Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

செக்மெட் விபத்து: இரட்டை வேடம் போடுகிறதா போலீஸ்? கதறும் உறவினர்கள்

ESWAR29-03-2024
செக்மெட் விபத்து: இரட்டை வேடம் போடுகிறதா போலீஸ்? கதறும் உறவினர்கள்

பிரபல ஓட்டலின் மதுபான கூடம் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், அந்நிறுவனத்தின் மேலாளரை போலீசார் கைது செய்து, தலைமறைவாக உள்ள உரிமையாளரை தேடி வருகின்றனர்.

சென்னை ராஜா அண்ணாமலை புரம் சேமியர்ஸ் சாலையில் பிரபல தனியார் கேளிக்கை விடுதி (செக்மேட்) செயல்பட்டு வருகிறது. அங்கு நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் ஓட்டல் கீழ்தளத்தில் உள்ள மதுபானக்கூடத்தில் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதுமட்டுமின்றி மதுபானக்கூடத்தில் பொதுமக்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஓட்டலின்‌ முதல் தளம் இடிந்து கீழே விழுந்ததில் ஓட்டல் ஊழியர்கள் உட்பட 5 பேர்‌ இடர்பாடுகளில் சிக்கிக்கொண்டனர்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற நபர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். உடனே ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தன் பேரில் அபிராமபுரம் போலீஸார் மற்றும் தேனாம்பேட்டை பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று இடர்பாடுகளில் சிக்கிய நபர்களை மீட்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஓட்டல் ஊழியர்கள் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சைக்குளோன் ராஜ் (45) , மணிப்பூரை சேர்ந்த மேக்ஸ் (21), திருநங்கை லில்லி (22), ஆகிய 3 பேர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 3 பேர்‌ உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இடர்பாடுகளில் சிக்கிய மேலும் இருவரை மீட்கும் பணியில் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு அவர்களையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து அபிராமபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சூழ்நிலையில் பாரின் மேலாளர் சதீஷ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் பணியாற்றிய 12 ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்ட விசாரணையில் மெட்ரோ பணியின் போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாக மேற்கூரை இடிந்து இதில் மூன்று பேர் பலியானது தெரியவந்துள்ளது. தகவல் அறிந்து சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை‌ குறித்து ஆய்வு நடத்தினார்.

மெட்ரோ நிர்வாகம் அறிக்கை

மெட்ரோ நிர்வாகம் விபத்துகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விபத்திற்கும் மெட்ரோ பணிகளுக்கும் தொடர்பு இல்லை எனவும், இந்த ஹோட்டலுக்கும் மெட்ரோ பணிகளுக்கும் 240 மீட்டர் அளவு தொலைவு உள்ளது. ஆகவே இந்த விபத்திற்கும் மெட்ரோ பணிகளுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என மெட்ரோ சார்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறை முழு விசாரணை செய்த பிறகு இந்த விபத்து தொடர்பான முழு தகவல்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய உயிரிழந்த சைக்குளோன் ராஜ் சகோதரர்கள் ”எங்களது அண்ணன் கடந்த இரண்டு வருடங்களாக இந்த தனியார் பாரில் பணிபுரிந்து வருவதாகவும், இதில் வரும் வருமானத்தை வைத்து அவருடைய மனைவி மற்றும் நான்கு பெண் பிள்ளைகளை வளர்த்து வருகிறார். நான்கு பெண் பிள்ளைகளின் எதிர்காலம் என்னவென்று தெரியாமல் நிற்கதியாய் நிற்கும் எங்களுக்கு அரசு உரிய நீதி பெற்று தர வேண்டும் எனவும் போலீசார் முழுமையான விசாரணை நடத்தாமல் வழக்கை சீக்கிரம் முடிப்பதிலேயே அவசர காட்டி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.

நிர்வாகம் தரப்பில் இதுவரை எங்களை அழைத்துப் பேசாமல் அவர்கள் தரப்பிலிருந்து ஒரு தகவலும் அளிக்காமல் அவர் நிறுவனத்தில் பணிபுரிந்த நபர் உயிரிழந்தது குறித்து இதுவரை உறவினர்களிடம் தெரியாமல் இருப்பது எவ்விதத்தில் நியாயம் என்றும் காவல்துறை உடலை பார்ப்பதற்கு மட்டுமே எங்களுக்கு போன் செய்து கூறியதாகவும், அருகில் நடக்கும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாகவே இந்த அதிர்வு நடந்திருக்கும் என கூறிய அவர்கள் பின்பு சிறிது நேரத்தில் அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, மேலே கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது, அதனால் தான் சரிந்து விழுந்து இருக்க கூடும் என மாற்றி மாற்றி கூறுவது எங்களால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை” என்று கூறினார்.

சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் தலைமறைவாக உள்ள உரிமையாளரை தீவிரமாக தேடி வருகின்றனர். முழுக்க முழுக்க மெட்ரோ ரயிலின் அதிர்வினால் மட்டுமே இந்த விபத்து நடந்திருக்க கூடும் எனவும் குடும்பத்தார்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முதல் தகவல் அறிக்கை வெளியீடு

விபத்தில் உயிரிழந்த மூன்று பேரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், மெட்ரோ பணிகளால் ஏற்கனவே, இது போன்று கட்டிடம் குலுங்கியதாக கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடந்த விருந்தின் போது பாரில் பணிபுரிவர்கள் உரத்த சத்தம் உணர்ந்த போதும் லேசான அதிர்வு குறித்து தெரிவித்த நிலையிலும் சதீஷ் மற்றும் அசோக் இது குறித்து பெரிதாக கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் இருவரும் கண்டு கொள்ளவில்லை எனவும் எஃப்.ஐ.ஆர்-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சக ஊழியர்களின் உயிரிழப்புக்கு நீதி வழங்கவும், ’சேக்மெட்’ பார் உரிமையாளர்களான அசோக்குமார் மற்றும் சதீஷ் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இதே போன்று மூன்று மாதத்திற்கு முன்பும், ஒரு அதிர்வு ஏற்பட்டதாகவும் அங்கு வேலை செய்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்