2009ம் பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் அமைச்சரவை உருவாக்கத்தின் போது, 2004 நினைப்பிலேயே இருந்த கருணாநிதிக்கு, காங்கிரஸின் மாறுபட்ட முகம் தெரியத் தொடங்கியது.
ஈழப் போர் முடிவுக்கு வந்து, தமிழகமெங்கும் ஒரு கனத்த அமைதி நிலவிக் கொண்டிருந்த போது, கருணாநிதி குடும்பத்தினர், நீரா ராடியாவோடு, யாருக்கு எந்த இலாகா என்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். கருணாநிதி தனது பழைய பந்தாவை பயன்படுத்தி மீண்டும், அதே இலாக்காக்கள் வேண்டுமென நெருக்கடி கொடுத்தும், காங்கிரஸ் பணிவதாக இல்லை. ஆனாலும், ஏற்கனவே, பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களை கொள்ளையடித்து ருசி கண்ட கருணாநிதி, தொலைத் தொடர்புத் துறை வேண்டும் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்தார். ஆனால், காங்கிரஸ், தொலைத் தொடர்புத் துறையை கொடுப்பதில் சமரசம் செய்து கொண்டாலும், டி.ஆர்.பாலு, வேண்டாம் என்பதிலும், மீண்டும், வனம் மற்றும் சுற்றுச் சூழல் துறையை வழங்கப் போவதில்லை என்பதிலும் முனைப்பாக இருந்தது. புது தில்லி சென்ற கருணாநிதி, கேட்ட துறைகள் வழங்கப் படவில்லை என்றதும், எரிச்சலடைந்து, தனது 18 எம்பிக்களையும் அழைத்துக் கொண்டு, சென்னை திரும்பப் போவதற்கு தயாராக, விமான டிக்கட்டுகளை ப்ளாக் செய்தும் கூட, காங்கிரஸ் சமரசத்துக்கு தயாராக இல்லை.
கோபித்துக் கொண்ட புது மாப்பிள்ளை போல, கருணாநிதி, பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல், சென்னை திரும்பினார்.
கடந்த முறை போலவே, அனைத்து துறைகளிலும் பணத்தை அள்ளலாம் என்று, எதிர்ப்பார்த்திருந்த திமுகவுக்கு, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. முக்கியமான டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில், பிரதமர் மன்மோகன் அல்லது, பிரணாப் முகர்ஜி போன்ற முக்கிய அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவைக் குழுதான் முடிவு செய்யும் என்ற விதி அமலுக்கு வந்ததும், திமுக அமைச்சர்கள் எந்த விவகாரத்திலும் காசு பார்க்க முடியாமல், கடும் எரிச்சலடைந்தனர்.
யுபிஏ 2 அரசு பதவியேற்றதிலிருந்தே, திமுகவுக்கும் கருணாநிதிக்கும் நெருக்கடி தான். இதன் நடுவே, 2008ல் பயனீர் நாளேடு, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நடந்த ஊழல்கள் குறித்து செய்திகள் வெளியிட்டதும், 2009ல் அந்த விஷயம் சூடு பிடிக்கத் தொடங்கியது. தொலைத் தொடர்புத் துறையை பெயருக்கு ராசாவுக்கு கொடுத்து விட்டு, ராசா பதவியேற்ற ஒரு சில மாதங்களிலேயே, அவரது தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் சிபிஐ சோதனைகள் நடத்தியது.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் திமுகவை ஒவ்வொரு கட்டத்திலும் நெருக்கடி கொடுத்து, நிலைகுலையச் செய்தது காங்கிரஸ். தொடர்ந்து பல்வேறு சமயங்களில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் உயிரோடு இருக்கும் வகையில், பத்திரிக்கைகளுக்கு பல்வேறு தகவல்களை கொடுத்துக் கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி. இதன் நடுவே, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன், திமுக அரசு மீது சராமரியான தாக்கதல்களை தொடுக்கத் தொடங்கினார். இளங்கோவனின் சில வார்த்தைகள், திமுகவை நெளியச் செய்தது. ஒரு கட்டத்தில் இளங்கோவன், காங்கிரஸ் போட்ட பிச்சையில் திமுக தமிழகத்தில் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது என்று பேசினார்.
