இன்று மாலை நடந்த திமுக உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இருந்து விலகிக் கொள்வதென்று திமுக முடிவெடுத்துள்ளதாகவும், மன்மோகன் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும் முடிவெடுக்கப் பட்டு தீர்மானம் இயற்றப் பட்டுள்ளது. இதற்கு காரணமாக கூறப்பட்டுள்ள விஷயம், முதலில் 60 இடங்களுக்கு ஒப்புக் கொண்டு பிறகு காங்கிரஸ் 63 வேண்டுமென்று கேட்கிறார்கள் என்பதுதான். மிக மிக முக்கியமான சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கப் போகும் இரண்டு பெரிய கட்சிகள் வெறும் மூன்று சீட்டுகளுக்காகவா கூட்டணி உறவை முறித்துக் கொள்ளப் போகிறார்கள் ? நம்ப முடியவில்லை அல்லவா ?
திமுக காங்கிரஸ் இடையே இருந்த உறவு, 2ஜி விசாரணை தொடங்கியதிலிருந்தே உரசலில் இருந்தாலும், சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்சிகளும் சேர்ந்தே சந்திக்கும் என்று சோனியாவும், கருணாநிதியும் மாற்றி மாற்றி சொல்லிக் கொண்டிருந்ததில் இருந்து இந்தச் சிறு சிறு உரசல்களைத் தாண்டி, கூட்டணி பேச்சுவார்த்தை சுமுகமாகவே அமையும் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வந்தனர்.
நேற்று நள்ளிரவு கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “…….அவ்வாறு கணக்கிட்ட போது காங்கிரஸ் கட்சிக்கு 51 இடங்கள் வந்தன. ஆனால் அந்த இடங்களை அதிகமாக்க வேண்டுமென்று கேட்ட காரணத்தால் 51 இடங்கள் என்பது 53 என்றாகி, பின்னர் 55 என்றாகி, 58 என்றாகி, கடைசியாக 60 இடங்கள் என்று குலாம் நபி ஆசாத் அவர்கள் மூலம் தெரிவிக்கப் பட்டது. அதனை மேல் இடத்திலே தெரிவித்து விட்டு உறுதி செய்வதாக கூறினார். ஆனால் அதன்படி அவர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வராததோடு இன்று இரவு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு காங்கிரஸ் கட்சிக்கு 63 இடங்களை ஒதுக்க வேண்டுமென்றும், அந்த 63 இடங்களையும் அவர்களே நிச்சயித்துக் கேட்கும் தொகுதிகள் அத்தனையையும் தவ வேண்டுமென்றும் தெரிவிக்கின்றார்கள்.
….. காங்கிரஸ் கட்சி 60 இடங்கள் போதாதென்று 63 இடங்கள் என்று கேட்பதும் அதுவும் எந்தெந்த இடங்கள் என்று அவர்கள் கேட்பதையெல்லாம் கொடுக்க வேண்டுமென்று கேட்பதும் முறைதானா என்பதை அந்தக் கட்சிதான் முடிவு செய்ய வேண்டும்.
எனவே இது பற்றி 5.3.2011 அன்று மாலையில் நடைபெறவுள்ள உயர்நிலை செயல்திட்டக் குழுவிலே விவாதித்து தி.மு.கழகம் உரிய முடிவெடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
இதன் பின்னணி தான் என்ன ? வெறும் மூன்று சீட்டுகளுக்காக இந்தக் கூட்டணி முறிந்ததா ?
இந்தப் பின்னணியை ஆராய்வதற்கு சில ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. 2004 தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவோடு கூட்டணி அமைத்தது. அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த மொத்த இடங்கள் 141. ஏறக்குறைய அதற்கு சமமாக 137 இடங்களை பிஜேபி பிடித்தாலும், மற்ற கட்சிகளின் ஆதரவு காங்கிரஸ் கட்சிக்கே கிடைத்ததால், ஆட்சி அமைத்தது. மற்ற கட்சிகளின் ஆதரவின் அடிப்படையிலேயே மந்திரி சபை அமைக்க வேண்டிய நிர்பந்தத்தால், கூட்டணிக் கட்சிகளின் இழுத்த இழுப்புக்கெல்லாம் காங்கிரஸ் கட்சி வளைந்து கொடுக்க வேண்டியதாக இருந்தது.
