தண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை
கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ? என்றான் பாரதி.
இதே போன்ற வேதனையான நிலையில்தான் தமிழகம் இன்று இருக்கிறது. இந்தியாவில் எங்கும் காணப்படாத வகையில் ஒரு அசாதாரண சூழல் தமிழத்தில் நிலவுகிறது. ஒரு மாநிலத்தின் முதல்வர், முதல்வர் பதவியைக் கூட ராஜினாமா செய்யாமல், குற்றம் சாட்டப்பட்டவராக நீதிமன்றம் செல்கிறார்.
அவர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்நோக்கிக் செல்கையில், பாரத ரத்னா விருது பெறுவதற்கு செல்வது போல, அவர் கட்சியின் ஆயிரக்கணக்கான அடிமைகள் கூடி நின்று வாழ்த்துப்பா பாடுகின்றனர். தொண்டர்களை மகிழ்வோடு பார்த்து கையசைக்கிறார். நீதிமன்றத்தில் தீர்ப்பு தனக்கு எதிராக வரும் என்று துளியும் எண்ணமின்றி, இறுமாப்போடு நீதிமன்றம் செல்கிறார். குற்றவாளி என்று தீர்ப்பளித்த தகவல் வெளியானதும் அக்கட்சியின் அடிமைகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர், அழுது அரற்றுகின்றனர், வன்முறையில் இறங்குகின்றனர். தீக்குளிக்கின்றனர். பொதுமக்களை கடும் சிரமத்துக்குள்ளாக்குகின்றனர். நகராட்சி கூட்டங்களில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு எதிராக தீர்மானம் இயற்றுகின்றனர். நீதிபதியை அவதூறு பேசுகின்றனர். இதை கடுமையாக கண்டித்திருக்க வேண்டிய மேலமை நீதிமன்றங்கள் கூட கனத்த மவுனம் காக்கின்றன.
ஜெயலலிதா சிறையில் இருந்த 21 நாட்களும், தமிழகத்தில் பெரும் வன்முறையை நிகழ்த்த இருந்த திட்டம், சில நல்ல காவல்துறை அதிகாரிகளால் தடுக்கப்பட்டன.
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டபோதும், நீதித்துறை குறித்து, வரலாறு காணாத அளவுக்கு கடுமையான விமர்சனங்கள் வெளிப்படையாக எழுந்தன. இந்த அத்தனைக் கூத்துக்களையும், ஒட்டு மொத்த இந்தியாவும் வேடிக்கைப் பார்த்தது.
தண்டனை கிடைத்த உடன் தன் தலைமை அடிமை ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக நியமித்தார் ஜெயலலிதா. அமைச்சரவை பதவியேற்றது. அந்த அமைச்சரவை தளும்பும் கண்ணீரோடு, உலகின் தலைச்சிறந்த நடிகர்களை விஞ்சும் வகையில் பதவியேற்றபோது, இந்தியாவே நகைத்தது.
அப்படி பதவியேற்ற அரசாங்கத்தின் அமைச்சர்களும், முதலமைச்சர்களும், அரசுப் பணியாற்றாமல், பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறை வாசலிலயே காத்திருந்ததையும், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து நின்றதையும், இந்தியா நகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தது. பரப்பன அக்ரஹாரா சிறைக்கு செல்லும் அமைச்சர்களின் ஒவ்வொரு பயணமும், அரசு செலவில், மக்கள் வரிப்பணத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. அடிமை அமைச்சர்கள் சிறைக்கு ஜெயலலிதாவை பார்க்கச் செல்வதைக் கூட ஒரு வகையில் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் படித்த அதிகாரிகள் ????
படித்த அதிகாரிகள், தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக, மக்கள் வரிப்பணத்தில், விமானம் பிடித்து பெங்களுரு சென்றனர். சிறை தண்டனை காரணமாக கடுமையான மன அழுத்தத்தில் இருந்த ஜெயலலிதா, ஒருவரையுமே பார்க்கவில்லை. ஆனாலும் விடாமல் அதிகாரிகள், சாரி சாரியாக சென்று, சிறை வளாக வாசலில் கூச்ச நாச்சமே இல்லாமல் காத்திருந்தனர். படிச்சவன் சூதும் வாதும் பண்ணா போவான் போவான் அய்யோன்னு போவான் என்றார் பாரதி. ஆனால், இந்த படித்த அதிகாரிகளை எவ்வித பழிபாவங்களும் அச்சுறுத்தவில்லை. பதவி என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில், துளியும் வெட்கமேயின்றி ஜெயலலிதாவின் தரிசனம் கிடைக்காது என்று தெரிந்தும் காத்துக் கிடந்தனர்.
