Logo
Logo

முக்கிய செய்தி:

சவுக்கு ஸ்பெஷல்

ஆணையர் அலுவலகத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி ரூ. 50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்...அமலாக்கத்துறை புகுந்தது ஏன்?

SAVUKKU BUREAU19-01-2024
ஆணையர் அலுவலகத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி ரூ. 50 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்...அமலாக்கத்துறை புகுந்தது ஏன்?

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கட்டப்பஞ்சாயத்து பேசி ரூ. 50 கோடி பணத்தை பறிமுதல் செய்த புகாரில் சிக்கிய ஓசன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவார்கள் என தெரிகிறது.

அமலாக்கத்துறை சோதனை ஏன்?

பிரபல கட்டுமான நிறுவனமான ஓசன் லைஃப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரான S.K.பீட்டர் மற்றும் அவரது பார்ட்னர் ஸ்ரீ ராம் ஆகியோருக்கு இடையே நடந்த ஷேர் பிரிப்பது சம்பந்தமான விவகாரத்தில் ஆணையர் அலுவலகத்தில் கட்டப்பஞ்சாயத்து நடந்ததும் மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமையில் ரூ.50 கோடி செட்டில்மெண்ட் நடந்ததாக வெளியான தகவலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சென்னை பெருங்குடியில் இயங்கி வரும் பிரபல கட்டுமான நிறுவனம் ஓசன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த பாலசுப்ரமணியம் ஸ்ரீராம் கடந்த 2020-ம் ஆண்டு நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். அதை எதிர்த்து பாலசுப்ரமணியம் ஸ்ரீராம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். அதன் மீதான விசாரணை சென்னையில் உள்ள NCLT நீதிமன்றம் எண்-1-ல் நடந்து வருகிறது.

வழக்கு விசாரணையில் ஆஜரான ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீது திடுக்கிடும் புகார்களை தெரிவித்தார். ஓசன் லைப் ஸ்பேஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனர் S.K.பீட்டரை சென்னை மத்திய பிரிவு போலீசார் கட்டாயப்படுத்தி செட்டில்மென்ட் அக்ரீமெண்ட்டில் கையெப்பம் வாங்கியுள்ளதாக NCLT நீதிமன்றத்தில் வழக்கறிஞர் P.S.ராமன் தெரிவித்திருந்தார். அதில், உயர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில் பீட்டரை மிரட்டி ரூ.50 கோடி பணம் வலுக்கட்டாயமாக வசூலிக்கப்பட்டதாக மூத்த வழக்கறிஞர் பி.எஸ் ராமன் தெரிவித்துள்ளார்.

ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக சத்தியம் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டிருந்தது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக கூடுதல் தகவல்கள், பின்னணியில் யார் யார் இருந்தது, எந்த அதிகாரிகளுக்கு தொடர்பு என்பதை சவுக்கு மீடியாவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தது.

இந்தநிலையில்தான், ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற செட்டில்மெண்ட் விவகாரம் ஒருபுறமிருக்க தன் மீதான எப்.ஐ.ஆரை ரத்து செய்ய கோரி உயர்நீதிமன்றத்தில் எஸ்.கே. பீட்டர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கின் தீவிரத்தன்மை கருதி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், பணப்பரிமாற்றம் வழக்கு தொடர்பான சிபிஐசிடி விசாரணைக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி பாலசுப்ரமணியம் ஸ்ரீராம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணைக்கு தடை விதித்தது.

சிபிசிஐடி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் சந்தோஷப்படும் நிலையில் அது 12 மணி நேரம் கூட நீடிக்காத நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் கட்டப்பஞ்சாயத்தில் சிக்கிய ஓசன் லைஃப் ஸ்பேஸ் நிறுவனர் பீட்டர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எஸ்.கே.பீட்டர் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் உள்பட 7 இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.

ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நிறுவனத்தில் பங்குதாரர்கள் இடையே நடந்த மோதலில் ஷேர் பணம் சட்டவிரோதமாக ஒருதரப்பிற்கு போலீஸார் மூலம் கைமாறிய விவகாரத்தின் பின்னணியில் அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்திருக்கலாம் என்கிற அடிப்படையில் ரெய்டை தொடங்கி இருக்கலாம்.

இதன் பின்னர் நடக்கும் விசாரணையில் பண விவகாரத்தில் சம்பந்தப்பட்ட சென்னை காவல் துறையினர் மற்றும் இதன் பின்னணியில் உள்ள செல்வாக்கு மிக்கவர்கள் குறித்த திடுக்கிடும் தகவல்களும் வெளியாக வாய்ப்புண்டு. இதனால் இந்த ரெய்டு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்