கடந்த பதினைந்து நாட்களாக, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது குறித்து, தமிழ்நாட்டில் அனல் பறக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. கடந்த வாரம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்வது தொடர்பாக தனியான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார். இணைப்பு
மற்ற எதிர்க்கட்சிகளும் தனியார் மின் கொள்முதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று குரல் கொடுக்கத் தொடங்கின. இந்த நிலையில்தான், எவ்வித காரணமும் இன்றி, தலைமைச் செயலாளராக இருந்த மோகன் வர்கீஸ் சுங்கத் மாற்றப்பட்டு அவர் இடத்தில் ஞானதேசிகன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். ஞானதேசிகனை விட பணியில் மூத்த 13க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இருக்கையில், எதற்காக ஞானதேசிகனை தலைமைச் செயலாளராக நியமிக்க வேண்டும் என்று யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
தமிழக அரசில், தலைமைச் செயலாளர் அந்தஸ்துக்கு நிகராக மற்றொரு பதவி இருக்கிறது. அந்தப் பதவியின் பெயர் Vigilance Commissioner and Commissioner for Administrative Reforms. விழிப்புப் பணி மற்றும் நிர்வாகச் சீர்திருத்த ஆணையர். தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர்களை மட்டுமே இப்பதவியில் நியமிப்பார்கள். தொண்ணூறுகளில் இந்தப் பதவியில் நல்ல அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்கள். 2001 வரை இந்த நிலையே நீடித்தது. 2001 ஜெயலலிதா ஆட்சிக்காலம் என்று நினைவு. யார் தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார்களோ, அவர்களை விழிப்புப் பணி ஆணையர் பதவியையும் கூடுதலாக கவனிக்கும்படி உத்தரவு வழங்கப்பட்டது. அது இன்று வரை தொடர்கிறது.
தனியார் மின் வாங்குதலில் ஊழல் என்றால் அதை விசாரிக்க வேண்டியது தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை. இந்தத் துறை, விழிப்புப் பணி ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை எந்த விசாரணையை மேற்கொள்வதாக இருந்தாலும், விழிப்புப் பணி ஆணையரின் அனுமதி பெற்ற பிறகே மேற்கொள்ள முடியும். அதுவும் குறிப்பாக, ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு எதிரான விசாரணை என்றால், தலைமைச் செயலாளர், விழிப்புப் பணி ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட துறையின் செயலாளர் ஆகிய மூவரும் அமர்ந்து முடிவெடுத்தால் மட்டுமே, பூர்வாங்க விசாரணையே நடைபெறும். இது உச்சநீதிமன்றம் விநீத் நாராயண் வழக்கில் வழங்கிய தீர்ப்புக்கும், மத்திய அரசின் சட்டம் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களுக்கு நேர் எதிரானது. இத்தகைய விதிமுறைகளை வலியுறுத்தும், அரசாணை எண் 2187 பொது (சிறப்பு ஏ) துறை நாள் 20.12.1988, அரசாணை எண் 1 (டி) பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம் (பணியாளர் என்) துறை நாள் 28.01.1992 மற்றும் 374 பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை நாள் 10.10.1996 ஆகிய அரசாணைகளை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 2010ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது.
இப்போது தனியார் மின் கொள்முதல் தொடர்பாக ஒரு புகார் லஞ்ச ஒழிப்புத் துறையை அடைகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்தப்புகார் அப்படியே தலைமைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். தலைமைச் செயலாளர், விழிப்புப் பணி ஆணையர் மற்றும் மின் துறை செயலாளர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கூடி முடிவெடுக்கப்படும். பெரும்பான்மை முடிவே இறுதியானது. தலைமைச் செயலாளர் மற்றும் விழிப்புப் பணி ஆணையர் ஆகிய இரண்டு பதவிகளையும் வகிக்கும் ஞானதேசிகனே, தன் மீதான் புகாரை விசாரிக்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பார். எப்படி இருக்கிறது இது ? இதற்காகத்தான் ஞானதேசிகன் தலைமைச் செயலாளர் ஆக்கப்பட்டார். இப்போது யார் விசாரணையை தொடங்க முடியும் ?
மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால் மட்டுமே, ஒழுங்கான விசாரணை நடக்கும். ஆனால் மத்திய புலனாய்வுத் துறை விசாரணை நடப்பதற்கு, மாநில அரசின் ஒப்புதல் வேண்டும். அந்த ஒப்புதலை வழங்கும் பொறுப்பில் இருப்பவரும், தலைமைச் செயலாளரான ஞானதேசிகனே. இப்போது புரிகிறதா ? எதற்காக இத்தனை அவசரமான மாறுதல் உத்தரவு என்று ?
சரி. இப்போது மின்வெட்டு பிரச்சினைக்கு வருவோம். சட்டசபையில் தொடர்ந்து பேசி வரும் நத்தம் விஸ்வநாதன், அவையின் உள்ளேயும், வெளியேயும், இந்த மின்வெட்டுக்கு முக்கிய காரணமே, முந்தைய திமுக அரசுதான் என்று தொடர்ந்து கூறி வருகிறார். நத்தம் விஸ்வநாதனின் முன்னுக்குப் பின் முரணான சில அறிக்கைகளைப் பார்ப்போம்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மின்வெட்டு குறித்து ஜுலை மாதம் வெளியிட்ட அறிக்கைக்கு, மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் இவ்வாறு பதில் அளித்தார்.
“முதலமைச்சர் ஜெயலலிதா மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டது முதல், அதலபாதாளத்தில் இருந்த தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தும் வகையிலும், இருளில் மூழ்கியிருந்த தமிழகத்தை ஒளிமயமாக ஆக்கும் வண்ணம் மின் தேவைக்கும், மின் உற்பத்திக்கும் இடையேயான 4 ஆயிரம் மெகாவாட் பற்றாக்குறையினை நீக்கும் வகையிலும் அல்லும், பகலும் அரும்பாடுபட்டதோடு மட்டுமல்லாமல், அன்றாடம் இதுகுறித்த ஆய்வுக் கூட்டங்களை நடத்தி, போர்க்கால அடிப்படையில் 2,500 மெகாவாட் மின்திறன் கொண்ட திட்டங்களை மூன்றே ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளார்.
முதலமைச்சரின் இடைவிடாத பகீரத முயற்சியின் காரணமாக, இருளில் மூழ்கியிருந்த தமிழகம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதைப் புரிந்து கொள்ளாமல், அரசியல் ஆதாயத்திற்காக மனம் போன போக்கில் அறிக்கை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் கிடப்பில் போட்டிருந்த அனல் மின் உற்பத்தி திட்டங்களை முதல்வர் முடுக்கிவிட்டதன் காரணமாக 5 புதிய அனல் மின் உற்பத்தி அலகுகள் உற்பத்தியை தொடங்கி 2,500 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி நிறுவு திறன் உருவாக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமல்லாது, நடுத்தர கால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 500 மெகாவாட் மின்சாரம் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாங்கப்பட்டு வருகிறது. இதுவன்றி, 1,000 மெகாவாட் திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் அலகில் இருந்து 562 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வருகிறது. இதுதவிர, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து 3,330 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய 15 ஆண்டுகளுக்கு நீண்டகால ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இதில் தற்போது 222 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது.
இது படிப்படியாக வரும் ஆகஸ்டு மாதம் முதல் 2 ஆயிரம் மெகாவாட் ஆக உயரும். மீதமுள்ள 1,330 மெகாவாட் மின்சாரம் வரும் 2015-16 ஆம் ஆண்டில் இருந்து கிடைக்கும். முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின் இறுதியில் 8 ஆயிரம் மெகாவாட்டாக இருந்த மின் உற்பத்தி, கடந்த 3 ஆண்டு காலத்தில், அதாவது 16-5-2014 நிலவரப்படி, 12,995 மெகாவாட் என்ற உச்ச அளவு மின் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிறைவேற்றியுள்ளது.