அமைச்சர்களோ, சிறை வாசலில் மிகுந்த சோகம் ததும்பியபடி காத்துக்கிடப்பது போல நடித்தனர். தமிழகத்தில் நாள்தோறும், ஜெயலலிதாவின் சிறைத் தண்டனையைத் தாங்க முடியாத பொதுமக்கள் தீக்குளித்தும், அதிர்ச்சியிலும் மரணமடைந்த செய்தியை நாள்தோறும் ஊடகங்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தன.
இந்தியாவில் பல்வேறு வழக்குகளில், லட்சக்கணக்கானோர், ஜாமீன் கிடைக்காமல், ஆண்டுக்கணக்கில் பல்வேறு சிறைகளில் வாடிக்கொண்டிருக்கிறார்கள். பல ஆயிரக்கணக்கானோர் வெறும் விசாரணைக் கைதிகளாகவே வாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில், ஊரை அடித்து உலையில் போட்ட ஒரு சமூக விரோத அரசியல் தலைவிக்கு ஜாமீன் வழங்கி குளிர்வித்தது உச்சநீதிமன்றம். சிலரை ஜாமீனில் வெளியே விட்டால் சில தவறுகளை இழைப்பார்கள் என்று நீதிமன்றங்கள் ஜாமீன் மறுப்பதுண்டு. அதே போன்றதொரு தவறை ஜெயலலிதா நிகழ்த்த உச்சநீதிமன்றம் உறுதுணையாக இருந்தது. சிறையிலிருந்து வெளிவந்த ஜெயலலிதா இன்று நிழல் முதல்வராக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்.
சிறையில் இருந்து மிகுந்த படோடாபத்தோடு வெளியேறினார் ஜெயலலிதா. சுதந்திரப் போராட்ட காலத்தில் சிறை சென்ற, காந்தி, நேரு, பகத்சிங், வல்லபாய் பட்டேல், வஉசிதம்பரம் ஆகியோருக்கு கிடைக்காத வரவேற்பை ஒரு ஊழல் அரசியல்வாதிக்கு வழங்கினார்கள் அதிமுக அடிமைகள்.
சிறையிலிருந்து வெளி வந்த 15 நாட்களுக்கு, ஜெயலலிதா அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவேயில்லை. நம்மைப் போல ஒரு பலம் பொருந்திய அரசியல்வாதி சிறை செல்ல முடியுமா ? நாம் யார்….? எப்பேர்ப்பட்ட பலம் வாய்ந்த ஒரு மாபெரும் எழுச்சி மிக்க தலைவி. நம்மையா சிறையில் அடைத்து விட்டார்கள் என்று அவரால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவே முடியவில்லை. சென்னை திரும்பிய வழிநெடுக கொட்டும் மழையையும் பொருட்படுட்த்தாமல் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததைப் பார்த்து புன்முறுவல் பூத்தாலும், உள்ளுக்குள் கடுமையாக பயந்துபோய் இருந்தார் ஜெயலலிதா. அவர் செய்த யாகங்கள், பூஜைகள், புனஸ்காரங்கள், தானங்கள், சடங்குகள், அவர் நம்பிய சோதிடர்கள், அனைத்தும் கைவிட்டு விட்டனவே என்று அவர் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.
