Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

பாஜ வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் - காங். வேட்பாளர் ஆதரவாளர்கள் வலியுறுத்தல்

SAMYUKTHA28-03-2024
பாஜ வேட்பாளர் மனுவை தள்ளுபடி செய்யவேண்டும் - காங். வேட்பாளர் ஆதரவாளர்கள் வலியுறுத்தல்

வேட்புமனுவில் தவறான தகவல் தந்ததால், சிவகங்கை பாஜ வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென காங். வேட்பாளர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ், அதிமுக, பாஜ கூட்டணியில் இமகமுக, நாம் தமிழர் ஆகிய பல்வேறு கட்சி வேட்பாளர்கள், மாற்று வேட்பாளர்கள், சுயேட்சைகள் உள்பட 28 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இன்று காலை 11 மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வேட்புமனுக்கள் பரிசீலனை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், கலெக்டர் ஆஷா அஜித் முன்னிலையில் நடந்தது.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ், பாஜ (இமகமுக) வேட்பாளர் தேவநாதன், நாம் தமிழர் வேட்பாளர் எழிலரசி, பகுஜன் சமாஜ் வேட்பாளர் ரஞ்சித்குமார் மற்றும் சுயேட்சைகள் உள்பட 21 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

அப்போது பாஜ வேட்பாளர் தேவநாதனின் மனுவை ஏற்க கூடாது என்று காங்கிரஸ் வேட்பாளர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தின் பிரதிநிதியாக கலந்துகொண்ட சேங்கைமாறன் கூறுகையில்,‘பாஜவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் என்ற அமைப்பும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதன் நிறுவனத்தலைவரும், சிவகங்கை வேட்பாளருமான தேவநாதனும், பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும் கூட்டணி ஒப்பந்தம் வெளியிட்டுள்ளனர். தேவநாதன் தற்போது பாஜ சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இமகமுக அமைப்பின் நிறுவனத்தலைவராக இருக்கும்பட்சத்தில் பாஜ சார்பில் போட்டியிடுவதாக வேட்புமனுவில் முரணான தகவலை தெரிவித்துள்ளார்.

பாஜ உறுப்பினர் பட்டியலில் அவரது பெயர் இல்லை. எனவே வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் இவரது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்றார். ஆனால் தேவநாதன் வேட்புமனு ஏற்கப்பட்டதாக கலெக்டர் ஆஷாஅஜித் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருப்பதாக சேங்கைமாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்