Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

உத்தரப்பிரதேச 'தாதா' முக்தர் அன்சாரி சிறைச்சாலையில் திடீர் மரணம்: "ஸ்லோ பாய்சன்" மூலம் கொலையா? பரபரப்பு தகவல்கள்

CHENDUR PANDIAN.K29-03-2024
உத்தரப்பிரதேச 'தாதா' முக்தர் அன்சாரி சிறைச்சாலையில் திடீர் மரணம்: "ஸ்லோ பாய்சன்" மூலம் கொலையா? பரபரப்பு தகவல்கள்

லக்னோ

உத்தர பிரதேச மாநிலம் பாண்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு இருந்த பிரபல தாதா முக்தர் அன்சாரி மரணமடைந்தார் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் "மெல்லக் கொல்லும் விஷம்" (ஸ்லோ பாய்சன்) மூலம் அவர் கொலை செய்யப்பட்டார் என்ற புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேசம் மாநிலம் மவூ தொகுதியின் எம்எல்ஏ-வாக அவர் பணியாற்றி உள்ளார். அவர் மீதான பல்வேறு குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் காரணமாக பாண்டா சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வந்தார்.

63 வயதான அவர் கடந்த 26-ம் தேதி அதிகாலை வயிற்று வலி காரணமாக பாண்டா மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அது குறித்த தகவல் அவரது குடும்பத்தினர் வசம் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் அவருக்கு லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை அவரது குடும்பத்தினர் முன்வைத்தனர். இருந்தும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டது.

வியாழக்கிழமை இரவு 8.25 மணி அளவில் பாண்டாவில் உள்ள ராணி துர்காவதி மருத்துவக் கல்லூரியின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறையில் இருந்த முக்தார் அன்சாரி கொண்டு வரப்பட்டார். அவரை சிறைச்சாலை ஊழியர்கள் அழைத்து வந்தனர்.

அப்போது அவர் மயங்கிய நிலையில் இருந்தார். நோயாளிக்கு 9 மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இருந்தும் நோயாளி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், "ஸ்லோ பாய்சன்" என்று அழைக்கப்படும் மெல்லக் கொல்லும் விஷம் மூலம் அவர் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் இதுகுறித்து வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "முக்தர் அன்சாரியின் மறைவு குறித்த துயரமான செய்தி கிடைத்துள்ளது. அவருடைய ஆன்மா சாந்தியடையவும் அவருடைய இழப்பை தாங்கும் சக்தியை குடும்பத்தினருக்கு வழங்கவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறோம்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

மேலும், "சில நாட்களுக்கு முன்பு தனக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவர் புகார் கூறியிருந்தார். ஆனால் இதை அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதை நியாயமானதாகவோ மனிதாபிமான மிக்கதாகவோ எடுத்துக் கொள்ள முடியாது. அரசியல் சாசன அமைப்புகள், தானே முன்வந்து இந்த வினோதமான சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

ஏ ஐ எம் ஐ எம் கட்சித் தலைவர் அசாருதீன் ஒவைசியும் அன்சாரி மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன், மெல்ல கொல்லும் விஷம் அவருக்கு வழங்கப்பட்டது பற்றியும் குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றி மாநில அரசு எந்த கவனமும் செலுத்தாமல் அலட்சியமாக இருந்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் ஒவைசி கூறியிருக்கிறார்.

சிறை அதிகாரிகளுக்கு கடிதம்

முன்னதாகஅன்சாரி கடந்த 21ஆம் தேதி சிறை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் தனக்கு உணவில் விஷம் வைக்கப்பட்டது குறித்து தெரிவித்திருந்த அவர், உணவில் சில விஷ பொருட்கள் இருந்ததையும் குறிப்பிட்டு இருந்தார். அந்த உணவை சாப்பிட்ட பின் அவரது கை, கால்களில் கடுமையான வலி இருந்ததையும் கடிதத்தில் அவர் தெரிவித்து இருந்தார்.

அன்சாரியின் வழக்குரைஞர் இது குறித்து சிறப்பு நீதிமன்றத்திற்கு புகார் அளித்ததுடன் அதன் நகலை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து இருந்ததும் நினைவு கூரத்தக்கது.

144 தடை உத்தரவு

அன்சாரி மரணம் அடைந்ததும் இந்த தகவல் பரவியதால் உத்தரபிரதேசத்தில் பதட்டம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து மாநிலம் முழுவதும் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பீகார் மாநில முன்னாள் எம்பி பப்பு யாதவ் இது "திட்டமிடப்பட்ட மறைமுக கொலை அல்லது சட்டத்தை குழிதோண்டி புதைப்பதற்கு சமம் "என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

52 கிரிமினல் வழக்குகள்

மேற்கு உத்தர பிரதேசத்தின் மவு தொகுதியில் ஐந்து முறை எம்எல்ஏவாக பதவி வகித்த அன்சாரி சொத்து வணிகத்தில் ஈடுபட்டு வந்தார். உத்தரப் பிரதேசத்திலும் பிற இடங்களிலும் அவருக்கு எதிராக 52 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இரண்டு முறை பகுஜன் சமாஜ்வாடி கட்சி சார்பில் அவர் போட்டியிட்டிருந்தார். கடைசியாக 2017 ஆம் ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்டார். *பமுக்தர் அன்சாரியின் பழைய, தற்போதைய தோற்றம்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்