இது தவிரவும், உறுதி செய்ய முடியாத மற்றொரு தகவலும் உலவுகிறது. ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியின் வேந்தர் வெங்கடாச்சலம், சசிக்கலா, இளவரசி ஆகியோர் எப்படியாவது பெங்களுரு சிறப்பு நீதிபதி குன்ஹாவை விலைக்கு வாங்கி விடலாம் என்று கடும் முயற்சி எடுத்ததாகவும், அவர்களின் விரக்தியை பயன்படுத்திக் கொண்ட கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு மோசடிப் பேர்வழி, 2000 கோடி வாங்கிக் கொண்டு, குன்ஹாவின் தீர்ப்பு இதுதான் என்று ஒரு 16 பக்க ஆவணத்தை வழங்கியதாகவும், அதை அப்படியே நம்பிய மன்னார்குடி மாபியா கூட்டம், அதை ஜெயலலிதாவிடம் காண்பித்ததாகவும், உலகில் பணத்துக்கு விலைபோகாத நபர்கள் ஒருவர் கூட இருக்க முடியாது என்ற இறுமாப்பிலேயே வளர்ந்த ஜெயலலிதா, அதை அப்படியே நம்பியதாகவும், அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே, 27 செப்டம்பர் அன்று பரப்பன அக்ரஹாரா சென்று நீதிமன்ற வாசலில் இறங்கியதும், கைக்கடியாரத்தில் மணியைப்பார்த்து விட்டு, நாம் 12.30 மணிக்கு கிளம்பப் போகிறோம் என்று வாகன ஓட்டுனரிடம் கூறியதாகவும் கூறப்படுகிறது. இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆனால் சரியாக 11.04 மணிக்கு நீதிபதி குன்ஹா ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவித்ததும், அடுத்த வினாடி, சசிகலாவை பார்த்து முறைத்திருக்கிறார். அப்போது நீதிமன்றத்தில் இருந்தவர்களுக்கு, அது வரை, தாம் தண்டிக்கப்படப் போகிறோம் என்பதே ஜெயலலிதாவுக்கு தெரியாது என்பதையும் உணர்ந்தனர். மேலும், தான் தண்டிக்கப்படப் போகிறோம் என்பதை ஜெயலலிதா உணர்ந்திருந்தால், சென்னையில் உள்ள ஏதாவது ஒரு மருத்துவமனையில் படுத்துக் கொண்டு, முதுகுவலி, முட்டி வலி, மூக்கு வலி என்று ஏதாவது ஒரு கதையை அளந்து விட்டிருப்பார்.
ஜெயலலிதா எத்தனை பெரிய சாடிஸ்ட் என்பதற்கான உதாரணம், ஜெயலலிதா சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே தெரிந்தது. தன் தண்டனைச் செய்தி கேட்டு, தற்கொலை செய்து கொண்ட அல்லது, அதிர்ச்சியில் மரணமடைந்த 193 பேருக்கு தலா மூன்று லட்ச ரூபாயை நிவாரணமாக அறிவித்தார் ஜெயலலிதா. இப்படி ஜெயலலிதா நிவாரணம் அறிவித்தது ஒரு விஷயத்தை தெள்ளத் தெளிவாக உறுதி செய்தது. தான் சிறையில் இருந்தபோது நடைபெற்ற போராட்டங்கள், தீக்குளிப்புகள், வன்முறைகள் ஆகிய அனைத்தையும் ஜெயலலிதா அணு அணுவாக ரசித்திருக்கிறார் என்பதே அது. வன்முறைகளை கட்டுப்படுத்தச் சொல்லுங்கள் என்று உச்சநீதிமன்றம் வெளிப்படையாக உத்தரவிட்ட பிறகு, மறுநாளே வன்முறைகளை நிறுத்துங்கள் என்று சிறையில் இருந்தபடியே அறிக்கை வெளியிடத் தெரிந்த ஜெயலலிதாவுக்கு 20 நாட்களாக, தொடர்ந்த வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று தோன்றவேயில்லை என்பது, அவர் எப்படிப்பட்ட ஆளுமை உடையவர் என்பதை உணர்த்துகிறது. தன் பொருட்டு, வன்முறைகளும், தீக்குளிப்புகளும், அசாதராண மரணங்களும் நிகழ்கையில் அதை அணு அணுவாக ரசிக்கும் ஒரு மனிதப்பிறவி, மோசமான மன நோயாளியாக மட்டுமே இருக்க முடியும். அத்தகைய மரணங்களை ஆதரிக்கும் வகையில், அந்த மரணங்களுக்கு மூன்று லட்ச ரூபாய் நிவாரணம் வழங்குவது என்பது, வக்ரம் பிடித்த மனதின் வெளிப்பாடேயன்றி வேறு அல்ல. இதற்கு ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியும். நான் மீண்டும் சிறை சென்றால், எத்தனை பேர் தீக்குளிக்கிறீர்களோ, எத்தனை பேர் அதிர்ச்சியில் மரணமடைகிறீர்களோ, அவர்கள் குடும்பத்துக்கு நான் மீண்டும் நிவாரணம் வழங்குவேன் என்பதே அந்தப் பொருள்.
