Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

டெல்லி திகார் ஜெயிலில், கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு அனுமதி மறுப்பு

CHENDUR PANDIAN.K29-04-2024
டெல்லி திகார் ஜெயிலில், கெஜ்ரிவாலை சந்திக்க மனைவி சுனிதாவுக்கு அனுமதி மறுப்பு

புதுடெல்லி

டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு இருக்கும் முதல் அமைச்சர் கெஜ்ரிவாலை சந்தித்து பேசுவதற்கு அவருடைய மனைவி சுனிதாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது.

மதுபான ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட முதல்வர் கெஜ்ரிவால் டெல்லி திகார் ஜெயிலில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருக்கிறார். இன்று திங்கட்கிழமை அவரை சந்தித்து பேசுவதற்காக சிறை நிர்வாகத்திடம் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அனுமதி கேட்டு இருக்கிறார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

"எதற்காக அனுமதி மறுக்கப்பட்டது என்பது குறித்து எந்த காரணத்தையும் சிறை நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்றும், மோடி அரசின் உத்தரவின் போரில்தான் அனுமதி மறுக்கப்பட்டு இருப்பதாகவும்", ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருக்கிறது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

"மோடி அரசின் உத்தரவின் பேரில் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் அவருடைய மனைவி சுனிதாவின் சந்திப்பை திகார் சிறை நிர்வாகம் ரத்து செய்து இருக்கிறது. இதன் மூலம் மோடி அரசு நிர்வாகம் மனிதாபிமானமற்ற முறையில் அனைத்து வரம்புகளையும் மீறி நடந்து கொள்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஒரு பயங்கரவாதியை போல் நடத்தப் படுகிறார். இந்த சந்திப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு மோடி அரசு தெரிவிக்க வேண்டும்" என்று, இந்தியில் வெளியிடப்பட்ட அந்த பதிவில் கூறப்பட்டு இருக்கிறது.

ஆனால், மூத்த சிறை அதிகாரி ஒருவரிடம் செய்தியாளர்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

"டெல்லிஅமைச்சர் அதிஷி இன்று கெஜ்ரிவாலை சந்திக்க இருக்கிறார். பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் நாளை செவ்வாய்க் கிழமை அவரை சந்திக்கிறார். கைதி ஒருவர் சிறைக்குள் வாரம் இருமுறை மட்டுமே பார்வையாளர்களை சந்திக்க அனுமதிக்கப்படுவார். இதன் அடிப்படையில் சந்திப்பு தேதியை மாற்றிக் கொள்ளும்படி அறிவுறுத்தி இருந்தோம்" என்று அந்த அதிகாரி கூறியிருக்கிறார்.

"ஒரே நேரத்தில் இருவர் சந்திக்கலாம்'

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகி ஒருவர் கூறும் போது, " சுனிதா கெஜ்ரிவால் மற்றும் அமைச்சர் அதிஷி இருவரும் கெஜ்ரிவாலை 29ஆம் தேதி திங்கட்கிழமை சந்திக்க விரும்புவதாக 27 ஆம் தேதி அன்றே சிறை நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பி விட்டோம். ஆனால் சற்று முன்னர் தான் சுனிதாவுக்கு அனுமதி இல்லை என்றும் அமைச்சர் அதிஷி சந்திக்கலாம் என்றும் தகவல் வந்திருப்பதாக" கூறினார்.

"ஜெயில் விதிமுறைகளின்படி கைதி ஒருவரை வாரத்திற்கு இருமுறை பார்வையாளர்கள் சந்திக்கலாம். ஒரே நேரத்தில் இருவர் சந்திக்கவும் அனுமதி உள்ளது. வாரத்திற்கு அதிகபட்சமாக நாலு பேர் சந்திக்கலாம்" என்றும் கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்