அரசியலில் தன் முதல் படியை 2004 தேர்தலில் எடுத்து வைத்த, தொலைத் தொடர்புத் துறை தொடர்பாக பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வந்த தயாநிதி மாறனுக்கு மிக மிக முக்கியமான தொலைத் தொடர்புத் துறை வேண்டுமென்றும், இது தவிரவும், வருமானம் அதிகம் வரக்கூடிய மிகுந்த பசையான துறைகள் வேண்டுமெனவும், திமுக கொடுத்த நெருக்கடிகளுக்கு காங்கிரஸ் செவி சாய்ப்பதைத்தவிர அப்போது வேறு வழியில்லை. அந்த மந்திரி சபை அமைக்கும் சமயத்தில் கேட்ட துறைகளைத் தரவில்லை என்று, பத்திரிக்கையாளர்களை அழைத்து, காங்கிரஸ் தலைவர் ஜனார்த்தன் ரெட்டியோடு செய்து கொள்ளப் பட்ட இலாகா ஒதுக்கீடு தொடர்பான எழுத்துப் பூர்வமான ஒப்பந்தத்தை வெளியிட்டு, வெளிப்படையாக காங்கிரஸை மிரட்டினார் கருணாநிதி. பணிந்த காங்கிரஸ், மற்றொரு கூட்டணிக் கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவுக்கு ஒதுக்கப் பட்ட கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறையை பறித்து, அவரை இலாகா இல்லாத மந்திரியாக பல மாதங்கள் வைத்திருந்தது காங்கிரஸ் கட்சி.
அதன் பிறகு, மன்மோகனும், சோனியாவும், திமுகவை நம்பிக்கைக்குரிய கூட்டணிக் கட்சி என்று அவ்வப்போது அறிவித்து வந்தாலும், திமுகவின் இந்த மிரட்டல் போக்கை காங்கிரஸ் கட்சித் தலைமை மறக்கவேயில்லை.
இது நீறு பூத்த நெறுப்பாக இருந்தாலும், அமெரிக்காவுக்கு எழுதிக் கொடுத்த அடிமை சாசனத்தின் படி, அணு ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டியிருந்ததாலும், மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நெருக்கடி இருந்ததாலும், பல்லைக் கடித்துக் கொண்டு, பொறுமையாக இருந்தது காங்கிரஸ்.
காங்கிரஸ் கட்சியின் இந்த நெருக்கடியை பயன்படுத்தி, திமுக அமைச்சர்கள், வசூல் வேட்டையை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நடத்தினார்கள். இந்த வசூல் வேட்டைகள் அத்தனையும், காங்கிரஸ் தலைமைக்குத் தெரியும் என்றாலும், போதுமான எம்.பிக்கள் எண்ணிக்கை இல்லாததால், பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருந்தார்கள்.
கப்பல் போக்குவரத்துத் துறையிலும், தரைவழிப் போக்குவரத்துத் துறையிலும் டி.ஆர்.பாலு ஒரு புறமும், ஆண்டிமுத்து மகன், சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறையில் மறுபுறமும் தொலைத் தொடர்புத் துறையில் தயாநிதி மாறன் மற்றொரு புறமும் பின்னிப் பெடலெடுத்துக் கொண்டிருந்தார்கள்.