பெருத்த வரவேற்போடு சென்னை திரும்பிய ஜெயலலிதா ஒருவரையுமே சந்திக்கவில்லை. முதல் இரண்டு நாட்களில் பன்னீர் செல்வத்தை மட்டுமே சந்தித்தார். அப்போதும் ஓரிரு வார்த்தைகளோடு அவர் திருப்பி அனுப்பப்பட்டார்.
அடுத்த 15 நாட்களுக்கு ஜெயலலிதா யாரையுமே சந்திக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு பிடித்தமான பான்டிட் குயின் ஷீலா பாலகிருஷ்ணனைக் கூட சந்திக்கவில்லை.
ஆனால் அதற்குப் பிறகுதான் பரபரப்படைந்தது மாநிலம். தன் மனஅழுத்தத்திலிருந்து விடுபட்ட ஜெயலலிதா, ஆட்சியில் இருந்ததை விட பன் மடங்கு வீராவேசம் கொண்டு காரியங்களை நிகழ்த்தி வருகிறார். நிர்வாகம் முழுமையாக ஜெயலலிதா கட்டுப்பாட்டின் கீழாகவே இயங்குகிறது.
ஜெயலலிதா கட்டுப்பாட்டை கையில் எடுத்த உடனடியாகவே, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளின் மாறுதல் உத்தரவுகள் வரிசையாக வெளியிடப்படுகின்றன. அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் வரிசைகட்டி போயஸ்தோட்டத்தின் வாசலில் காத்திருக்கின்றனர்.
அரசாங்கத்தின் அனைத்து கோப்புகளும், ஜெயலலிதாவிடம் அனுப்பப்படுகின்றன. ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கும் ஷீலா பாலகிருஷ்ணன், ஒட்டுமொத்த நிர்வாகத்தையும் ஆட்டிப் படைக்கிறார். ஏறக்குறைய முதியோர் இல்லம் போலவே அரசு இயந்திரம் காட்சி அளிக்கும் வகையில், படித்த பணியில் உள்ள அதிகாரிகளை, ஓய்வு பெற்ற அதிகாரிகள் அதிகாரம் செய்கின்றனர்.
ஒரு தண்டனைப் பெற்ற கைதியிடம் கைகட்டி நிற்கிறோமே என்று எவ்விதமான கூச்சநாச்சமும் இல்லாமல் படித்த அதிகாரிகள், கைதியின் முன்னால் இடுப்பை வளைத்து சேவகம் செய்கிறார்கள்.
ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி, ஒரு மாநிலத்தையே நிர்வகிக்கிறார். உத்தரவிடுகிறார். உருட்டி மிரட்டுகிறார். இப்படிப்பட்ட ஒரு அவலச் சூழல், தமிழகத்துக்கு என்றுமே நேர்ந்தது கிடையாது.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், இந்த அரசை பினாமி அரசு என்றார் அவர் வெளியிட்ட அறிக்கையில், “தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு, பினாமி அ.தி.மு.க., அரசு என, தி.மு.க.,வினர் அழைக்கின்றனர். பினாமி என்றால், உரிமை கொண்டாட ஒருவர் இருப்பார்.
உண்மையான உரிமை, வேறொருவரிடம் இருக்கும். தமிழகத்தில், தற்போதுள்ள முதல்வர் அப்படித்தானே இருக்கிறார். நிர்வாகத்திற்கு தலைமையேற்று நடத்த வேண்டியவர், தலைமை செயலர். தற்போது, அவர் பெயருக்கு தான் இருக்கிறாரே தவிர, அதிகாரம், முன்னாள் தலைமை செயலராக இருந்து, தற்போது ஆலோசகராக இருப்பவரிடம் தான் உள்ளது. அதுபோல, காவல் துறையிலும் ஆலோசகர் வந்து விட்டார். எனவே, ‘பினாமி அரசு’ என்பது தான், இந்த அரசுக்கு பொருத்தமான ஒன்று.”
