Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

நவாப்கள், நிஜாம்களுக்கு எதிராக பேச ராகுலுக்கு தைரியம் இல்லை - பிரதமர் மோடி தாக்கு

SAMYUKTHA28-04-2024
நவாப்கள், நிஜாம்களுக்கு எதிராக பேச ராகுலுக்கு தைரியம் இல்லை - பிரதமர் மோடி தாக்கு

நாட்டுக்காக மிகச்சிறந்த பங்களிப்பு செய்த இந்து மன்னர்கள், ராஜாக்களை இழிவாக பேசும் காங்கிரஸ் கட்சியின் இளவரசனுக்கு (ராகுல் காந்தி), நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள், பாட்ஷாக்களுக்கு எதிராக பேச தைரியமில்லை என்றும், வெறும் ஓட்டுக்காக இந்து மன்னர்களை இழிவாக பேசுவதாகவும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடகாவில் கடந்த 26ம் தேதி 14 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்த நிலையில், பெலகாவி, சிக்கொடி, விஜயபுரா, கலபுர்கி, ஷிவமொக்கா, பாகல்கோட்டை, பல்லாரி, ஹாவேரி, கொப்பல், ரெய்ச்சூர், தாவணகெரெ, பீதர், தார்வார், வடகனரா ஆகிய 14 தொகுதிகளுக்கு மே 7ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த 14 தொகுதிகளிலும் பாஜ - காங்கிரஸ் கட்சி நேருக்கு நேர் மோதுவதால், இரு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்தவகையில், பெலகாவி, வடகனரா, தாவணகெரெ மற்றும் பல்லாரி ஆகிய 4 ஊர்களில் நடந்த பிரசார பேரணியில் அடுத்தடுத்து கலந்துகொண்டு மோடி பிரசாரம் செய்தார். பெலகாவியில் பாஜ வேட்பாளரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் சிக்கொடி வேட்பாளர் அன்னாசாகேப் ஆகியோருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும் இப்பிரசாரத்தில் கலந்துகொண்டார். பெலகாவி பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, மக்களின் சொத்துகளை அதிகரிப்பதற்காக பாஜ உழைத்துவருகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் இளவரசன் ராகுல் காந்தி அவரது சகோதரி பிரியங்கா காந்தியும், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் நாட்டையே எக்ஸ்ரே செய்யவுள்ளதாக கூறுகின்றனர். அவர்கள் மக்கள் சொத்துகள், வங்கி லாக்கர்கள், நிலங்கள், வாகனங்கள், பெண்களின் தங்க நகைகள் ஆகியவற்றை எக்ஸ்ரே செய்வார்கள். உங்கள் ஒவ்வொருவரின் வீட்டிலும் சோதனை செய்து உங்கள் சொத்துகளை கைப்பற்றி, அவற்றை காங்கிரஸ் கட்சி அவர்களது வாக்கு வங்கியாக இருப்பவர்களுக்கு பிரித்து கொடுக்கும். இந்த மாபெரும் கொள்ளையை காங்கிரஸ் அரங்கேற்ற நீங்கள் அனுமதிப்பீர்களா? மோடி இருக்கும் வரை இதுபோன்ற எண்ணங்களை காங்கிரஸ் கைவிட வேண்டும் என்று எச்சரிக்கிறேன். நான் இருக்கும் வரை இதையெல்லாம் நடத்த விடமாட்டேன். காங்கிரஸ் இளவரசனின் சமீபத்திய பேச்சை கேட்டிருப்பீர்கள். நாட்டின் மன்னர்கள் மற்றும் ராஜாக்கள் ஒடுக்குமுறையை கையாண்டதாக கூறியிருக்கிறார். ஏழை மக்களின் சொத்துகளை மன்னர்களும், ராஜாக்களும் அபகரித்ததாக கூறி, சத்ரபதி சிவாஜி, கித்தூர் ராணி சென்னம்மா போன்ற தலைசிறந்தவர்களை அவமதிக்கும் விதமாக பேசியிருக்கிறார். அவர்களது ஆட்சிமுறையும், நிர்வாக முறையும் தான் இன்றைக்கு நமக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அப்பேர்ப்பட்ட தலைசிறந்த நபர்களை அவமதித்திருக்கிறார். மைசூரு மன்னர் குடும்பம் இன்றளவும் நாடு முழுக்க மதிக்கப்படுகிறார்கள். வாக்கு அரசியலை கருத்தில்கொண்டு ராகுல் காந்தி உள்நோக்கத்துடன் பேசிவருகிறார். இந்து மன்னர்களை அவமதிக்கும் வகையில் பேசும் ராகுல் காந்தி, நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாட்ஷாக்களுக்கு எதிராக வாய் திறப்பதில்லை. அவுரங்கசிப் 4 கோவில்களை இடித்தார். ஆனால் அவுரங்கசிப்பை பெருமையாக பேசும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு மகிழ்ச்சி. இந்து கோவில்களை இடித்தவர்களை எல்லாம் காங்கிரஸ் நினைவில் வைத்துக்கொள்ளாது. பசுக்களை கொன்ற மற்றும் நாட்டின் பிரிவினைக்கு காரணமான நவாப்களை எல்லாம் காங்கிரஸ் நினைவுகூட படுத்தாது. இந்து அரசர்கள் நாட்டிற்கு மிகப்பெரிய பங்காற்றியுள்ளனர். பனாரஸ் மன்னர் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நிறுவினார். மகாராணி அஹில்யாபாய் ஹோல்கர் கோவில்களை சீரமைத்தார். அம்பேத்கரின் திறமையை அடையாளம் கண்டவர் பரோடா மகாராஜா. காங்கிரஸ் இளவரசருக்கு இந்து அரசர்களின் பங்களிப்பு நினைவில் இருக்காது. ஓட்டுக்காக இந்து அரசர்கள், மன்னர்களுக்கு எதிராக பேசும் ராகுல் காந்திக்கு நவாப்கள், சுல்தான்களுக்கு எதிராக பேச தைரியம் இல்லை. ஹூப்பள்ளி கல்லூரி மாணவி நேஹா கொலையை சுட்டிக்காட்டி பேசிய பிரதமர் மோடி, நேஹா போன்ற நம் மகள்களின் வாழ்க்கை மீதும் பாதுகாப்பு மீதும் காங்கிரஸ் கட்சிக்கு எந்த அக்கறையும் இல்லை. மாறாக அவர்களுக்கு வாக்கு வங்கி தான் முக்கியம். ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கைக்கூட காங்கிரஸ் அரசு முதலில் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. முதலில் சிலிண்டர் வெடித்ததாகத்தான் கூறினார்கள். ஏன் மக்களிடம் பொய் கூறுகிறீர்கள்? உண்மையை கூற முடியவில்லை என்றால் வீட்டுக்கு சென்றுவிடுங்கள் என்று சாடினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்