Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

பாஜவுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த நிமிடமே சின்னம் ஒதுக்குகின்றனர் - கிருஷ்ணசாமி ஆதங்கம்

SAMYUKTHA28-03-2024
பாஜவுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த நிமிடமே சின்னம் ஒதுக்குகின்றனர் - கிருஷ்ணசாமி ஆதங்கம்

ஐடி, ஈடி, சிபிஐ உள்ளிட்டவை பாஜவின் ஏவல் அமைப்பாக மாறிவிட்டது. பாஜவுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த நிமிடமே சின்னம் ஒதுக்குகின்றனர் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி கூறினார். தென்காசியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது: தென் தமிழகத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பது எனது நீண்ட கால கனவு. அனைத்து பகுதிகளின் தேவைகளும் பிரச்னைகளும் எனக்கு நன்றாக தெரியும். கட்சி சின்னம் என்று பார்க்காமல் வாக்காளர்கள் வேட்பாளர்களின் தகுதி திறமையை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை கொடுக்க வேண்டும். பாஜ நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் 100 நாள் வேலை கூலி உயர்வு அறிவிப்பு வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு வெளியாகி உள்ளது.‌ இது தேர்தல் விதிகளுக்கு மாறான நடவடிக்கை. தேர்தல் ஆணையம் இதனை எப்படி அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. கடந்த 2019ல் அதிமுகவுடன் இணைந்து போட்டியிட்டேன். ஆனால் மோடிக்கு எதிரான அலையால்தான் நான் தோற்றேன். தற்போது எடப்பாடிக்கு ஆதரவான அலை வீசுகிறது. பாஜ உடன் கூட்டணியில் இருந்த போதும் நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு அதாவது அதானிக்கு ஏலம் விட்டபோது அதனை கடுமையாக எதிர்த்தேன். பெகாசஸ் உளவு கருவி மூலம் உளவு பார்த்த போதும் பாஜவை கடுமையாக எதிர்த்தேன். ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்டவை பாஜவின் ஏவல் அமைப்பாக மாறிவிட்டது. இரண்டு மாதம் முன்பே தனி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினேன். கூட்டணி கணக்கு பார்த்து தான் தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குகிறது. பாஜவுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த நிமிடமே சின்னம் ஒதுக்குகின்றனர். மற்ற கூட்டணியில் உள்ளவர்களுக்கு ஏதேனும் ஒரு காரணத்தைச் சொல்லி மறுத்து விடுகின்றனர். பாஜ மற்றும் தேர்தல் ஆணையம் குறுகிய நோக்கோடு நடந்தால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்து வரும். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை எந்த விதத்திலும் சரியானது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்