உடனே வெகுண்டெழுந்து மறுப்பறிக்கை வெளியிட்ட பன்னீர்செல்வம், “ஆலோசகர்களிடம் அதிகாரம் இருப்பதாக தனது அறிக்கையில் கற்பனை செய்துள்ளார். ஆலோசகருக்கு உள்ள கடமைகள் வேறு; தலைமைச் செயலாளருக்கு உள்ள கடமைகள் வேறு; காவல் துறை தலைமை இயக்குநருக்கு உள்ள கடமைகள் வேறு; இந்த வித்தியாசங்கள் எல்லாம் தெரியாவிட்டால் இது போன்று தன்னையும் குழப்பிக்கொண்டு மற்றவர்களையும் குழப்ப எத்தனிக்கவேண்டும் தான்.
தலைமைச் செயலாளர் என்னென்ன கோப்புகளைப் பார்க்க வேண்டும்? முதல்–அமைச்சருக்கு கோப்புகளை எவ்வாறு அனுப்ப வேண்டும்? என்பது பற்றியெல்லாம் அரசின் அலுவல் விதிகள் மற்றும் தலைமைச் செயலகப்பணி விவரங்கள் ஆகியவற்றில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆலோசகர் என்பவர் அரசுக்கும், முதல்–அமைச்சருக்கும் பல்வேறு கொள்கை முடிவுகளில் ஆலோசனை வழங்குபவர் ஆவார். அரசின் கோப்புகளை ஆலோசகர் பார்ப்பதும் இல்லை. அதில் கையெழுத்து இடுவதும் இல்லை. முதல்–அமைச்சராக இருந்த போது இதை பற்றி அவர் கேட்டு தெரிந்திருந்தால் இது போன்ற ஒரு ஐயப்பாடு எழ வாய்ப்பில்லை.
மத்திய அரசிலும் ஆலோசகர் பதவி இருப்பது கருணாநிதிக்கு தெரியுமா? தெரியாதா? தி.மு.க அங்கம் முற்போக்கு கூட்டணி அரசில் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் ஆலோசகர் என்ற பதவிகள் இருந்தனவே.”
எப்படிப்பட்ட கேடுகெட்ட அரசு தமிழக அரசு என்பதற்கு பன்னீர்செல்வத்தின் விளக்கமே சாட்சியம்.
மத்திய அரசில் உள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவியும், தமிழகத்தில் ராமானுஜம் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசகர் பதவியும் ஒன்றாம். சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆலோசகர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள் தெரியுமா ? சட்டீஸ்கர், பஞ்சாப், காஷ்மீர் போல் தீவிரவாதத்தால் பாதிக்கபபட்டுள்ள மாநிலங்களில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு, அந்தத் துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களை நியமிப்பார்கள்.
தமிழகம் என்ன தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டா இருக்கிறது ? இப்படி ஒரு பதிலை கூசாமல் சொல்கிறார் பன்னீர்செல்வம்.
நேர்மையான அதிகாரி என்று பெயரெடுத்த ராமானுஜமோ, அரசுத் துறை சார்பாக முதலமைச்சர் நடக்கும் கூட்டங்களில் கூச்ச நாச்சமே இல்லாமல் அமர்ந்திருக்கிறார். பன்னீர்செல்வம் நடத்தும் அனைத்துக் கூட்டங்களிலும் தவறாமல் இடம் பெறுபவர்கள் யார் தெரியுமா ? தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், முதலமைச்சரின் செயலாளர்கள் ஷீலா பிரியா, ராமலிங்கம், ராம் மோகன் ராவ், வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன், மற்றும் ராமானுஜம்.
இதில் ஷீலா ப்ரியா, ஷீலா பாலகிருஷ்ணன், வெங்கட்ரமணன் மற்றும் ராமானுஜம் ஆகியோர் ஓய்வு பெற்றவர்கள். மற்றவர்கள் முதுகெலும்பை விற்று விட்ட அடிமைகள்.
இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு என்ன வேலை தெரியுமா ? பன்னீர்செல்வம் எத்தனை முறை, தலையை சொரிந்தார். எத்தனை முறை கீழே குனிந்தார். எத்தனை முறை, புரட்சித் தலைவி அம்மா என்ற வார்த்தையை பயன்படுத்தினார் என்பதை கவனித்து ஜெயலலிதாவிடம் சொல்வதுதான். பன்னீர்செல்வம் இரண்டு முறை தலையை சொறிந்து இருந்தாரென்றால், ஜெயலலிதாவை தனித்தனியாக சந்திக்கும் ஷீலா பாலகிருஷ்ணன், ராமானுஜம், ஷீலா பிரியா ஆகிய அனைவரும், ஒரே மாதிரி சொல்ல வேண்டும். ஒரு வேளை இதில் ஏதாவது பிசகு இருந்தால், உடனடியாக பன்னீர்செல்வம் நீக்கப்படுவார்.
இப்படியொரு கேலிக்கூத்து எந்த மாநிலத்திலாவது நடக்குமா ? ஏற்கனவே ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் பதவியை அனுபவித்த ராமானுஜத்துக்கு, மீண்டும் அரசுக் கூட்டங்களில் பங்கேற்க உடம்பு கூச வேண்டாமா ? இது ஜெயலலிதாவின் தனியார் நிறுவனமா என்ன ? அரசு அல்லவா ? ராமானுஜத்தை ஜெயா டிவியின் ஆலோசகராகவோ, அல்லது அதிமுக அடிமைகளின் ஆலோசகராகவோ நியமித்துக் கொள்ள, ஜெயலலிதாவுக்கு எல்லா உரிமைகளும் உள்ளது. அதை கேள்வி கேட்கவும் நமக்கு உரிமை கிடையாது. ஆனால், இது மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் அரசு அல்லவா ? எப்படி இந்த பச்சை அயோக்கியத்தனத்தை ஏற்றுக் கொள்ள முடியும் ?
இதுமட்டமல்ல தோழர்களே. சவுக்கு தளத்தில், ஜெயலலிதாவின் புதிய சொத்துக்குவிப்பு வழக்கு குறித்து, தொடர்ந்து எழுதப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. அந்தக் கட்டுரைகளில் வெளியிடப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், முக்கியமான ஆதாரங்கள். மறுக்க முடியாத ஆதாரங்கள். ஆனால், இந்த ஆதாரங்களின் அடிப்படையில், போராட்டத்தில் இறங்கி, அதிமுகவை கடுமையாக எதிர்க்க வேண்டிய அரசியல் கட்சிகளோ, கனத்த மவுனம் சாதிக்கின்றன. ஜெயலலிதா சிறையில் இருந்தவரை, தினமும் இரண்டு அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்த ராமதாஸோ, பல் பிடுங்கிய பாம்பு போல இருக்கிறார். மதிமுகவின் வைகோவோ, விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேச உரிமை பெற்றுத் தந்தது நான்தான். ஆனால் நான் அதற்காக ராயல்டி கோர மாட்டேன் என்று பேசிக்கொண்டிருக்கிறார். 2016ல் தமிழகத்தில் கால் பதிக்க தீவிர முனைப்பில் உள்ள பிஜேபியோ, திக்குத் தெரியாத காட்டில் விழித்துக் கொண்டிருக்கிறது. ஆம் ஆத்மி பார்ட்டியோ, சரியான தலைமை இல்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறது.
களத்தில் இறங்கிப் போராட வேண்டிய திமுகவோ, 2ஜி ஊழலை நினைத்து அஞ்சி அமைதியாக இருக்கிறது. ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளியான ஜெயலலிதாவின் படங்கள் அனைத்து அரசு அலுவலகங்களையும் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. இதை எதிர்த்து கூட்டுப் போராட்டங்களை நடத்த வேண்டிய எதிர்க்கட்சிகள், அறிக்கை விடுவதோடு தங்கள் கடமை முடிந்து விட்டதென அமைதி காத்த வண்ணம் இருக்கின்றன. இந்த தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் புகைப்படம், அம்மா உணவகம், அம்மா குடிநீர் என்று மக்கள் வரிப்பணத்தில் செயல்படும் அனைத்துத் திட்டங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கிறது. இது குறித்து நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்தாலோ, விரைந்து நடவடிக்கை எடுக்கவும் என்று மேம்போக்காக தீர்ப்பளிக்கிறது நீதிமன்றம்.
