Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

'இண்டியா' கூட்டணி: பிகாரில் தொகுதிப் பங்கீடு இறுதியானது

PRIYA29-03-2024
'இண்டியா' கூட்டணி: பிகாரில் தொகுதிப் பங்கீடு இறுதியானது

பிகார் மாநிலத்தில் இண்டியா கூட்டணிக் கட்சிகளில் இடையே தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்படி ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சி (ஆர்.ஜே.டி) 26 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இடதுசாரி கட்சிகளுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.

தேசிய அளவில் இண்டியா கூட்டணியாகவும் பிகார் மாநில அளவில் மகாகட்பந்தன் கூட்டணியாக காங்கிரஸ், ஆர்ஜேடி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீட்டில் முரண்பாடு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இந்த தொகுதிப் பங்கீடு இறுதியான செய்தி வெளியாகி உள்ளது.

பாட்னாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மகாகட்பந்தன் கூட்டணியின் இந்த அறிவிப்பு வெளியானது. இதில் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் தான் அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் கலந்து கொள்ளவில்லை. இது பேசு பொருளாகி உள்ளது.

பிகார் மாநிலத்தில் 40 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஏப்ரல் 19ம் தேதி முதல் கட்டத்தில் 4 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இந்த 4 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஆர்.ஜே.டி ஏற்கனவே தன்னிச்சையாக அறிவித்து விட்டது. இது கூட்டணிக்கட்சிகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது. தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்ட மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என ஆர்ஜேடி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை எம்பியுமான மனோஜ் ஜா தெரிவித்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பூர்னியா தொகுதியில் ஆர்ஜேடி போட்டியிடுகிறது. ஆர்ஜேடி சார்பாக ஐக்கிய ஜன தள கட்சியின் முன்னாள் உறுப்பினர் பிமா பாரதி போட்டியிடுகிறார்.

காங்கிரஸ் கட்சி, கிஷன்கஞ், பாட்னா சாகிப் உள்ளிட்ட 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இடதுசாரி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 தொகுதிகளில் 3ல் சிபிஐ (எம்.எல்) கட்சியும், சிபிஐ மற்றும் சிபிஎம் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன. சிபிஐ கட்சி பெகுசராய் தொகுதிக்கும் சிபிஎம் கட்சி ககாரியா தொகுதிக்கும் தங்கள் வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து விட்டன.

இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் கூறுகையில், “நாங்கள் ஒருமித்த கருத்தை எட்டிவிட்டோம். நாங்கள் வெற்றி அடைவோம்”, என்றார்.

கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்லில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) 39 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்