Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

ஒட்டுக்கேட்பு விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

LENIN DEVARAJAN16-04-2024
ஒட்டுக்கேட்பு விவகாரம்: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்

திமுகவினரின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்தில் திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்துள்ளார். சி.பி.ஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட புலனாய்வு அமைப்புகள் மூலம் திமுக நிர்வாகிகளின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.

மக்களவை தேர்தலுக்கான பரப்புரைகள் நாளை மாலையுடன் நிறைவடைகிறது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தேர்தல் பரப்புரை தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. அதில், மாலை 6 மணிக்கு மேல் தேர்தல் பரப்புரைகள் மேற்கொள்ளக் கூடாது. பேஸ்புக், வாட்ஸ் ஆப், எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் எந்தவித பரப்புரைகளும் மேற்கொள்ளக்கூடாது. நாளை மாலை 6 மணிக்கு மேல் பரப்புரைகள் மேற்கொள்பவர்கள் மீது 2 ஆண்டுகள் தண்டனை (அ) அபராதம் விதிக்கப்படும். வெளியூரிலிருந்து பரப்புரை மேற்கொள்ள வந்தவர்கள் நாளை மாலை 6 மணிக்கு மேல் தொகுதியில் இருக்கக்கூடாது ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திமுகவின் வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளின் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்படுவதாக தேர்தல் ஆணையத்திற்கு திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த புகார் கடிதத்தில்,

தமிழகத்தில் உள்ள முன்னணி தலைவர்களின் செல்போன் உரையாடல்கள், தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களின் செல்போன் உரையாடல்களும் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இது மத்திய அரசு கொண்டுள்ள சட்டத்தின் விதியை மீறிய செயல். தனிப்பட்ட சுதந்திரத்தை கெடுக்கும் வகையில், யாருடைய செல்போன் உரையாடல்களையும் ஒட்டுக் கேட்கக்கூடாது என மத்திய அமைச்சகத்தின் உத்தரவு உள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளும் உள்ளன. இதை எல்லாவற்றையும் மீறி சிபிஐ, வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசின் ஏஜென்சிகள் சட்டவிரோத மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்டு வருகின்றன. இதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சுதந்திரமான முறையில் மக்களவை தேர்தலை நடத்த வேண்டும்”, இவ்வாறு புகார் கடிதத்தில் ஆர்.எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்