சரி. ஊடகங்களாவது இந்த அநியாயங்கள் குறித்து எழுதுமென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து ஊடகங்களும் கோமா நிலைக்கு சென்று விட்டன. ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு வார்த்தை எழுதுவதற்கு அஞ்சி நடுங்குகின்றன.
இது குறித்துப் பேசிய ஒரு மூத்த பத்திரிக்கையாளர் “இந்த அசாதாரண சூழலில் நான் முக்கிய எதிர்க்கட்சியான திமுகவைத்தான் குறை கூறுவேன். இந்த மோசமான நிலையை எதிர்த்துப் போராட வேண்டிய கடமை அவர்களுக்குத்தான் இருக்கிறது ” என்றார். திமுக மீதும் 2ஜி ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றதே என்றதற்கு, “ஆ.ராசா மற்றும் கனிமொழி திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள். திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அதன் பொருளாளர் ஸ்டாலின் மீது எந்தக் குற்றப்பத்திரிக்கையும் நிலுவையில் இல்லை. இப்படிப்பட்ட நிலையில், திமுக களமிறங்கி போராடுவதை எது தடுக்கிறது” என்று கேட்டார்.
திமுக ஒரு வேளை போராட்டம் நடத்தினால், அது அதிமுகவுக்கு அனுதாபத்தில் சென்று முடியாதா என்று கேட்டதற்கு, “எப்படி இருந்தாலும் திமுகவுக்கு தோல்வி என்று ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அமைதியாக இருந்து தோற்பதற்கு, போராடித் தோற்றுப் போகலாமே…. அதுதானே ஒரு அரசியல் கட்சிக்கு அழகு” என்றார். மேலும் அவர் ” 6 ஏப்ரல் 1995 அன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சிவராஜ் பாட்டீல் முன்பு, ஆளுனர் சென்னா ரெட்டி வழக்கு தொடர அனுமதி அளித்தது தவறு என்று ஜெயலலிதா தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின்போது ஆஜராகி தன் வாதத்தை தொடங்கிய சுப்ரமணியன் சுவாமி A pre-Nazi situation prevails in Tamil Nadu today – தமிழகத்தில் நாஜிக் காலத்துக்கு முந்தைய காலகட்டம் நிலவுகிறது என்று வாதாடினார். அதே போல நாஜிக் காலகட்டத்துக்கு முந்தைய சூழல்தான் இப்போதும் நிலவுகிறது. ஊடகங்கள் மவுனித்து விட்டன. ஜாமீனில் உள்ள ஒரு கைதியின் மனம் குளிர்வது போல செய்திகளை வெளியிடுவதில் முனைப்பு காட்டுகின்றன.
ஆனால் இதையெல்லாம் விட மிகப் பெரிய ஆபத்தாக நான் பார்ப்பது, அதிகாரிகளின் நடத்தைகளைத்தான். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நடக்க வேண்டிய அதிகாரிகள், தங்கள் மனசாட்சியை துறந்து, நல்ல பதவியில் நீடிக்க வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக, எந்த அளவுக்கும் கீழிறங்க தயங்காமல் இருக்கிறார்கள். தங்கள் சுயமரியாதையையும், தங்கள் பதவிக்கு உள்ள மரியாதையையும் சற்றும் நினைத்துப் பாராமல் ஒரு தண்டிக்கப்பட்ட கைதியின் கடைக்கண் பார்வைக்காக காத்து நிற்கிறார்கள்.
ஆலோசகர்கள் என்ற பெயரில், ஓய்வுபெற்ற அதிகாரிகள், எவ்விதமான கட்டுப்பாடும் இன்றி அதிகாரம் செலுத்தி வருகிறார்கள். இது மிக மிக ஒரு ஆபத்தான சூழல். சட்டம் ஒழுங்கு டிஜிபி செய்யும் தவறையும் அரசுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய பொறுப்பில் இருக்கும் உளவுத்துறை டிஜிபி பதவிக்கும், சட்டம் ஒழுங்கு டிஜிபி பதவிக்கும் ஒரே நபரை நியமித்து, ஆட்சி நிர்வாகத்தையே கேலிக்கூத்தாக்கினார் ஜெயலலிதா. தற்போது அதையும் மீறி, ஓய்வுபெற்ற ஒருவரை, காவல்துறை பணிகளை மேற்பார்வை செய்யும் பொறுப்பில் நியமித்திருக்கிறார்.