முதல்வரின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக, கூடுதலாக 5 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு கிடைத்து வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் நிறுவப்பட்டுள்ள 2,500 மெகாவாட் மின்நிறுவு திறன், நடுத்தர கால ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கின்ற 500 மெகாவாட் மின்சாரம், நீண்டகால ஒப்பந்தங்கள் மூலம் கிடைக்கின்ற மற்றும் கிடைக்கக்கூடிய 3,330 மெகாவாட் மின்சாரம், இந்த ஆண்டில் நிறுவப்பட உள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின் நிறுவு திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டால், இந்த ஆண்டு 2014-15 நிதியாண்டின் இறுதியில் எதிர்பார்க்கப்படும் 14,500 மெகாவாட் மின் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியம் நிச்சயம் நிறைவேற்றும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேற்காணும் விளக்கத்தில் இருந்து, 3 அல்லது 4 மாதங்கள் மட்டுமே தரக்கூடிய காற்றாலை மின்சாரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் ஆண்டு முழுவதும் கிடைக்கும் அனல் மின் சக்தியைக் கொண்டே தமிழகத்தின் மின் தேவை முழுமையும் நிறைவேற்றப்பட்டு வருகிறது என்பதை பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் போன்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு அடிப்படை கட்டமைப்பு திட்டமாக இருந்தாலும், அதற்கு முட்டுக்கட்டைப் போடுவதையே வழக்கமாக, வாடிக்கையாக கொண்டிருக்கும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், முதல்வரின் தலைமையிலான அரசு மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவை அடைவதற்காக எடுத்துள்ள ஆக்கப்பூர்வமான, முனைப்பான நடவடிக்கைகள் குறித்து குறை கூறுவது நகைப்புக்குரியது, கேலிக்கூத்தானது, எள்ளி நகையாடத்தக்கது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்
சட்டப்பேரவையில் 29 நவம்பர் 2012ல் பதிலளித்த நத்தம் விஸ்வநாதன் இவ்வாறு பேசினார்.
“இப்போது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு, முதல்வர் ஆட்சியில் ஏற்பட்டதல்ல. கடந்த கால ஆட்சியில் மின் உற்பத்தியை செய்து முடிக்காததால் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்பது பல்வேறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது எதையும் மூடி மறைக்கவில்லை.
முதல்வர் வாரந்தோறும் ஆய்வு நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே ஓர் ஆண்டு காலத்துக்குள் மின்வெட்டு பிரச்னை முழுமையாக தீர்ந்து விடும். வருகிற ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின் வெட்டு குறையும். 2013 முடிவதற்குள் மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும். தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாகத் திகழும்”
28 மார்ச் 2012ல், காஞ்சிபுரத்தில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய நத்தம் விஸ்வநாதன் 2013 ஜுன் முதல் தமிழகம் ஒளிமயமான மாநிலமாக மாறும் என்று பேசினார். அன்று அவர் பேசுகையில்
“இப்போது தற்காலிகமாக ஏற்பட்டுள்ள மின்வெட்டு, முதல்வர் ஆட்சியில் ஏற்பட்டதல்ல. கடந்த கால ஆட்சியில் மின் உற்பத்தியை செய்து முடிக்காததால் இந்த மின்வெட்டு ஏற்பட்டுள்ளது என்பது பல்வேறு ஆய்வில் தெரிய வந்துள்ளது. தற்போது எதையும் மூடி மறைக்கவில்லை.
