Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

தேர்தல் பத்திரம் பற்றி கருத்து; உச்ச நீதிமன்றத்திடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் - சஞ்சய் சிங் பேச்சு

PRIYA16-04-2024
தேர்தல் பத்திரம் பற்றி கருத்து; உச்ச நீதிமன்றத்திடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் - சஞ்சய் சிங் பேச்சு

தேர்தல் பத்திரம் பற்றி கூறிய கருத்துக்காக உச்ச நீதிமன்றத்திடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆம் ஆத்மி தலைவரும் எம்பியுமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டம் அரசியல்சாசனத்துக்கு எதிரானது என்றும் சட்டத்துக்கு புறம்பானது என்றும் கூறி உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து வெளியான தேர்தல் பத்திர பரிமாற்ற தகவல்கள் மூலம், நிதி வழங்கிய நிறுவனங்கள் மற்றும் கட்சிகள் பெற்ற நிதி விவரங்கள் தெரிய வந்தன.

இந்நிலையில், ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்து இருந்தார். அப்போது, தேர்தலில் கருப்புப் பண புழக்கத்தை ஒழிக்கவே இந்த தேர்தல் பத்திர திட்டம் உருவாக்கப்பட்டது என்றும், இந்த திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக அதனை எதிர்த்தவர்கள் அனைவரும் வருந்துவார்கள் என கூறினார்.

பிரதமர் மோடியின் இந்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் சஞ்சய் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது –

பிரதமர் மோடி நேற்று விரிவான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். ஆனால் அதில் அதிர்ச்சி அளிக்கும் விசயம் என்ன என்றால், சுதந்திரத்துக்குப் பின்னர் நடந்த மிகப்பெரிய ஊழலைப் பாதுகாக்கும் விதமாக பேசி உள்ளார். தேர்தல் பத்திரங்கள் அரசியல்சாசனத்துக்கு எதிரானவை என்றும் சட்டத்துக்கு புறம்பானவை என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. அவர் உச்ச நீதிமன்றத்தை அவமதித்து விட்டார். உச்ச நீதிமன்றத்திடமும் மக்களிடமும் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் பிரதமரோ அவரது அரசோ நாட்டுக்காக எதுவும் செய்யவில்லை. நாட்டின் முக்கிய பிரச்சினைகளான பணவீக்கம், வேலையின்மை, அக்னிவீர் திட்டம், மணிப்பூர் விவகாரம் என எதைப் பற்றியும் அவர் பேசவே இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்