ஆலோசகர்களுக்கு என்ன பொறுப்பு என்பது தெளிவாக வரையறுக்கப்படாத நிலையில், எல்லா முடிவுகளிலும் ஆலோசகர்கள் தலையிட்டு வருகிறார்கள். இந்த அவல சூழலை கேள்வி கேட்க வேண்டிய எதிர்க்கட்சிகளும் அமைதி காப்பதுதான் இந்த சூழலை மேலும் ஆபத்து மிகுந்ததாக ஆக்குகிறது” என்றார்.
அவர் சொல்லியதில் எவ்விதமான மிகைப்படுத்தலும் கிடையாது. இன்று ஒரு ஆபத்தான சூழலில்தான் தமிழகம் இருக்கிறது. சட்டப்பேரவை கூட்டப்பட்டால் அதில் ஏற்கனவே ஜெயலலிதா அமர்ந்த இருக்கையில் பன்னீர்செல்வம் அமர்ந்து விடக்கூடாதே என்ற வகையில் அவர் இருக்கையே அகற்றப்படுகிறது. மக்கள் முதல்வரின் ஆலோசனைப்படி என்று கேலிக்குரிய வகையில் அரசு அறிக்கைகள் வெளியிடப்படுகின்றன.
தமிழகத்துக்கு வர வேண்டிய முதலீடுகளை அண்டை மாநிலங்கள் பறித்துச் செல்கின்றன. வரும் நிதியாண்டில் தமிழகத்தில் நிதிப்பற்றாக்குறை, 10 ஆயிரம் கோடியைத் தாண்ட இருக்கிறது. இந்தப் பற்றாக்குறைக்கு பெருமளவில், தமிழக மின்வாரியம் தினந்தோறும் வாங்கும் தனியார் மின்சாரம் காரணமாக இருக்கிறது. புதிய மின்திட்டங்களை வேண்டுமென்றே கிடப்பில் போட்டு இழுத்தடிக்கும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை சட்டப்பேரவையில் அவை முன்னவராக நியமித்து உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா.
இருப்பதிலேயே பெரும் ஊழல் பேர்வழிகளுக்கு மேலும் மேலும் பதவிகளை வழங்கி ஊக்குவிப்பதன் மூலம், எனக்கு வசூல் செய்து தருபவர்கள் மட்டுமே இந்த ஆட்சியில் நீடிக்க முடியும் என்பதை வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார் ஜெயலலிதா. நான் நெருப்பாற்றில் நீந்துகிறேன் என்று சொன்ன ஜெயலலிதா உண்மையில் பணத்தாற்றில்தான் நீந்திக்கொண்டிருக்கிறார்.
தமிழக அரசு வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்களின்படி, தன்னுடைய ஜோதிடர்களின் கணிப்புப்படி, மே மாதத்திற்கு முன்னதாக, தமிழகத்தின் முதல்வராக மீண்டும் அமர்வோம் என்று ஜெயலலிதா மீண்டும் கனவு காணத் தொடங்கியுள்ளார். இந்த அடிப்படையிலேயே உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் மே 2015ல் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு
அந்த மாநாட்டில் முதல்வராக தான் கலந்து கொள்வோம் என்று உறுதியாக நம்புகிறார் ஜெயலலிதா. இப்படித்தான் ஜொதிடர்கள் செப்டம்பர் மாதமும் விடுதலை என்று சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அடிப்படையிலேயே பினாமி அரசை முழு வீச்சோடு நடத்திக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. இதற்கான விடிவுகாலம் விரைவில் வருமெனத் தோன்றவில்லை. ஆனால், பெரும்பாலானோரின் எதிர்ப்பார்ப்புளை பொய்யாக்கி ஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியதுதான் இந்திய நீதித்துறை மற்றும் இந்திய ஜனநாயகத்தின் பலம்.
அந்த வகையில் நம்பிக்கையோடு காத்திருப்போம்.
Already subscribed your site several times and I’m not getting any confirmation mail… If possible could you pls make pdf files and seed as torrent files. Many thanks.
I’m visiting this page using proxysite