Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

”நாங்கள் ’பானை’ சின்னத்தில் தான் வாக்கு கேட்போம்”…களத்தில் இறங்கிய விசிகவினர்

LENIN DEVARAJAN29-03-2024
”நாங்கள் ’பானை’ சின்னத்தில் தான் வாக்கு கேட்போம்”…களத்தில் இறங்கிய விசிகவினர்

விசிகவுக்கு ’பானை’ சின்னம் ஒதுக்குவதற்கு முன்பே அக்கட்சியினர் பானையை கையில் ஏந்தி வாக்குகள் சேகரிக்க ஆரம்பித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையம் எதிர்க்கட்சிகள் மீது ஓரவஞ்சனை காட்டுவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

விசிகவுக்கு ’பானை’ சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் விசிகவுக்கு ’பானை’ சின்னம் ஒதுக்க மறுத்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், விசிகவுக்கு இன்னும் ’பானை’ சின்னம் ஒதுக்கப்படாத நிலையில், விசிக போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் விசிகவுக்கு ஆதரவு கோரி ’பானை’ சின்னத்தில் வாக்களிக்குமாறு விசிகவினர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி, விசிக தலைவர் திருமாவளவன் அவரது ‘X’ பக்கத்தில் ” 2024 நாடாளுமன்ற தேர்தலில் நமது சின்னம் "பானை". இச்சின்னம் நமது உரிமை என்பதில் மிக உறுதியாய் நிற்கிறோம்”, என பதிவிட்டு ”நம்ம சின்னம் பானை சின்னம்” என்ற பாடலோடு அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்ட பலர் விசிகவுக்கு ஆதரவளித்து ’பானை’ சின்னத்தில் வாக்களியுங்கள் என காணொளி பிரச்சாரத்தில் ஈடுபடும் காட்சிகள் தற்போது வைரலாகியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவளிக்கும் கட்சிகளுக்கு மட்டும் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் சின்னத்தை ஒதுக்கும் தேர்தல் ஆணையம், எதிர்கட்சிகளுக்கு மட்டும் ஏன் ஓரவஞ்சனை காட்டுகிறது? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

தேர்தல் ஆணையத்தை சுதந்திரமாக செயல்படவிடாமல், பாஜக அரசியல் செய்வதாக ’இண்டியா’ கூட்டணி கட்சி தலைவர்கள் கடுமையாக சாடுகிறார்கள்.

தேர்தலில் போட்டியிடாத மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ’டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம், இரண்டு தொகுதியில் போட்டியிடும் விசிகவுக்கு ஏன் ’பானை’ சின்னம் ஒதுக்க மறுக்கிறது என விசிகவினர் கேள்வி எழுப்புகின்றனர்.

நாதக-வை விட குறைவான வாக்கு வங்கியை கொண்டுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அமமுக-க்கு மட்டும் அதன் சின்னத்தை மின்னல் வேகத்தில் வழங்கிய தேர்தல் ஆணையம், நாதக, மதிமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகள் கோரும் சின்னத்தை ஒதுக்க மறுப்பது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல் என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

மதிமுக ஒரு தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால், ‘பம்பரம்’ சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் கோரும் சின்னத்தை ஒதுக்க மறுத்ததற்கு உரிய விளக்கத்தை தேர்தல் ஆணையம் வழங்கவில்லை என மதிமுக மற்றும் விசிகவினர் குற்றம் சாட்டுகிறார்கள்.

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக மற்றும் விசிக ஆகிய கட்சிகள் திருச்சி, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய 3 தொகுதிகளில் களம் காண்கிறது. தற்போது தேர்தல் ஆணையம் மதிமுக மற்றும் விசிக ஆகிய ’இண்டியா’ கூட்டணி கட்சிகள் கோரும் சின்னத்தை ஒதுக்காமல் இருப்பதால் தேர்தல் பரப்புரையில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் திமுகவினரையும் ஆத்திரமடைய செய்துள்ளது.

தேர்தல் ஆணையம் ஒரு பக்கம் இருக்கட்டும், நாங்கள் அதுவரை ’பானை’ சின்னத்தில் வாக்குகள் கேட்கிறோம் என விசிகவினர் பானையை கையிலெடுத்து வீதி வீதியாக சென்று பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்