Logo
Logo

முக்கிய செய்தி:

பொது

"முஸ்லிம்களின் வாக்குகள் தேவை; வேட்பாளர்கள் தேவை இல்லையா?" மகாராஷ்டிரா காங்கிரஸில் போர்க் கொடி

CHENDUR PANDIAN.K27-04-2024
"முஸ்லிம்களின் வாக்குகள் தேவை; வேட்பாளர்கள் தேவை இல்லையா?" மகாராஷ்டிரா காங்கிரஸில் போர்க் கொடி

மும்பை

"காங்கிரஸுக்கு முஸ்லிம் சமூக மக்களின் வாக்குகள் தேவைப்படுகிறது. ஆனால், முஸ்லிம் வேட்பாளர்கள் தேவையில்லையா? " என்று போர் கொடி உயர்த்திய மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் முகமது ஆரிப் நசீம் கான், கட்சியின் பிரச்சார குழுவில் இருந்து விலகினார்.

காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணி என்ற பெயரில் நாடு முழுவதும் போட்டியிடுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மஹா விகாஸ் அகாடி (எம் வி ஏ) என்ற பெயரில் இந்தக் கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் ஒரு முஸ்லிம் வேட்பாளரை கூட இந்த கூட்டணி சார்பில் பரிந்துரைக்கவில்லை என்று காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மாநில அமைச்சருமான முகமது ஆரிப் நசீம் கான் போர்க்கொடி உயர்த்தி இருக்கிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் ஒன்றையும் அவர் எழுதி இருக்கிறார். அதில், இந்த கேள்வியை எழுப்பிய நசீம் கான், "மகாராஷ்டிரா முழுவதிலும் உள்ள பல முஸ்லிம் அமைப்புகள், தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் சிறுபான்மை சமூகத்திலிருந்து குறைந்தபட்சம் ஒரு வேட்பாளரையாவது காங்கிரஸ் முன்னிறுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை" என்று கூறியிருக்கிறார்.

" காங்கிரஸ் கோ முஸ்லிம் ஓட்டு சாஹியே! வேட்பாளர் கியூன் நஹி (காங்கிரசுக்கு முஸ்லிம் வாக்குகள் வேண்டும்; ஆனால், ஏன் வேட்பாளர்கள் மட்டும் வேண்டாம்? ) என கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் என்னிடம் கேட்கிறார்கள். இந்த கேள்விகளையும் அதற்கான காரணங்களையும் என்னால் எதிர்கொள்ள முடியாது. அவர்களிடம் சொல்வதற்கு என்னிடம் தகுந்த பதில் இல்லை" என்றும், கடிதத்தில் அவர் மேலும் கூறியிருக்கிறார்.

இதன் காரணமாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தேர்தல் பிரச்சாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்வதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 தொகுதிகளில் சிவசேனா (யூ பிடி) என்சிபி (சரத் சந்திரபோஸ்) ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிடுகிறது.

மும்பை வடக்கு மத்திய தொகுதியில் இருந்து முகமது ஆரிப்கான் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் கட்சியில் டிக்கெட் கேட்டிருந்தார். ஆனால் காங்கிரசின் நகர தலைவர் வர்ஷா கெய்க்வாட் என்பவரை அந்த தொகுதி வேட்பாளராக காங்கிரஸ் தேர்வு செய்தது.

கடந்த 2019 சட்டசபை தேர்தலில் சந்தி வாலி தொகுதியில் இருந்து போட்டியிட்ட அவர் 409 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்