சேர்ந்த நாள் முதலே, தயாநிதி மாறன், தனது விளையாட்டை தொடங்கினார். ராஜ் டிவிக்கு செய்தி ஒளிபரப்ப அனுமதி மறுத்ததில் தொடங்கி, டாடா டிஷ்நெட்டுக்கு அனுமதி மறுத்ததும், விஜய் டிவியில் வந்த செய்திகளை நிறுத்தியதும், புதிய சேனல்கள் திறக்க அனுமதி அளிக்காமல் தாமதப் படுத்தியதும், சன் குழுமத்திற்கு, இந்தியா முழுவதும் எஃப்எம் சேனல் தொடங்க லைசென்ஸ் பெற்றதும், தென்னிந்தியா முழுவதும், மொத்த ஊடகத்தை ‘கேடி சகோதரர்களின்’ கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு எடுத்த முயற்சிகளும் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் இல்லை.
மாநிலத்தில் உள்ள உளவுத் துறையை விட, பல மடங்கு வலிமையானது மத்திய உளவுத் துறை. அத்துறைக்கு வேலையே, நாட்டில் உள்ள முக்கிய விஷயங்களை வேவு பார்ப்பதை விட, இந்த அமைச்சர்கள் யாரிடம் எவ்வளவு வாங்கிறார்கள், எந்த காண்ட்ராக்டுகள் வழங்குகிறார்கள், எந்த பெண்களுடன் உல்லாசமாக இருக்கிறார்கள், எங்கே குடிக்கிறார்கள் போன்ற விபரங்களை சேகரிப்பது தான். இது போல, எல்லா அரசுகளும் சேகரிப்பது வழக்கம். இப்படி சேகரித்த விபரங்கள் பத்திரமாக வைக்கப் பட்டிருக்கும். ஒரு அமைச்சரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று எப்போது உளவுத் துறை நினைக்கிறதோ, அப்போது இந்த ஆதாரங்கள், திடீரென்று டிவி சேனல்களின் அலுவலகத்தை சென்றடையும். ஒரு மாநிலத்தின் உளவுத் துறையின் தலைவராக இருக்கும் ஜாபர் சேட்டுக்கே இத்தனை பேர் தொலைபேசியை ஒட்டுக் கேட்கும் திறமை இருக்கிறது என்றால், இந்தியாவையே ஆளும் உளவுத் துறைக்கு எத்தனை பேரின் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்கும் திறமை இருக்கும் ? ஜாபர் சேட் தொலைபேசி ஒட்பட…
இதே போல, திமுக அமைச்சர்களைப் பற்றியும், பல்வேறு விபரங்கள் சேகரிக்கப் பட்டுதான் இருந்தன. காங்கிரஸ் கட்சி மந்திரிகளை விட, திமுக மந்திரிகள் இவ்வளவு சம்பாதித்துக் கொண்டிருந்ததை, பல மடங்கு கூடுதலாக சம்பாதிப்பது காங்கிரஸ் கட்சிக்கும், சோனியாவுக்கும் மகிழ்ச்சியையா தரும் ?
அடுத்து நடந்ததுதான் மிகப் பெரிய நெருக்கடியாக அமைந்தது. தயாநிதி மாறன் தான் முதலில், ஒரு மிகப்பெரிய தங்கச் சுரங்கத்துக்கு சாவியை கண்டுபிடித்தவர். அந்தத் தங்கச் சுரங்கம் தான் ஸ்பெக்ட்ரம்.
‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற ஒரு அயோக்கியத்தனமான வழிமுறையை கடைபிடித்து, ஸ்பெக்ட்ரத்தை பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்று ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை சம்பாதித்தார் மாறன். ஆனால், மாறன் சம்பாதித்தது, பெரிய அளவில் பிரச்சினை ஆகாமல், சுமூகமாகப் போனதற்கான காரணம், ஏற்கனவே செல்பேசி தொழிலில் இருக்கும், ஏர்டெல், ஏர்செல் போன்ற நிறுவனங்களுக்கு வழங்கியதால், இவர் மீது பெரிய அளவில் குற்றச் சாட்டுகள் வரவில்லை. ஆனால், ரத்தன் டாடா என்ற சக்தி வாய்ந்த தொழில் அதிபரோடு நேரடியாக மோதியதன் மூலம் மிகப் பெரிய எதிரியை இவர் உருவாக்கிக் கொண்டார்.
