Logo
Logo

முக்கிய செய்தி:

விளையாட்டு

‘டெத் ஓவரில்’ லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்! சாம்ஸன், போல்ட் பிரமாதம்

PRITHIVIRAJ24-03-2024
‘டெத் ஓவரில்’ லக்னோவை வீழ்த்திய ராஜஸ்தான்! சாம்ஸன், போல்ட் பிரமாதம்

ஜெய்ப்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் குவித்தது. 194 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த ஆட்டத்தில் லக்னோ அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் 2 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட்டில் ஒரு புள்ளி பெற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலிடத்தைப் பிடித்தது.

தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறிய நிலையில் சாம்ஸன் ஆங்கர் ரோல் எடுத்து விளையாடியவிதம் கேப்டனுக்குரிய பொறுப்பை வெளிப்படுத்தியது. 52 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்து ஸ்கோர் உயர்வுக்கு காரணமாகிய சாம்ஸனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பந்துவீச்சில் டிரன்ட் போல், பர்கர் இருவரும் சேர்ந்து முதல் 4 ஓவர்களில் லக்னோவின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதே, லக்னோவின் ஆனிவேர் ஆட்டம் கண்டது. சந்தீப் சர்மா டெத்ஓவர்களில் தனது முதல் ஓவரில் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோ ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தார். சந்தீப் சர்மா 3 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து ராகுல் விக்கெட்டை வீழ்த்தி தனது வேலை கச்சிதமாக முடித்தார். கடைசி ஓவரில் ஆவேஷ் கான் ஒருபவுண்டரி, சிக்ஸர் கூட அடிக்கவிடாமல் பூரனை கட்டிப்போட்டு வெற்றியை அணிக்கு பெற்றுக் கொடுத்தனர். இதுதவிர 18வது ஓவரை வீசிய அஸ்வின் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி, 5 ரன்கள் மட்டுமே கொடுத்து லக்னோவை கூடுதல் நெருக்கடியில் தள்ளினார். இந்த 3 பந்துவீச்சாளர்களும் 15 ஓவர்களுக்குப்பின் ஆட்டத்தை கையில் எடுத்து வெற்றியை வசப்படுத்தினர்.

சாம்ஸன் 2020ம் ஆண்டிலிருந்து தொடர்ந்து ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் அரைசதம் அடிப்பதை சாம்ஸன் வழக்கமாக வைத்துள்ளார். அது இந்த முறையும் சாம்ஸனுக்கு தொடர்ந்தது. லக்னோ அணி மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆட்டத்தைத் தொடங்கியபோது, புதிய பந்தில் டிரன்ட் போல்ட், பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி லக்னோவை நெருக்கடிக்கு ஆளாக்கினர். நடுப்பகுதி ஓவர்களில் அஸ்வின், சஹல் இருவரும் சேர்ந்து லக்னோவின் ரன்ரேட்டை பெரிதாக உயரவிடாமல் பார்த்துக்கொண்டனர். டெத்ஓவரில் சந்தீப், ஆவேஷ் கான் அற்புதமாக பந்துவீசினர். சாம்ஸன் தனது கேப்டன்ஷியை திட்டமிட்டு செய்து, வெற்றியை எளிதாக்கியுள்ளார். லக்னோ அணியைப் பொறுத்தவரை தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆனால், தீபக் ஹூடா, பூரனுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றி நோக்கி கேப்டன் ராகுல் இழுத்து வந்தார். ஒரு கட்டத்தில் பூரன், ராகுல் ஆட்டம் அணியை வெற்றி நோக்கி நகர்த்தியது. இதில் ராகுல் ஆட்டமிழந்தவுடன் லக்னோவின் தோல்வி ஏறக்குறைய உறுதியானது.

டெத் ஓவரில் சந்தீப் சர்மா, ஆவேஷ் கான், அஸ்வின் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். கடைசி 2 ஓவர்களில் லக்னோ வெற்றிக்கு 38 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்களை பூரன் விளாசினார். கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் கடைசி ஓவரில் 6 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, பவுண்டரி, சிக்ஸர் அடிக்கவிடாமல் பூரனைக் கட்டுப்படுத்தினார்.

20ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 20 ரன்களில் தோல்வி அடைந்தது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்