திமுக லேசாக அவ்வப்போது, இளங்கோவனின் பேச்சுகளுக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தாலும், காங்கிரஸ் தலைமை இளங்கோவனை கட்டுப்படுத்துவதாக இல்லை. தமிழகம் வந்த ராகுல், ஒரு முறை கூட, கருணாநிதியை சந்திக்காதது மிக மோசமான ஈகோயிஸ்டான கருணாநிதிக்கு கடும் எரிச்சலை ஏற்படுத்தியது.
மத்திய கணக்காயர் அறிக்கை 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி என்ற ஒரு தொகையை வரையறை செய்தது. இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் படும் முன்பே, ஊடகங்களில் வெளியாகி புயலைக் கிளப்பியது. ராசா தான் இனி தப்ப முடியாது என்பதை உணர்ந்தார்.
திருச்சிக்கு காங்கிரஸ் கூட்டத்துக்கு வருகை தந்த சோனியா காந்தி, கருணாநிதியை சந்திப்பதை தவிர்க்கப் போகிறார் என்று அறிந்த கருணாநிதி, அவசர அவசரமாக சென்னை விமான நிலையம் சென்று, சோனியாவை சந்தித்து, காங்கிரசுக்கும் திமுகவுக்கும் உறவு பலமாக இருப்பது போல காண்பித்துக் கொண்டார். திருச்சி கூட்டத்தில் பேசிய சோனியா, ஒரு வார்த்தைக் கூட திமுக காங்கிரஸ் உறவைப் பற்றிப் பேசவில்லை.
உச்ச நீதிமன்றத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் விசாரணைக்கு வந்ததிலிருந்தே, திமுகவுக்கு கடும் நெருக்கடி தொடங்கியது. உச்ச நீதிமன்றம், சிபிஐ ஐ சராமரியாக கேள்விக் கணைகளால் துளைத்து எடுக்கவும், சிபிஐ தனது விசாரணையை முடுக்கி விட்டது. அது வரை நத்தை வேகத்திலும், நகராமலேவும் இருந்த சிபிஐ, திடீரென்று வேகம் பிடிக்கத் தொடங்கியது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள், ஊடகங்களில் வெளி வரத் தொடங்கின. இந்த நடவடிக்கைகளையெல்லாம் பார்த்த கருணாநிதி காங்கிரஸ் கட்சியின் சூட்சுமங்களை மெல்ல மெல்ல புரிந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியை திருப்பி அடிக்கும் நிலையில் தாம் இல்லை என்பதையும் புரிந்து கொண்டார்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் மிகப் பெரியதாக வெடித்ததும், ராசாவை காவு கொடுக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்ட கருணாநிதி, ராசாவை காப்பாற்ற நினைத்து முயற்சிகள் எடுத்தது உண்மையே. ஆனாலும், ராசா, முழுகும் நிலையில் இருக்கையில் கருணாநிதியின் முயற்சிகள் எதுவும் கைகூடவில்லை. ராசா பதவியை ராஜினாமா செய்ததோடு விவகாரம் முடிந்து விடும் என்று நினைத்திருந்த கருணாநிதி, அவர் டெல்லியில் இருக்கும் போதே ராசாவை 8 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரித்ததும், சென்னை திரும்பிய இரண்டாவது நாள் கைது செய்ததும், காங்கிரசுடனான உறவு இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர வைத்தது.
