Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தேர்தல் வினோதம்: டெபாசிட் தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதி கோரிய வேட்பாளர்

CHENDUR PANDIAN.K29-03-2024
தேர்தல் வினோதம்: டெபாசிட் தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதி கோரிய வேட்பாளர்

அசாம் மாநிலத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர் ஒருவர் டெபாசிட் தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதி கூறுக வினோத நிகழ்வு நடந்துள்ளது.

தேர்தல் காலத்தில் பல்வேறு வினோதங்கள் நடைபெறுவது வழக்கம். எல்லா தேர்தலிலும் வந்து போட்டுவிட்டு சாதனை படைக்கும் தேர்தல் மன்னர்கள் பற்றி அடிக்கடி நாம் செய்தி பார்த்திருக்கிறோம்.

வேட்பு மனு தாக்கலுக்கான டெபாசிட் தொகையை மூட்டை மூட்டையாக நாணயங்களாக கொண்டு வந்து கொட்டி மனுத்தாக்கல் செய்த வேட்பாளர்களை பற்றியும் நாம் அறிந்திருக்கிறோம்.

ஆனால், வேட்பு மனுவை தாக்கல் செய்ய வந்துவிட்டு அதற்காக செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை தவணை முறையில் செலுத்த அனுமதி கூறிய வேட்பாளர் ஒருவர் பற்றிய செய்தி இப்போது வெளிவந்துள்ளது. அது பற்றி இப்போது பார்க்கலாம்:-

அசாம் மாநிலம் ரங்கபரா பகுதியை சேர்ந்தவர் மகேந்திர ஓரங். சர்வதேச வாக்காளர்கள் கட்சி சார்பில் சோனித்பூர் மக்களவை தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் அன்று ஆதரவாளர்கள் 10 பேருடன் வேட்புமனு தாக்கல் செய்ய மகேந்திர ஓரங் சென்றார்.

சோனித்பூர் மாவட்ட நிர்வாக அலுவலகத்திற்கு சென்ற மகேந்திர ஓரங், வேட்புமனுத் தாக்கலுக்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது வேட்பாளர் டெபாசிட் தொகையாக 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்பது விதியாகும். ஆனால் மகேந்திர ஓரங்கிடம் அவ்வளவு பணம் இல்லை.

இதனால் தேர்தல் அலுவலரை சந்தித்த மகேந்திர ஓரங் தவணை முறையில் டெபாசிட் தொகையை செலுத்துவதாகவும், வேட்புமனு பரிசீலனைக்குள் பாக்கித் தொகையை செலுத்திவிடுவதாகவும் தெரிவித்து உள்ளார். ஆனால் இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படி வேட்பாளர் வேட்புமனு தாக்கலின் போதே டெபாசிட் தொகையை முழுவதுமாக செலுத்த வேண்டும் என்பது விதியாகும்.

இதை மேற்கொள் காட்டி மகேந்திர ஓரங்கின் வேட்புமனுவை பெற்றுக் கொள்ள தேர்தல் அதிகாரி மறுத்துவிட்டார். இதனால் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத விரக்தியில் மகேந்திர ஓரங் வீடு திரும்பினார்.

கடைசி நேரத்தில் தான் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் தன்னால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும், தன் நண்பரிடம் டெபாசிட் தொகை செலுத்த பணம் கோரிய நிலையில் அவர் ஆன்லைனில் பணம் அனுப்பியதாகவும் ஆனால் தனது வங்கிக் கணக்கு பணம் வந்து சேரவில்லை என்றும் மகேந்திர ஓரங் ஆதங்கத்துடன் தெரிவித்து உள்ளார்.

மக்கள் பிரிதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவின் படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் வைப்புத் தொகை அதாவது டெபாசிட் தொகை செலுத்த வேண்டும் என்பது விதியாகும். ஒவ்வொரு தேர்தலுக்கு ஏற்ப இந்த டெபாசிட் தொகை மாறுபடும். மக்களவை தேர்தலில் போட்டியிடுபவர் 25 ஆயிரம் ரூபாயும், சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுபவர் 10 ஆயிரம் ரூபாயையும் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்.

அதேநேரம் இந்த விதி பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு ஏற்ப மாறுபடும். மக்களவை தேர்தலில் போட்யிடும் பட்டியலின மற்றும் பழங்குடி வேட்பாளர் 12 ஆயிரத்து 500 ரூபாயும், சட்டப் பேரவை தேர்தலில் 5 ஆயிரம் ரூபாயையும் டெபாசிட் தொகையாக செலுத்தினால் போதுமானது என்பது தேர்தல் ஆணையத்தின் விதியாகும்.

அதேநேரம் தேர்தலில் பதிவான மொத்த வாக்கு சதவீதத்தில் 16 புள்ளி 7 சதவீதத்தை வேட்பாளர் பெற தவறும் பட்சத்தில் அவர் டெபாசிட் இழந்தவராக கருதப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, இந்த வேட்பாளரை பொருத்தவரை தேர்தலுக்குப் பின் டெபாசிட் இழந்து 25 ஆயிரம் ரூபாயை இழக்காமல் இப்போதே தப்பித்துக் கொண்டார் என்று தான் நாம் கருத வேண்டும்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்