Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

கர்நாடகா ஜே.டி.எஸ். வேட்பாளர்: தேவே கவுடா பேரனுக்கு சிக்கல்; 'பெண்களுடன் ஆபாச வீடியோ' விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவு

CHENDUR PANDIAN.K28-04-2024
கர்நாடகா ஜே.டி.எஸ். வேட்பாளர்: தேவே கவுடா பேரனுக்கு சிக்கல்; 'பெண்களுடன் ஆபாச வீடியோ' விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவு

பெங்களூரு

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, ஹசன் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவர் தொடர்புடைய ஆபாச வீடியோ வெளியான விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) சார்பில், கர்நாடக மாநிலம் ஹசன் தொகுதியில், அவருடைய பேரன் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடுகிறார்.

இந்த தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஜேடிஎஸ் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. மாநிலத்தில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 16 தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

ஆயிரக்கணக்கான பெண்கள்

மீதமுள்ள தொகுதிகளில் மே 7ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவேகவுடாவின் மகன் எச்.டி. ரேவண்ணாவின் மகனான பிரஜ்வல் ரேவண்ணா தொடர்புடைய ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதில் ஆயிரக்கணக்கான பெண்களை பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்டது. உதவி கேட்டு வந்த பெண்களை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதை வீடியோவாக பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

ஏராளமான வீடியோக்கள் பஸ் நிலையம் மற்றும் பூங்கா போன்ற ஹசன் நகரின் முக்கியமான இடங்களில் வீசப்பட்டு அவை பின்னர் சமூக வலைத் தளங்களிலும் வைரலாக பரவியது. இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த கோரி கர்நாடகா மாநில மகளிர் ஆணைய தலைவர் நாகலட்சுமி சவுத்ரி மாநில அரசு மற்றும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

அதைத்தொடர்ந்து இந்த ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு அமைக்கப்பட்டு இருப்பதாக முதல் அமைச்சர் சித்த ராமையா அறிவித்து இருக்கிறார். இந்தக் குழு வழங்கும் அறிக்கையைத் தொடர்ந்து உரிய மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்குத் தப்பினார்

இந்த நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிரஜ்ஜுவல் ரேவண்ணா நேற்று விமானத்தில் வெளிநாட்டுக்கு (பிராங்க் பர்ட்) தப்பிச் சென்றதாக தெரிய வந்தது. வருகிற 7-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த வீடியோ விவகாரம் சூடு சூடு பிடித்ததை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் கடும் சர்ச்சை கிளம்பி உள்ளது.

விசாரணை குழுவில் திறமையான அதிகாரிகள்

இந்த விசாரணைக் குழுவின் தலைவராக கூடுதல் போலீஸ் டிஜிபியான பி. கே. சிங் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

கௌரி லங்கேஷ் மற்றும் எம் எம் கல்புர்கி ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்குகளிலும் சிறப்பு விசாரணை குழு தலைவராக செயல்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவுக்கு ரேவண்ணா, குமாரசாமி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இளைய மகன் குமாரசாமி கர்நாடக மாநில முதல் அமைச்சராக பணியாற்றியவர்.

மூத்த மகன் ரேவண்ணா எம்எல்ஏவாக இருந்து வருகிறார். அவருடைய மகன் தான் தற்போது ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கியிருக்கும் பிரஜ்வல் ரேவண்ணா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வீடியோ விவகாரம் தொடர்பாக மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கப் படவில்லை.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்