தொடர்ந்து கனிமொழி தொடர்பாகவும், ராசாத்தி அம்மாள் தொடர்பாகவும் ஏராளமான சொத்துகளை சேர்த்து வைத்திருக்கிறார்கள் என்பதை திட்டமிட்டு ஊடகங்களுக்கு மத்திய உளவுத் துறை வெளியிட்டுக் கொண்டே வந்தது.
க்ளைமாக்ஸாக, 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவிக்கு 216 கோடி ரூபாய் கொடுத்திருந்த தகவல் ஊடகங்களில் வெளியானது. இதையடுத்து கலைஞர் டிவியில் நள்ளிரவு சோதனையும் நடைபெற்றது. சிபிஐ விசாரணையை துரிதப் படுத்தியதும், திரை மறைவில், இந்த விசாரணையிலிருந்து குடும்பத்தைக் காப்பாற்ற திமுக பல்வேறு பேரங்களை காங்கிரஸ் கட்சியோடு நடத்தினாலும், உச்சநீதிமன்றத்தை கை காட்டி காங்கிரஸ் ஒதுங்கிக் கொண்டது.
இந்தப் பின்னணியில் தான் தேர்தல் நெருங்கியது. கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கியதும், காங்கிரஸ் ஐவர் குழுவை அமைத்தது. இந்த ஐவர் குழு தொடக்கம் முதலே, கெடுபிடியாகப் பேசியது. கடந்த முறை 51 இடங்கள் தந்தது போல, இந்த முறை முடியாது என்றும், குறைந்தது 90 இடங்களாவது வேண்டும் என்றும் கோடிட்டுக் காட்டியது.
காங்கிரசுக்கு நெருக்கடி கொடுக்க, கருணாநிதி காங்கிரசை கலந்தாலோசிக்காமலேயே, பாமகவுக்கு 31 இடங்கள் ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். இது காங்கிரஸ் கட்சிளை கடும் எரிச்சலுக்கு ஆளாக்கியது. இந்த எரிச்சல், இதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையிலும் எதிரொலித்தது.
ஆனால், தாம் மிகப் பெரிய சாமர்த்தியசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கும் கருணாநிதி, காங்கிரசோடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கையிலேயே, கொங்கு முன்னேற்றப் பேரவைக்கு 7 இடங்களை ஒதுக்கினார்.
கருணாநிதியின் இந்த நடவடிக்கை திமுக காங்கிரஸ் உறவுக்கு, இறுதி அஞ்சலி செலுத்துவதாக அமைந்தது. இதையடுத்து காங்கிரஸ், தனது பிடியை மேலும் இறுக்கியது. ஏற்கனவே ஒப்புக் கொள்ளப் பட்ட 60 இடங்களுக்கு மேல் 63 இடங்களோடு, கூட்டணி மந்திரி சபை மற்றும் குறைந்த பட்ட செயல்திட்டம் என்ற நிபந்தனைகளை உறுதிப் படுத்தியது.
‘பொறுத்தது போதும் பொங்கி எழடா மகனே மனோகரா’ என்ற கருணாநிதியின் வசனத்தைப் போலவே, பொங்கி எழுந்து காங்கிரசை கண்டித்து அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி. இந்த அறிக்கையைப் பார்த்து, காங்கிரஸ் ஆதரவை வாபஸ் வாங்கிக் கொண்டால், மத்தியில் ஆட்சி கவிழும் நிலை உருவாகும் என்று அஞ்சி, காங்கிரஸ் மண்டியிடும் என்று தப்புக் கணக்கு போட்டார். ஆனால் காங்கிரஸ் அசருவதாக இல்லை. காங்கிரஸ் பணியும் என்பதாலேயே, ஆதரவு வாபஸ் என்று வெளிப்படையாக அறிவித்தாலும், திமுக மந்திரிகளின் ராஜினாமா கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்பாமல் தாமதித்தார் கருணாநிதி. எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால், 7 அன்று காலை 6.30க்கு திமுக மந்திரிகள் டெல்லி கிளம்பிச் சென்று பிரதமரை சந்தித்து, ராஜினாமா கடிதத்தை கொடுக்க உள்ளார்கள்.
