சட்டப்பேரவை தேர்தலுக்காக அ.தி.மு.க. வெளியிட்ட வேட்பாளர் பட்டியலால் அந்த கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளன.
அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10, மனிதநேய மக்கள் கட்சிக்கு 3, புதிய தமிழகம் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவற்றுக்கு தலா 2, பார்வர்டு பிளாக், இந்திய குடியரசு கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா 1 என தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றிய ஆலோசனை சென்னை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தே.மு.தி.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகள் பற்றி விவாதித்தனர்.
பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படாத நிலையில், அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் அ.தி.மு.க.வுடன் அடுத்த சுற்று பேச்சு நடத்த காத்திருந்தன.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடும் 160 தொகுதிகளுக்கான பட்டியலை அக்கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா புதன்கிழமை மாலை வெளியிட்டார்.
இதில் கடந்த தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற பல தொகுதிகளை இப்போது அ.தி.மு.க. எடுத்துக் கொண்டிருப்பது தெரிய வருகிறது. அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பேச்சு நடத்திய பின் அங்கிருந்து புறப்பட்ட கூட்டணி கட்சியினர் தங்கள் அலுவலகத்தில் நுழைந்த நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலும் வெளியானது. இதனால் அந்தக் கட்சி நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நன்னிலம், சிவகங்கை, ஆலங்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 6 தொகுதிகளிலும் இப்போது அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இது தவிர அக்கட்சி இப்போது கேட்ட தொகுதிகளில் தளி உள்ளிட்ட ஓரிரு தொகுதிகளைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சி கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற 9 தொகுதிகளில், திண்டுக்கல், பெரம்பூர், அரூர், திருப்பூர், நாகப்பட்டினம், மதுரை (தெற்கு) ஆகிய 6 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், அக்கட்சி கேட்டிருந்த கீழ்வேளூர் உள்ளிட்ட மிகப் பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, ஒட்டபிடாரம், வாசுதேவநல்லூர் ஆகிய தொகுதிகளைக் கேட்டு வந்ததாக செய்திகள் வெளியாயின. எனினும், இப்போது அவ்விரு தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், பார்வர்டு பிளாக் கட்சி கேட்டதாகக் கூறப்பட்ட உசிலம்பட்டி தொகுதிக்கும் அ.தி.மு.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. தலைமையின் இந்த அறிவிப்பு அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் புதன்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கை:
அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் புதன்கிழமை நடத்திய பேச்சின்போது, கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற தொகுதிகளோடு, மேலும் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
அவர்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கலந்தாலோசித்து விட்டு, புதன்கிழமை இரவே மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு வந்து தொகுதிகள் பற்றி இறுதி செய்வதாக கூறினர்.
ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் வெளியிடப்பட்ட அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலில், கடந்த தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்ற 6 தொகுதிகள், நாங்கள் கேட்டு வரும் பிற தொகுதிகளுக்கும் சேர்த்து வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.
இது மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இந்நிலையில், இப்போதைய நிலைமை குறித்து விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை நடைபெறும் என்று ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி. மகேந்திரனிடம் கேட்டபோது, அ.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு சற்றும் எதிர்பாராதது. எனவே, இது பற்றி விவாதிக்க எங்கள் கட்சியின் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை அவசரமாக சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார்.
புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியது:
4 தொகுதிகளின் பெயர்களை கூறுமாறு எங்களிடம் கேட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள், அதிலிருந்து 2 தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்குவதாகக் கூறியிருந்தனர்.
இதன்படி, வாசுதேவநல்லூர், ஒட்டபிடாரம், சங்கரன்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 4 தொகுதிகளின் பெயர்களைக் கொடுத்திருந்தோம். இப்போது, 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் எங்கள் கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை சென்னையில் வியாழக்கிழமை கூட்டியுள்ளோம் என்றார் கிருஷ்ணசாமி.
தன்னிச்சையாக அதிமுக வேட்பாளர்களை அறிவித்திருப்பது தேமுதிக தரப்பிலும் எரிச்சலையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது. “”இப்படிப்பட்ட போக்கை அதிமுக தலைமை தொடருமானால், அந்தக்கட்சியுடன் கூட்டணி அமைத்து எப்படி செயல்பட முடியும்” என்று மூத்த நிர்வாகிகளிடம் கட்சித் தலைவர் விஜயகாந்த் சலித்துக் கொண்டதாகக் கேள்வி.
இது தவிர, 160 தொகுதிகளுக்கு அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்துள்ளதன் மூலம், இதுநாள் வரை அந்தக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த ம.தி.மு.க.வுக்கு இனி அந்தக் கூட்டணியில் இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது.
அதிருப்தியில் இருக்கும் இடதுசாரிக் கட்சிகளுடன் சேர்ந்து மதிமுக மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் இறங்குமா என்பது சனிக்கிழமை நடக்க இருக்கும் கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படலாம்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ள இந்த வேட்பாளர் பட்டியல், கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நன்றி தினமணி