சிறை செல்லும் சீமாட்டியின் முதல் பாகத்தை படிக்காதவர்கள் படித்து விடுங்கள். இணைப்பு
வரும் டிசம்பர் 18 அன்று ஜெயலலிதாவின் மேல் முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அன்று, ஜெயலலிதாவின் அப்பீல் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எத்தனை காலத்துக்குள் விசாரிக்கப்படும் என்று முடிவு செய்யப்படும்.
மிகவும் பரபரப்பாக இந்தியா முழுவதும் விவாதிக்கப்பட்ட ஆருஷி தல்வார் கொலை வழக்கை நாம் யாரும் மறந்திருக்க முடியாது. ஆருஷி தல்வாரின் கொலையில், சிபிஐ உள்ளிட்ட எந்த புலனாய்வு அமைப்பாலும் உருப்படியாக எந்த சாட்சியங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக, சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையிலேயே, ஆருஷியின் பெற்றோர்கள் இந்த வழக்கில் குற்றவாளிகளாக இருக்கக் கூடும். ஆனால் இந்த வழக்கில் எங்களால், நீதிமன்றத்தை நம்ப வைக்கக் கூடிய அளவுக்கு போதுமான சாட்சியங்களையும் ஆவணங்களையும் திரட்ட முடியவில்லை. ஆகையால், இந்த வழக்கை யார் மீதும் குற்றம் சுமத்தாமல் முடித்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்தது.
ஆனால், ஒரு அடாவடி நீதிபதி, சிபிஐ அறிக்கையை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். இறந்து போன ஆருஷி தல்வாரின் தந்தை டாக்டர் ராஜேஷ் தல்வார் மற்றும் தாயார் நுபூர் தல்வார் ஆகியோர் வழக்கு விசாரணையில் பங்கு கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை நடத்தினார். விசாரணையின் இறுதியில், போதுமான சாட்சியங்களே இல்லாத நிலையில், இருவருக்கும் வாழ்நாள் சிறை விதிக்கப்பட்டது.
இருவரும் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தனர். அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், அவர்களின் மேல் முறையீடு மனு விரைவாக விசாரிக்கப்படும் என்று உத்தரவிட்டது. நேற்றோடு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்து விட்டது. இன்று வரை, அவர்களின் மேல் முறையீடு எப்போது விசாரிக்கப்படும் என்பதற்கான அறிகுறி கூட இல்லை.
ஆனால், ஜெயலலிதாவின் வழக்கோ, சந்தேகத்திற்கிடம் இன்றி, தெள்ளத்தெளிவான சாட்சியங்கள் மட்டும் ஆவணங்களின் மூலம் நிரூபிக்கப்பட்டது. ஆனால் வெறும் 21 நாட்கள் மட்டுமே சிறையில் இருந்த ஜெயலலிதாவை ஜாமீனில் விடுவித்ததோடல்லாமல், அவர் மேல் முறையீட்டு மனுவையும் விரைவாக விசாரிக்க நடவடிக்கை எடுக்க உள்ளது.
ஜெயலலிதாவுக்கும் அவரது மேல் முறையீட்டு மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கேட்க உரிமை உள்ளது. அதை உச்சநீதிமன்றமும் பரிசீலிக்கலாம். ஆனால், ஜெயலலிதாவை சிறையிலிருந்து வெளியே நடமாட விட்டு இப்படி ஒரு சலுகையை வழங்க வேண்டுமா என்ன ? ஜெயலலிதா என்ன வானத்திலிருந்து குதித்து விட்டாரா ? சிறையிலிருந்து ஜெயலலிதாவை வெளியே விட்டு, அவர் நிழல் முதல்வராக, அரசு கோப்புகளை பார்வையிட்டு, முதியோர் இல்ல உறுப்பினர்கள் அனுப்பும் கோப்புகளை பார்வையிடவா உச்சநீதிமன்றம் அவரை வெளியே அனுப்பியது ? இப்படியொரு அநியாயம் உலகில் எங்காவது நடக்குமா ?
ஆனால் இந்தியாவில் நடக்கும். தமிழகத்தில் நடக்கும்.