அடுத்து வருகிறார் ‘தகத்தகாய கதிரவன்’ மாறன் சகோதரர்களோடு ஏற்பட்ட பிணக்கை அடுத்து, தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆன ஆண்டிமுத்து ராசா, வந்த நாள் முதலாகவே தனது வசூல் வேட்டையை தொடங்கினார். மாறன் போல, ராசா சாமர்த்தியசாலி இல்லை என்பதை அறிந்த தொழில் நிறுவனங்கள் ‘மிட்டாயைக் காண்பித்து திருவிழாவில் பிள்ளையைக் கடத்திக் கொண்டு போவது போல்’ ராசாவை பயன் படுத்தின இந்த நிறுவனங்கள். பணத்தை கண்ணில் காட்டியதும், அந்த நிறுவனங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்தார்.
வளைந்து கொடுத்து, வளைந்து கொடுத்து, வரலாறு காணாத ஊழல் புரிவதற்கு ஆணிவேராக இருந்தார் ராசா. செல்பேசி சேவையில் ஏற்கனவே இருந்த பெரும் ஜாம்பவான்களை புறக்கணித்து, ரியல் எஸ்டெட் தொழில் செய்து வந்த நிறுவனங்கள், காய்கறி விற்கும் நிறுவனங்கள் போன்ற நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரத்தை விற்றார் ராசா.
இதுவும் மத்திய உளவுத் துறை மூலம், காங்கிரசுக்கு தெரியத்தான் செய்தது.
ஈழப் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் தினந்தோறும் ஆயிரக்கணக்கில் அப்பாவித் தமிழர்கள் கொன்று குவிக்கப் பட்ட விபரங்கள் நம்மைப் போலவே கருணாநிதியையும் வந்து அடையத்தான் செய்தது. இந்தப் போர், தமிழகத்தில் மிகப் பெரிய எழுச்சியை உருவாக்கியது. இந்திய அரசின் மீது மக்களின் கோபம் திரும்பியது. இந்த நேரத்தில் கருணாநிதியும் அவர் குடும்பத்தினரும், ஸ்பெக்ட்ரம் பணத்தை அடுக்கி வைத்து அதன் மீது புரண்டு கொண்டிருந்தனர். மக்கள் போராட்டம் முழுமையடைந்து விடக் கூடாது என்பதால், அந்தப் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்ய, புதிய புதிய போராட்டங்களை அறிவித்தார். இறுதி நேரத்தில் இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகளை கடத்த முயன்றவர்களை பிடித்து, அவர்கள் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நூற்றுக் கணக்கான இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்தது கருணாநிதி அரசு.
2009ல் மீண்டும் பாராளுமன்றத் தேர்தலை திமுவோடு கூட்டணி அமைத்துச் சந்தித்த காங்கிரஸ் கடந்த முறை போலல்லாமல், இந்த முறை தனது பலத்தை கூட்டிக் கொண்டது. கடந்த முறை 141 இடங்களில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 206 இடங்களை வென்றது. இதன் பிறகு தான் காங்கிரஸ் கட்சியின் மறுபக்கத்தை கருணாநிதி கண்டார். வஞ்சகத்தில் இவரை விஞ்ச ஆளே இல்லை என்று வியக்கும் அளவுக்கு வஞ்சகத்தை சோனியா வெளிப்படையாக காண்பிக்கத் தொடங்கினார்.
அந்த முகம், 60 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் வாழ்வில் இருந்து பல்வேறு சூழ்ச்சிகளைப் பார்த்து, பல்வேறு சூழ்ச்சிகளை செய்து, மிகப் பெரிய அரசியல் நயவஞ்சகரான கருணாநிதியாலேயே சமாளிக்க முடியாமல் இருந்தது என்றால் அது மிகையில்லை.
தொடரும்.