Logo
Logo

முக்கிய செய்தி:

தேர்தல் களம்

13 மாநிலங்களில் 2-ம் கட்டத் தேர்தல்: 88 தொகுதிகளில், 61 சதவீத வாக்கு பதிவு; கேரளாவில், வெயிலுக்கு 8 பேர் பலி

27-04-2024
13 மாநிலங்களில் 2-ம் கட்டத் தேர்தல்: 88 தொகுதிகளில், 61 சதவீத வாக்கு பதிவு; கேரளாவில், வெயிலுக்கு 8 பேர் பலி

புது டெல்லி

நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளில் நேற்று இரண்டாம் கட்ட தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. சராசரியாக 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

சுட்டெரிக்கும் வெயிலுக்கு கேரள மாநிலத்தில் 8 வாக்காளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.

கடந்த 19ஆம் தேதி தொடங்கி, நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல்கட்ட தேர்தலில் தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இரண்டாம் கட்ட தேர்தலில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 88 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. இந்த தேர்தலில் சராசரியாக 61% வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதிகபட்சமாக திரிபுராவில் 78.53 சதவீதம், மணிப்பூரில் 77.18 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இதை தவிர, கேரளாவில் 65.78 சதவீதம், கர்நாடகா 68.26 சதவீதம், அசாம் 71.11 சதவீதம், பீகார்55.08 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதேநேரம் குறைந்த பட்சமாக உத்தரபிரதேசத்தில் 54.85 சதவீதம், மகாராஷ்டிரா 56.63 சதவீதம், மத்திய பிரதேசம் 57.76 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 73.55 சதவீதம், ஜம்மு காஷ்மீர் 71.91 சதவீதம், ராஜஸ்தான் 64.07 சதவீதம், மேற்கு வங்கம் 71.84 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வெயிலுக்கு 8 பேர் பலி

இந்த தேர்தலின் போது வரலாறு காணாத வெயிலுக்கு கேரளாவில் மட்டும் 8 பேர் பலியாகி இருப்பது சோகத்தின் உச்சம் ஆகும்.

பாலக்காடு தென்குறிச்சியில் 32 வயதான ஒருவர் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழந்தார் அவர் பெயர் எஸ். சபரி என பின்னர் தெரியவந்தது.

ஒட்ட பாலம் பகுதியில் 68 வயதான முதியவர் ஒருவர் வாக்களித்த பின் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் பெயர் சந்திரன். கும்போட்டை என்ற இடத்தில் கந்தன் என்ற 73 வயது முதியவர் வாக்குப்பதிவுக்கு பின் ஓய்வில் இருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். (பாலக்காடு பகுதியில் நேற்று அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது.)

வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய மதரசா ஆசிரியர் ஒருவரும் சுருண்டு விழுந்து இறந்தார். அவர் அலி கன்னக்கல் தரக்கல் பகுதியில் சேர்ந்த 63 வயதான சித்திக் என்று தெரிய வந்தது. ஆலப்புழாவில் காக்காழம் எஸ் என் வி டி மேல்நிலைப்பள்ளியில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய வேலிப்பரம்பு சோம ராஜன் என்ற 82 வயது முதியோரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

கோழிக்கோடு குட்டி சிராவில் பகுதியில் வாக்குச்சாவடி முகராக பணிபுரிந்த ஓய்வு பெற்ற மின்சார வாரிய பொறியாளர் ஆன 66 வயது மாலை ஏக்கர் அனீஸ் என்பவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தார். கோழிக்கோட்டில் மற்றொரு நிகழ்வில் கல்லும் பிரத் விமேஷ் (வயது 42) என்பவர் வாக்குச்சாவடிக்கு வெளியே சுருண்டு விழுந்து இறந்தார். வாக்களிப்பதற்கு முன்பாக அவர் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வெயிலுக்கு பலியான இந்த 8 பேர் தவிர மலப்புரத்தில் வாக்கு சாவடிக்கு செல்லும் வழியில் மோட்டார் சைக்கிள் மதத்தில் சையது ஹாஜி என்ற 75 வயது முதியவர் உயிரிழந்தார்.

ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள்

நேற்றைய இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள் கஜேந்திர சிங் செகாவத், ராஜீவ் சந்திரசேகர், காங்கிரஸ் எம்பி சசிதரூர், நடிகர் சுரேஷ் கோபி தொலைக்காட்சி நடிகர் அருண் கோவில், நடிகை ஹேமமாலினி கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் குமாரசாமி ஆகியோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

மணிப்பூரில் வன்முறை

மணிப்பூரில் உள்ள உக்ரூல் மாவட்டத்தில் வாக்குப்பதிவின் போது இரண்டு வாக்குச் சாவடிகளில் வன்முறைகள் நிகழ்ந்தன. வாக்குச் சாவடிகளில் புகுந்த வன்முறையாளர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள், மேசை மற்றும் நாற்காலிகளை சூறையாடினர்.

இதேபோல் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் தொகுதியில் உள்ள தெக்கனே மென்டரே, துளசிகரே, படசலனத்தை கிராமங்களில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனப் புகார் கூறி அங்குள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க முன்வந்தவர்களுடன் மற்றொரு தரப்பு மோதலில் ஈடுபட்டபோது வாக்குச்சாவடி சூறையாடப்பட்டது. வாக்குச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டு மின்னணு வாக்கு எந்திரங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

இளம் வாக்காளர்கள்

இந்தத் தேர்தல் களத்தில் 88 தொகுதிகளிலும் 1202 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 1098 பேர் ஆண்கள், 102 பேர் பெண்கள், இருவர் மாற்று பாலினத்தவர்.

இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்களில் 3.28 கோடி பேர் 20 முதல் 29 வயது வரையிலான இளம் வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்