அதிமுக கூட்டணியில் ஏற்பட்டிருந்த கடும் குழப்பம் தீர்ந்து விட்டதாகத் தெரிகிறது. அதிமுக நேற்று மாலை தன்னிச்சையாக 160 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்ததில் இருந்தே, கூட்டணிக் கட்சிகள் கடும் அதிருப்தியில் இருந்தன. தேமுதிக தலைவர் விஜயகாந்தும், மிகுந்த அதிருப்தியில் இருந்ததாக தெரிந்தது. இடது சாரிக் கட்சிகள் தற்போது வைத்திருக்கும் பல தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சி அறிவித்ததை அடுத்து, அக்கட்சியின் தொண்டர்கள் தங்கள் எதிர்ப்புகளை கட்சித் தலைமைக்கு தெரிவித்த வண்ணம் இருந்தனர்.
இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில் விஜயகாந்தை சந்தித்துப் பேசிய இடதுசாரிக் கட்சித் தலைவர்கள், மூன்றாவது அணி அமைப்பது குறித்தும் பேசியதாகத் தெரிகிறது. மதிமுகவுக்கு இடம் ஒதுக்கப் படாதது, குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப் பட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, அதிமுக தலைவர் ஜெயலலிதா, தனது தேர்தல் சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்து, இக்குழப்பத்தை தீர்ப்பதற்காக வேலைகளில் தீவிரமாக இறங்கியதாகவும், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன், கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியதையும் தொடர்ந்து, சுமூகமான ஒரு முடிவு எட்ட பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
தற்போது உள்ள நிலவரப்படி, மதிமுகவுக்கு 15 இடங்கள் ஒதுக்கப் படும் என்றும், இடது சாரிக் கட்சிகள் கேட்ட இடம் பெரும்பாலும் ஒதுக்கப் படும் என்றும், தேமுதிகவோடு மட்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும், இன்று இரவுக்குள் சுமூக முடிவு எட்டப் பட்டு, நாளைக் காலை அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.