Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

பொன்முடி வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது? ..ஒரு முழு அலசல்

KARTHICK GOVINDHARAJAN13-03-2024
பொன்முடி வழக்கு: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏன் உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது? ..ஒரு முழு அலசல்

சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதனால் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தொடரவுள்ளார். இதன் முழு விவரத்தை இந்த கட்டுரையில் பார்ப்போம்.

மீண்டும் அமைச்சராகிறாரா பொன்முடி?

கடந்த 2006-11 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சி காலத்தில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்த போது,  வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.75 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011-ஆம் ஆண்டு பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கடந்த 2016-ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைக்கு வந்தது. அதில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பொன்முடி அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் இழந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற  தீர்ப்பை எதிர்த்து பொன்முடி, விசாலாட்சி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன் ஆகியோர் விசாரித்து பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு இடைக்கால நிவாரணம் வழங்கினர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்ட 1951, பிரிவு 8(3)

இந்த சட்டப் பிரிவின் படி ஒரு நபர் குற்றவாளி என இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் சிறையில் இருந்து வெளிவரும் நாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என கூறுகிறது இந்த சட்டப்பிரிவு. மேலும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும் கூட தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதுபோல, சிறை தண்டனையை அனுபவித்து விடுதலை செய்யப்பட்டாலும், அதன்பிறகு 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது.

பொன்முடிக்கு இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தால் மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது. 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதன் காரணமாக பொன்முடி தனது அமைச்சர் பதவியை இழந்தார். சட்டப்பேரவை உறுப்பினர் தகுதியையும் அவர் இழக்க நேர்ந்தது.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திவைக்க கோரி பொன்முடி தாக்கல் செய்த மனு

பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல் புயன்,  பொன்முடியை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது சரியான முடிவா? என்பதை சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பில் பரிசீலிக்கவில்லை என பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையையும், அவர் குற்றவாளி என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையும் நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்ததற்கான காரணம் என்ன?

உச்ச நீதிமன்றம்  AFJAL ANSARI Vs STATE OF UP என்ற வழக்கில் ஒரு நீதிமன்றம் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பை  எப்போதெல்லாம் உயர் நீதிமன்றம் அல்லது உச்ச நீதிமன்றம்  நிறுத்தி வைக்கலாம் என விரிவாக ஆராய்ந்து அந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது.  அதில் உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தால்  குற்றவாளி என அளிக்கப்பட்ட  தீர்ப்பை நிறுத்தி வைப்பது அரிதிலும் அரிதாக இருக்க வேண்டும் என்றும், தவிர்க்க முடியாத காரணங்களில் மட்டுமே தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியும் என்று கூறியுள்ளனர். மேலும் ஒரு நபர், தன்னை குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்கவில்லை என்றால் தனக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்பதை நீதிமன்றத்தில் முறையிட்டால் மட்டுமே குற்றவாளி என்று வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை மேற்கோள் காட்டி, பொன்முடி குற்றவாளி என அளிக்கப்பட்ட சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம்.

பொதுவாக எப்போதெல்லாம் இது போல் குற்றவாளி என வழங்கிய தீர்ப்பையே நிறுத்தி வைக்க முடியும்?

உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு மட்டுமே குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைக்க முடியும் என கூறியுள்ளது. அதாவது ஆங்கிலத்தில் "Conviction can be suspended only in Rarest of Rare and Exceptional Circumstances". அதேபோல் ஒவ்வொரு வழக்கையும் அந்த வழக்கின் சூழ்நிலை பொருத்தே கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி

உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் பெறப்பட்டதை தொடர்ந்து பொன்முடி சட்டமன்ற உறுப்பினராக தொடர்கிறார்.  இதுதொபர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த செய்தியை அடித்துக் கொண்டிருந்த இறுதி தருணத்தில்  டெல்லி பத்திரிகையாளர் சகோதரர் அரவிந்த் குணசேகரன் தனது ’எக்ஸ்’ பக்கத்தில் ஒரு செய்தியை பகிர்ந்தார்.

அதில் அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்முடியை அமைச்சரவையில் சேர்க்க ஆளுநருக்கு எழுதிய கடிதம் குறித்து, ஆளுநர் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வெங்கட்ரமணியிடம் சட்டப்படியான விளக்கத்தை  கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் வரும் வியாழக்கிழமை அன்று மூன்று நாட்கள் பயணமாக டெல்லி செல்வதாகவும் தெரிவித்துள்ளார். ஆகையால் பொன்முடி அமைச்சராக பதவி பிரமாணம் ஏற்கும் நிகழ்வு  தள்ளிப் போக வாய்ப்புள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்