இதில் இந்த 3 இடங்கள் என்று கருணாநிதி வெளிப்படையாகச் சொன்ன காரணம் மட்டுமே உண்மையா என்றால் இல்லை. அடுத்தடுத்து நடக்கும் சிபிஐ விசாரணை நிச்சயமாக, கனிமொழியையும், தயாளுவையும் பாதிக்கும் என்பது கருணாநிதிக்கு நிச்சயம் தெரியும். மேலும் காங்கிரஸ் கேட்ட 63 இடங்களையும் கொடுத்து, கூட்டணி மந்திரி சபைக்கு ஒப்புக் கொண்டாலும் கூட, சிபிஐ விசாரணை தன் குடும்பத்தை நோக்கி வருவதை தவிர்க்க முடியாது என்பதை கருணாநிதி நன்றாகவே உணர்ந்திருக்கிறார்.
சிபிஐ வளையம் நெருக்கும் போது, ஆதரவு வாபஸ் என்றால், கடைநிலையில் இருக்கும் திமுக தொண்டன் கூட மதிக்க மாட்டான் என்பது அறிந்ததால் தான் கருணாநிதி, இப்போதே வாபஸ் என்று அறிவித்து விட்டார். இப்போது வாபஸ் பெற்றதால், குறைந்த பட்சம், திமுகவையாவது காப்பாற்றலாம், ஆனால், தாமதமாக வாபஸ் பெற்றால், கட்சியையும் இழக்க வேண்டி வரும் என்பதை நன்றாகவே உணர்ந்திருக்கிறார். இப்போது, மீண்டும் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது, தமிழ் மொழிக்கு ஆபத்து, ஈழத்தில் தமிழர்கள் முள்வேலி முகாமுக்குள் அடைபட்டிருக்கிறார்கள், மத்திய அரசு பாராமுகம் காட்டுகிறது, கச்சத்தீவை மீட்போம், மீனவர்கள் படுகொலையை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை’ என்பது போன்ற பழைய கோஷங்களோடு, மீண்டும் காங்கிரஸ் எதிர்ப்பு அரசியல் பண்ணலாம் என்ற நம்பிக்கையிலேயே கருணாநிதி இருக்கிறார்.
ஆனால், காங்கிரஸ் இதை விட சாதுர்யமாக, இப்போதே பாட்டாளி மக்கள் கட்சியை திமுக அணியிலிருந்து பிரிக்க பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
‘வினை விதைத்தவன் வினையைத் தானே அறுக்க முடியும் ? ‘ அதைப் போலவே தான் கருணாநிதியும் இன்று வினையை அறுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த சதுரங்க ஆட்டத்தில், கிங் மேக்கராக இருந்த கருணாநிதி, சாதாரண சிப்பாயைப் போல, வெட்டி எரியப் படும் வரை காங்கிரஸ் கட்சி ஓயப் போவதில்லை. இந்த சதுரங்க ஆட்டத்தை டெல்லியிலிருந்து நடத்திக் கொண்டிருப்பவர் ராகுல் காந்தி என்று, புதுதில்லியில் விபரமறிந்தவர்கள் சொல்லுகிறார்கள். தொடக்கம் முதலே, கருணாநிதியை அறவே பிடிக்காதவரான ராகுல் காந்தி, கருணாநிதி எக்காரணம் கொண்டும் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் மிக மிக உறுதியாக இருக்கிறார் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இந்தத் தேர்தல், திமுகவின் இத்தனை ஆண்டுகால வரலாறில், மிகப் பெரிய சோதனை என்றால் அது மிகையில்லை.. இந்த சோதனையில் திமுக கரை சேருமா, இல்லை காட்டாற்று வெள்ளத்தோடு அடித்துச் செல்லப் படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.