சமீபத்தில் சகாயம் ஐஏஎஸ் தலைமையிலான கமிட்டி தமிழக்ததில் நடக்கும் சட்டவிரோத குவாரிகளை விசாரிக்கும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றம் வரை சென்று முறையிட்டது. உச்சநீதிமன்றம் அந்த உத்தரவை தள்ளுபடி செய்தது. இதன் பிறகும் தமிழக அரசு விசாரணைக்கு ஒத்துழைக்கவேயில்லை. உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்த பிறகும், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்பாக, மறுபரிசீலனை வழக்கை தாக்கல் செய்தது தமிழக அரசு. அந்த மனுவை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம், தமிழக அரசுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
சட்டம் தெரிந்த பல வழக்கறிஞர்கள், தமிழக அரசு சென்னையில் செய்த மேல்முறையீடு குறித்து வியப்படைந்தார்கள். உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த பிறகு, சீராய்வு மனு தாக்கல் செய்வதென்றால், உச்சநீதிமன்றத்தில் மட்டுமே சீராய்வு மனு தாக்கல் செய்ய முடியும். அப்படி இருக்கையில், இந்த மனு தள்ளுபடி செய்யப்படும் என்பதை அறிந்தும், எதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படுகிறது என்று பலர் வியப்படைந்தார்கள். இதில் எவ்விதமான சட்ட அறிவும் கிடையாது. வெளிப்படையாக பார்த்தால் அறிவுக்கெட்டத்தனமாக மனு என்றே தோன்றும்.
ஆனால் இதன் உள்ளாழத்தில் உள்ள விரக்தியை பார்க்க வேண்டும். உச்சநீதிமன்றமே தள்ளுபடி செய்தாலும், மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்து, தப்பித்து விட முடியாதா என்ற ஏக்கமே அது. இப்படி ஒரு விரக்தியும், ஏக்கமும் வருவதற்கான காரணம் என்ன ? வேறு ஒன்றும் அல்ல. விசாரணை தொடர்ந்து நடைபெற்றால், என்ன ஆகுமோ…. ஏது ஆகுமோ என்ற பயம்தான். எடுக்க பயம், உடுக்க பயம், படுக்க பயம், குடுக்க பயம் என்று தெனாலி சோமன் போல, சட்டவிரோத குவாரி என்றாலே தமிழக அரசு பயந்து நடுங்குவதற்கு காரணம் என்ன ? இருக்கிறது.
ஜெயலலிதா 2001ல் ஆட்சிக்கு வந்த பிறகு தொடங்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் “ய வேர்ல்ட் ராக் ப்ரைவேட் லிமிட்டெட்”.
நவம்பர் 2001ல் இந்த நிறுவனம் தொடங்கப்படுகிறது. இந்த நிறுவனத்தின் நோக்கமாக கூறப்பட்டுள்ளது என்ன தெரியுமா ? எல்லா விதமான கற்கள், க்ரானைட்டுகள், பாறைகள், பாறை தொடர்பான பொருட்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்வது. அடுத்ததாக இந்த நிறுவனத்தின் உத்தேசமான லட்சியம் “2. To establish and carry on all or industry, trade or business of preparing, mining, cutting, polishing, processing, . treating, importing, exporting, of all types of marble, granite, laterite, lime stone, sand stone, slabs, tiles and other building material and colour stones of every description and type, including setting, processing, trading or dealing into waste and by products arising from the mining or processing of marbles and colour stones.”
அதாவது க்ரானைட், குவாரிகள் மற்றும் அது தொடர்பான தொழில்களில் ஈடுபடுவது.
இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இந்நிறுவனத்தில் இரண்டு இயக்குநர்கள். ஒருவர் சண்முகத்தின் மகன் அனந்தராமன். மற்றொருவர் சுந்தரராஜனின் மகன் வி.எஸ்.சிவக்குமார். இந்நிறுவனம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே இதில் இயக்குநராக பொறுப்பேற்பவர்தான் இந்த கட்டுரையை சிறப்பு படுத்துகிறார்.
அவர் பெயர் சுப்ரமணியன். இந்த பெயரில் என்ன சிறப்பு என்று நினைப்பீர்கள். அவர் தந்தையின் பெயர் தெரிந்தால் புரிந்து கொள்வீர்கள். அவர் தந்தையின் பெயர் வைகுண்டராஜன். சவுக்கு தளத்தில் தொடர்ந்து பல முறை வைகுண்டராஜன் பற்றி எழுதப்பட்டுள்ளது. ஆகையால் வைகுண்டராஜன் யார் என்பதற்கான விளக்கங்களை இங்கே மீண்டும் அளிக்க வேண்டியதில்லை.