முதல்வர் வாரந்தோறும் ஆய்வு நடத்தி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே ஓர் ஆண்டு காலத்துக்குள் மின்வெட்டு பிரச்னை முழுமையாக தீர்ந்து விடும். வருகிற ஜூன் மாதம் முதல் படிப்படியாக மின் வெட்டு குறையும். 2013 முடிவதற்குள் மின் உற்பத்தியில் தமிழகம் தன்னிறைவு பெறும். தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாகத் திகழும்”
தமிழ்நாடு மின் வாரியம் உருவாக்கிய ஆவணங்களிலேயே உள்ளபடி, தமிழகத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள, மின் திட்டங்களின் நிலையை ஆய்வு செய்வோம்.
600 மெகாவாட் மேட்டூர் அனல் மின் திட்டம் அக்டோபர் 2013 முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது திமுக ஆட்சி காலத்தில். 1200 வாட் வடசென்னை அனல் மின் நிலையத் திட்டம் மார்ச் மற்றும் மே 2014 முதல் செயல்படத் தொடங்கியது. இதுவும் திமுக அரசு கொண்டு வந்த திட்டமே. 1500 மெகா வாட் வல்லூர் அனல் மின் உற்பத்தித் திட்டம் நவம்பர் 2012 மற்றும் ஆகஸ்ட் 2013ல் உற்பத்தியை தொடங்கியது. இதுவும் திமுக திட்டமே. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தோடு இணைந்து செயல்படுத்தப்பட்ட கூட்டுத் திட்டத்தின்படி, தமிழகத்தின் பங்கு, 387 மெகாவாட். இத்திட்டம் பிஎச்இஎல் நிறுவனம் செய்த தாமதத்தின் காரணமாக, தாமதாமாகவே மின் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
660 வாட் எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தடையில்லா சான்று வழங்கப்பட்டது 23 டிசம்பர் 2008 அன்று. ஆனால், பணிகளே தொடங்காத காரணத்தால், இந்த தடையில்லா சான்று காலாவதியாகிப் போய், மீண்டும் ஒரு தடையில்லா சான்று வாங்கப்பட்டுள்ளது. இத்திட்டமும் திமுக கொண்டு வந்த திட்டமே.
1320 மெகாவாட் எண்ணூர் சிறப்புப் பொருளாதார மண்டல அனல் மின் நிலையத் திட்டமும், திமுக அரசு கொண்டு வந்த திட்டமே. இதில் முதல் யூனிட் 24 மாதங்களும், இரண்டாவது யூனிட் 17 மாதங்களும், அதிமுக அரசால் தாமதப்படுத்தப்பட்டது. திட்ட இடம் சமன்படுத்தும் பணி நடைபெற்று வருவதாக மின் வாரிய அறிக்கை கூறுகிறது. ஆனால், அந்த இடத்தில் எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என்பதே உண்மை நிலை. எப்படி இருந்தாலும், இந்தத் திட்டம் யாரோ ஒரு நிறுவனத்துக்கு வழங்கப்படத்தானே போகிறது. அதற்குள், நிலத்தை சமன்படுத்தி வேலைகளைத் தொடங்கும் வகையில் தயாராக வைத்திருந்தால், இந்நேரம் வேலை தொடங்கியிருக்கலாம் அல்லவா ?
ஆனால், டெண்டர் பிஎச்இஎல் நிறுவனத்துக்கு ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட 27 செப்டம்பர் 2014 அன்று வழங்கப்பட்ட பிறகுதான், லேசாக அசையவே தொடங்கியிருக்கிறது தமிழ்நாடு மின் வாரியம். தற்போது, இந்த டெண்டரும் நீதிமன்றத்தில் வழக்கில் சிக்கியுள்ளது. இந்த வழக்கு பற்றி விரிவாக, சவுக்கு தளத்தில் இருட்டறையில் உள்ளதடா தமிழகம் என்ற கட்டுரையில் பல விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளது. இணைப்பு
உடன்குடி 1320 மெகாவாட் அனல் மின் நிலையத் திட்டம், ஜெயலலிதாவால் தாமதப்படுத்தப்பட்டது என்று பிஎச்இல் நிறுவனத்துக்கு 50 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுத்து, அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்தார் ஜெயலலிதா. அதற்குப் பின் மின் வாரியமே இத்திட்டத்தை செயல்படுத்தும் என்று அறிவித்தார். 20 ஏப்ரல் 2013 அன்று இத்திட்டத்துக்கான திட்ட வரைவை மின் வாரியம் இறுதி செய்தது. ஏகப்பட்ட சிகப்பு நாடா தாமதத்துக்குப் பிறகு, இறுதியாக 18 அக்டோபர் 2014 அன்று, இத்திட்டத்துக்கான டெண்டர்கள் அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டன.
