Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

மக்களவை தேர்தல்: திமுகவின் ஸ்ட்ரைக் ரேட் எப்படி இருக்கும்?

LENIN DEVARAJAN16-04-2024
மக்களவை தேர்தல்: திமுகவின் ஸ்ட்ரைக் ரேட் எப்படி இருக்கும்?

வரும் மக்களவை தேர்தலில் திமுகவின் ஸ்ட்ரைக்ரேட் எப்படி இருக்கும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த மக்களவை தேர்தலின் போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக 38 இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதே வெற்றியை ஆளுங்கட்சியாக பதிவு செய்யுமா? என்பதே பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, திமுக அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பொதுமக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தாலும், கூட்டணி பலமாக இருப்பதால் திமுகவின் கை ஓங்கியே இருக்கிறது. ஒரு பக்கம் அதிமுக கூட்டணி பலமின்றி இருப்பதும் திமுகவுக்கு பிள்ஸ் பாயிண்ட்.

சவுக்கு மீடியாவின் சர்வேபடி தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் திமுக கூட்டணி 30 இடங்களையும், அதிமுக கூட்டணி 9 இடங்களையும் கைப்பற்றும் என தகவல் தெரிய வந்துள்ளது.

இந்த தேர்தலில் ஒருவேளை பாஜக கூட்டணி அதிக வாக்குகள் பெற்றால், அது அதிமுகவின் பலவீனமாக தான் பார்க்கப்படும். ஏனென்றால், தமிழகத்தில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ளும் போது, அதிமுக தலைவர்களான முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்-ஐ முன்வைத்து பேசுகிறார். அதிமுகவினரை கவரும் வகையில் பேசி அக்கட்சியின் வாக்குகளை பாஜக பக்கம் திருப்புவதே பிரதமரின் தந்திர அரசியல் என்கிறார்கள் பாஜகவினர். பிரதமரின் அத்தகைய பேச்சுக்கு அதிமுகவினர் ஒரு பக்கம் தகுந்த பதிலடியும் கொடுக்கிறார்கள்.

2014 மக்களவை தேர்தலின் போது, ஜெயலலிதா ஊழல்வாதி என்று பேசிய பிரதமர், தற்போது ஜெயலலிதாவை புகழந்து பேச காரணம் என்ன? என திமுகவினரின் கேள்விக்கு பாஜகவினரிடம் பதில் இல்லை.

பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக கூட்டணியில் இடம்பெறாதது திமுகவுக்கு கூடுதல் பலம். கடந்த 5 ஆண்டுகளில் வட சென்னை மற்றும் தென் சென்னை திமுக எம்.பி.க்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என பொதுமக்கள் மத்தியில் பேசப்படுகிறது. அதே வேட்பாளர்களுக்கு திமுக மீண்டும் சீட் வழங்கியிருப்பதால் கடந்த தேர்தலை போலவே எளிதான வெற்றி திமுகவுக்கு கிடைப்பதில் சந்தேகமே. எனினும், வட சென்னை மற்றும் தென் சென்னை ஆகிய தொகுதிகளில் அதிருப்தி நிலவினாலும் திமுகவுக்கு அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கிரவுண்ட் ரிப்போர்ட் சொல்கிறது.

குறிப்பாக தென் சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை வாக்குகளை பிரிக்கும் போது, அது அதிமுக வேட்பாளர் ஜெயவரதனுக்கு சாதகமாக இருக்கலாம். காரணம் தமிழச்சி தங்கபாண்டியன் மீதுள்ள உச்சகட்ட அதிருப்தி.

கள நிலவரம் இப்படி இருக்கையில், ’நாடும் நமதே, நாற்பதும் நமதே’ என சமூக வலைதளங்களில் திமுகவினர் பரப்புரை மேற்கொள்கிறார்கள். திமுகவின் சோஷியல் மீடியா பரப்புரைகள் வாக்காளர்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிய ஜூன் 4ம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.

தமிழ்நாடு புதுவை என 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெறும் என முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம். உளவுத்துறையின் இந்த ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலினை குளிரவைக்கவே என அதிமுகவினர் விமர்சிக்கிறார்கள்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்