ஹா என்பதை நினைவு கூறுங்கள். அப்படி ஒரு பதிவேடே இல்லை என்றார். பிறகு அது ஃபோர்ஜரி பதிவேடு என்றார். பிறகு அப்படி இருந்தால்தான் என்ன ….. நான் ஆயிரம் பேரை சந்திப்பேன். உயரிய பதவியில் இருக்கிறேன் என்றார். பின்னர் உச்சநீதின்றத்தில் இந்த விவகாரம் விசாரிக்கப்படுகையில் ஊடகங்கள் இது குறித்து செய்தி வெளியிடக்கூடாது என்றார்.
ரஞ்சித் சின்ஹாவின் ஆரம்ப கால காவல்துறைப் பணியே கறை படிந்தது. பீகாரில் டிஐஜியாக ரஞ்சித் சின்ஹா சிபிஐயில் பணிபுரிந்தபோது, மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் சிக்கிய லாலு பிரசாத் யாதவுக்கு இவர் உதவியதாக இவர் மீது அப்போதே குற்றச்சாட்டு எழுந்தது. அப்படிப்பட்ட நபர் சிபிஐ இயக்குநர் பதவிக்கு வந்தால்தான், நமக்கு உதவி கிட்டும் என்று திட்டமிட்டே காங்கிரஸ் அரசு, லாலு ஆலோசனையின் பேரில் இவரை சிபிஐ இயக்குநராக நியமித்தது. அதன்படியே, இவர் லாலுவுக்கு தனது நன்றி விசுவாசத்தைக் காட்டத் தவறவில்லை. இணைப்பு இணைப்பு 2 இணைப்பு 3 இணைப்பு 4
இப்படி சிறையில் இருக்க வேண்டிய நபர்களை சிபிஐ இயக்குநராக்கினால், எந்த விசாரணை ஒழுங்காக நடக்கும்? அடுத்த மாதம் இவரின் பதவிக்காலம் முடிவடையப்போகிறது. இரண்டு ஆண்டுகள் சிபிஐ இயக்குநராக எல்லாப் பயன்களையும் அனுபவித்து முடித்த பிறகு, இவர் மீது உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்தால் என்ன? எடுக்காவிட்டால் என்ன?
சரி. மீண்டும் இந்துஸ்தான் டெலிப்ரின்டர்ஸ் விவகாரத்துக்கு வருவோம். இந்த நிலத்தை வாங்கியுள்ளதல்லவா விஜிஎன் என்ற ஒரு நிறுவனம். இந்த நிறுவனம் ஆக்ரமிப்புக்கு பெயர் போனது. வில்லிவாக்கம் பகுதியில் இந்த நிறுவனம் கட்டி முடித்துள்ள VGN PLATINA என்ற பெயரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கட்டி முடித்துள்ளது. அந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகில் கண்ணன் குளம் என்று ஒரு குளம் இருந்தது. அந்த குளத்தின் பரப்பளவு 80 சென்டுகள். அந்த 80 சென்டுகளையும் மண் இட்டு நிரப்பி, அந்த அடுக்குமாடி குடியிருப்புக்கான பூங்காவாக மாற்றியுள்ளது இந்த நிறுவனம். இதற்காக விஜிஎன் நிறுவனத்துக்கு அயப்பாக்கம் ஊராட்சி அளித்த நோட்டீஸுக்கு அனுப்பிய பதிலில் ஆக்ரமித்தது உண்மைதான் என்றும், பாலைவனமாக தூர்ந்து கிடந்த அந்த குளத்தை மரங்கள் நட்டு அழகுபடுத்தியுள்ளோம் என்று தெனாவட்டாக பதில் கூறியிருக்கிறது அந்த நிறுவனம்.
தற்போது விஜிஎன் நிறுவனம், கிண்டியில் விஜிஎன் ஃபேர்மான்ட் என்று அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட உள்ளது. அந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தது சவுக்கு குழு. பெரிய சுற்றுச்சுவர் எழுப்பியுள்ளார்கள். உள்ளே அங்கும் இங்குமாக சில பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் வகையில், கூவம் ஆற்றில் 40 சென்டுக்கும் மேலாக ஆக்ரமிப்பு செய்திருக்கிறார்கள். ஆற்றின் ஓரத்தில், தூண்கள் எழுப்பி, பலமான அடித்தளம் அமைத்து, ஆற்றை ஆக்ரமித்திருக்கிறார்கள். இப்படி தொடர்ந்து ஆக்ரமிப்பு நடப்பதால்தான் கடும் மழை ஏற்பட்டால் வெள்ளம் ஊருக்குள் புகுகிறது.
வியப்பை ஏற்படுத்திய மற்றொரு விஷயம், அங்கே இருந்த வட இந்தியாவைச் சேர்ந்த அனைத்து செக்யூரிட்டிகளும், நம்ம முகத்தை பார்த்த பிறகு கூட, ஒரு கோடி ரூபாய் அபார்ட்மென்ட் வாங்கும் முகம் இதுதான் என்று நம்பியதுதான்.
நம்மால் ஒரு கோடி ரூபாய்க்கு ஃப்ளாட்தான் வாங்க இயலாது. ஆனால் வாங்கவது போலவே விசாரிக்க முடியுமல்லவா ? விஜிஎன் நிறுவனத்தை அழைத்து, ஃப்ளாட் விலை என்ன, எப்போது முடியும் என்று விசாரணையை போட்டோம். அந்த ஒலிநாடாவின் இணைப்பு.
அங்கே இருந்த அஸ்ஸாமைச் சேர்ந்த செக்யூரிட்டியோடு உரையாடி விட்டு வெளியே வருகையில், பணம் படைத்தவர்களால் எப்படியெல்லாம் சட்டத்தை வளைத்து, மக்கள் சொத்துக்களை அபகரிக்க முடிகிறது என்ற வேதனைதான் மனதில் வந்தது.
ஊழலே உன் விலை என்ன?