தமிழ்நாடு மின் வாரிய வட்டாரங்களின்படி, இரண்டே இரண்டு நிறுவனங்கள். இந்த டெண்டரில் தகுதி பெற்றன. ஒரு நிறுவனத்தின் விலைப்புள்ளிக்கும், மற்றொரு நிறுவனத்தின் விலைப்புள்ளிக்கும் 30 சதவிகித வேறுபாடு இருந்தது. அதிக விலைப்புள்ளியை குறிப்பிட்டிருந்த மற்றொரு நிறுவனம் பிஎச்இஎல். பிஎச்இஎல் நிறுவனத்துக்கு எப்படியாவது இந்த டெண்டரை வழங்க வேண்டுமே என்ற ஒரே காரணத்துக்காக, 18 அக்டோபர் அன்று திறக்கப்பட்ட விலைப்புள்ளியின் மீது எவ்வித முடிவும் எடுக்காமல் தாமதம் செய்து வருகிறார் ஞானதேசிகன். இந்த அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரியை எடுத்துச் செல்லும் வழிகளை அமைக்க வேண்டிய பணியான கோல் ஜெட்டி எனப்படும் பணிகளுக்கான டெண்டரே இப்போதுதான் விடப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது. நிலக்கரி வரவே வழியில்லை என்றால், அனல் மின் நிலையம் எப்படி செயல்படும் ?
மூன்றாவது 600 மெகா வாட் வடசென்னை அனல் மின் நிலையத் திட்டத்துக்கான மத்திய அரசின் சுற்றுச் சூழல் அமைச்சக தடையில்லா சான்று பெறப்பட்டது 10 ஏப்ரல் 2012 அன்று. இந்தத் திட்டமும் திமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், இன்னும் ஆரம்பக் கட்டப்பணிகளையே எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக காலத்தில் 20 ஆகஸ்ட் 2010 அன்று உருவாக்கப்பட்ட மற்றொரு திட்டம். உப்பூர் 1600 மெகாவாட் அனல் மின் நிலையத் திட்டம். இந்தத் திட்டத்திலும் மத்திய அரசின் சுற்றுச் சூழல் தடையில்லா சான்று, 27 மே 2014 அன்று காலாவதியாகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நீட்டிப்பு கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு, ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
660 மெகாவாட் எண்ணூர் மாற்று அனல் மின் நிலையத் திட்டத்துக்கான ஆயத்தப்பணிகளே ஆமை வேகத்தில் இப்போதுதான் நடைபெற்று வருகிறது. இந்த திட்டம் 2020-2021ல் செயல்பாட்டுக்கு வரும் என்று உத்தேசமாக மதிப்பிடப்படுகிறது.
1320 மெகாவாட் உடன்குடி இரண்டாம் விரிவாக்க அனல் மின் நிலையத் திட்டமும் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இது 2019-2020ல் செயல்பாட்டுக்கு வரலாம்.
1320 மெகாவாட் உடன்குடி மூன்றாம் விரிவாக்க அனல் மின் நிலையத் திட்டமும் 2020-2021ல் செயல்பாட்டுக்கு வரும் என்று உத்தேசமாக மதிப்பிடப்படுகிறது.