இந்த நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர்கள் யார் தெரியுமா ? வைகுண்டராஜனின் மகனோடு சேர்ந்து இயக்குநர்களாக இருப்பவர்கள் இருவர். கடந்த கட்டுரையில் பார்த்தீர்கள் அல்லவா.. கலிவபெருமாளின் மகன் கலியபெருமாள் மற்றும் கூத்தையப்பர் சத்தியமூர்த்தியின் மகன் டாக்டர் சிவக்குமார்.
இதில் என்ன தவறு இருக்கிறது…. ? மூன்று தொழில் முனைவர்கள் ஒன்று சேர்ந்து தொழில் தொடங்குகிறார்கள். இதில் என்ன தவறு என்று கேள்வி எழக்கூடும்.
இதில் என்ன தவறு என்றால், ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் நிலத்தில் தாதுமணல் அள்ளுவதற்கான உரிமம், வைகுண்டராஜனுக்கு மட்டும் எப்படி வழங்கப்பட்டுள்ளது என்பதுதான் தவறு. கருணாநிதி ஆட்சிக் காலத்திலாவது வைகுண்டராஜன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால், அப்போதும் கிடையாது. அரசியல்வாதிகள் தொழிலதிபர்களிடம் பொறுக்கித் தின்பவர்கள் என்ற கூற்றுக்கு கருணாநிதி மட்டும் விதிவிலக்கா என்ன ? கருணாநிதி ஆட்சி காலத்தில் டாட்டா நிறுவனத்தோடு, தூத்துக்குடியில் டைட்டானியம் ஆலை அமைக்க 30 ஜுன் 2007 அன்று ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இணைப்பு
டாட்டா தூத்துக்குடி பகுதியில் கால் நுழைத்தால் தமது சாம்ராஜ்யத்துக்கு பங்கம் ஏற்படும் என்று கருதிய வைகுண்டராஜன், தூத்துக்குடி பகுதி மக்களை பணம் கொடுத்து திரட்டி, பல்வேறு போராட்டங்களை நடத்த வைத்தார். அப்போது இந்த டைட்டானியம் ஆலைக்கு எதிராக முதன் முதலாக அறிக்கை வெளியிட்டவர், வைகுண்டராஜனின் பினாமி ஜெயலலிதாதான்.
இப்படி போராட்டம் நடக்கவும், ஏற்கனவே, டாட்டா நிறுவனத்தின் அதிபர் ரத்தன் டாட்டாவிடம் பலமாக வசூல் செய்திருந்த கருணாநிதி சும்மா இருப்பாரா… வெகுண்டெழுந்தார். வெளிப்படையாக ஜெயலலிதாவும், வைகுண்டராஜனும் கூட்டுக்களவாணிகள் என்று அறிக்கை வெளியிட்டார். கருணாநிதி தனது அறிக்கையில்
“கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதற்கு, அந்தப் பகுதியில் கிடைக்கும் ‘கார்னெட்’ என்ற கனிமத்தைத் திருட்டுத்தனமாக எடுத்துக் கடத்தும் ஒரு தாதாவுடன் ஜெயலலிதா செய்துகொண்ட எழுதப்படாத ஒப்பந்தமே காரணம்’’ ‘2005-ல் அ.தி.மு.க. ஆட்சி நடந்தபோது தொழில்துறை அமைச்சராக இருந்த நயினார் நாகேந்திரன், டைட்டானியம் தொழிற்சாலையை நிறுவுவது குறித்து கூட்டம் ஒன்றினை நடத்தியிருக்கிறார். டாடா நிறுவனத்தினரும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில் வைகுண்டராஜனும் கலந்து கொண்டிருக்கிறார். அந்தக் கூட்டத்தில் வைகுண்டராஜனுக்கு என்ன வேலை..? அதோடு மட்டுமல்ல… ‘டாடாவுக்கு கொடுக்கப்போகும் இடத்தில் தனக்கு ஆயிரம் ஏக்கரில் தொழில் செய்ய அனுமதி வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கிறார். அரசும் அவருக்கு ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தாரை வார்க்க ஒப்புக் கொள்கிறது. அதன்பிறகுதான் டாடா திட்டம் கிடப்பில் போடப்படுகிறது. ஜெயலலிதா இப்போது இதில் அதிக அக்கறைக் காட்டுவதன் பின்னணி இப்போது புரிகிறதா.” இணைப்பு
