Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

6 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு - ஐவர் தலைமறைவு

SAMYUKTHA28-03-2024
6 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு - ஐவர் தலைமறைவு

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி எம்பி, பாஜ கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாகவும், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள், நாம் தமிழர் கட்சி சந்திரபிரபா ஜெயபால் மற்றும் சுயேட்சையாக ஒ.பன்னீர்செல்வம் பெயருடைய 4 பேர், எம்.பன்னீர்செல்வம் என்ற பெயருடைய ஒருவர் உள்ளிட்ட 35 பேர், 56 வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர். நேற்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையில் நவாஸ்கனி, ஓபிஎஸ், ஜெயபெருமாள், சந்திரபிரபா ஜெயபால் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அதேபோல் சுயேட்சையாக தாக்கல் செய்யப்பட்ட ஒ.பன்னீர் செல்வம் உட்பட 5 பன்னீர்செல்வங்களின் மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 28 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 28 மனுக்கள் மட்டும் ஏற்றுக் கொள்ளப்பட்டன. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்சுக்கு போட்டியாக சுயேட்சையாக தாக்கல் செய்த 5 மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால், அவருக்கு சின்னம் ஒதுக்குவதில் இவர்கள் போட்டியாக இருப்பார்கள் என்றும், வாக்குப்பதிவின்போது குழப்பத்தை ஏற்படுத்தவும் இவர்கள் காரணமாக இருப்பார்கள் என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

ஓபிஎஸ்சுக்கு போட்டியாக பன்னீர்செல்வம் பெயரில் மனுதாக்கல் செய்த 5 பேரும் நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வரவில்லை. அவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களில் 3 பேரை அதிமுகவினர் தங்களது கட்டுப்பாட்டில் தலைமறைவாக வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் வெளியில் தெரிந்தால் அவர்களின் வேட்புமனுக்களை வாபஸ் பெற வைக்க ஓபிஎஸ் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்துவர் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இவர்களை வேட்புமனு வாபஸ் பெறும் நாளான நாளை மறுநாள் 30ம் தேதி வரை தலைமறைவாக வைத்து, இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம் பெறச் செய்து ஓபிஎஸ்சுக்கு தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்த அதிமுகவினர் செயல்பட்டு வருகின்றனர் என ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்