Logo
Logo

முக்கிய செய்தி:

சவுக்கு ஸ்பெஷல்

மோசடிக்கு துணை போன சிவன் அருள்…TNPSC உறுப்பினராக நியமித்த தமிழக அரசை விமர்சிக்கும் இளைஞர்கள்

LENIN DEVARAJAN16-02-2024
மோசடிக்கு துணை போன சிவன் அருள்…TNPSC உறுப்பினராக நியமித்த தமிழக அரசை விமர்சிக்கும் இளைஞர்கள்

நில மோசடி, நிதி மோசடி என பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட அரசு அதிகாரிக்கு துணை போன முன்னாள் பதிவுத்துறை ஐ.ஜி. சிவன் அருள் ஐந்து டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களின் ஒருவராக அரசு நியமித்திருப்பது இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இனி அரசு வேளையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்க்கையில் சிவன் அருள் விளையாட மாட்டார் என்பது என்ன நிச்சயம் என பலர் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்ப தொடங்கியுள்ளனர்.

மோசடி பத்திரங்களை பதிவு செய்ய துணை போனதாக முன்னாள் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி கே.வி.சீனிவாசன் கடந்த 2022-ம் ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவர் மீது எழுந்த மோசடி புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரை சேர்ந்த பி.ஏ.சி.எல் நிறுவனம் பல்வேறு மோசடியில் ஈடுபட்டதால் அதன் சொத்துகள் முடக்கப்பட்டது.

இந்த நிறுவனத்தின் சொத்துகளை நிர்வகிக்க ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி லோதா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியின் பெயரை தவறாக பயன்படுத்தி, தமிழ்நாட்டில் 6,892 ஏக்கர் நிலங்கள் மோசடியாக விற்கப்பட்டது. இது தொடர்பாக 714 மோசடி பத்திரங்கள் பதிவு செய்ததாக 60-க்கும் மேற்பட்ட சார் பதிவாளர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை வசம் சிக்கினர். இந்த மோசடிக்கு துணை போனதாக முன்னாள் பதிவுத்துறை கூடுதல் ஐ.ஜி.சீனிவாசன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது.

நெல்லை, விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 609 ஏக்கர் நிலங்களை விற்க முன்னாள் கூடுதல் ஐ.ஜி. சீனிவாசன் முறைகேடாக அனுமதி அளித்ததாகவும், இதனால் 300 கோடி ரூபாய் வரை சீனிவாசன் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியது. இப்படி பத்திரப்பதிவு துறையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட பதிவுத்துறை முன்னாள் கூடுதல் ஐ.ஜி சீனிவாசனின் முறைகேடுகளை பதிவுத்துறை முன்னாள் ஐ.ஜி. சிவன் அருள் கண்டுக்கொள்ளவில்லை என லஞ்ச ஒழிப்புத்துறை குற்றம் சாட்டியது.

டி.என்.பி.எஸ்.சி உறுப்பினர்களில் சிவன் அருள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவி பல ஆண்டுகளாக காலியாக இருந்த நிலையில் அந்த பதவிக்கு முன்னாள் டி.ஜி.பி.சைலேந்திரபாபுவை நியமிக்க தமிழக அரசு முடிவு செய்தது. ஆனால், தமிழக ஆளுநர் டி.என்.பி.எஸ்.சி தலைவரை நியமிப்பதில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என கூறி சைலேந்திரபாபுவின் நியமனத்திற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

டி.என்.பி.எஸ்.சி.யின் கடைசி தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். அதுமுதல் அந்த பதவி நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இடையில் உறுப்பினர்களும் ஓய்வுப்பெற அந்தப் பதவிகளும் நிரப்பப்படாமல் உள்ளது. லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான ஒரு துறையின் தலைவர் பதவி கடந்த இரண்டு ஆண்டுகளாக காலியாக இருப்பதாக பலர் தொடர் கேள்விகளை முன்வைத்த நிலையில், தலைவர் பதவிக்கு யாரையும் நியமிக்காமல் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது தமிழ்நாடு அரசு. இந்நிலையில் காலியாக உள்ள டி.என்.பி.எஸ்.சி.யின் உறுப்பினர்கள் பதவிக்கு 5 பேரை நியமித்து தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

புதிதாக நியமிக்கப்பட்ட 5 உறுப்பினர்களில் முதல் ஆளாக இருப்பவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவன் அருள். இவர் பத்திரப்பதிவு துறையில் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட முன்னாள் கூடுதல் ஐ.ஜி (பதிவுத்துறை) சீனிவாசனின் உயர் அதிகாரி. அவர் செய்த மோசமான முறைகேடுகளை கண்டுக்கொள்ளாமல் இருந்தவர். இப்படிபட்டவரை டி.என்.பி.எஸ்.சியின் உறுப்பினர்களில் ஒருவராக அரசு நியமித்திருப்பது, பணி நியமனங்களில் எப்படி இனி உண்மை தன்மையும், வெளிப்படை தன்மையும் இருக்கும் என விமர்சனம் எழுந்துள்ளது.

லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வாதாரமாக இருக்கும் டி.என்.பி.எஸ்.சி-க்கு, சிவன் அருள் போன்றவர்கள் கேடு விளைவிக்க சற்றும் தயங்கமாட்டார்கள் என்பதே நிதர்சனம் என சமூக வலைதளங்களில் பலர் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர். தற்போதைய திமுக ஆட்சியில் ஊழல் முறைகேடுகள் அதிகரித்துள்ள நிலையில், அரசின் வேலை வாய்ப்புக்காக லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையில் விளக்கேற்றும் டி.என்.பி.எஸ்.சி-யிலும் இனி மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் பஞ்சம் இருக்காது என மாணவர்களும் அரசு வேலையை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்களும் கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்து வருவது அரசின் பார்வைக்கு எட்டுமா? என்பது கேள்விக்குறி.

டி.என்.பி.எஸ்.சி-யிலும் நடக்கும் முறைகேடுகளை கண்டும் காணாமல் இருந்து மோசடிக்கு துணை போகமாட்டார் சிவன் அருள் என்பதற்கு என்ன உத்தரவாதத்தை இந்த அரசு தரப்போகிறது என்பதே இப்போது வேலை வாய்ப்பை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களின் மனதில் உள்ள கேள்வி…..

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்