Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

2 - 0 என்ற கோல் கணக்கில் பா.ஜ.க. கூட்டணி முன்னணி: 2 கட்ட தேர்தலை கால்பந்துடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேச்சு

CHENDUR PANDIAN.K28-04-2024
2 - 0 என்ற கோல் கணக்கில் பா.ஜ.க. கூட்டணி முன்னணி: 2 கட்ட தேர்தலை கால்பந்துடன் ஒப்பிட்டு பிரதமர் மோடி பேச்சு

கோலாப்பூர்

இதுவரை நடந்து முடிந்த இரண்டு கட்ட தேர்தலை கால்பந்து போட்டி உடன் ஒப்பிட்ட பிரதமர் மோடி, 2க்கு 0 என்ற கோல் கணக்கில் பாஜக கூட்டணி முன்னணி பெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இந்தியா கூட்டணி இந்த இரு தேர்தல்களிலும் தங்களுக்கு தாங்களே சுய கோல்களை போட்டுக்கொண்டு தோல்வியை தழுவி இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் மின்னல் வேக சுற்றுப் பயணம் மேற்கொண்டு பிரதமர் மோடி சூறாவளி தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். மகாராஷ்டிரா மாநிலம், கோலாப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசினார்.

கோலாப்பூர் நகர இளைஞர்கள் கால்பந்து போட்டியில் மிகவும் ஆர்வம் கொண்டவர்கள். எனவே நடந்து முடிந்த தேர்தல்களையும் கால்பந்து போட்டியுடன் ஒப்பிட்டு நகைச்சுவையாக அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"முதல் இரண்டு கட்ட தேர்தலிலுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தான் வெற்றி கிடைத்துள்ளது. அதாவது தற்போது இரண்டுக்கு சைபர் என்ற கோல் கணக்கில் எங்கள் அணி முன்னணி வகிக்கிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் தங்களுக்கு தாங்களே சுய கோல்களை ( ஷெல்ப் கோல்) போட்டுக் கொண்டு தோல்வியை தழுவி இருக்கிறார்கள்.

தேச விரோதம், வெறுப்பு அரசியல் ஆகிய இரண்டும் தான் அந்த சுய கோல்கள் ஆகும். அவர்கள் தேச எதிர்ப்பு மற்றும் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த கட்சி ஆன திமுக சனாதனத்தை தவறாக பயன் படுத்துகிறது. சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா என்பார்கள் அவர்கள்.

சனாதனத்தை அழிக்க வேண்டும் என்று பேசுபவர்களை இந்தியா கூட்டணி மகாராஷ்டிராவிற்கு அழைத்து கௌரவிக்கிறது. திமுகவினருடன் தோளோடு தோள் சேர்ந்து போலி சிவசேனா ( உத்தவ் தாக்கரே பிரிவு) நடை போடுகிறது. வாக்கு வங்கி அரசியலில் இந்த கூட்டணி மிகவும் வெறித்தனமாக இருப்பதால் அவர்கள் 17ஆம் நூற்றாண்டின் முகலாயப் பேரரசரான அவுரங்கசீப்பை பின் பற்றுபவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒரே கொள்கை பணம் சம்பாதிக்கவே அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்பதாகும். மத்திய அரசு தனி கூட்டுறவு அமைச்சகத்தை நிறுவி சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் இயக்கத்தை தொடங்கி இருக்கிறது". இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்டுக்கு ஒரு பிரதமர்

இந்தியா கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் அவர்களுடைய பிரதமர் வேட்பாளர் குறித்தும் மோடி பேசினார்.

"இந்தியா கூட்டணி இந்த தேர்தலில் மூன்று இலக்க எண்ணிக்கையை கூட எட்டாது. எனினும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தால் ஐந்து ஆண்டுகள் ஐந்து பிரதமர்; அதாவது ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என பதவியில் அமர்த்த அவர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்" என்றும் அவர் நக்கலாக கூறினார்.

மேலும் அவர் பேசுகையில், "ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில் முஸ்லிம்களை உள்ளே கொண்டு வந்து "கர்நாடக மாடலை" நாடு முழுவதும் விரிவு படுத்த காங்கிரஸ் விரும்புகிறது. இந்தக் கூட்டணி சமூக நீதியை கொலை செய்ய சபதம் செய்திருப்பதாகவும்" குற்றம் சாட்டினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்