26 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், மத்திய அரசின் பங்கோடு தொடங்கப்பட உள்ள திட்டம், செய்யூர் உயர் அனல் மின் நிலையத் திட்டம். 4000 மெகாவாட் திட்டமான இதில் தமிழகத்தின் பங்கு 1600 மெகாவாட். இது உத்தேசமாக 2018-2019ல் செயல்பாட்டுக்கு வரும்.
திமுக ஆட்சி காலத்தில் போடப்பட்ட மற்றொரு திட்டம், குந்தா நீரேற்று மின் திட்டம். இதன் பணிகளும் ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருகின்றன. இது 2019-2020ல் செயல்பாட்டுக்கு வரலாம்.
2000 மெகாவாட் சில்லஹல்லா நீரேற்று மின் திட்டமும் திமுக காலத்தில் கருத்துருவாக்கம் செய்யப்பட்டது. இத்திட்டத்துக்கான கருத்து ரீதியான ஒப்புதலை தமிழக அரசு அளித்தது 11 செப்டம்பர் 2014.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், அதிமுக ஆட்சிக்காலத்தில் ஒரே ஒரு புதிய மின் திட்டம் கூட உருவாக்கப்படாதது மட்டுமல்ல. ஏற்கனவே உள்ள திட்டங்களை எவ்வளவு தாமதப்படுத்த முடியுமோ, அவ்வளவு தாமதப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஒப்பந்தப்புள்ளிகள் கோருவதில் தாமதம், அதை திறப்பதில் தாமதம், செயல்படுத்துவதில் தாமதம், திறந்த ஒப்பந்தப்புள்ளிகளின் மீது முடிவெடுப்பதில் தாமதம் என்று முழுக்க முழுக்க தாமதம். மத்திய அரசின் சுற்றுச் சூழல் தடையில்லா சான்றுகள் எத்தனை முறை காலாவதியாகியுள்ளன என்பதைப் பார்த்தாலே, இந்தத் தாமதங்கள் இயல்பாக நிகழ்ந்தவை அல்ல என்பது எளிதாகப் புலப்படும்.
இவ்வளவு தாமதங்களுக்குமான காரணம்தான் என்ன ? ஏதாவது ஒரு புதிய மின் திட்டம் செயல்பாட்டுக்கு வந்து, அதன் மூலமாக 500 மெகாவாட் கிடைத்தால், தற்போது தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து 12 ரூபாய்க்கு வாங்கப்படும் 3000 மெகாவாட் 2500 மெகாவாட்டாக குறையும். குறைந்தால், ஒவ்வொரு யூனிட்டுக்கும், ஞானதேசிகன் மற்றும் நத்தம் விஸ்வநாதன் பெற்று வரும் கமிஷன்கள் குறையும். அந்தக் காரணத்தைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?
தனியாரிடமிருந்து மின் கொள்முதலில் ஊழல் என்றதும், நத்தம் விஸ்வநாதன் துடிதுடிப்பதற்கு இது மட்டுமே காரணம். இதனால்தான், திமுக ஆட்சியில்தான் ஊழல் என்று தமிழக மக்களுக்கு இருட்டுக்கடை அல்வாவை எடுத்துக் கொடுக்கிறார் நத்தம் விஸ்வநாதன்.
ஜெயலலிதாவுக்கு அதிகமான வருவாயை ஈட்டித்தரும் நத்தம் விஸ்வநாதனை, அதிமுக சட்டப்பேரவை அவை முன்னவராகவும், அவரின் கூட்டுக் களவானி ஞானதேசிகனை தலைமைச் செயலாளராகவும் நியமித்த மர்மம் இப்போது புரிகிறதா ?
