Logo
Logo

முக்கிய செய்தி:

அரசியல்

ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு; அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

PRIYA29-04-2024
ஹேமந்த் சோரன் ஜாமீன் மனு; அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், தாக்கல் செய்த இடைக்கால ஜாமீன் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் இன்று நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஜார்கண்ட் நில மோசடி வழக்கில் நடந்த சட்டவிரோத பணப்பரிவத்தனை தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக முதல்வராக இருந்த ஹேமந்த் சோரனை, கடந்த ஜனவரி 31ம் தேதி அமலாக்கத்துறை கைது செய்தது. கைது செய்யப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சோரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை குறிப்பிட்டு வாதிட்டார். அதில் ஏமாற்றுதல் மற்றும் மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகளே உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டினார்.

ஜார்கண்ட் மாநில உயர் நீதிமன்றத்தில் சோரன் தனது கைதுக்கு எதிராக தொடுத்த வழக்கு தற்போது நிலுவையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய சிபல், அதனால் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் அமலாக்கத்துறை ஜாமீன் மனு மீது பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அடுத்த விசாரணையை மே 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் ஆளுங்கட்சியாக உள்ள ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் சோரன் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இம்மாநிலத்தில் மே 13, மே 20, மே 25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

Share:

உங்கள் கருத்தை தெரிவிக்கவும்

Logo

செய்திமடலுக்கு சந்தாதராகவும்

உங்கள் மின்னஞ்சலில் பதிவு செய்வதன் மூலம், எங்களிடமிருந்து சமீபத்திய மற்றும் பிரத்தியேக புதுப்பிப்புகளைப் பெறவும்