Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ராகுல், பிரியங்கா, அமேதி - ரேபரேலி தொகுதிகளில் போட்டியா? "ஒரு சில நாட்களில் முடிவு" காங்கிரஸ் அறிவிப்பு

CHENDUR PANDIAN.K27-04-2024
ராகுல், பிரியங்கா, அமேதி - ரேபரேலி தொகுதிகளில் போட்டியா? "ஒரு சில நாட்களில் முடிவு" காங்கிரஸ் அறிவிப்பு

கௌஹாத்தி

காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர தலைவர்களான ராகுல் காந்தியும் அவருடைய தங்கை பிரியங்காவும் உத்தர பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிடுவார்களா என்பது குறித்து காங்கிரஸ் மேலிடம் இன்று அல்லது நாளை முடிவு எடுக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்களை இன்று (சனிக்கிழமை) மாலை அந்தக் கட்சி அறிவிக்கும் என்று தகவல் வெளியாக இருந்தது.

இந்தத் தொகுதிகளில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப் படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இதன் மூலம் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கருதினார்கள்.

இதற்கிடையில், நட்சத்திர தலைவர்கள் இருவரும் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள் என்றும் தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில், அசாம் மாநிலம் கவுகாத்தியில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவிடம் உத்தரப் பிரதேசத்தின் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் காங்கிரஸ் சார்பில் யார் போட்டியிடுவார்களா ? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கார்கே, "இன்னும் ஒரு சில நாட்கள் காத்திருங்கள். அனைத்துக்கும் பதில் கிடைக்கும். வயநாட்டில் உள்ள மக்கள், ராகுல் காந்தியை விரும்புகிறார்கள். அதனால்தான் அவர் அங்கு போட்டியிடுகிறார்" எனத் தெரிவித்தார்.

கார்கேவின் இந்த பேட்டி மூலம் ஏற்கனவே வெளியான தகவலின்படி இன்று மாலை வேட்பாளர்கள் அறிவிக்கப்படும் என்ற முடிவில் தாமதம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசத்தில் இந்திரா காந்தி குடும்பத்தின் ஆஸ்தான தொகுதிகளாக இருப்பது அமேதி மற்றும் ரேபரேலி. அமேதியில் கடந்த 1967 முதல் காங்கிரஸ் வெற்றி பெற்று வருகிறது.

1980-ல் சஞ்சய் காந்தி மூலமாக அமேதி காங்கிரஸ் தலைமையின் குடும்பத் தொகுதியாக மாறியது. அதே வருடம் சஞ்சய் காந்திக்கு பின் அங்கு வந்த இடைத்தேர்தலில் ராஜீவ் காந்தி முதன் முறையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி தொடர்ந்து 1984, 1989, 1991 வரை எம்பியாக இருந்தார். அவரது மறைவால் வந்த இடைத்தேர்தலில் காந்தி குடும்பத்திற்கு நெருக்கமான கேப்டன் சதீஷ் சர்மா போட்டியிட்டு வெற்றி அடைந்தார்.

இதற்கு அடுத்து வந்த 1996 பொதுத் தேர்தலிலும் சர்மா, அமேதி எம்பியானார். பிறகு 1998ல் பாஜகவின் சஞ்சய் சிங் கைக்கு அமேதி மாறியது.

அமேதி களத்தில் 1999ல் அப்போதைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியால், மீண்டும் அது காங்கிரஸ் வசமானது. இவர், அடுத்த தேர்தலில் அருகிலுள்ள ரேபரேலிக்கு மாறிவிட, அமேதியில் ராகுல் 2004ல் முதன்முறையாக களம் இறங்கினார்.

அடுத்து வந்த 2009, 2014, 2019 மக்களவை தேர்தலிலும் என அமேதியில் மூன்று முறை தொடர்ந்தார் ராகுல். இதில், 2014 முதல் பாஜவுக்காக ராகுலை எதிர்த்த மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி, 2019ல் ராகுலை தோற்கடித்தார்.

கடந்த 2002 முதல் அமேதி தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்த ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டதால் அங்கு வெற்றி பெற்றதை அடுத்து அவர் மக்களவை உறுப்பினராக தொடர்ந்து இருந்து வருகிறார். ரேபரேலியில் சோனியா காந்தி வெற்றி பெற்றார். தற்போது அவரும் மாநிலங்களவை உறுப்பினராகிவிட்டார்.

இந்நிலையில் அமேதியில் ராகுல் காந்தி மீண்டும் களம் காண்பாரா? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

இம்முறை காங்கிரஸ் கட்சி, மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருப்பதால் அதற்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் கணிக்கப்படுகிறது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்