Logo
Logo

முக்கிய செய்தி:

விளையாட்டு

csk vs rcb: இது எங்க ஏரியா! ஆர்சிபியை விரட்டிய சிஎஸ்கே : கெய்க்வாட் தலைமைக்கு முதல் வெற்றி

23-03-2024
csk vs rcb: இது எங்க ஏரியா! ஆர்சிபியை விரட்டிய சிஎஸ்கே : கெய்க்வாட் தலைமைக்கு முதல் வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 2024ம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் டி20 தொடரில் முதல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

csk1.jpg

இது எங்க ஏரியா உள்ள வராதே

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியின் தோல்வி 17வது ஆண்டாகத் தொடர்கிறது. 2008ம் ஆண்டுக்குப்பின் சேப்பாக்கத்தில் ஆர்சிபி அணியால் வெற்றி பெறமுடியவில்லை என்ற அவப்பெயர் நீடிக்கிறது.

அதேசமயம், சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 8-வது வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு மைதானத்தில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே அணியாகத்தான் இருக்கும்.

விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் முதல் ரன்னைச் சேர்த்தபோது, சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களைக் குவித்த பேட்டர் என்ற பெருமையைப் பெற்றார்.

முஸ்தபிசுர் அபார பந்துவீச்சு

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஸ்லோ-பால் நுட்பம் முதல் போட்டியிலேயே நன்கு பலன் அளி்த்தது.

முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும், அதை மற்ற பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை.

இதனால்தான் ஆர்சிபி 100 ரன்களுக்குள் சுருட்டமுடியாமல் கூடுதலாக 95 ரன்களைச் சேர்க்க முடிந்தது. அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தபிசுர்(பிஸ்)ரஹ்மானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

fiz.jpg

ரவீந்திரா அதிரடி

அதேபோல மற்றொரு அறிமுக வீரர், தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா 246 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து மிரட்டினார், 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்த ரவீந்திரா கணக்கில் 3 சிக்ஸர்களும், 3 பவுண்டர்களும் அடங்கும்.

துபே 13 பந்துகளுக்கு 7 ரன்கள் என மந்தமாகவே தொடக்கத்தில் பேட் செய்தார். ஆனால், தன்னை நிலைப்படுத்திய துபே, வழக்கமான ஆட்டத்துக்கு திரும்பி 28 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்,

ஆர்சிபி- ஏன் தோற்றது

பவர்ப்ளே ஓவர்களை எந்த அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ அதை சிஎஸ்கே பேட்டர்கள் சிறப்பாகப் பயன்படுத்தினர். ஆனால், ஆர்சிபி அணி அதிரடியான தொடக்கத்தை அளித்து 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்தது.

அடுத்த2 ஓவர்களில் திடீரென 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்கு 3 விக்கெட்டுகளை இழந்தது, ஆர்சிபியின் தோல்விக்கு முக்கியக் காரணமாகும். ஆர்சிபி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஜொலிக்கவில்லை. ஆனால், சிஎஸ்கே அணியில் அனைத்து பேட்டர்களும் பங்களிப்பு செய்ததுதான் வெற்றி, தோல்விக்கான வேறுபாடாகும்.

அல்சாரி ஜோஸப், கேமரூன் கிரீன் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்டு சிஎஸ்கே ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். “ஷார்ட் பால்” உத்தியை இன்னும் திட்டமிட்டு கையாண்டிருந்தால், சிஎஸ்கே ரன்ரேட்டை தொடக்கத்திலேயே மட்டுப்படுத்தி இருக்க முடியும்.

மேலும், சுழற்பந்துவீச்சாளர் மயங்க் டாகர், மேக்ஸ்வெல் திறமையை டூப்பிளசிஸ் வீணடித்துவிட்டார். இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்காதது பெரிய குறைபாடு.

dk.jpg

டூப்பிளசிஸ் விளாசல்

ஆர்சிபி அணிக்கு டூப்பிளசிஸ், அதிரடி தொடக்கத்தை அளித்து தேஷ்பாண்டே, சஹர் ஓவர்களில் பவுண்டரிகளை விளாசினார். முஸ்தபிசுர் வீசிய 5-வது ஓவரில் டூப்பிளசிஸ் (35 ரன்கள்) , ரஜத் பட்டிதாரும் டக்அவுட்டில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

**விக்கெட் சரிவு ** அடுத்துவந்த அதிரடி பேட்டர் மேக்ஸ்வெல் ரன்ஏதும் சேர்க்காமல் தீபக் சஹர் ஓவரில் விக்கெட்டை இழந்தார்.41 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த ஆர்சிபி அடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

12 ஓவரை முஸ்தபிசுர் பந்துவீச வந்தபோது அந்த ஓவரில் விராட் கோலி(20) விக்கெட்டையும், கிரீன்(18)விக்கெட்டையும் வீழ்த்தி ஆர்சிபிக்கு நெருக்கடி கொடுத்தார். 6-வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

rcb1.jpg

ஃபார்முக்கு வந்த டிகே

15-வது ஓவர்களுக்குப்பின் ராவத், டிகே இருவரும் அதிரடிக்கு மாறினர். தீ்க்சனா வீசிய 16-வது ஓவரில் டிகே ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். தேஷ்பாண்டே வீசிய 18-வது ஓவரில் ராவத் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி, டிகே ஒரு சிக்ஸர் என 25 ரன்கள் சேர்த்தனர். ராவத் 48 ரன்னில் தோனியால் ரன்அவுட் ஆகினார்.

டிகே38 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 57 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியை தூக்கி நிறுத்தினர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்