Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம் வைக்கும் மோசடி அதிகரிப்பை தடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

SAMYUKTHA28-03-2024
வீட்டை குத்தகைக்கு எடுத்து அடமானம் வைக்கும் மோசடி அதிகரிப்பை தடுக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும் - உயர் நீதிமன்றம் உத்தரவு

குத்தகைக்கு எடுக்கும் வீடுகளை முறைகேடாக அடமானம் வைத்து மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க டிஜிபி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனது வீட்டை குத்தகைக்கு எடுத்த ராமலிங்கம், தனக்கு தெரியாமல் அந்த வீட்டை அடமானம் வைத்து மோசடி செய்ததாக சென்னை முகப்பேரை சேர்ந்த கனகராஜ் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராமலிங்கத்திற்கு கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஜாமீனை ரத்து செய்யக்கோரி கனகராஜ் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணை வந்தது. அப்போது, சமீபகாலங்களில் இதுபோன்ற முறைகேடு புகார்கள் அதிகரித்து வருவது குறித்து விளக்கம் அளிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், இதுபோன்ற முறைகேடுகள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அதிகார எல்லைக்குள் மட்டும் 40 வழக்குகள் பதிவாகி உள்ளன. அதில் 7 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்யப்பட்டு 67 வீட்டு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாம்பரம் கமிஷனர் அதிகார எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட 9 வழக்குகளில் 13 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. அதில் 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆவடி கமிஷனர் அதிகார எல்லைக்குள் பதிவான 4 வழக்குகளில் 2 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. அதில் 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் 4 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். அதில், 1200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 41 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வகையில் 65 கோடி ரூபாக்கு மேல் மோசடி நடந்துள்ளது. இந்த மோசடி கும்பல் அடுத்தவர்கள் சொத்தை அடமானம் வைத்து பணத்தை எல்லாம் சுருட்டிய பின்னர் இது சிவில் பிரச்னை என்று திசை திருப்பி மோசடி வழக்கை இழுத்தடிக்கிறார்கள்.

சட்டத்தை தெளிவாக போலீசார் புரிந்துகொள்ளாததால் 2013ல் பதிவான இதுபோன்ற மோசடி வழக்கில் கூட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யாமல் உள்ளனர்.

இதுபோன்ற மோசடி வழக்குகள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. அதனால் இந்த மோசடி கும்பல் குறித்தும், மோசடி குறித்தும் பொதுமக்கள் மத்தியில் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் இந்த வழக்கில் டி.ஜி.பியை தாமாக முன்வந்து எதிர்மனுதாரராக இந்த நீதிமன்றம் சேர்க்கிறது. இதுபோன்ற மோசடியை தடுக்க டி.ஜி.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்