Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

10 கோடி பணம்! எம்பி சீட் கோரிக்கை! ஓபிஎஸ் செய்த தந்திரம்!

DINDUGAL KARTHICK 09-03-2024
10 கோடி பணம்! எம்பி சீட் கோரிக்கை! ஓபிஎஸ் செய்த தந்திரம்!

தேனி மாவட்டம் தேனி அருகே உள்ள லட்சுமிபுரம் AGP நகரைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவரது கணவர் வெங்கடேஷ்.

ராஜேஷ்வரியின் கணவர் வெங்கடேஷ் சில மாதங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானதாக கூறப்படுகிறது. இவர் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது.

இவர் கடந்த வாரம் சேலத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்திக்க சென்றுள்ளார். அப்போது தேனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், அதற்காக எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்ய தயாராக இருப்பதாகவும், முன்பணமாக காரில் ரூபாய் 10 கோடி பணம் கொண்டு வந்திருப்பதாகவும் கூறியதைக் கேட்டு எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் தற்போது பணம் வேண்டாம் எனவும் வேட்பாளராக விரும்பினால் கட்சி விதிமுறைப்படி தலைமை கழகத்தில் சென்று விருப்பமனு அளியுங்கள் என தெரிவித்துள்ளார். அதன்படி தலைமைக் கழகத்தில் ராஜேஸ்வரி விருப்பமனு அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், எடப்பாடி பழனிச்சாமியின் நண்பருமான இளங்கோவன் மூலமாக மீண்டும் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து, தேனி மக்களவைத் தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் எனவும் இதற்காக கட்சிக்கு எத்தனை கோடி வேண்டுமானாலும் நிதி அளிக்க தயாராக இருப்பதாகவும், தேர்தல் செலவு முழுவதையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.

முறைப்படி விண்ணப்பித்தால் பரிசீலிப்பதாக அவரிடம் கூறி எடப்பாடி அனுப்பியுள்ளார். அவர் சென்ற பிறகு, 10 கோடி பணத்தோடு வந்து சீட் கேட்ட யார் இவர் என்று விசாரிக்கத் தொடங்கினார் எடப்பாடி. தேனி மாவட்ட நிர்வாகிகளிடம் விசாரித்தபோது பல தகவல்கள் வெளியாகின.

தேனி மாவட்டத்தில் போட்டியிட ஏற்கனவே தேனி ஒன்றிய செயலாளராக இருக்கும் நாராயணசாமி என்பவரை எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுத்து விட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு பதிலாக ராஜேஸ்வரிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கட்சி நிர்வாகிகள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் கட்சியின் பொதுச் செயலாளரே ஒருவரைப் பற்றி கூறி விசாரித்து கூறுமாறு தெரிவித்ததால் ராஜேஸ்வரிக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கட்சி நிர்வாகிகள் கருதினர். மேலும் ராஜேஸ்வரியும் தேனி மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தனக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளார்.

ரூபாய் 10 கோடி பணத்துடன் பெண் ஒருவர் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க சென்றது தொடர்பாக நமது சவுக்குமீடியாவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நாம் ராஜேஸ்வரி குறித்தான பின்னணி குறித்து விசாரித்த போது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. ராஜேஸ்வரி தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர். லட்சுமிபுரம் ஏஜிபி நகரில் குடியிருந்த ராஜேஸ்வரியின் இல்லத்திற்கு பல முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து வந்து சென்றுள்ளனர். அதில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனின் மகனும் ஒருவர். மேலும் பல முக்கிய பிரமுகர்கள் தொடர்ந்து அந்த வீட்டிற்கு வந்து சென்றதால் அந்த ஊர் மக்கள் ராஜேஸ்வரியையும் அந்த வீட்டையும் வினோதமாக பார்க்கத் தொடங்கினர்.

ஆடம்பர பொருட்கள் விற்பனை, புடவை விற்பனை, மற்றும் ஆம்வே பொருட்கள் விற்பனை என பல தொழில்களை செய்து வந்த ராஜேஸ்வரி பல்வேறு வழக்குகளில் சிக்கி உள்ளார். இதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மைத்துனரான வழக்கறிஞர் சந்திரசேகர் என்பவரை தொடர்பு கொண்டு உள்ளார். சந்திரசேகரும் இவருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளார். இந்நிலையில் ராஜேஸ்வரியின் கணவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், ராஜேஸ்வரி அதை மாரடைப்பு என்று மறைத்து விட்டதாகவும் பேசப்படுகிறது.

