Logo
Logo

முக்கிய செய்தி:

குற்றம்

கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு பயணம் - போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆண், பெண் கைது

SAMYUKTHA18-04-2024
கோலாலம்பூரில் இருந்து சென்னைக்கு பயணம் - போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆண், பெண் கைது

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு வந்த ஒரு இளைஞர் மற்றும் இளம்பெண் ஆகிய 2 பேரை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் அவர்களை மேல்நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர்ஏசியா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமானநிலையத்தின் சர்வதேச முனையத்தில் வந்திறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை விமானநிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்து அனுப்பி வைத்தனர். இதே விமானத்தில் மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தா முகவரியுடன் ராஜ்பர்மன் (31) என்ற இளைஞரும், சுப்ரதா (26) என்ற இளம்பெண்ணும் வந்தனர். அவர்களிடம் குடியுரிமை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர்கள் இருவரும் கோலாலம்பூரில் சென்னைக்கு விமானத்தில் வந்துவிட்டு, கொல்கத்தாவுக்கு ரயிலில் செல்வதற்கான டிக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் அவர்கள் இருவர்மீதும் குடியுரிமை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை வெளியே அனுப்பாமல், ஒரு தனியறையில் வைத்து தீவிரமாக விசாரித்தனர். விசாரணையில், ராஜ்பர்மனும் சுப்ரதாவும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. மேலும், இவர்கள் கடந்த ஓராண்டுக்கு முன் வங்கதேசத்தில் இருந்து இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்துக்குள் ரகசியமாக ஊடுருவியுள்ளனர். பின்னர் கொல்கத்தாவில் ஒருசில ஏஜெண்டுகளுக்கு பணம் கொடுத்து, இருவரும் இந்திய பிரஜைகள் போல் போலி ஆவணங்களுடன் பாஸ்போர்ட் வாங்கியுள்ளனர். பின்னர் அந்த போலி பாஸ்போர்ட் மூலம் இருவரும் மலேசியாவுக்கு சென்றுள்ளனர். அங்கு ஒருசில மாதங்கள் தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்துவிட்டு, அதே போலி பாஸ்போர்ட்டில் சென்னை திரும்பியுள்ளனர் என்று குடியுரிமை அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் போலி பாஸ்போர்ட்டில் நேரடியாக விமானத்தில் கொல்கத்தாவுக்கு சென்றால், அங்குள்ள குடியுரிமை அதிகாரிகள் கண்டுபிடித்துவிடுவர் என்பதால், இருவரும் சென்னையில் வந்திறங்கி, இங்கிருந்து ரயில் மூலம் கொல்கத்தாவுக்கு செல்ல திட்டமிட்டு இருந்ததாக இருவரும் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, போலி பாஸ்போர்ட் மூலம் கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலமாக சென்னை வந்த ராஜ்பர்மன், சுப்ரதா ஆகிய இருவரையும் குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர் இருவரையும் மேல்நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர். பிடிபட்ட இருவரிடமும் போலி இந்திய பாஸ்போர்ட் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை தயாரித்து கொடுத்த ஏஜெண்டுகள் யார், இதன் பின்னணியில் யார், யார் உள்ளனர் என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்