Logo
Logo

முக்கிய செய்தி:

பொழுதுபோக்கு

"திவாலாகி கொண்டிருக்கும் ஆவின்"....போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும் - பொன்னுசாமி கோரிக்கை

LENIN DEVARAJAN07-01-2024
"திவாலாகி கொண்டிருக்கும் ஆவின்"....போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை வேண்டும் - பொன்னுசாமி கோரிக்கை

"திவாலாகி கொண்டிருக்கும் ஆவின்."போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு முதலமைச்சருக்கு, பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை.

இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”பிஸ்தா திரைப்படத்தின் ஒரு காட்சியில் மெளலி அவர்களின் நிறுவனத்தில் புதிய மேலாளராக பணிக்கு சேர்ந்த கார்த்திக் உரிமையாளரோடு தொழிற்சாலைக்கு செல்லும் போது அங்குள்ள பணியாளர்கள் வேலை செய்யாமல் மது அருந்திக் கொண்டும், புகை பிடித்தவாறு, சீட்டு விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதனைப் பார்த்து அதிர்ச்சியடையும் கார்த்திக் தனது முதலாளி மெளலியிடம் யாருமே வேலை செய்யாமல் ஏன் இப்படி வெட்டியாக பொழுதை கழிக்கிறார்கள் ..? என்று கேட்க அதற்கு அவரோ தனது மகளின் (நக்மா) ஆணைப்படி இங்கே "வேலை செய்தால் சம்பளம் இல்லை ஆனால் வேலை செய்யாமல் வெட்டியாக பொழுதை கழித்தால் இரட்டிப்பு சம்பளம்" என்பார்.

நகைச்சுவைக்காக அந்த காட்சி திரைப்படத்தில் வைக்கப்பட்டிருந்தாலும் கூட அது போன்று வேலை செய்யாமல் இருப்பவர்களுக்கு சம்பளம் கொடுக்கின்ற அலுவலகங்கள் உண்மையில் இருக்குமா..? என்று நீங்கள் வினவினால் இருக்கிறது என்பதும், அதுவும் தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு நிறுவனத்திலேயே இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா..? என்றால் நீங்கள் அதனை நம்பித் தான் ஆக வேண்டும்.

ஏனெனில் கடந்த 2021-ல் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2022-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தில் இருந்த திருப்பத்தூர், விழுப்புரத்தில் இருந்த கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக என்கிற பொய்யான காரணத்தை கூறி அதனை இரண்டாகப் பிரித்து ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு மாவட்ட (சேர்மன்) பெருந்தலைவர் பதவி வழங்குவதற்காகவும், புதிய காலிப் பணியிடங்கள் மூலம் முறைகேடுகள் செய்வதற்கு ஏதுவாகவும் தனித்தனி மாவட்ட ஒன்றியங்களாக உருவாக்கப்பட்டது. (2011-2021 அதிமுக ஆட்சி காலகட்டத்திலும் இது போன்று கூடுதலாக புதிய 8 மாவட்ட ஒன்றியங்கள் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.)

திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி ஒன்றியங்களுக்கு என இதுநாள் வரை சொந்த அலுவலக கட்டிடமோ, பால் மற்றும் பால் பொருட்களுக்களுக்கான உற்பத்தி பண்ணைகளோ இல்லாத சூழலில் பால் பண்ணைகளில் உள்ள பணியிடங்களான தரக்கட்டுப்பாடு, கொள்முதல், விற்பனை பிரிவுகளுக்கான அதிகாரிகளை நியமனம் செய்து, அவர்கள் வேலையே செய்யாமல் இருப்பதற்காக மேற்சொன்ன பிஸ்தா படம் போல மாதந்தோறும் பல லட்சம் ரூபாய் அவர்களுக்கு சம்பளமாக வழங்கி ஆவினுக்கு பெருத்த நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அதுமட்டுமின்றி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தோடு திருப்பத்தூர் மாவட்டம் இணைந்திருந்த போது அம்மாவட்டத்தில் தினசரி பால் கொள்முதல் சுமார் 30ஆயிரம் லிட்டராக இருந்த நிலையில், 7 பால் மொத்த குளிர்விப்பான் நிலையங்கள் (BMC), அதன் கீழுள்ள 36 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களோடு தனி ஒன்றியமாக திருப்பத்தூர் பிரிக்கப்பட்டு, அம்மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தின் 5-வது மாடியில் ஒரு சிறிய அறையில் பெயருக்கு மாவட்ட ஒன்றிய அலுவலகமாக கொண்ட பிறகு ஆவினுக்கான தினசரி பால் கொள்முதல் வெறும் 17ஆயிரம் லிட்டராக சுருங்கிப் போனது.

அதே சமயம் தினசரி பால் பாக்கெட் விற்பனை என்பது சுமார் 7ஆயிரம் லிட்டரும், பால் பொருட்கள் விற்பனை வெறும் 50-ஆயிரம் மட்டுமே என்கிற நிலையில் அதன் மூலம் சொற்ப அளவிலேயே திருப்பத்தூர் மாவட்ட ஒன்றியத்திற்கான வருவாய் கிடைக்கும் சூழலில் அதிகாரிகளுக்கான மாத சம்பளம் மட்டும் சுமார் 11 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டு வருவதும், அதிகாரிகளுக்கான வாகன செலவுகள், ஓட்டுனர் சம்பளம் என வரவை மீறி எகிறும் செலவினங்களால் திருப்பத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் உட்பட கடந்த 10ஆண்டுகளில் இதுவரை பழைய மாவட்ட ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து புதிதாக உருவாக்கப்பட்ட சுமார் 10 ஒன்றியங்கள் எந்த நேரமும் திவாலாகும் சூழலிலேயே இருக்கிறது என்கிறது விபரம் அறிந்த ஆவின் வட்டாரங்கள்.

மேலும் திருப்பத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் பெயரளவிற்கு மட்டுமே செயல்பட்டு வருவதோடு அதன் பொது மேலாளர் உட்பட பெரும்பாலான அதிகாரிகள் பால் கொள்முதல் மற்றும் பால், பால் பொருட்கள் விற்பனையில் கவனம் செலுத்தாமலும், சரிவர பணிக்கு வராமல் அவர்களின் சொந்த பணிகளிலேயே நாட்டம் கொண்டு ஆவினில் சம்பளம் பெற்று, அரசுக்கும், ஆவினுக்கும் பெருத்த நிதியிழப்பை ஏற்படுத்தி வருகின்றனர் என்பதற்கு அம்மாவட்டத்தில் ஆவினுக்கான பால் கொள்முதல் பாதியாக குறைந்து போனதும், ஆவின் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை சிறிதளவு கூட உயராமல் இருப்பதுமே சான்றாகும்.

எனவே வேலையே செய்யாமல் சம்பளம் பெற்றுக் கொண்டு ஆவினுக்கு பெருத்த நிதியிழப்பை ஏற்படுத்த காரணமாக இருக்கும் திருப்பத்தூர் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 27 மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சேலம், கோவை, ஈரோடு, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களை மண்டலங்களாக மாற்றியமைத்து, அம்மண்டலங்களை மூத்த நேரடி ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் தலைமையில் செயல்படக் கூடிய வகையில் அதிரடியாக அரசாணை பிறப்பிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்”, இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்