தற்போது ஓ. பன்னீர்செல்வத்தின் மைத்துனர் சந்திரசேகர் ராஜேஸ்வரிக்கு வத்தலகுண்டு பகுதியில் சொந்தமாக வீடு கட்டி கொடுத்து அங்கு அவரை குடி வைத்துள்ளதுடன், அடிக்கடி அங்கு சென்று வந்திருக்கிறார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் துணை முதலமைச்சராக இருந்தபோது பலருக்கு அரசு வேலை மற்றும் ஒப்பந்தங்கள் வாங்கித் தருவதாக ராஜேஸ்வரி பணம் பெற்று அதனை சந்திரசேகர் மூலமாக ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது. ஒரு சிலருக்கு வேலை பெற்று தந்ததுடன் பலரை ஏமாற்றியும் உள்ளனர். பணம் கொடுத்து ஏமாந்த பலர் லட்சுமிபுரம் வீட்டை தேடி வரத் தொடங்கியதால் ராஜேஸ்வரியை கோவையில் ஒரு வீட்டில் குடியேற்றினார் சந்திரசேகர். அங்கிருந்து ஒரு சிலர் மூலம் சேலம் இளங்கோவனிடம் பழக வைத்துள்ளார். (ராஜேஸ்வரியின் கணவர் வெங்கடேஷ் நாயுடு இனத்தைச் சேர்ந்தவர் என்றபோதும் ராஜேஸ்வரி பிள்ளைமார் சமூகம் என்பது குறிப்பிடத்தக்கது.) இதன் மூலம் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த சேலம் இளங்கோவனிடம் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சேலம் இளங்கோவன் மூலமாக எடப்பாடி பழனிச்சாமியின் மனைவியுடைய நட்பும் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதனைப் பயன்படுத்தி தான் தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுகவில் எப்படியாவது வாய்ப்பு பெற வைக்க வேண்டும் என்று ராஜேஸ்வரியை வைத்து சந்திரசேகர் காய் நகர்த்தி உள்ளார். அதற்காகவே அவரிடம் கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து அனுப்பி எடப்பாடி பழனிச்சாமியிடம் எப்படியாவது தேனி மக்களவைத் தொகுதியில் சீட்பெற வேண்டும் என முயற்சிக்க வைத்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தற்போது மீண்டும் தேனி தொகுதியில் போட்டியிடவுள்ள நிலையில், அவர் டெபாசிட் இழப்பது உறுதி என்பது ஓபிஎஸ் குடும்பத்திற்கு நன்கு தெரிந்துள்ளதால், அ.தி.மு.க. வேட்பாளராக தங்களைச் சேர்ந்த ஒருவரை நிறுத்தினால் கடைசி நேரத்தில் அவரை வாபஸ் பெற வைக்கலாம் அல்லது அவர் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டு அதிமுக வேட்பாளரை டெபாசிட் இழக்க செய்யலாம் என திட்டமிட்டு ஓ.பி.எஸ். குடும்பம் சந்திரசேகர் மூலமாக இந்த செயலை செய்தது தெரிய வந்துள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் தற்போது அரசியலில் தனக்கு எந்த ஒரு எதிர்காலமும் இல்லாமல், நிற்கதியில் நின்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது பாரதிய ஜனதா கட்சியும் அவரை முழுமையாக கைவிட்டுள்ளது. மேலும் டி.டி.வி.தினகரனுடனும் இணக்கமான சூழல் இல்லாத நிலையில், தேனி மக்களவைத் தொகுதியில் தனது மகனை நிறுத்தி வெற்றி பெற வைத்தால் மட்டுமே தனக்கு அரசியல் எதிர்காலம் உள்ளது என கருதும் ஓ.பன்னீர்செல்வம் அதற்காக ஒரு பெண்ணை தேர்ந்தெடுத்து, அவரிடம் பணத்தை கொடுத்து அனுப்பி, தந்திரமாக அவரை அதிமுக வேட்பாளராக்கி, அவர் ஒழுங்காக பிரச்சாரம் செய்யாமல் அவரை எளிதில் வீழ்த்தி தனது மகனை எம்பி ஆக்கி விடலாம் என்று செய்யும் முயற்சிகள் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

அவருக்கு வாழ்வளித்த ஒரு கட்சியைப் பற்றியோ, அவர் பல ஆண்டுகள் பழகிய எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றியோ எந்தப் புரிதலும் இல்லாமல், பணம் இருந்தால் அதிமுகவில் எளிதாக சீட் கொடுத்து விடுவார்கள் என்று நம்புவதுதான் வேடிக்கை. கடந்த முறை, 2019 தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் ஜே.எம். ஹாரூனுக்கு சீட் கொடுப்பார்கள், கொடுத்தால் அவர் எளிதாக வெற்றி பெற்று விடுவார் என்று அனைவரும் எதிர்ப்பார்திருந்த நிலையில், ஹாரூன் திடீரென்று, உடல் நிலை சரியில்லை. போட்டியிட முடியாது என்று தெரிவித்து விட்டார். காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சீட் வழங்கியது.

அவர் பிரச்சாரத்துக்கே போகவில்லை. மாலை 5 மணிக்கு பிரச்சாரத்துக்கு கிளம்பி ஒரு மணி நேரத்தில் பிரச்சாரத்தை முடித்துக் கொண்டார். வேலை செய்ய வேண்டிய கூட்டணி கட்சியான திமுகவினரையும் ஓபிஎஸ் விலைக்கு வாங்கி ஒருவர் கூட காங்கிரஸ் வேட்பாளருக்கு வேலை செய்யாமல் பார்த்துக் கொண்டார். ரவீந்திரநாத் போட்டியிட்ட தேனி தொகுதியில் மட்டும் 300 கோடி செலவு செய்தார் ஓபிஎஸ்.

இந்த முறையும், பணத்தை அள்ளி வீசி, மலிவான தந்திரங்களை கடைபிடித்து மீண்டும் மகனை வெற்றி பெறவைக்க கடும் முயற்சி எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியே, ராஜேஸ்வரியை அதிமுக வேட்பாளராக்கும் ஓபிஎஸ்ஸின் தந்திரம்.

ஓபிஎஸ்ஸின் இந்த தந்திரத்துக்கு அதிமுக பலியாகுமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்