இதற்கு ஜெயலலிதா சார்பில், நைனார் நாகேந்திரன் பதில் அளித்தார். அவர் தனது பதிலில் ” நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் கடந்த 2005ம் ஆண்டு அக்டோபர் 6ம் தேதி கடிதம் ஒன்றை எழுதி அக்கடிதத்தில் டாடா நிறுவனத்தின் சுரங்கப் பணிக்கான ஒப்பந்தம் குறித்தும் அதுதொடர்பாக நிலம் கையகப்படுத்தும் விவரம் குறித்தும், அந்த நிறுவனம் டைட்டானியம் டை ஆக்சைடு தொழிற்சாலை தொடங்குவதால், ஏற்படும் பிரச்சினைகள் குறித்து விளக்கியிருந்தார். இதன் காரணமாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள மக்கள் மற்றும் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கொண்டுள்ள அச்சங்கள் குறித்தும் விவரித்திருந்தார். மேலும் மக்களின் மனக்குறைகளைத் தீர்ப்பதற்கும், டாடா நிறுவனம் தொடங்குவதால், ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும், டாடா நிறுவனம் மட்டுமின்றி தற்போது அங்கு மைனிங் லீஸ் பெற்று தொழில் செய்து கொண்டிருப்பவர்களையும் அழைத்துப் பேசாவிட்டால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் விளக்கியிருந்தார். இதன் அடிப்படையில்தான் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி தொழிற்துறை செயலாளர் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் டாடா நிறுவனத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவே அப்போது அந்தப் பகுதியில் மைனிங் லீஸ் செய்து கொண்டிருந்தவர் என்ற முறையில் வைகுண்டராஜன் கலந்து கொண்டிருக்கிறார். இதற்கு வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் விவரம். டாடா நிறுவனம் நேரடியாக அவர்களுக்கு வேண்டிய நிலத்தை அங்குள்ள மக்களிடம் பேசி விலை கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நில உரிமையாளர்களுக்கு நல்ல விலை கிடைக்கும். வேலை வாய்ப்பைப் பொறுத்தவரை அந்தத் தொழிற்சாலை வருவதால், பாதிப்பு ஏற்படும் மக்களுக்கு வேலை வாய்ப்பு தர வேண்டும். அங்குள்ள நிலத்தை தொழிற்சாலை அமைப்பதற்கு கொடுக்க இருக்கும் கிராம விவசாயிகள், கிராமிய தொழிற் கலைஞர்கள் ஆகியோர் அன்றாட வாழ்க்கை நடத்துவதற்கு டாடா நிறுவனம் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற முடிவுகள் எடுக்கப்பட்டன. ஆனால் மேற்கூறிய கருத்துக்களை டாடா நிறுவனம் ஏற்க மறுத்தது. 29.7.2004 மற்றும் 31.3.2005 ஆகிய நாட்களில் சட்டசபையில், டைட்டானியம் டை ஆக்சைடு திட்டம் குறித்து பேசப்பட்டது. அதன் பின்னர் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர்கள் ஆகியோரின் கருத்துரையின்படி மக்களிடம் இதற்கு எதிர்ப்பு இருக்கின்றது என்று தெரிந்தது. எனவே அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரங்கள் மிகவும் முக்கியம் என்றும் இந்தத் தொழிற்சாலை வரவினால் அப்பகுதி மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்ற அடிப்படையில், ஜெயலலிதாவால் அந்தத் திட்டம் புதுப்பிக்கப்படவில்லை”.
ஆக மொத்தம் இரண்டு கட்சிகளும், மக்கள் சொத்தை தனியாருக்கு பங்கு போட்டுக் கொடுத்து, அதன் மூலம் தங்கள் வளங்களை பெருக்கிக் கொள்ள எப்படியெல்லாம் முயற்சி எடுத்திருக்கிறது என்று பார்த்தீர்களா ?
இப்படி வைகுண்டராஜனுக்கு எதிராக வெகுண்டெழுந்த இதே கருணநிதிதான் முதன் முதலாக வைகுண்டராஜனுக்கு தாது மணல் அள்ள அனுமதி அளித்தது இதே கருணாநிதிதான்.
சரி. அப்போது அளித்து விட்டார். டைட்டானியம் ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தபோது, கடும் கோபத்தோடு அறிக்கை விட்டாரே… அப்போதாவது வைகுண்டராஜனை ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுத்தாரா ?