தமிழ்நாடு மின் வாரிய ஆவணங்கள் உங்கள் பார்வைக்காக…
சவுக்கு அவர்களுக்கு பணிவான இதயம் நிறைந்த வணக்கம்.அறியாமை இருளை நீக்கி இறைவனை அறிய ஞானம் வேண்டும்.அந்த ஞானத்தை உங்கள் அயராத உழைப்பு எழுத்தால் எங்களுக்கு தருகிறது.நீங்களும் கடவுளே.வெளிச்சத்தை தரும் நீங்கள் மிக புனிதமானவர்.இந்த பணி ஒன்றே போதும்,வேறு எந்த குற்றச்சாட்டு உங்கள் மேல் பெண்களால் நயவஞ்சகமாக சுமத்தபட்டாலும் அது உங்களின் புனிதத்தை கெடுக்க நினைக்கும் சதுரங்க விளையாட்டே. நயவஞ்சகமான அரசியல் அதிகார பலம் உள்ள துரோகிகளை,அப்பாவி மக்களை ஏமாற்றும் துரோகிகளை அடையாளம் காட்டி விழிப்புணர்வை தர உழைக்கும் வல்லவரே உங்களை எப்படி பாராட்டுவது.உங்களின் இந்த பணி பணத்தால் நிச்சயம் எடைபோட முடியாது.ஏனென்றால் இன்று அயோக்கியர்களின் கைகளில் பணம் புரள்கிறது.புனிதத்தன்மை,மக்கள் நலன் நேசிக்கும் நல்லவர்,எளியவர்,மக்கள் நலனுக்கு அயராது போராடும் வல்லவர் இந்த குணத்திற்கு பணத்தை எவ்வாறு ஈடு செய்வது.நீங்கள் நூறாண்டு காலம் வாழ்ந்து மக்களை இது போன்ற துரோகிகளிடம் இருந்து காக்கவேண்டும்.உங்கள் குடும்பம் மேலும் மேலும் உயர்ந்து சிறக்க எல்லாம் வல்ல இறைவன் அருளை அள்ளி அள்ளி வீசட்டும்.உங்களின் துரோகிகளை வெளிச்சம் போட்டு பாமர மக்களுக்கு தெரியபடுத்தும் பணி சிறக்கட்டும்.நன்றி.
ஐயா வணக்கம் எத்தனையோ விடையங்களை பிட்டு பிட்டு வைக்கீரீர்கள். புலனாய்வு துறையால்கூட கண்டுபிடிக்க முடியாததைக்கூட சவுக்கு தணது சுழற்றளால் கண்டுபிடிக்கிரது.. தகவல்களுக்கு மிக்கநன்றி ஐயா. எனக்கு ஒரு வேண்டுகோல் ஐயா. இந்த மாற்றுத்திறனாளிகள் துறைகளில் னடக்கும் அவலங்களை தாங்கள் வெலியே கொண்டுவரவேண்டும் ஐயா. குரிப்பாக அவர்கல் வேலை வாய்ப்பில் எப்படியெல்லாம் வஞ்சிக்கபடுகிரார்கள் என்பதை எழுதவேண்டுகிரேன் ஐயா. நன்றி
Bravo Savukku.
Superb investigation. Tamil people should realise the fact of deceit by ADMK government.
Dear Savuku,
Please inquire about the education dept people including the 100’s of crores of corrption done by Sapitha, rameswara murugan and others. Kindly check Rameswarsamurugan’s current assets will be in hundresds of crores.
அய்யா எப்போது தாங்கள சென்னை நகராட்சி நிர்வாக ஆணையரகத்தால் செயல்படடுவரும் நகராட்சிகளில் மின்ஆளுமை திட்டத்தின் தற்போதைய கதியை ஆய்வு செய்து எழுதுவீர்கள் என எதிர்பார்க்கிறேன.அதுவும் டெபுடேஷன் நியமிக்கப்பட்ட சிட்ம்ஸ் அனைலிஸ்ட் திரு மணவகாளபெருமாய் அவர்களின் லீலைகளை மக்கள் செய்திகாமில தமிழகஅரன் மாமுல துறை என் தலைப்பில் சிறிதளவு வந்துள்ளது
ellam namma thala yellthu.