Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

"பிரதமர் மோடி ஒரு கருநாகம்: விவசாயிகளை, மீண்டும் கடிக்காமல் விடமாட்டார்" ; தெலங்கானா முதல்வர் ஆவேசம்

CHENDUR PANDIAN.K28-04-2024
"பிரதமர் மோடி ஒரு கருநாகம்: விவசாயிகளை, மீண்டும் கடிக்காமல் விடமாட்டார்" ; தெலங்கானா முதல்வர் ஆவேசம்

ஹைதராபாத்

"பிரதமர் மோடி கருநாகப் பாம்பு போன்றவர். அவர் விவசாயிகளை மீண்டும் கடிக்காமல் விடமாட்டார்" என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆவேசமாக கூறினார்.

தெலங்கானா மாநிலத்தில் மொத்தம் உள்ள 17 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு பதிவு மே 13 ஆம் தேதி ஒரே கட்டமாக நடை பெறுகிறது.

தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர ராவின் பி ஆர் எஸ் கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் தனித்தனியே இந்த தேர்தலை சந்திக்கின்றன.

மும்முனைப்போட்டி ஏற்பட்டுள்ள தெலங்கானா மாநிலத்தில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடி அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்து சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த நிலையில், ஐதராபாத் நகரில் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ் ஷெட்கரை ஆதரித்து பேசிய முதல் அமைச்சர் ரேவந்த் ரெட்டி, பிரதமர் மோடியை கருநாகப் பாம்புக்கு ஒப்பிட்டு ஆவேசமாக பேசினார். அவர் கூறியதாவது:-

"கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திரளான விவசாயிகள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பணிந்த பிரதமர் மோடி விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களை திரும்பப்பெற்றதாக அறிவித்தார்.

அப்போது விவசாயிகள் பிரதமர் மோடியை தங்களிடம் மன்னிப்பு கேட்கும் படி வலியுறுத்தி இருந்தனர். இந்த சம்பவத்தை மோடி ஒருபோதும் மறக்க மாட்டார். இதை மனதில் வைத்துக் கொண்டுதான் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை பெற்று விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடிமையாக்கி தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 400 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறார், பிரதமர் மோடி.

பிரதமர் மோடி நினைப்பது போல் இந்த தேர்தலில் 400 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றால் பழைய சம்பவத்தை மறக்காமல் விவசாயிகளை மீண்டும் கடிக்காமல் விடமாட்டார்".

இவ்வாறு சர்ச்சைக்குரிய விதத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆவேசமாக பேசியது தற்போது தெல ங்கானாவில்பேசு பொருளாக மாறி இருக்கிறது.

மேலும் அவர் பேசுகையில், "எஸ்சி எஸ்டி ஓபிசி மற்றும் சிறு பான்மையினரின் இட ஒதுக்கீட்டடை ரத்து செய்யும் நோக்கத்திலும் மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் அவர் வெற்றி பெற நினைக்கிறார். 60 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பொதுத் துறை நிறுவனங்களைகார்ப்பரேட் நிறுவனங்களிடம் மோடி அரசு ஒப்படைத்துள்ளது" என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

பாஜகவிடம் பணிந்த சந்திரசேகர ராவ்

இரண்டு முறை எம்பி ஆக பதவி வகித்த பி.பி பட்டீல் தற்போது ஜாகிராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதை குறித்து பேசிய ரேவந்த் ரெட்டி"அவரை பிசினஸ் பட்டீல் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும். பி ஆர் எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் இந்த தொகுதியில் பாஜகவிடம் பணிந்து விட்டார்.

அவருடைய மகள் கவிதாவுக்கு டெல்லி மதுபான ஊழல் வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக இந்த முடிவை அவர் எடுத்து இருக்கிறார். சந்திரசேகர ராவின் ஆலோசனைப்படிதான் பட்டீல் அவருடைய கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்து இருக்கிறார்" என்ற பகீர் தகவலையும் வெளியிட்டார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்