17 மார்ச் 2008ல் விளவங்கோடு தாலுகா கீழ்மடாலம் பகுதியில் 5.97 ஏக்கர் கனிமம் அள்ள அனுமதி அளித்தது இதே கருணாநிதிதான். 4 மே 2010ல் ராதாபுரம் தாலுகாவில் 5.139 ஏக்கர் நிலத்தில் கனிமம் அள்ளவும், ராதாபுரம் தாலுகா திசையன்விளையில் 9.88 ஏக்கர் கனிமம் அள்ள 10 மே 2010ல் கனிமம் அள்ள அனுமதி அளித்ததும் இதே கருணாநிதிதான்.
சரி.. எல்லாம் வக்கணையாக பேசுகிறாய். இப்போதும் வைகுண்டராஜன் ஜெயலலிதாவின் பினாமி என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்கக்கூடும்.
12 ஆகஸ்ட் 2011 அன்று கீழைக்காரன்தட்டு, லெவிஞ்சிபுரம், செட்டிக்குளம், கூடங்குளம், விஜயாபதி, திருவேம்பலபுரம் மற்றும் ராதாபுரம் ஆகிய இடங்களில் கனிமக் கொள்ளையன் வைகுண்டராஜன் கனிமக் கொள்ளையடிப்பதற்கு, மக்கள் முதல்வர், பொன்மனச் செல்வி, புரட்சித் தலைவி, காவிரித்தாய், சமூகநீதிகாத்த வீராங்கனை என்று பரவலாக அழைக்கப்படும் கொடநாடு கோமலவள்ளி என்கிற ஜெயலலிதா, 300 ஹெக்டேர் அல்லது 741.316 ஏக்கர் நிலத்தை அண்ணாச்சிக்கு வழங்கியிருக்கிறாரே….. எதற்காக ?
இப்படி ஒட்டுமொத்தமாக 741.316 ஏக்கர் நிலங்கள் யாருக்கும் இது வரை குத்தகைக்கு கனிமம் அள்ள தமிழக வரலாற்றிலேயே வழங்கப்பட்டது கிடையாது தெரியுமா ?
இப்போது புரிகிறதா எதற்காக, சகாயம் விசாரிக்கக் கூடாது என்று துடிக்கிறார் ஜெயலலிதா என்று..
வைகுண்டராஜனுக்கு 1991 ஜெயலலிதா காலம் முதல் இன்று வரை எத்தனை கனிம குவாரிகள் அள்ளி வழங்கப்பட்டுள்ளன என்பதை பாருங்கள். பார்த்து விட்டு நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். யாருக்கு யார் பினாமி என்று….. .. ?
இந்த புதிய சொத்துக் குவிப்பு ஆதாரங்கள் குறித்து சவுக்கிடம் பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் “1991ம் ஆண்டு முதல் 1996 வரை, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றத்துக்காகத்தான் 18 ஆண்டுகளாக வழக்கை எதிர்கொண்டார்கள். தற்போது சவுக்கில் வெளிவந்திருக்கும் ஆதாரங்கள் பதைபதைக்க வைக்கின்றன. இது மிக மிக தீவிரமான ஒரு குற்றச்செயல்.
எதிர்க்கட்சிகள் இதை கையில் எடுத்து தீவிரமாக போராட்டத்தில் இறங்க வேண்டும். ஆனால், தாம்பாளத்தில் வைத்து, எதிர்க்கட்சிகள் கையில் இப்படியொரு ஆதாரங்கள் கொடுக்கப்பட்டும், இந்த ஆதாரங்களை அவைகள் பயன்படுத்திக் கொள்ளாமல், மவுனமாக இருப்பது வேதனையை அளிக்கிறது.
தமிழகம் மிக மிக ஒரு மோசமான சூழலில் இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. இது தொடர்பாக முக்கிய எதிர்க்கட்சியான திமுக வாயே திறக்காமல் இருப்பது வியப்பை அளிக்கிறது. அவர்களின் மவுனம் புதிராக உள்ளது” என்றார்.
ஊழலைப் பற்றி பேச திமுகவுக்கு என்ன அருகதை இருக்கிறது என்று அதிமுக முகாமில் இருந்து வரும் எதிர்கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்வார்கள் ? அதனால்தான் கள்ள மவுனம் காக்கிறார்கள்.
சரி. நமக்கென்ன இருக்கிறது. ஊழல் பேர்வழிகள் எந்த முகாமைச் சேர்ந்தவர்களாக இருந்தால் என்ன ?
தொடர்ந்து அம்பலப்படுத்துவோம். விடாது சவுக்கு.
தொடரும்.